இளையர் அறிவியல் களஞ்சியம்/மின்னாக்கிகள்
மின்னாக்கிகள் : 'எலெக்ட்ரிக் ஜெனரேட்டர்' என அழைக்கப்படும் மின்னாக்கிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகும்.
ஒரு கம்பிச் சுருள் வழியாகக் காந்தத்தை விரைவாகச் செலுத்தினால் அக்கம்பிச் சுருளில் மின்னோட்டம் உண்டாகும். இந்த அடிப்படையில் இயங்கும் எந்திரமே 'மின்னாக்கி' எந்திரம். தொடக்கத்தில் நிலக்கரியை எரிப்பதன்மூலம் கிடைக்கும் வெப்பச் சக்தியைக் கொண்டு மின்னாக்கி எந்திரங்களை இயங்கச் செய்து மின் உற்பத்தி செய்தார்கள். இஃது அனல் மின் உற்பத்தி முறையாகும். பின்னர், விரைவாக ஓடிவரும் நீரின் விசையைக் கொண்டு மின்னாக்கி எந்திர சக்கரங்களைச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்தார்கள். இவ்வகையில் உண்டாக்கப்படும் மின்சக்தி 'புனல் மின்சாரம்’ அல்லது 'நீர் மின்சாரம்’ என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் அணுசக்தியைக் கொண்டு இத்தகைய மின்னாக்க எந்திரங்களை இயக்கி மின்விசை தயாரிக்கப்படுகிறது, இஃது 'அணுவின் விசை’ என அழைக்கப்படுகிறது.
சிறிய அளவில் மின்சக்தி உற்பத்தி செய்ய சிறிய மின்னாக்கிகளை இயக்கி மின்சக்தி பெறுவதுண்டு. சான்றாக, சைக்கிளில் உள்ள விளக்கை எரியச் செய்ய 'டைனமோ' எனும் சின்னஞ்சிறு மின்னாக்கி எந்திரம் சைக்கிளின் டையரோடு இணைக்கபட்டிருக்கும். சைக்கிள் ஓடும்போது டயரோடு இணைத்துள்ள டைனமோ மின்னாக்கி எந்திரமும் விரைந்து சுழலும். அப்போது உற்பத்தியாகும் சிறிதளவு மின்சாரம் கம்பி மூலம் சென்று சைக்கிளின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள விளக்கை எரியச் செய்கிறது. சாதாரணமாக ஒவ்வொரு மின்னாக்கி எந்திரத்திலும் நான்கு வகை அமைப்புகள் இருக்கும். 1. புலக்காந்தம் (Field magnet) 2. செலுத்திவளையம் (Armature) 3. நழுவு வளையம் (Slip ring) 4. தூரிகைகள் (Brushes) என்பனவே அவை. இவற்றுள் புலக்காந்தம் என்பது எப்போதும் நிலையாக இருக்கும் முக்கிய உறுப்பாகும். இந்நிலைக் காந்தத்தின் இரு முனைகளுக்கிடையே வளையத்தைச் செலுத்திச் சுழலச் செய்வதன் மூலம் மின் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தை நழுவு வளையங்கள். துரிகைகள் மூலம் வேண்டிய இடத்திற்கு அல்லது பகுதிக்கு மின்சக்தியைக் கொண்டு செல்லலாம். அதிக அளவு அல்லது குறைந்த அளவு மின்சாரத்தை இத்தகைய மின்னாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். இம்மின்னாக்கிகள் சுழலும் வேகத்தைப் பொறுத்து உற்பத்தியாகும் மின்சக்தியின் அளவு அமையும்.
மின்னாக்கிகளும் பல்வேறு அளவுகளில் உள்ளன. சைக்கிள் போன்ற மிதிவண்டிகட்கு சிறிய அளவுடையதாகவும் மோட்டார் கார் போன்றவற்றிற்குச் சற்று பெரியதாகவும் பெரிய தொழிற்சாலைகளில் மிகப் பெரிய மின்னாக்கிகளும் உண்டு. சில பெரிய மின்னாக்கிகள் பெட்ரோல், டீசல் போன்றவைகளால் இயங்குகின்றன.