உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/லேவன்ஹுக்

விக்கிமூலம் இலிருந்து

மருத்துவத் துறையில் நோய் நுண்மங்களைக் கண்டறிய வழி வகுத்தவர் நெதர்லாந்து நாட்டில் 1632இல் டெல்ஃப்ட் எனும் ஊரில் பிறந்த லேவன்ஹூக் ஆவார். இவர் கடையொன்றில் பணியாளராக வேலை செய்து வந்தார். தனது ஓய்வு நேரங்களில் நுண்பெருக்காடி கொண்டு பொருட்களைக் கண்ணுற்று ஆய்வதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தார். சாதாரண லென்ஸ்களைக்கொண்டு அமைத்த கருவியைக் கொண்டு ஆய்வு செய்து வந்தார். ஒரு சமயம் மழைத் துளியைக் கொண்டு ஆய்ந்தபோது அதில் ஓரணு பாக்டீரியங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். தொடர்ந்து ஆய்வு செய்து ஈஸ்ட் உயிரணுக்கள், இரத்த உயிரணுக்களையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றின் உருவங்களைப் படமாகத் தீட்டினார். இதே முறையில் தசைநார் அமைப்புகளையும் கண்டறிந்து அதையும் படமாக வரைந்து வைத்தார். இவரது கண்டுபிடிப்புகளும் படங்களுமே பிற்காலத்தில் மருத்துவர்கள் நோய் நுண்மங்களை விரிவாக ஆராய்ந்தறிய வழிகோலின.

இவர் தயாரித்துப் பயன்படுத்திய நுண் பெருக்காடி சாதாரணமானதாகும். எளிய தோற்றமுடைய அதில் இரண்டு தகடுகளுக்கிடையே லென்சைப் பொருத்தி, ஒரு துளையை கண்ணருகே வைத்து ஆராயும் வகையில் உருவமைக்கப்பட்டிருந்தது. சோதனைப் பொருள் அடிப்பகுதியில் வைத்து ஆராயப்பட்டது.

லேவன்ஹுக்

லேவன்ஹுக் கண்டறிந்த கண்டுபிடிப்புத் தகவல்களும் குறிப்புகளும் அவர் அவ்வப்போது வரைந்த படவரைவுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவை நூல் வடிவில் இன்று கிடைக்கின்றது.