இளையர் அறிவியல் களஞ்சியம்/நீர்த் தாவரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

நீர்த் தாவரங்கள் : தரையில் உள்ள தாவரங்களைப் போன்றே நீரில் வளரும் தாவரங்கள் உண்டு. இவை நீர்த் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. நீர்க் தாவரங்கள் பல வகையினவாகும். இவைகளுள் சில நீருக்கடியில் முளைத்து நீரின் மேற்பரப்பில் வளர்வனவாகும். மற்றும் சில நீருக்கடியிலேயே முளைத்து அங்கேயே வளர்ந்து வருவனவாகும்.

தாமரை. அல்லி, குவளை, கோரை முதலிய நீர்த்தாவரங்கள் நீருக்கடியில் தரையில் வேர் விட்டு, நீர் மட்டத்திற்கு மேலும் கீழுமாக வளர்வனவாகும். சில நீர்த்தாவரங்கள் நீருக்கடியில் தரையில் வேர்விட்டு நீர் மட்டத்திற்கு வராமலே நீருக்கடியிலேயே வளர்ந்து வாழ்வனவாகும். சிலவகைப் பாசிகள் இத்தகையனவாகும். இன்னும் சில நீர்த் தாவரங்களின் வேர் அடிநீர்ப்பரப்பில் வேர் ஊன்றாது நீருக்கடியில் பிடிமானம் இல்லாது இருக்கும். இவற்றின் இலையும் பூவும் நீர் மட்டத்திற்கு மேலாக இருக்கும். ஆகாயத்தாமரை, பிசாசுத் தாமரை போன்றவை இத்தகைய நீர்த்தாவரங்களாகும்.

கடற்கரையோரங்களிலும் சதுப்பு நிலப்பகுதிகளிலும் சிலவகை நீர்த் தாவரங்கள் உண்டு. கிண்ணை, சுண்டல் போன்றவை இத்தகைய தாவரங்களாகும். இப்பகுதிகளில் இத்தாவரங்கள் நிறைய இருந்தாலும் செழிப்பாக இருப்பதில்லை. காரணம், இப்பகுதியில் உள்ள நீரில் அதிக அளவில் உப்பு இருப்பதால் வேர்த்தண்டுகள் நீரை அதிக அளவில் உறிஞ்சவிடாமல் உப்பு படிந்து தடுத்து விடுகிறது. இதனால், இந்நீர்ச் செடிகள் நீர்ப் பற்றாக்குறையால் வளரும் பாலைத் தாவரங்கள் போன்று பருத்தும், சொரசொரப்பாகவும் சிறிய இலைகளையுடையனவாகவும் காணப்படுகின்றன.

நிலத்தாவரங்களுக்கும் நீர்த்தாவரங்களுக்கும் சில குறிப்பிட்ட வேறுபாடுகள் உண்டு. நீர்த்தாவரங்கள் எப்போதும் நீரிலேயே இருப்பதால், அதற்கேற்ப அதன் அமைப்பும் தன்மைகளும் அமைந்துள்ளன.

இலைப்பாசி போன்ற தாவரங்கள் நீரில் மிதக்கின்றன. இவை தன் தண்டுப்பகுதி மூலம் காற்றிலுள்ள பிராணவாயுவை கிரகித்து, அவற்றை இலைக்காம்புகளுக்கருகில் அமைந்துள்ள பைகளில் நிரப்புகின்றன. காற்று நிறைந்த பைகளால் இத்தாவரங்கள் நீரில் எளிதாக மிதக்க முடிகிறது.