இளையர் அறிவியல் களஞ்சியம்/பூச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

பூச்சிகள் : உலகில் பலவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் பிராணி இனங்களே அதிகம். பிராணி இனங்களிலும் ஆறில் ஐந்து பாகம் பூச்சி இனங்களேயாகும். உலகில் சுமார் ஒன்பது இலட்சத்துக்கு மேற்பட்ட பூச்சி இனங்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் சுமார் ஏழு இலட்சம் பூச்சி இனங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. இப்பூச்சி இனங்களுள் பெரும்பாலானவை மனிதர்களுக்குச் சுகாதாரக் கேடுகளையும் தாவரங்களுக்குப் பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருவனவாகும். அவற்றுள்ளும் பட்டுப்பூச்சி, அரக்குப் பூச்சி, தேனீக்கள் போன்ற விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பூச்சிகள் மனிதர்களுக்கு நன்மை செய்வனவாக அமைந்துள்ளன.

பூச்சி இனங்கள் மிகப் பலவாக இருந்த போதிலும் அவற்றுள் பல இனங்கள் ஒன்றையொன்று தின்று வாழ்வதால் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் அவைகளாலேயே கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

அளவில் சின்னஞ் சிறியனவாக உள்ள பூச்சிகளின் உடல் உறுப்புகள் அவற்றின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப அமைந்துள்ளன. அவற்றின் உடல் உறுப்புகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தலை, மார்பு, வயிறு ஆகியனவே அவை.

சாதாரணமாக வண்டு போன்ற பூச்சிகளின் உடல் மடிப்புகளை உடையதாக இருக்கும். இவற்றை மேலும் கீழும் சற்று உறுதியான ஓடுகளான பகுதி மூடியிருக்கும். இவை ஒரு வகைச் சுண்ணாம்புப் பொருளாலானது. கொசு, அந்துப்பூச்சி போன்ற சிலவகைப் பூச்சிகளின் உடல் மென்மைத் தன்மையுடையதாக இருக்கும்.

பூச்சிகளின் தலையில் உள்ள முக்கிய உறுப்பு உணர்கொம்புகளாகும். பக்கத்துக்கு ஒன்றாக இரு உணர்கொம்புகள் உள்ளன. இவை தொடு உணர்வை மட்டும் அல்லாது பிற பொருட்களின் மணத்தையும் ருசியையும் கூட அறிய உதவுகின்றன. இவ்வுணர் கொம்புகள் பலவித வடிவங்களில் அமைந்துள்ளன. சில நீண்டும், மற்றும் சில குறுகியும் வேறு சில தலையிலுள்ள பள்ளங்களில் ஒடுங்கியும் அமைந்துள்ளன. உணர் கொம்புகளின் வடிவைக் கொண்டு ஆண், பெண் பூச்சிகளை இனங் காணலாம். கொசு, குளவி, ஈ, வண்ணத்துப் பூச்சி போன்றவைகள் உணர் கொம்புகள் மூலம் ஒலியை உணர்ந்து அறிகின்றன.

பூச்சிகளின் கண்களும் ஒரு வகையில் உணர்ச்சி உறுப்புகளாகவே அமைந்துள்ளன. பூச்சிகளின் கண்கள் ஒற்றைக் கண், கூட்டுக் கண் என இருவகையினவாக உள்ளன. தனிக் கண்கள் பிற பிராணிகளுக்கு அமைந்திருப்பது போன்று தலையின் இரு புறங்களில் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்திருக்கும். குளவி போன்றவற்றின் தலையில் மூன்று ஒற்றைக் கண்கள் உண்டு. தட்டாரப் பூச்சி, ஈ போன்றவற்றின் கண்கள் கூட்டுக் கண்களாகும். கூட்டுக் கண் என்பது நூற்றுக்கணக்கான கண்களின் கூட்டமைப்பாகும். அவற்றின் மூலம் தலையைத் திருப்பாமலும் சாய்க்காமலும் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்ளையும் எளிதாகக் காண முடியும்.

பூச்சிகளின் வாயாக அமைந்துள்ள தாடைப் பகுதி, அவை உட்கொள்ளும் உணவின்
பலவகைப் பூச்சிகள்
தன்மைக்கேற்ப பல்வேறு வடிவினவாக அமைந்துள்ளன.

பூச்சிகளின் வயிறு அமைந்துள்ள அடிப்புறத்தில் சாதாரணமாக ஆறுகால்கள் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. அவற்றின் நுனியில் வளைந்த கூரான நகங்கள் உள்ளன. இவை இருக்கும் இடத்தைப் பற்றிப் பிடிப்பதற்கு மட்டுமல்லாது இரையை கையகப்படுத்தவும் பயன்படுகின்றன. தட்டாரப் பூச்சி போன்றவைகளின் கால்கள் பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கத்தக்கனவாக உள்ளன. வெட்டுக் கிளிகள் போன்றவற்றின் பின்னங்கால்கள் எம்பி எழப் பயன்படுகின்றன. மார்பின் மேற்புறமாக இறக்கைகள் இல்லை.

பூச்சிகளின் வயிறு தொடர் வளையங்களாக அமைந்திருக்கும். அவற்றின் எண்ணிக்கை பத்தாகும். இவ்வளையங்கள் முட்டையிடும் அமைப்பாகவும் தற்காப்புக்காகக் கொட்டவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிகளின் மூச்சுக் குழல் நீண்ட குழாயாக மேல் ஓட்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான பூச்சிகள் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன.

பூச்சிகளில் பல தனியாகவும் சில கூட்டாகவும் வாழ்கின்றன. எறும்பும் தேனீயும் கூட்டமாக வாழ்வனவாகும். பூச்சி இனங்களிலேயே அறிவாற்றல் மிக்கவை எறும்புகளேயாகும்.

மனிதர்களிடையே நோயைப் பரப்புவதில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கொசு போன்றவற்றால் மலேரியா போன்ற நோய்கள் உண்டாகின்றன. ஈ போன்றவைகளால் காலரா, வாந்திபேதி போன்ற தொற்று நோய்கள் எளிதாகப் பரவுகின்றன. மற்றும் சிலவகைப் பூச்சிகள் பயிர்ப்பச்சைகளை நாசமாக்குகின்றன. எனவே, இத்தகைய பூச்சிகளை அழிக்க வேண்டிய அவசியமேற்படுகிறது. இதற்கான பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு இவை அடிக்கடி அழிக்கப்படுகின்றன.