உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/மனிதநேயப் பண்பு வளர்த்த மாநபி

விக்கிமூலம் இலிருந்து

மனித நேயப் பண்பு
வளர்த்த மாநபி


மீலாது விழாக்கள் எவ்வகையில் கொண்டாடப்பட வேண்டும் என நான் நீண்டநாளாக மனத்தளவில் எண்ணிவருகிறேனோ அம்முறையிலேயே இங்கு மீலாது விழா நடைபெற்று வருவது எனக்குப் பேருவகை அளிப்பதாயுள்ளது. அதற்காக இவ்விழா ஏற்பட்டளர்கட்கு என் இதயப்பூர்வமாக வாழ்த்தையும் இம் முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டும் என்ற என் வேட்கையையும் முதற்கண் புலப்படுத்திக் கொள்கிறேன்.

பொருத்தமான முறையில் மீலாது விழா

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாள் பெரு விழாவான மீலாது விழா, முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடும் விழா அன்று. மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பொது விழாவாகும். சமயம், இன, மொழி, சாதியப்போக்குகள் அனைத்தையும் கடந்த நிலையில் நடைபெற வேண்டிய பொது விழா. இவ் விழாவின் முக்கியத்துவத்தைப் பொது விழாவாகக் கொண்டாடப்பட வேண்டிய இன்றிமையாத் தேவையை, கற்றறிந்த பெரியோர்கள் இன்று தெளிவாக உணர்வதோடு, இவ்வுணர்வுகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தெளிவாக செயல்வழி வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

சில ஆண்டுகட்கு முன்பு அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் சென்னை செளகார்ப்பேட்டை மீலாது விழாக் குழுவினர் முச்சந்தில் மேடையமைத்து மீலாது விழா கொண்டாடினர்.

அவ்விழாவில் பங்கேற்கும்படி இஸ்லாமியப் பெரியோர்கள் சிலரை அணுகினார்கள். அவர்களில் உயர் நீதிபதியாயிருந்த முஸ்லிம் பெரியவரும் அடக்கம். ஆனால் பொதுக் கூட்டமாக முச்சந்தியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டார். விழாக் குழுவினர் என்னிடம் இதைக் கூறி வருந்தியதோடு தங்கள் நன் நோக்கம் நிறைவேற உதவுமாறு வேண்டினர்.

அவர்களின் உன்னத நோக்கம் எனக்குப் பிடித்திருந்தது மட்டுமல்ல, அவர்கட்கு உதவ வேண்டும் என்ற வேட்கையும் எனக்கு ஏற்பட்டது. காரணம், இம்முறையில் தான் மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும் என்பது இளமைக்காலக் கொள்கையாகவும் இருந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதியாயிருந்த ஜஸ்டிஸ் மோகன் அவர்களை அணுகினேன். நீதிபதி மோகன் அவர்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனக்குத் துணையாயிருப்பதில் பெருமகிழ்வடைபவர். எங்கள் கோரிக்கையை உடன் ஏற்றதோடு விழாவில் மிக அருமையாகப் பெருமானார் வாழ்வையும் வாக்கையும் பற்றி பேசினார்.

