இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/புதிய சித்தாந்தக் குழப்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchபுதிய சித்தாந்தக் குழப்பம்

கடந்த இருபது நாட்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மீலாது விழாக் கூட்டங்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களோடு சேர்ந்து வள்ளல் நபியவர்களின் வாழ்வையும் வாக்கையும் நினைவுகூரவும் திருமறையின் அடிப்படையில் சிந்திக்கவும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். இங்கு வருவதற்கு முன்பு இன்றைய காலப் போக்குக்கேற்ப அறிவியல் அடிப்படையில் நாம் எடுத்து வைக்கும் கருத்துகளுக்கு எத்தகைய எதிரொலி இருக்குமோ என்ற அச்சத்தோடவேதான் வந்தேன். என்னைவிடவும் உரக்க சிந்திக்கத் தெரிந்தவர்கள் நாங்கள் என்பதை என் சிந்தனைகளை நீங்கள் ஆர்வத்தோடு ஏற்கும் பாங்கினைக் கொண்டே அறிந்து, புரிந்து கொண்டேன்.

விரைவான சிந்தனைப் பரிமாற்றம்

இன்றைய கால கட்டம் செய்தித் தொடர்புச் சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக தகவல் பரிமாற்றம் வியக்குமளவுக்கு விரைந்து நடைபெற்று வருகிறது. அதைப் போன்றே சிந்தனைப் பரிமாற்றமும் அதனை வெளிப்படுத்தும் முறைகளும் கூட புதுமையான போக்கிலே அமைந்து வருவதைக் காண்கிறோம். 

காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப, பழைய முறையில் அல்லாது புதுப்போக்கில் நம் உணர்வுகளும் சிந்தனைகளும் பரிமளிக்க வேண்டுவது ஒருவகைக் காலக் கட்டாயம் என்று கூட கூறலாம்.

ஆன்மீக - அறிவியல் கூட்டிணைவு

பலரும் எண்ணுவதுபோல் இஸ்லாம் மற்றைய சமயங்களைப் போன்ற ஒன்றல்ல; ஆன்மீகத்தையும் அறிவியலையும் இரு கண்களாகக் கொண்ட அற்புதமான சமுதாய சீர்திருத்த இயக்கம். இன்றைக்கு அதில் அமைந்துள்ள அறிவியல் கருத்துகளெல்லாம் மக்கள் மத்தியில் முனைப்புடன் பரப்பப்பட வேண்டியவை. இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புகின்ற பணியில் நாம் இன்னும் பழைய பாணியிலேயே போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதே போன்று அறிவியலும் மிகப் பெரும் அடிப்படைத் தேவையாய் அமைந்துள்ளது. அகவாழ்வுக்கு ஆன்மீகமும் புறவாழ்வுக்கு அறிவியலும் இன்றியமையாத் தேவைகளாக அமைந்துள்ளன.

முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கிய இஸ்லாமிய நெறியை, நிறைவுசெய்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நேற்றைய நிலையும் இன்றைய போக்கும் நாளை மலரப் போகும் மனித குல வாழ்வு பற்றிய வருநாளியல் (Futurology) கருத்துகளும் பொதியப்பட்டுள்ளன. இச் செய்திகளெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டியது காலத்தின் இன்றியமையாத் தேவையாயுள்ளது. அப்போதுதான் நம்மைப் பற்றிய சரியான கணிப்பு மக்கள் மத்தியில் உருவாகி நிலை பெற முடியும்.

பிற சமய அலசல்

நான் முஸ்லிம்கள் மத்தியில் உரையாடுவதைவிட முஸ்லிமல்லாதவர்களிடையேதான் பேசுவதையே பெரிதும் விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் பிற சமயத்தவர் மத்தியிலே பேசும்போது, அவர்கள் போக்கிலேயே போய் அவர்களின் சமயச் சித்தாந்தங்களின் அடிப்படைகள் என்ன? அவற்றின் இன்றைய மாறுபட்ட வடிவங்கள் யாது? இம்மாற்றம் ஏற்பட காலம் தூவிய தூசிகள் எத்தகையது? உண்மைகள் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டுள்ளன? இவற்றையெல்லாம் அகற்றி அசலான தத்துவ நுட்பங்கள் என்ன? அவற்றிற்கும் மனிதர்களின் விருப்பு வெறுப்பகளுக்கேற்ப அறவே மாற்றப்படாத இறைமறைகூறும் அடிப்படைகளும் ஒன்றுபோல் பொருந்தி வருவதைப் போதிய காரண காரியங்களோடு விளக்கும்போது உண்மை வெளிச்சமாகிறது. இரண்டும் ஒரே நேர்கோட்டில் உலா வருவதைக் கண்டு வியப்படைகிறார்கள். கண்மூடித்தனமான பக்தியின் பேரால் எங்கோ வழி தவறிவிட்டோம். எடுப்பார் கைப் பிள்ளையாக எங்கோ கொண்டு சென்று விட்டார்கள் என்பதை உணருகிறார். வழி தவறிவிட்ட கன்றுக் குட்டி தாய்மாட்டைக் காணும்போது வாஞ்சையோடு ஓடி வருவது போல பலரும் குறிப்பாக அறிவுலகத்தைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இன்றும் இஸ்லாம் எனும் மூலத் தாயை நோக்கி வந்து கொண்டுள்ளார்கள்.

