இளையர் அறிவியல் களஞ்சியம்/வாய்

விக்கிமூலம் இலிருந்து

வாய் : நம் உடலின் இன்றியமையா உறுப்புகளுள் ஒன்று வாய். உணவைச் சுவைத்து, அரைத்து உண்ணவும் பானங்களைப் பருகவும் பேசவும் வாய் பயன்படுகிறது. மூக்கு அடைப்பின்போது மூச்சு விடவும் வாய் பயன்படுகிறது. சாதாரண சமயங்களில் வாய் மூலம் மூச்சு விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மனிதனால் மட்டுமே வாய்மூலம் பேச முடிகிறது. பிற உயிரினங்களால் உணவை உண்ணவும் சில சமயம் ஓசை எழுப்பவும் மட்டுமே வாயைப் பயன்படுத்த முடிகிறது. எனவேதான், இப்பிராணிகள் ‘வாயில்லாப் பிராணிகள்” என அழைக்கப் படுகின்றன.

வாயின் முன்பகுதியில் மேலும் கீழுமாக இரண்டு உதடுகள் அமைந்துள்ளன. வாயின் உட்புறத்தில் மேலும் கீழுமாக இரு வரிசைகளில் பற்கள் அமைந்துள்ளன. இவை உணவை நன்கு மென்று, அரைக்கத் தக்கவாறு பல்வேறு வடிவில் அமைந்துள்ளன. வாயின் நடுப்பகுதியில் நீண்ட நாக்கு அமைந்துள்ளது. இதன் மேற்பரப்பில் உணவின் சுவையை அறிந்துணரவல்ல சுவை அரும்புகள் அமைந்துள்ளன. இவற்றையெல்லாம் காக்கும் சுற்றுச் சுவர்போல இருபுறமும் கன்னங்கள் அமைந்துள்ளன. வாயின் கீழ்ப்பகுதியிலும் மேல் பகுதியிலும் தாடைகள் அமைந்துள்ளன. வாயின் மேல்பகுதி அண்ணம் என அழைக்கப்படுகிறது. இதன் முன்பகுதி கெட்டி எலும்பாலும் பின் பகுதி மெல்லிய எலும்பாலும் ஆனது. மென் எலும்புப் பகுதியிலிருந்து உள்நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கும்.

வாயின் அமைப்பு

வாயின்உட்புறத்தில் உணவைக் கரைத்துச் சீரணிக்கச் செய்யும் ஆறு உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன. இவைகளில் இரண்டு காதின் முன்புறமும் அடுத்த இரண்டு அடித்தாடையிலும் மற்றுமுள்ள இரண்டு நாவின் அடியிலும் அமைந்துள்ளன. வாயைச் சுற்றியுள்ள சவ்வுப் படலத்தில் மற்றும் சில சுரப்புகள் உள்ளன. நீர்போலுள்ள உமிழ் நீரில் சிறிது கொழ கொழப்புத்தன்மை உண்டு.

உமிழ்நீர்ச் சுரப்பிகள் உண்ணும் உணவில் உள்ள மாவுப் பொருளை விரைந்து கரைத்துச் சர்க்கரைப் பொருளாக மாற்றி மேலும் சீரணமடைய தொண்டை வழி இரைப்பைக்கு அனுப்புகிறது. உமிழ் நீர் வாயை எப்போதும் ஈரமாகவைத்திருக்க உதவுகிறது.

வாயின் தொடர்ச்சியாக தொண்டை அமைந்துள்ளது. தொண்டையின் அமைப்பு புனல் போன்ற வடிவுடையதாகும். இதில் உணவுக் குழாய் இணைந்துள்ளது. இதன் வழியே உணவு இரைப்பைக்குச் செல்கிறது.

வாயில் உள்ள முக்கிய உறுப்பான நாக்கு வளையும் தன்மையுள்ள தசையால் ஆனதாகும். இஃது உணவின் சுவையறிய உதவுவதோடு உணவைப் பற்களுக்கிடையே செலுத்தி அரைக்கவும் திருத்தமாகப் பேசவும் பயன்படுகிறது.

உடலுக்குத் தீங்கிழைக்கும் நச்சு நுண்மங்கள் பலவும் மூக்கின் மூலமும் வாயின் வாயிலாகவும் உடலுள் செல்கின்றன. எனவே, வாயையும் மூக்கையும் எப்போதும் சுத்தமாகவும் கவனத்துடனும் பராமரிக்க வேண்டும். வாய்ப்புண் வராமல் தடுக்கவும் பல் இடுக்குகளில் உணவுத் துண்டுகள் தங்கி பற்சிதைவையும் உடலுக்கு நோயையும் உண்டாக்குவதால் ஒவ்வொரு முறையும் உணவு உண்டபின் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். பற்பசை கொண்டு நன்கு பல் துலக்க வேண்டும்.