உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

சிறார் முதல் முதியோர்வரை அனைவர் வாழ்விலும் அறிவியலின் தாக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வையும் நகர்த்த முடியா நிலை. எனவே. அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருக்கும் அறிவியல் அறிவை, உணர்வை, சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டியது இன்றியமையாததாகும். இதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் கண்கவர் அறிவியல் நூலாக வெளிவருகிறது ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

முன்பு. தமிழ் வளர்ச்சிக்கழகம் ‘கலைக் களஞ்சிய’த் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக வெளிவந்த கலைக்களஞ்சியங்கள்’ என்னும் பெருமை பெற்றன இவை பெரும்பாலும் பெரியவர்கள் பயன்படுத்தத்தக்கனவாகவே இத்தொகுதிகள் அமைந்தனவெனலாம், பின், அதே தமிழ் வளர்ச்சிக் கழகம் சிறுவர்களுக்கான பொதுவான குழந்தைகள் கலைக்களஞ்சியங்களை வெளியிட்டுப் பெருமை பெற்றது. இவை அனைத்துத் துறைத் தகவல்களையும் உள்ளடக்கியவை. அவற்றில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டவைகளாகும். கால் நூற்றாண்டுக்கு பின்பு அறிவியல், சமூக, வாழ்வில் எத்தனையோ புதுமைகள் பூத்து புது மணம் பரப்பியுள்ளன. காலப்போக்கில் எத்தனையெத்தனையோ மாற்ற திருத்தங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆயிரமாயிரம் புதுக் கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டு அவை மக்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்துவிட்டன.

எனவே. இன்றைய சூழ்நிலைக்கேற்ப புதிய செய்திகளை உட்கொண்டு ‘கலைக் களஞ்சியங்கள்’ வெளிவர வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகிறது. இக்குறையை நிறைவு செய்யும் வகையில் கலைக் களஞ்சியங்களை ‘வாழ்வியல் களஞ்சியம்’, 'அறிவியல் களஞ்சியம்' என இரு பெரும் பிரிவாகப் பிரித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியங்கள் இதுவரை ஒரு சில தொகுதிகள் வெளிவந்திருந்தாலும் அவை பெரியவர்களை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டவைகளாகவே உள்ளன. எனவே, சிறுவர்கட்குப் பெரிதும் பயன்படக்கூடிய அறிவியல் களஞ்சியம் உருவாக்கி வெளிவிடுவதன்மூலம் தமிழில் 'சிறுவர் அறிவியல் களஞ்சியம்' இல்லை என்ற குறையை நீக்கவேண்டும் என்ற மனவுணர்வு எனக்குப் பல்லாண்டுகளாகவே இருந்து வந்தது. சிறுவர்கட்கு மட்டுமல்லாது ஆரம்பப் பள்ளியோடு அல்லது நடுநிலைப் பள்ளிப் படிப்போடு படிப்பை விட்டு விட்டவருக்கும், அறிவியல் செய்திகளை மேன்மேலும் அறிந்துகொள்ளவேண்டும் எனும் வேட்கை கொண்ட இளையர், பெரியவர்கட்கும் பயன்படத்தக்க ஒரு ஒரு 'மினி' அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கி அறிவியல் வேட்கை கொண்டவர்களின் அறிவுப் பசியைப் போக்க வேண்டுமென விழைந்தேன். அவ்விழைவின் பயனாக உருவானதுதான் உங்கள் கரங்களில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கும். ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

முன்பு 'சிறுவர் கலைக்களஞ்சியம்’ எனும் பெயரில் ஒரு 'மினி’ கலைக்களஞ்சியத்தைச் சிறுவர்களுக்கென உருவாக்கி வெளியிட்டேன். அப்போது எனக்குக் கிடைத்த பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு இந்த அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளேன். சிறுவர்கள், படிப்பை பாதியில் விட்ட இளைஞர்கள் ஆகியோரை மனதிற்கொண்டு, அவர்கட்குள்ள சொல்லாட்சித் திறனையும் அறிவியலைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எளிய சொற்களைக் கொண்டு, சிறு சிறு சொற்றொடர்கள்மூலம் ஏராளமான படங்களோடு அறிவியல் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை படிப்போருக்கு மிக எளிதாக விளங்கவும், அவை படிப்போர் மனதுள் சென்று தங்கவும் பேருதவியாயமையும் என்பது திண்ணம்.

முந்தைய களஞ்சியங்கள் பலவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இக் களஞ்சியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அறிவியல் கட்டுரைகளை என் முப்பதாண்டு அறிவியல் பட்டறிவின் அடிப்படையில் எழுதியிருப்பினும் அவ்வத்துறை வல்லுநர்கள் கட்டுரைகளைப் பார்வையிட்டு, மாற்ற திருத்தங்கள் செய்த பின்னரே அச்சு வாகனமேறின. இப்பணி செவ்வனே நிறைவேற உறுதுணை புரிந்த வல்லுநர்களை அண்ணா பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரி இயற்பியல் துறை துணைப்பேராசிரியர் டாக்டர் மு. ஆறுமுகம் அவர்கட்கும், சென்னை மாநிலக் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் வ. பாலசுப்பிரமணியன் அவர்கட்கும் டாக்டர் மு. வ. அவர்களின் தலைமகனும் மு. வ. மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் வ. தி அரசு அவர்கட்கும் நாடறிந்த மருத்துவ எழுத்தாளர் ராஜபாளையம் டாக்டர் கு. கணேசன் அவர்கட்டும் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குநர் திரு இரா. நடராசன் அவர்கட்கும் நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடங்கள் சிலவற்றை உரிய நேரத்தில் வரைந்தளித்துள்ள இளம் ஓவியக் கலைஞர் திரு இராசாராம் அவர்களின் ஒத்துழைப்பு என்னை பல சமயங்களில் நெகிழச் செய்துள்ளது. இதன் அச்சுப் பதிவுத் தயாரிப்பின்போது நூல் வடிவமைப்புக்கும் பக்க அமைப்புக்கும் பல அறிய ஆலோசனைகளை வழங்கிய திருமதி சித்தை செளதா அவர்கட்கும் என் நன்றி என்றும் உரியதாகும். உரிய கால எல்லைக்குள் இந் நூலை அழகிய முறையில் அச்சிட்டு வழங்கிய மீரா அச்சகம் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இந்நூலின் அட்டைப் படத்தை கண்கவர் முறையில் பல வண்ணங்களில் வரைந்து உதவிய ஓவியக் கலைஞர் கலைமதி அவர்கட்கும் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

காலத்தின் போக்குக்கேற்ப உருவாகியுள்ள அறிவியல் அறிவு பரப்புப் பணியின் தேவையை ஓரளவேனும் நிறைவுசெய்ய இந்துல் பெரிதும் துணை புரியும் என நம்புகிறேன். இளைஞர்களின் விரைவான அறிவியல் அறிவு வளர்ச்சிக்கும் அறிவியல் அடிப்படையிலான புரிந்துணர்வுக்கும், அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்கும் இந்நூல் ஒரு ஆதார சுருதியாக அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழில் வெளிவந்துள்ள இளைஞர்க்கான முதல் அறிவியல் களஞ்சியம் எனும் சிறப்பும் இந்நூலுக்கு உண்டு.

முந்தைய எனது இலக்கிய, அறிவியல் நூல்களை ஆதரித்துப் போற்றிய தமிழுலகம் இந்நூலையும் ஏற்றிப் போற்றும் என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு.

5-12-94
சென்னை -40

அன்பன்
மணவை முஸ்தபா
ஆசிரியர்