இறைவன் எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழியிலும் இறைவன் தன் செய்தியை வேத வடிவில் தந்துள்ளான். அச் செய்திகளை காலப்போக்கில் தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றி விட்டார்கள். அண்ணலார் பெற்ற இறுதி வேதத்திலே அந்த மூலக் கருத்துகளும் மூல உணர்வுகளும் அப்படியே உள்ளன என்ற உணர்வை அவர்களுக்கு நாம் ஏற்றி வைக்கின்றபோது, அவர்கள் இதுதான் நாம் பின்பற்ற வேண்டிய சரியான பாதை, இதுவரை நாம் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு திரும்புகிறார்கள். இந்த மன மாற்றத்திற்கான ஒரு சிறு அசைவை உருவாக்குகிற செயலை நாம் செய்தாக வேண்டும் என்பது தான் என் வேணவா.

புதிய சித்தாந்தக் குழப்பம்

ஆனால், இன்றைய இந்தியத் திருநாட்டிலே ஒரு புதிய பண்பாட்டுத் தத்துவக் குழப்பம் அரசியல் பின்னணியோடு உலவ விடப்பட்டுள்ளது. அதுதான் 'இந்துத்துவா' எனும் புதிய அரசியல் முழக்கம். இப்புதிய கோட்பாட்டை இந்திய மக்கள் அனைவர் மீதும் திணிக்கும் போக்கும் தலைதூக்கியுள்ளது. இன்றையக் குழப்பங்களுள் தலையாயதும் இதுதான். இது இந்தியச் சமய நல்லிணக்க உணர்வுக்கு இடையூறாக ஏன், முட்டுக்கட்டையாகவே அமைந்து விடுமோ என நல்லுள்ளங்கள் கவலைப்படவே செய் கின்றன.

இந்துத்துவமா? இந்தியத்துவமா?

இந்துத்துவா என்பது வேறு; இந்தியத்துவம் என்பது வேறு. இந்துத்துவம் என்பது இந்து சமயச் சார்புடையதாகும். இந்தியத்துவம் என்பது இந்திய நாட்டு தேசியச் சார்புடையதாகும். சொல் ஒற்றுமையை வைத்து இரண்டும் ஒன்று என்று கருதிவிடக் கூடாது. இரண்டும் வெவ்வேறு தன்மைகளையுடையதாகும்.

விநோத விளக்கங்கள்

இந்துத்துவம் என்பதற்குச் சொல்லப்படும் விளக்கங்கள் விநோதமானவைகளாகும். இந்துத்துவம் என்றால் இந்தியாவில் வாழும் இந்திய மக்கள் தொடர்பான கொள்கையாகும். இந்தியாவில் பிறந்து வாழ்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்களாவர். அவர்கள் இந்தியாவின் பண்பாட்டைத்

தான் பின்பற்றி வாழ வேண்டும். இந்தியாவின் கொள்கை கோட்பாடுகளைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவின் கலை, பண்பாடு அனைத்தும் இந்து சமயச்சார்புடையனவாகும். எனவே, இந்து சமயச் சார்பான இறைக் கொள்கைகளையும் இந்து சமயக்கலை, பண்பாட்டுக் கூறுகளையும் இந்துத்துவக் கொள்கை, கோட்பாடுகளாகக் கொள்ள வேண்டும்' என கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி வளைத்து, இந்தியாவில் இருப்பவர்கள் அத்தனை பேரும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக, எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்கள், இந்துக்களாவர் என்ற மனநிலையை உருவாக்க முயல்கின்றனர். இந்தியாவில் வாழும் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியார்களே என்பதில் எள்முனை அளவும் வேறுபாடோ மாற்றுக் கருத்தோ இல்லை. ஆனால், இந்தியர்கள் அனைவரும் இந்துத்துவாக் கொள்கைகளை, கோட்பாடுகளை பின்பற்ற வேண்டு என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.


இந்தியத் தனித்துவம்

இந்தியாவுக்கென்று தனித்துவமான சில கொள்கை, கோட்பாடுகள் உண்டு. இந்தியா என்றுமே 'யார்? ' என்று பார்ப்பதில்லை, 'என்ன?' என்பதில் மட்டுமே அக்கறை காட்டும். அதனால் கிருஸ்தவம், பார்சி, இஸ்லாம் போன்ற பல்வேறு சமயங்கள் இங்கே வந்து நிலைபெற்று பரவிட முடிந்தது. எனவே, இந்தியச் சமயங்களோ, இந்தியாவுக்கு வந்த சமயங்களோ இந்துத்துவா கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்துத்துவா என்பது இந்து சமயப் பண்பாடு, இந்தியத்துவம் இந்திய நாட்டின் சமுதாய, தேசியப் பண்பாடு ஆகும். சமயப்பண்பும் சமுதாயப் பண்பும் ஒன்றல்ல. அரசியல் ஆதாயம்

மேலும் இந்துத்துவாக் கொள்கையை அரசியல் அரவணைப்போடு வற்புறுத்துபவர்கள் இந்துச் சமயத்தைப் புரிந்து கொண்ட சமயவாதிகளோ அல்லது இந்து சமய அறிவோ நிறைந்தவர்கள் அல்லர். சமயச்சாயம் பூசிக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடித் திரிபவர்கள்.

சமயச்சாயம் பூசும் போக்குதான் இன்று இந்தியாவில் நடைமுறையாகி வருகிறது. கரீமும் கந்தசாமியும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், இரண்டு தனிப்பட்ட நபர்கள், அவர்களுடைய சொந்தக் காரணங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதுதானே நியதி. ஆனால், இன்றைய சூழலில் எப்படிக் கருதப்படுகிறார்கள்? கரீம் என்ற முஸ்லிமும் கந்தசாமி என்ற இந்துவும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சமயத்தோடு இணைத்துக் கூறுவதன் மூலம் இஸ்லாமிய மார்க்கமும் இந்து சமயமும் சண்டை போட்டுக் கொண்டது போன்ற மனப்பிரமையை உருவாக்குகிறார்கள். இத்தகைய தவறான போக்குகளை மாற்றுவதற்கான விழிப்புணர்வு இப்போது உருவாகி வருவது மனதுக்கு ஆறுதலளிப்பதாக உள்ளது.

சமயம் தனிமனிதச் சார்புடையது

இந்தியாவில் சமயப் பிரச்சினை தலையெடுக்காமல் இருக்க வேண்டுமெனில் அனைத்துச் சமயங்களும் அவரவர் வீட்டிற்குள்ளும் வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர சமுதாய வீதிக்கு வர வேண்டிய அவசியமே இல்லை.

சமயம், தனி மனிதச்சார்புடையதா? சமுதாயச் சார்புடையதா என்றால் தனி மனிதச் சார்புடையது என்றுதான் சொல்வேன். அவரவர் கொள்ளும் இறை நம்பிக்கை, செயல்பாடு, நன்மை தீமை இவைகளுக்கேற்ப இறையருள் பெற முடிகிறதென்றால், அது முழுக்க முழுக்க தனி மனிதச் சார்புடையதாகவே அமைந்ததெனலாம்.

சமயவாதிகளும் சமயப் பூசலும்

சமயம் தனி மனிதச்சார்புடையது என்பதை அந்தந்த சமயத்தைச் சார்ந்த சமய ஆச்சாரியர்கள் நன்குணர்ந்துள்ளனர். அதற்கேற்பவே அவர்தம் வாழ்வும் செயற்பாடுகளும் உள்ளன. அவர்களிடையே பிணக்கோ சச்சரவோ அறவே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் மதித்து அவரவர் வழியில் செல்கின்றனர். எங்காவது பாதிரியாருக்கும் கோயில் அர்ச்சகருக்கும் தகராறு, சச்சரவு எனக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அல்லது இமாமுக்கும் பாதிரிக்கும் அல்லது இமாமுக்கும் அர்ச்சகருக்கும் சண்டை என எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை. அவரவர் சமய ஆச்சாரப்படி அவரவர் வழியில் அமைதியோடும் பிற சமயங்களை மதிக்கும் நல்லிணக்க உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்பாகப் பேச அவதாரம் எடுத்திருப்பதாக கருதிக் கொண்டிருப்பவர்கள், சமய அறிவோ, சமயச் சிந்தனையோ இல்லாத அரசியல்வாதிகள். அவர்களால்தான் அனைத்துப் பிரச்சினைகளும் உருவெடுக்கின்றன. இந்தப் பேருண்மையை உணர்ந்து, சமயத்தை அரசியலில் கலந்து, குட்டையைக் குழப்பி, ஆதாயம் காண முயலும் சமூக விரோத சக்திகளை இன்றையத் தலைமுறை அடையாளம் கண்டுவருவது ஆறுதல் தரும் செய்தியாகும். இத்தகைய சமூக விழிப்புணர்வை ஊட்டுவதில் இஸ்லாத்துக்குப் பெரும் பங்கு உண்டு. பிற சமயங்களை மதிக்கப் பணிக்கும் இஸ்லாம், சமய சகிப்புணர்வோடும் நல்லிணக்கச் சிந்தனையோடும் மனித்துவத்தைக் கண்டறியவும் மதித்துப் பாராட்டவும் இஸ்லாம் வழிகாட்டும் ஒளி விளக்காக இன்று ஒளிர்ந்து கொண்டுள்ளது என்பதை அறிவுலகமே போற்றுகிறது.

(24.7.98 அன்று துபாய் லூத்தா மஸ்ஜிதில் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சிச் சொற்பொழிவுச் கருக்கம்)