இளையர் அறிவியல் களஞ்சியம்/பாதரசம்

விக்கிமூலம் இலிருந்து

பாதரசம் : 'மெர்க்குரி' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதரசம் ஒருவகை உலோகம் ஆகும். உலோகங்களிலேயே திரவ நிலையில் உள்ள உலோகம் இது ஒன்றேயாகும். பண்டைக் காலம் முதலே மக்கள் பாதரசத்தை நன்கு அறிந்து வந்துள்ளனர். பழங்காலந் தொட்டே சீனர்களாலும் இந்துக்களாலும் சூரியனைச் சுற்றிவரும் கிரகப்பெயரை 'மெர்க்குரி’ என வைத்தனர். ஆயுர்வேத மருத்துவத்தில்

தெர்மா மீட்டர்

இதனை ‘பரத்’ (Parad) என குறிப்பிடுகின்றனர். கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டட்டில் இதனை 'மெது வெள்ளி’ (Quick Silver) என அழைத்தார். இதன் குறியீடு 'Hg' கிரேக்க மொழியில் 'நீர்ம சில்வர்” என அழைக்கப்படும் ‘Hydrograph’ என்னும் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.

பாதரசம் இயற்கையாகவும் கிடைப்பதுண்டு. மற்ற உலோகங்களோடு கலந்தும் கிடைப்பது உண்டு. மற்ற உலோகப் பொருட்களிலிருந்து பாதரசத்தை எளிதாகப் பிரித்தெடுக்கலாம். இங்குலிகம் (Cinnabar) என்ற சல்ஃபைடு கனிமத்திலிருந்து பாதரசம் அதிக அளவில் பிரித்தெடுக்கப்படுகிறது.

பாதரசத்தின் மூலப்பொருளாகிய இல்குலிகம் தாது இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெய்ன் போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் தோண்டியெடுக்கப்படுகிறது. இத்தாதுவை அதிக வெப்பத்தில் சூடாக்கும்போது அதில் கலந்துள்ள பாதரசம் ஆவியாக வெளிப்படுகிறது. இந்த ஆவியை மீண்டும் குளிரச் செய்யும்போது திவலைத் துளிகளாகப் படிந்து ஒன்று சேர்கிறது.

பாதரசம் பார்ப்பதற்கு வெள்ளியைப் போன்ற நிறமுடையதாகத் தோன்றும். சாதாரண வெப்பநிலையில் சாதாரண திரவப்

கிளினிக்கல் தெர்மா மீட்டர்

பொருட்களைவிட அதிகக் கனம் உள்ளதாக இருக்கும். பாதரச ஆவி நச்சுத் தன்மை கொண்டதாகும். பாதரசத்தை வேதியியல் முறையில் மற்ற உலோகங்களுடன் கலந்து புதிய சேர்மத்தை உண்டாக்க இயலும். இரும்பைத் தவிர்த்து பிற உலோகங்கள் பாதரசத்தில் கரைந்து விடும். இதனாலேயே பாதரசத்தை இரும்புப் பாத்தித்திலேயே வைக்கின்றனர். பாதரசமானது எண்ணெய் போலவோ நீர் போன்றோ பாத்திரங்களில் ஒட்டுந் தன்மை கொண்டதன்று. பாதரசம் நிரப்பப்பட்ட வெப்பமாணிகளைக் கொண்டு வெப்பநிலையை அளந்தறியலாம். இதே போன்ற பணிகளுக்குப் பாரமானிகளிலும் அழுத்தமானிகளிலும் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் பொருளாகப் பாதரசம் அமைந்துள்ளதால், பாதரச ஆவியைக் கொண்டு ஒளியுமிழும் தெரு விளக்குகளை எரியச் செய்கின்றனர்.