இளையர் அறிவியல் களஞ்சியம்/விமான எதிர்ப்புப் பீரங்கி
விமான எதிர்ப்புப் பீரங்கி : போர்க் காலங்களில் வானில் பறந்து வந்து குண்டு வீசும் எதிரி விமானங்களை தரையிலிருந்தபடியே பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதே விமான எதிர்ப்புப் பீரங்கி.
குண்டுவீச வரும் பகை விமானங்கள் மேலாகவோ, கீழாகவோ பக்கவாட்டிலோ விரைந்து திரும்பும் தன்மை கொண்டவை. எனவே, அவ்விமானங்களைத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் மேல்நோக்கியோ பக்கவாட்டிலோ விரைந்து திரும்பும் தன்மையுடையதாகும். இதில் தரைப் பகுதிகளைத் தாக்கப் பயன்படும் சாதாரண குண்டுகளுக்குப் பதிலாக உயரமாக வெகு தொலைவு சென்றபின் வெடிக்க வல்ல வெடிகுண்டுகள் (Shells) பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யும் அமைப்பு
இதில் உண்டு. அவ்வாறு எதிரி விமானத்தை நோக்கிச் சென்று வெடித்துச் சிதறும் குண்டுகளால் விமானம் தாக்குண்டு அழியும் அல்லது பெரும் சேதத்தை குண்டு வீச்சு விமானங்களுக்கு ஏற்படுத்தும்.
விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முன்பு நிலையாக வேண்டிய இடங்களில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. பின்னர் வேண்டிய இடங்களுக்கு விரும்பியவண்ணம் கொண்டு செல்லத்தக்கதாக சக்கர வாகனங்களோடு பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 20 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய எதிரி விமானங்களைக்கூட சுட்டுத் தள்ளத்தக்க வகையில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் நவீன
முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரி விமானங்களின் நடமாட்டத்தை ராடார் கருவி மூலம் இரவு பகலாகக் கண்காணிப்பர். அதன் உதவி கொண்டு துல்லியமாக பீரங்கித் தாக்குதல் நடத்தி எதிரி விமானத்தை வீழ்த்துவர். நவீன விமான எதிர்ப்புப் பீரங்கி ஓரிருவரால் கூட இயக்க முடியும். இத்தகைய விமான எதிர்ப்புப் பீரங்கிகள் போர்க் கப்பல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.