எம்பெருமானார் அல்ல-நம் பெருமானார்

அவருக்கு முன்னதாக அங்கே பேசிய மெளலவி ஒருவர் பெருமானாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் 'எம் பெருமானார் எம்பெருமானார்! எம் பெருமானார்!’ என்றே குறிப்பிட்டுப் பேசினார். இதைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி “பெருமானார் உங்களுக்குமட்டும் சொந்தமானவர் இல்லை. எங்களுக்கும், ஏன் உலகம் முழுமைக்கும் சொந்தமானவர்”. எனவே, இனி 'நம் பெருமானார்' என்றே பொதுவாகக் குறிப்பிட வேண்டும் என்று கூறியதோடு பெருமானாரின் பொதுமை உள்ளத்தைப் பெரிதும் போற்றிப் பேசினார். “பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கலாமா என விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பே பெண்களுக்கு பெருமானார் சொத்துரிமை வழங்க வழிகண்டார் என்றால் இஸ்லாமும் பெருமானார் பெருவாழ்வும் வருங்கால சமுதாய வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்காயமைந்துள்ளதால் இதைப் புகழாமல் இருக்க முடியாது” என்றெல்லாம் பலபடப் புகழ்ந்து பேசினார். இவ்வாறு பெருமானார் பெருவாழ்வையும் இஸ்லாமிய நெறி முறைகளையும் நினைவுகூற அனைத்துப் பகுதி மக்களுக்கும் உரிமையும் கடமையும் உண்டு. அந்த உரிமையை கடமையை நிறைவேற்றுகின்ற முறையில் அனைத்துச் சமய மக்களும் ஒருங்கிணைந்த நிலையில் துபாய் மண்ணில் மீலாது விழாவைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதில் நானும் பங்கேற்பதில் பெருமையும் பெருமகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன்.

யார் என்பதல்ல-என்ன என்பதே முக்கியம்

இந்த மீலாது விழாவைத் தமிழ் பண்பாட்டுக் கழகம் கொண்டாடுவதில் மற்றுமொரு சிறப்பம்சம் உண்டு. தமிழ்ப் பண்பாட்டிற்கும் பல்வேறு சிறப்புக் கூறுகள் உண்டு. அவற்றுள் தலையாயதாகப் போற்றப்படுவது “யார் என்பதைவிட என்ன என்பதில் கருத்தூன்றுவது” தான் அச்சிறப்பு. அதை நடைமுறைப்படுத்தும் முறையிலும் இம் மீலாது விழா இங்கே நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களாயினும் தமிழ் பேசும் தமிழர்கள் என்ற முறையில் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டுமுறைகளையும் மறவாதிருக்க, அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து இழையோடச் செய்ய நீங்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் நிலைக்களனாக இத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் அமைந்துள்ளது என்பதை தலைவரின் தலைமையுரையிலிருந்தும் வரவேற்புரையாற்றிய சகோதரி திருமதி காந்திமதி துரைராஜ் அவர்களின் பேச்சிலிருந்தும் புரிந்து கொள்ள முடிந்தது. இக்கழகத்தின் சார்பில் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதை அறிந்து மகிழ்கிறேன். ஏனெனில் மீலாது விழாவைப் போல் அனைத்துச் சமயத்தவர்களும் கொண்டாடத்தக்க பொதுவிழா பொங்கல்விழா.

பொங்கல் விழா தமிழர் தேசியத் திருவிழா

பொங்கல் விழா தமிழ் மண்ணுக்கே சொந்தமான தேசியத் திருவிழா. தை முதல் நாளன்று பூக்கும் பொங்கல் விழா, மதச் சார்பு அறவே இல்லாத அறுவடைத் திருநாள். மாட்டுக்கும் கலப்பைக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். தமிழ் மண்ணுக்கே சொந்தமான பழம்பெரு விழா. புராணத் தொடர்போ சமயச் சடங்குகளோ அறவே இல்லாத தேசியத் திருவிழா. இன்னும் சொல்லப் போனால் கடல் கடந்து துபாய் போன்ற நாடுகளிலே வாழ நேர்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமைத் திருநாளாகவும் இப் பொங்கல் திருநாளை பல்வேறு நாடுகளில் சென்று வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இம்மாதிரி விழாக்கள் தமிழ் மொழியையும் மொழி அடிப்படையிலான தமிழ்ப் பண்பாட்டையும் மறக்காமலிருப்பதோடு போற்றி வளர்க்கவும் வளப்பமடையச் செய்யவும் வழியாயமைகிறது.

