இளையர் அறிவியல் களஞ்சியம்/பழுப்பு நிலக்கரி

விக்கிமூலம் இலிருந்து

பழுப்பு நிலக்கரி : நிலக்கரியில் பழுப்பு நிலக்கரி என்பது ஒரு வகையாகும். சாதாரண நிலக்கரியை விட பழுப்பு நிலக்கரி சற்று கடினத் தன்மை குறைந்ததாகும். எளிதில் தூளாகும் தன்மை கொண்டதால் இக்கரியை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த இயலாது. பூமிக்குள்ளிலிருந்து தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியில் 60 சதவிகிதம் நீர் அடங்கியுள்ளது. எனவே, இந்நீரைப் போக்கத் தூளாக்கிப் பின் கரிக்கட்டிகளாக உருமாற்றுகின்றனர். இதுவே 'லிக்கோ கரி' ஆகும். இக்கரி எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாகும்.

பழுப்பு நிலக்கரி சாதாரண சமையல் அடுப்புக்கு பயன்படுத்துவது முதல் அனல்மின் நிலையம்வரை வெப்பம் பெற எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பழுப்பு நிலக்கரி இந்தியாவில் நெய்வேலி, ஜெயங்கொண்டம் எனுமிடங்களில் அதிக அளவு வெட்டி யெடுக்கப்படுகின்றது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, தென்மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் அருகிலேயே அனல் மின் நிலையங்களும் உரத் தொழிற்சாலைகள், மற்றும் உருக்குத் தொழிற்சாலைகளும், உருவாக்கப்பட்டுள்ளன.இத்தகைய தொழில்களின் வளர்ச்சிக்குப் பழுப்பு நிலக்கரி பெருந்துணை புரிகிறது.

பழுப்பு நிலக்கரி முற்றிலும் பக்குவம் அடையாத நிலக்கரி ஆகும். எனவே இதில் இருந்து கணக்கற்ற பயனுள்ள கரிமச்சேர்மங்கள் பெறப்படுகின்றன. இவைகளிலிருந்து அதிக அளவு உரங்களும் தயாரிக்கப்படுகின்றன.