இளையர் அறிவியல் களஞ்சியம்/வேதியியல்
வேதியியல் : 'கெமிஸ்ட்ரி' என ஆங்கிலத்தில் அழைக்கும் இதனை 'இரசாயனவியல்' என்று கூறுவதும் உண்டு.
மனிதன் என்றைக்கு வேறுபட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கலந்து புதியதோர் பொருளைப் பெற முயன்றானோ அன்றே வேதியலுக்கு அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டதெனலாம். பண்டைய மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரிப்பதிலும் தாங்கள் அறிந்திருந்த உலோகங்களை கலந்து புதுவகை உலோகங்களைப் பெறுவதிலும் வேதியியலே பெருந்துணை புரிந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஒரு புதிய பொருளைப் பெறுவதே வேதியியலின் அடிப்படைக் குறிக்கோளாகும்.
வேதியியல் காலங்காலமாக வளர்ந்துவந்த போதிலும் அது முறைப்படுத்தப்பட்ட தனித் துறையாகக் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான் வளரத் தொடங்கியது. அதன் நவீன வளர்ச்சிக்குக் காரணமாயமைந்தவர்கள் பாயில், கேவண்டிஸ், லவாய்சியர், மெண்டல், கியூரி தம்பதியர் ஆகியோர் ஆவர். இவர்களும் இன்னும் சிலருமே வேதியியலில் மிகப் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி பலப்பல புதிய உண்மைகளைக் கண்டறிந்து கூறியவர்கள்.
இன்றைக்கு நாம் வண்ண வண்ண அழகான டெரிலின், நைலான், நைலெக்ஸ் உடைகள் அணிந்து மகிழ்கிறோமே அதற்குக் காரணம் வேதியியல் கண்டுபிடிப்புகளேயாகும். நாம் அன்றாட வாழ்வில் விதவிதமான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துகிறோமே அவை அனைத்தும் வேதியியலின் விளைவுகளேயாகும். இன்னும் மருந்துகள், செயற்கை உரங்கள் வகைவகையான சோப்புகள் போன்ற அனைத்துமே வேதியியல் ஆராய்ச்சியின் விளைவாகப் பெற்ற பொருட்களேயாகும்.
வேதியியல் துறையின் வளர்ச்சி இன்று வியக்கத்தக்க அளவில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. பல்வேறு பிரிவுகளாகக் கிளைத்து வளர்ந்து வருகிறது. கரிம வேதியியல் (Organic Chemistry), கனிம வேதியியல் (Inorganic Chemistry), மின் வேதியியல் (Electro Chemistry), உயிரியல் வேதியல் (Bio Chemistry) ஆகியன அவற்றுள் சிலவாகும்.
தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களைத் தரமுள்ளதாகத் தயாரிக்க அவ்வப்போது ஆய்வு செய்ய வேதியியல் சோதனைக் கூடங்களை அமைப்பதும் உண்டு.