இளையர் அறிவியல் களஞ்சியம்/ஸ்டீவன்சன்
ஸ்டீவன்சன் : இன்றைய வாழ்வில் ரயில் வண்டிகளின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும். இன்று பலவகையான ரயில் வண்டிகள் உருவாகி ஓடுகின்றனவெனில் இதற்கு அடிப்படை அமைத்தவர் ஸ்டீவன்சன் ஆவார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் முழுப்பெயர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பதாகும். இவர் 1781ஆம் ஆண்டு நியூகாசில் நகருக்கு அருகில் உள்ள வைலம் எனு மிடத்தில் பிறந்தவராவார்.
இவர் தம் இளமைக் கல்வியில் நாட்டமில்லாதவராக இருந்தார். ஆயினும், அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தெரிந்து கொள்வதில் பேரார்வமுடையவராக இருந்தார். இவர் தன்
தந்தையாரோடு சேர்ந்து சுரங்கப் பணியாற்றி வந்தார். இவர் சுரங்கத்தில் இயந்திரங்களை இயக்குவதில் திறமை காட்டி அதில் படிப்படியாக பணி உயர்வு பெற்றார். இவர் இயக்கி வந்த நீராவி இயந்திரம் இயங்கும் நுட்பங்களையெல்லாம் நன்கு அறிந்து கொண்டார். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து பின் ஒன்று சேர்த்து இயக்கும் அளவுக்குத் திறமை பெற்றார். நாளடைவில் நீராவி இயந்திரங்களில் மேலும் பல மாற்ற, திருத்தங்களைச் செய்வதன் மூலம் இன்னும் சிறப்பாக இயங்கச் செய்யமுடியும் எனக் கருதினார். இதற்காகப் புதிய நீராவி எஞ்சினை உருவாக்க விரும்பி அரசுக்கு விண்ணப்பித்தார். 1818இல் அவருக்குப் புதிய நீராவி எஞ்சினை வடிவமைத்து உருவாக்க அனுமதி கிடைத்தது.
புதிய வடிவமைப்போடு கூடிய புதிய நீராவி எஞ்சினை 1814இல் உருவாக்கி அதற்கு 'புளுச்சர்’ எனப் பெயரிட்டார். இதனை மிகச் சிறப்பாக ஓட்டிக் காட்டினார். இந்த எஞ்சின் துணைகொண்டு பதினைந்து நிலக்கரிப் பெட்டிகளை 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துறைமுகத்திற்குக் கொண்டு சென்றதன் மூலம் ரயில் மூலம் சரக்கேற்றிச் செல்லும் புதிய அத்தியாயம் உருவாகியது.
நீண்ட தூரத்திற்கு ரயில்பாதை அமைக்கும் புதிய திட்டத்தைத் தீட்டினார். உரியவர்களின் அனுமதியோடு ஸ்டாக்டனிலிருந்து டார்லிங்டன் வரை புதிய ரயில் பாதையை 1822இல் அடக்கமாக ஏற்பாடு செய்தார். அப்பாதையில் குதிரைகளுக்குப் பதிலாக நீராவி எஞ்சினைக் கொண்டு பயணிப் பெட்டிகளை இழுத்துச் செல்ல முடியும் என்று கூறியதோடு 'ஆக்டிவ்’ என்ற பெயரில் அதை ஓட்டியும் காட்டினார். இந்தப் பயணம் 1929 -ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளன்று அவரால் நிகழ்த்தப்பட்டது. உலகத்திலேயே முதன் முதலாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் ரயில் பயணம் இதுவேயாகும்.இதன்பிறகு இத்தகைய ரயில் பாதை லிவர்பூலுக்கும் மான்செஸ்டருக்குமிடையே அமைக்கப்பட்டது. அதிலும் 'ராக்கெட்’ என்ற பெயரில் நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அரிய சாதனையை நிகழ்த்திய ஜார்ஜ் ஸ்டீவன்சனுக்கு 500 பவுன் பரிசளித்துப் பாராட்டப்பட்டது.
நியூயார்க் எனுமிடத்தில் இவர் நீராவி எஞ்சின் உற்பத்தித் தொழிற் சாலை ஒன்றை நிறுவி புதிய புதிய நீராவி எஞ்சின்களை உற்பத்தி செய்தார். இதனால், இவர் புகழ் இங்கிலாந்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவியது. இவரது ஆலோசனையின் பேரில் பெல்ஜியம். ஸ்பெய்ன் போன்ற நாடுகள் தங்களுக்கென இருப்புப் பாதைகளை அமைத்து ரயில் பயணத்துக்கு வழிவகுத்தன. இங்கிலாந்தின் தலைசிறந்த ரயில் இருப்புப்பாதை எஞ்சிஜினியராகத்திகழ்ந்த ஜார்ஜ் ஸ்டீவன்சன் 1843இல் தமது 67வது வயதில் அமைதியாக வாழ்ந்து மறைந்தார்.