இளையர் அறிவியல் களஞ்சியம்/மருத்துவம்

விக்கிமூலம் இலிருந்து

மருத்துவம் : மனிதன் என்றைக்கு நோய் வாய்ப்பட்டு, அதனின்றும் குணமாக விழைந்தானோ அன்று முதல் மருத்துவம் முகிழ்த்து விட்டதெனலாம். நோய்க்கான காரணங்களையும் அதைக் குணப்படுத்துவதற்கான வழி முறைகளையும் நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு முயற்சிகளை முறைப்படுத்தியபோதே மருத்துவ இயலும் முழுமை பெற்றதாக உருவெடுத்ததெனலாம்.

பழங்காலத்தில் சீனர்களும், சுமேரியர்களும் பாபிலோனியர்களும் இந்தியர்களும் சிறந்த மருத்துவ முறைகளை அறிந்திருந்தனர். பல ஆண்டுகட்கு முன்னரே இந்தியர்கள் மருத்துவ நுட்பங்களை நன்கறிந்து அவற்றைக் குறித்து வைத்துள்ளனர். மருந்துண்ணும் மருத்துவ முறை மட்டுமின்றி அறுவை மருத்துவத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர். கத்திரி, ஊசி, ஒரு வகைக் குறடுபோன்றவற்றைக் கொண்டு அறுவை மருத்துவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

இன்றுள்ள நவீன மருத்துவத்துக்கான அடிப்படை சுமார் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே போடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஹிப்பாகிரட்டீஸ் எனும் கிரேக்கரே இன்றைய மருத்துவத் துறையின் தந்தையாகப் போற்றப்படுகிறார். நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து நோய்களை வகைப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பின் வந்தவர்கள் உடல் உறுப்புகளின் அமைப்பையும் அவை இயங்கும் தன்மையையும் அறிந்து அதற்கே மருத்துவம் செய்யலாயினர். உடலில் இடையறாது ஓடும் இரத்தவோட்ட முறையை வில்லியம் ஹார்வி என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் கண்டறிந்த பின்னர் மருத்துவ இயல் வளர்ச்சி வேகமும் விறுவிறுப்பும் பெற்றது. பின்னர் நுண்பெருக்காடி கண்டறியப்பட்டது. அதன் மூலம் உடலின் உட்புறத் திசுக்களும் சின்னஞ் சிறு உடற்கூறுகளும் அவற்றின் தன்மைகளும் அறியப்பட்டன.

உடல் நோய்கள் பலவும் நோயுண்டாக்கும் நுண் கிருமிகள் மூலம் உருவாகின்றன என்பதை 1860இல் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டர் ஆவார். இவரது கண்டுபிடிப்புக்குப் பின் மருத்துவத் துறையின் வளர்ச்சி வியக்கத்தக்கதாகியது. 1895இல் ராண்ட்ஜன் எனும் ஜெர்மானியர் ஊடுகதிர் எனும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்தார். இதன்மூலம் உடலின் எந்த உறுப்பையும் படமெடுத்து, பாதிப்புகளை நுணுகி அறியமுடிந்தது. உரிய மருத்துவம் செய்ய இது வழியமைத்தது. இதன்பின் மருந்து வகைகளும் மருத்துவக் கருவிகளும் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட, புதிய வசதிகளோடு மருத்துவ மனைகள் அமையலாயின. முறையாகப் பயின்று தேறிப் பட்டம் பெற்ற மருத்துவர்களும் தாதிகளாகிய நர்ஸ்களும் மருத்துவத் துறையின் பேரங்கங்களாயினர். இன்று மருத்துவத்துறை எல்லா வசதிகளையும் கொண்டதாக உருவாகியுள்ளது. மருத்துவத்துறையை ஒழுங்குபடுத்தி சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் தக்க பாதுகாப்பு கிடைத்துள்ளது.

இன்று பல்வேறு வகையான மருத்துவமுறைகள் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றுள் 'அலோபதி' என்று கூறக்கூடிய ஆங்கில வைத்தியமுறையே இன்று புகழ்பெற்ற ஒன்றாக உலகெங்கும் பரவியுள்ளது. ஹோமியோபதி என்று கூறக் கூடிய ஜெர்மானிய மருத்துவ முறையும் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. ஆயுர்வேத மருத்துவமுறை பன்னெடுங்காலமாக, இந்தியாவில் இருந்து வரும் மருத்துவ முறையாகும். மூலிகைகளும் மூலிகை வேர்களுமே முக்கிய மருந்துப் பொருட்கள். பண்டு தொட்டே தமிழகத்தில் மருத்துவமுறையாக இருந்து வருவது சித்த மருத்துவ முறையாகும். தாவரப் பொருட்கள் மட்டுமல்லாது நீர்த்துப் பொடி செய்யப்பட்ட பாதரசம் போன்ற உலோகங்களும் காரங்களும் உப்புகளும் முக்கிய மருந்துப் பொருட்களாகும். யுனானி மருத்துவ முறை பாரசீக, அரபு நாடுகளிலிருந்து வந்து புழக்கத்தில் இருக்கும் ஒன்றாகும். யுனானி மருந்துகள் பெரும்பாலும் திரவ வடிவிலேயே இருக்கும். இம்மருந்துமுறைகளைக் கற்பிக்கத் தனித்தனி மருத்துவக் கல்லூரிகள் உண்டு.

இன்று மருத்துவமுறைகளும் மருந்துகளும் பெருகி வருவது போன்றே புதுப்புது நோய்களும் தோன்றி வருகின்றன. மருத்துவத்துறை தொடர்ந்து வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது.