இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/இஸ்லாமும் தாய்மொழியும்

விக்கிமூலம் இலிருந்து



இஸ்லாமும் தாய்மொழியும்

உலக மக்களுக்கு இறைநெறிபுகட்ட வந்த இறை தூதர்களில் - நபிமார்களில் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான கல்வி பற்றி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அளவுக்கு வலியுறுத்திக் கூறியவர் வேறு எவரும் இலர்.

'உம்மி' நபியாக -ஓரெழுத்தும் கற்காதவராக இருந்தும் அறிவுலகின் தலைவாசலாக விளங்கவல்ல கல்வி குறித்த பெருமானாரின் கருத்துகளைக் கண்டு இன்றைய அறிவுலகம் எண்ணி எண்ணி வியந்து போற்றுகிறது.

நபிகள் நாயகம் (சல்) அவர்களை இறுதி நபியாக இறைவன் தேர்ந்தெடுத்தபோதே, அவருக்கு அறிவு புகட்ட, கல்வி கற்பிக்க ஒரு மனிதரை ஏற்பாடு செய்து விடக் கூடாது என்பது இறைநாட்டமாக இருந்தது ஏன்? இறுதி நபியாக நாளை உலா வரும்போது, இறைச் செய்தியை மக்களுக்குக் கூறும்போது, அண்ணலார் இவ்வளவு அரிய செய்திகளைச் சொல்லுவதற்கு யார் காரணம் தெரியுமா? அவருக்கு ஆசிரியராயிருந்தவர் கொடுத்த அறிவு, அவர் சொன்ன விஷயங்களைச் சிறிது மாற்றி, திருத்தி இறுதி வேதம் எனக் கூறுகிறார் என்ற நிலைவந்துவிடக் கூடாது. ஏனென்றால், அவர் மூலம் இறைவன் இறுதி வேதத்தை உலகுக்கு வழங்கவிருக்கிறான். அதில் எக்காரணம் கொண்டும் மனிதத் தொடர்பு வந்து சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இறைவன் அவரை உம்மி நபியா, கல்வி கற்காதவராக இறுதிவரை வைத்திருந்தான்.

இறைவனே குரு

இதில் உள்ள மற்றொரு சிறப்பையும் நாம் எண்ணி வியக்க வேண்டும். நாயகத் திருமேனிக்கு மனிதன் குருவாக அமையாவிட்டாலும் வானவர் தலைவர் ஜிபுறீல் (அலை) அவர்கள் மூலம் இறைவனே குருவாக அமைந்துள்ளார். இறைவன் வானவர் தலைவர் வாயிலாக இறுதித் திருமறையை, இறைக் கட்டளைகளை, அறிவுச் செல்வங்களை வாரி வழங்கினான். இவ்வாறு இறைவனையே குருவாகப் பெறுகின்ற பேறு அண்ணாலாருக்கு மட்டுமே வாய்த்தது.

அண்ணலார் படிக்காத 'உம்மி' நபியாக இருந்த போதிலும் அவருக்கு வஹீயாக இறங்கிய முதல் வாசகமே 'இக்ரஉ' அதாவது 'ஓதுவீராக’, 'படிப்பீராக’, ‘கற்பீராக’, ‘தெரிந்து கொள்வீராக’ என்பதாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமே 'அல் கலம்' அதாவது எழுதுகோல் என்பதாகும். எழுது கோலைக் கொண்டு கற்பீராக எனத் திருமறை தொடங்குவதால் முதல் இறைச் செய்தியாக அறிவைப் பற்றி, அதைப் பெறுவதற்கான வழிவகைகளைப் பற்றியதாகவுமே அமைந்துள்ளது.

மொழியின் தனித் தன்மை

கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, அனுபவ அறிவும் கல்வியின்பாற்பட்டதுதான். இந்த அனுபவப்பூர்வமான அறிவு, சிந்தனை, எழுத்து மொழி மூலம் பதிவு செய்து வைக்கப்படுகிறது. அதைப் பலநூறு ஏன், பல்லாயிரம் கல் தொலைவுக்கப்பால் உள்ளவர்களும், இன்னும் பலநூறு ஆண்டுகட்குப் பின்னால் வரக் கூடியவர்களும் அவற்றைப் படித்துணர்ந்து பலன் பெறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைவது மொழியாகும் இது தமிழ் மன்றக் கூட்டமாக இருப்பதால் தமிழைப் பற்றியும் பேசலாம் என எண்ணுகிறேன்.

தமிழ் சோறு போடுமா?

இங்கே பேசியவர்கள் தமிழைப் பற்றி பல கருத்துகளைக் கூறினர். ஒருவர் சற்று காட்டமாகவே, ‘தமிழ் படித்து என்ன ஆகப்போகிறது. ராஸ்ல்கைமாவில் வந்து பணியாற்றும் நாங்கள், இங்கே தமிழ் பேசி என்ன சாதிக்கப் போகிறோம். ஆங்கில அறிவால் பல நன்மைகளைப் பெறுகிறோம்' தமிழால் பயனேதும் இல்லை, ஆங்கிலத்தால் அநேகப் பயன்கள் உண்டு என்ற தோரணையில் பேசினார்.

மாயத் தோற்றத்தில் மயங்கும் தமிழர்

இப்படியோரு மாயத் தோற்றம் இந்த நண்பரிடம் மட்டுமல்ல பலபேரை ஆட்கொண்டுள்ளது. அப்படிப் பேசுவது முற்போக்குச் சிந்தனையின் அடையாளமாகக் கருதி, பலபேர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் எனில் அஃது மிகையன்று.

நாள் இங்குள்ளவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் வாழம் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வேலை தேடி உங்களைப் போல் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்? ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருக்குமா? இந்த இரண்டு சதவீதத்தினருக்காக தமிழ் நாட்டிலேயே வாழப் போகும் 98 சதவீதத்தினரை உங்கள் தாய் மொழி தமிழில் கல்வி கற்காமல் ஆங்கிலத்தில் தான் கல்வி கற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம்? ஆங்கிலம் கற்க வேண்டாம் எனக் கூறவில்லை. உலகெங்கும் தொடர்பு மொழியாகப் பயன்பட்டு வரும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்கலாமே தவிர, ஆங்கிலத்துக்கு நம்மையே அடமானம் வைக்க முயல்வது அறிவீனம் மட்டுமல்ல, அறியாமையும் ஆகும். அறிவூட்டம் பெற ஆங்கிலமா- தமிழா?

நான் மூன்று முறை உலகை முழுமையாக வலம் வந்தவன். உலக மக்களின் நாடி நரம்புகளையெல்லாம் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஓரளவு பிடித்துப் பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைப்பது போன்ற நிலை எங்குமே இல்லை. அந்தந்த நாட்டுத் தாய்மொழி தான் அந்தந்த நாட்டு மக்களுக்கு அறிவூட்டி வளர்க்கும் ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும்தான் அறிவூட்டம் ஆங்கில மொழியில் மட்டுமே இருப்பது போன்ற மனப்பிரமை. இதற்குக் காரணம் ஆங்கில மொழி மூலம் நமக்கு ஊட்டப்பட்ட அழுத்தமான அடிமை உணர்வும் அதன் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள தாழ்வு மனப்பான்மை. இது எந்த அளவு உச்சத்தை அடைந்திருக்கிற தென்றால் பெற்ற மகனே தன் தாயைப் பார்த்து, 'நீ என்னைப் பெற்றிருந்தாலும் எனக்கு தாயாக இருக்க உனக்குத் தகுதி இல்லை. அதோ அங்கே கவுன் போட்ட வெள்ளை நிறத்தோளோடு ஒருத்தி நிற்கிறாளே அவள்தான் எனக்குத் தாயாக இருக்க முழுத் தகுதி படைத்தவள்’ எனக் கூறும் இழிநிலை இன்றையத் தமிழ்மகனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலை வேறு எங்குமே காண முடியாத ஒன்று.

தமிழக விந்தைப் போக்கு

தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலாவது இந்த அளவுக்கு ஆங்கிலப் பற்றாளர்கள் இருக்கிறார்களா என்பதே பெரும் கேள்விக் குறி. நான் அடிக்கடி செல்லும் ஃபிரான்சு நாட்டிலோ ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ, சீனாவிலோ எங்கு காண முடியா நிலை தமிழகத்தில் மட்டுமே உண்டு. இந்நாடுகள் உட்பட உலகெங்கும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் மக்கள் எல்லோரும் பேசும் மொழியாக அல்ல. இங்கேயெல்லாம் குறிப்பிட்ட சில இடங்களில், சான்றாக பன்னாட்டு விமான தளம், பன்னாட்டுப் பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம், பேரங்காடி வளாகம், நட்சத்திர உணவு விடுதிகள் போன்ற பல்வேறு நாட்டவர் குழுமும் இடங்களில் மட்டுமே ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது. மற்றபடி பன்னாட்டு வணிகத்தில் ஆங்கிலம் தொடர்பு மொழியாகப பயன்பட்டு வருகிறது.

புகழத் தெரிந்த அளவு ஆற்றலை அறிந்தோமா?

இங்கே பேசிய பலரும் தமிழை அடுக்கு மொழியில் புகழ்ந்துரைத்தே தம் பேச்சைத் துவங்கினார்கள். தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசியே 'சப்பானி’ ஆக்கிவிட்டோம். தமிழைப் புகழ்ந்து விட்டாலே தமிழுக்கு ஆற்ற வேண்டிய கடமையை, தொண்டைச்செய்து முடித்து விட்டோம், தமிழ் தானே வளர்ந்து விடும் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோடு தமிழ் உலகையும் ஏமாற்றி வருகிறோம். தமிழைப் புகழத் தெரிந்த அளவுக்கு தமிழின் ஆற்றலை உணர்ந்து தெளிய முயன்றுள்ளோமா என்பதை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த நாற்பதாண்டு காலமாக தமிழின் ஆற்றலை அறிந்து, அந்த ஆற்றலை இன்றையக் காலச் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்தி வெற்றி காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்று வருகிறேன்.

இறவா மொழி

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொல்காப்பியம் எனும் அற்புதமான இலக்கண நூலைப் பெற்ற தமிழ், தன் அடித்தளப் பண்பு சிறிதும் மாறா நிலையில் இன்று இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்த பல மொழிகள் செத்தும், வழக்கொழிந்தும் தேய்ந்தும், சிதைந்தும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்ததை, இருப்பதை இன்றைய மொழி வரலாறு எடுத்துக் கூறி வருகிறது.

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேல் சீரிளமைத் திறம் குன்றாமலிருப்பதற்கு அடித்தளக் காரணம் என்ன? ஆழமும் அழுத்தமும் நிறைந்த வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் திகழ்வதே இதற்குக் காரணம். உலகிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் திகழ்கிறது என்கிறார் மொழியியல் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எமினோ அவர்கள். அவரது அறிவார்ந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மை என்பதை கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக நான் மேற்கொண்டு வரும் சொல்லாக்கப்பணி மூலம் மிக நன்றாக உணர்ந்து வருகிறேன். பல்லாயிரம் கலைச் சொற்களை உருவாக்கி, சுமார் ஐந்து கலைச் சொல் களஞ்சிய அகராதிகளை உருவாக்கியபின் எனக்குள் எழும் அழுத்தமான உணர்வு தமிழ் காலத்திற்கேற்ற மொழி, காலத் தேவையை முழுமையாக நிறைவு செய்யவல்ல மொழி என்பதேயாகும்.

அறிவியல் மொழி தமிழ்

ஒரு மொழி இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழும் பெற்றியினைப் பெற்றுள்ளதென்றால் அஃது மாறி வரும் காலப் போக்கில் எத்தகைய போக்குக்கும் தேவைக்கும் ஈடு கொடுக்க வல்ல மொழி என்பதையே காட்டுகிறது. சங்க காலத்திற்கு முன்பு சமயத் தாக்கமே இல்லாத மொழியாக, அறிவியல் சார்ந்த மொழியாக இருந்தது. சங்க காலத்தில் சமுதாய மொழியாக மாறியது, பின்பு வைதீக சமயம், சமண, பெளத்த சமயம், வெளி நாட்டிலிருந்து சொராஸ்டிரியம், கிருஸ்தவம், இஸ்லாம் போன்ற சமயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர, அவ்வச் சமய மொழியாக உருமாறி வளர்ந்தது. ஆங்கிலேயர்களின் வரவால் மேலை நாட்டுப் புதினம், சிறுகதை, திறனாய்வு போன்ற துறைகளாகப் பரிணமிக்க தமிழ் தவறவில்லை. இன்று அழுத்தமாக உருவாகி உறுதியாக நிலை பெற்றுள்ள அறிவியல் ஊழிக்கு உகந்த மொழியாகத் தமிழ் வளர வேண்டிய காலக் கட்டாயம்.

அறிவியலின் விரைவான வளர்ச்சிப் போக்குக்கு ஈடு கொடுக்கத் தமிழால் முடியுமா என்பதுதான் இன்றைய இளைய தலைமுறைக்கு முன் எழுந்துள்ள ஐயம். இதற்கு அடிப்படைக் காரணம் பெரும்பாலான குழந்தைகள் தமிழை ஒரு மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகவும் கொண்டு படிக்க நேர்ந்திருப்பதுதான். நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்ததுபோல் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் தமிழை பள்ளியிறுதி வரைப் பயிற்சி மொழியாகவும் கொண்டு படித்திருந்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாமலே போயிருந்திருக்கும்.

தமிழ் இயல்பிலேயே ஒரு அறிவியல் மொழி. அறிவியலைச் சொல்லுவதற்கென்றே ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மொழி. காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப பல்வேறு வடிவெடுத்த போதிலும் தன் அடித்தள அறிவியல் திறத்தினை அது இன்னும் இழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதை மொழியியல் வரலாற்று அடிப்படையில் மட்டுமல்ல, பல்லாயிரம் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கி ஐந்து தொகுதிகளை வெளியிட்டபின் எனக்கு எழும் அழுத்தமான உணர்வு. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தைவிட சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் இலக்கிய மெருகோடும் தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும். அந்த அளவுக்குத் தமிழ் உயிர்ப்புள்ள அறிவியல் மொழி.

என்னைப் பொருத்தவரை தமிழை ஒரு மொழியாக மட்டுமே பார்க்கிறேன். உங்கள் கருத்தையும் உணர்வையும் என்கருத்தையும் உணர்வையும் ஒருவருக்கொருவர் பரிமாறக் கிடைத்த கருவியே மொழி. அதற்கு மேல் அதில் எதுவுமில்லை.

இன்று தமிழ் வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக இருப்பவர்கள் வெறும் பற்றாளர்களும் பூஜா மனப்பான்மை கொண்ட துதிபாடிகளுமே ஆவர். வெறும் புகழ்ச்சியினால் எந்த விளைவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

ஆட்சி மொழி - பயிற்சி மொழியே வளர்ச்சிக்கு ஆதாரம்

ஒரு மொழி ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் அமைந்து விட்டதென்றால் அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் எந்த சக்திக்கும் கிடையாது. இவ்விரு துறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால் எந்த மொழியும் பிழைத்து கொள்ளும் என்பதற்கு ஹீப்ரு மொழி ஒரு வாழும் சான்றாக விளங்குகிறது.

செத்த மொழி பிழைத்த விந்தை

ஏறக்குறைய 'செத்த மொழி' என்று மகுடம் சூட்டி அழைக்கப்பட்ட ஹீப்ரு மொழியை இரண்டாவது உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ஆட்சிமொழி, கல்விக் கூடங்களில் பயிற்சி மொழி என அறிவித்தனர். விளைவு, இன்று ஆற்றல் மிக்க வாழும் மொழியாக உருமாற்றம் பெற்றுவிட்டது. இதிலிருந்து பயன்பாட்டைப் பொருத்தே ஒரு மொழியின் சிறப்பும் வாழ்வும் அமைகிறது.

தமிழைப் பொருத்தவரை பெயரளவுக்கு ஆட்சி மொழியாகவும் அரசுப் பள்ளிகளில் ஓரளவுக்குப் பயிற்சி மொழியாகவும் சுருக்கப்பட்டு விட்டதனால் தமிழின் ஆற்றலைப் பற்றிய சந்தேகம் பலருக்கும் எழ வேண்டியதாகி விட்டது. இன்னொரு வருந்தத்தக்க நிலை என்னவென்றால் தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய பெரும்பான்மை பெண்கள் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு படித்ததனால், அளவுக்கதிகமாக ஆங்கிலத்தைக் கலந்து தமிழ் பேசுகிறார்கள். இதைக் கேட்கும்போது ஆங்கிலத்தின் துணையில்லாமல் தமிழால் தனித்து இயங்க இயலாது என்ற மனவுணர்வே உண்டாகும். இந்நிலைமைகள் மாற வேண்டும். வெறும் வெளி அழகுத் தோற்றங்களுக்காக மட்டும் தேர்வு செய்யாது, நல்ல தமிழ்ப் பயிற்சி பெற்றவர்களையே நிகழ்ச்சி நடத்துநர்களாக அமர்த்த வேண்டும்.

புனிதத்தை ஏற்றினால் இறப்பு நிச்சயம்

இச் சமயத்தில் மற்றொரு உண்மையையும் நாம் உணர்ந்து தெளிய வேண்டும். எந்த ஒரு மொழி மீதாவது புனிதத்தை ஏற்றி, அதைத் தெய்வ நிலைக்கு உயர்த்தினால் அம் மொழியை, அப் புனிதமே இறக்கச் செய்து விடும் என்பது மொழி வரலாறு உணர்த்தும் பேருண்மை.

விவிலிய வேதம் இருந்த காரணத்தால் லத்தீன் மொழி மீது புனிதத்தை ஏற்றினார்கள். காலப்போக்கில் அப் புனித உணர்வே மொழியைத் தனிமைப்படுத்த, இன்று இறந்த மொழிக்கோர் உதாரணமாகி விட்டது. அதே போன்று யூத வேத மொழியாக ஹீப்ரு இருந்ததனால், அதன் மீது புனிதத்தை ஏற்றிப் போற்றினார்கள். காலப்போக்கில் வேதத்துக்கு மட்டும் பயன்படும் மொழியாக உருமாறி அதுவும் வழக்கிழந்த மொழிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. நல்வினைப் பயனாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான இஸ்ரேல் நாட்டின் ஆட்சி மொழி, பயிற்சி மொழி என ஆக்கப்பட்டதால் ஆற்றல் மிகு உயிர்ப்பு மொழியாக இன்று பவனி வருகிறது. புனிதத்தை சமஸ்கிருத மொழி மீது ஏற்றியதன் விளைவு இன்று வரை இயங்கா மொழியாகத் தேக்கநிலை பெற்றுள்ளது. அதே போன்று தமிழின் மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும் தெய்வ நிலைக்கு ஒரு சாரரால் உயர்த்தப்பட்டு, பூஜிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுவே தமிழின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவது இயல்பே.

தமிழைத் தெய்வமாக்காதீர்!

தெய்வ நிலைக்குத் தமிழை உயர்த்த விழையும் போக்குத் தமிழுக்குக் காட்டும் மரியாதையாக இருக்கலாம். அது எப்படி தடையாக முடியும் என உங்களில் சிலர் நினைக்கலாம். ஒரு மொழி காலந்தோறும் உருவாகி நிலைபெறும் மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டு அவற்றை ஏற்று வளர வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஒருவிதக் காலக்கட்டாயம் ஆகும். தெய்வத்தை மாற்ற முடியாது; திருத்த முடியாது; வணங்க மட்டுமே முடியும். அந்த நிலை தமிழுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் தமிழை ஒரு மொழியாக மட்டுமே கருதும் மனப்பான்மை வளரவேண்டும். நம்மை விடப் ஃபிரெஞ்சுக்காரர்கள் மொழிப் பற்று மிக்கவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் மொழியைத் தெய்வமாகக் கருதுவதில்லை. திறம்பட்ட மொழி என்ற அளவிலே அதைப் பாராட்டி மகிழ்கிறார்களே தவிர, துதித்துப் பூஜிப்பதில்லை.

இஸ்லாமும் தாய்மொழியும்

இஸ்லாம் என்றும் தாய் மொழிக்கு முதன்மை தரும் மார்க்கமாகவே இருந்து வருகிறது. வல்ல அல்லாஹ் தன் தூதர்களுக்கு - நபிமார்களுக்கு வேதத்தை வழங்கும்போது, நபிமார்களின் தாய் மொழி மூலம் இறைவேதம் கொடுக்கப்பட்டதாகத் திருமறை தெளிவாகக் கூறுகிறது.

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக்கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்”. (14:4)

எனக் கூறுவதிலிருந்து அனைத்து வேதங்களும் அந்தந்த நபிமார்களின் தாய்மொழியிலேயே அனுப்பப்பட்டன என்பது தெளிவாகிறது. மூஸா (அலை)வுக்கு அவரது தாய்மொழியான ஹீப்ருவில் தவ்ராத் வேதமும் ஈஸா (அலை)வுக்கு அவரது தாய்மொழியில் இஞ்சீல் வேதமும் வழங்கப்பட்டது போல் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஹம்மது நபி (சல்) அவர்கட்கு அவரது தாய்மொழியான அரபி மொழியில் புர்க்கான் வேதமும் இறைவனால் வழங்கப்பட்டது. இதிலிருந்து இறைவன் தாய்மொழிக்குத் தந்துள்ள தகுதிப்பாட்டை எண்ணி இன்புறலாம்.

நாயகத் திருமேனி அவர்கள் அரபகத்தையும் அடுத்துள்ள நிலப்பகுதியையும் ஆட்சி செய்ய நேர்ந்த பொழுது, அப் பகுதிக்கு ஆளுநர்களை அனுப்பும்போது, தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளைக் கற்று, அம்மொழி மூலமோ ஆட்சி செய்யப் பணிந்தார்கள் என்றால் அண்ணலார் அவரவர் தாய் மொழிக்குத் தந்துள்ள மதிப்பையும் மரியாதையையும் எண்ணி மகிழ்கிறோம். ஏனெனில் ஒரு முஸ்லிம் தான் பிறந்த, வாழும் பகுதியில் தாய்மொழியாய் எந்த மொழி அமைகிறதோ அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தங்கள் பங்களிப்பைக் கட்டாயம் செலுத்த வேண்டுமென நேரிடையாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்துகிறது இஸ்லாம்.

இந்த உணர்வின் அடிப்படையில் தான் இன்று என் போன்றவர்கள் தாய்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இயன்ற வகைகளிலெல்லாம் உழைத்து வருகின்றோம். அதைத் தமிழ்ப் பணி என்று சொல்வதை விட ஒருவித இஸ்லாமியப் பணி என்று கூறுவதே சாலப் பொருத்தமாகும்.

(24.7.98 அன்று ராஸல்கைமா தமிழ் மன்ற விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)