இளையர் அறிவியல் களஞ்சியம்/நச்சுத் தாவரங்கள்
நச்சுத் தாவரங்கள் : உலகில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவற்றுள் ஒரு சில தவிர மற்றவை மனிதர்களுக்குப் பயன்படுபவை அல்லது தீங்கு ஏதும் தராதவைகளாகும். நச்சுத்தன்மை கொண்ட ஒரு சில தாவரங்களிலும் இரு வகை உண்டு. ஒரு வகைத் தாவரங்கள் தொட்டாலே தீங்கிழைக்கும். உதாரணமாக செந்தட்டி எனும் தாவரத்தைத் தொட்டால், தொட்ட இடமெல்லாம் அரிக்கும்; தடிப்புகள் உண்டாகும். இதற்குக் காரணம் செந்தட்டிச் செடியின் இலைகளில் மயிரிழை போன்ற நுண் இழைகள் உண்டு. இவை நச்சுத் தன்மையுள்ளவைகளாகும். இவை உடலில் குத்தியவுடன் நச்சுத் தன்மை உடலுள் பாய்ந்து அரிப்பையும் தடிப்பையும் ஏற்படுத்துகின்றன. சதுரக் கள்ளி போன்றவற்றின் பால் நச்சுத் தன்மையுள்ளதாகும்.
மற்றொருவகை தாவரங்கள் உடலுக்குள் சென்று நீக்கிழைப்பவையாகும். இத்தாவரங்களை மனிதர்களோ அல்லது ஆடு, மாடு போன்ற பிராணிகளோ தெரிந்தோ தெரியாமலோ உண்ண நேர்ந்தால் அவற்றின் நச்சுத் தன்மையால் உயிரையே இழக்க நேரிடும். ஊமத்தைச் செடியின் காய், எட்டி மர விதைகள் போன்ற தாவரப் பொருட்கள் கொடிய நச்சுத் தன்மை கொண்டவைகளாகும்.
சிலவகை நச்சுத் தாவரங்களின் வேர்களும் கிழங்குகளும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. கலப்பைக் கிழங்கு போன்ற நச்சுத் தன்மை கொண்ட தாவரப் பொருட்களிலிருந்து நோய் போக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
நச்சுத் தாவரங்கள் ஒவ்வொன்றின் நச்சுத் தன்மை ஒரே மாதிரி அமைந்திருக்கவில்லை. சில மிதமான நச்சுத்தன்மையுள்ளவை. வேறு சில கொடிய நச்சுக் குணம் கொண்டவை. சில தாவரங்கள் இளஞ் செடியாக இருக்கும்போது உள்ள நச்சுத் தன்மையின் கடுமை, அது வளர்ந்து மரமான பின்னர் இருப்பதில்லை.
தாவர நச்சுத் தன்மையினால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது கால்நடைகளேயாகும்.