தமிழ் உணர்வுகளை ஊட்டி வளர்க்கும் இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்படாத காரணத்தாலேயே மொரீஷியஸ் போன்ற நாடுகளிலே வாழும் தமிழர்கள் தமிழை மறந்து, பேசவும் எழுதவும் இயலாதவர்களாக, பெயரளவில் தமிழர்களாக வாழ நேர்ந்துள்ளதை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க இயலவில்லை. தமிழர் கலையும் தமிழ்ப் பண்பாடும் அவர்களைப் பொருத்தவரை பழங்கதையாகப் போய்விட்டது. வந்த நாட்டில் தங்கள் சொந்த மொழி, கலை, பண்பாடுகளைப் பேணவும், பேணி வளர்க்கவுமான தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது பெருமகிழ்வளிக்கிறது.

பொதுவில் 'பண்பாடு’ என்பது மனித வாழ்வின் அடித்தளமான ஒன்று. எதுவுமே இல்லையென்றால் கூட பண்பட்ட மனதை ஒருவன் வளர்த்துக் கொண்டிருந்தால் போதும் வாழ்க்கையில் அவன் எப்படியும் முன்னேறி விடுவான். இனிய பண்பாளனை எவரும் விரும்புவர். இது மனித இயல்பு.

பண்பாடு என்றால் என்ன?

பண்படுத்துவது பண்பாடு. இதை ஆங்கிலத்தில் 'கல்ச்சர்' (Culture) என்று கூறுகிறோம். நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்வதை 'Agriculture' என்று சொல்கிறோம். முறையாக நிலத்தைப் பண்படுத்திவிட்டால் அதில் எதை வேண்டுமானாலும் விளைவிக்கலாம். பண்படுத்தப்படாத நிலத்தில் எதையுமே விளைவிக்க முடியாது. அதே போலத்தான் பண்பாடு என்பது உள்ளத்தைப் பண்படுத்துவது. சரியானபடி நம் உள்ளத்தைப் பண்படுத்திவிட்டால், அங்கே உருவாகும் உணர்வுகளின் அடிப்படையில் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுவிட்டால், உறுதியாக நாம் வாழ்க்கையில் எதையெல்லாம் சாதிக்க விழைகிறோமோ அதையெல்லாம் எளிதாகச் சாதிக்கவியலும். நம் வாழ்க்கை சரியான நேர்கோட்டில் வெற்றி நடைபோட அது அடிப்படையாகவும் அமைந்து விடும். சுருங்கச் சொன்னால் எவனொருவன் பண்பட்ட மனதை உடையவனாக இருக்கின்றானோ அவன் வாழ்க்கையில் தன்னை மனிதப் புனிதனாக இருக்கத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்டான் என்பதுதான் பொருள். யாராவது ஒருவன் நாம் ஏற்க முடியாத வகையில் தவறாக நடந்து கொண்டுவிட்டான் என்றால் அவனைப் ‘பண்பாடில்லாதவன்' என்றுதான் உடனடியாக ஏச முற்படுகிறோம். ஏனெனில் நற்செயல்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது பண்பாடு ஆகும். இதையே வள்ளுவர் 'பண்புடையாளர் பட்டுண்டு உலகம்' என்று கூறினார்.

பண்பாடும் வேறுபாடும்

'பண்பாடு' என்பது நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி, சமயத்துக்குச் சமயம் வேறுபடும் தன்மை கொண்டதாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்தந்த மண்ணுக்குரிய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், சிந்தனைகள், சூழ்நிலைகள் இவற்றையெல்லாம் அடித்தளமாகக் கொண்டு மரபு முறையிலே வரக் கூடிய ஒன்று பண்பாடு.

சமயப் பண்பாடும் சமுதாயப் பண்பாடும்

பண்பாடு என்பது சமய, இன, மொழி அடிப்படையில் அமையினும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ‘சமுதாயப் பண்பாடு' எல்லோருக்கும் பொதுவான தாயமையும். சான்றாக, ஒரு தமிழ் முஸ்லிமை எடுத்துக் கொண்டால் அவன் பின்பற்றும் மார்க்க சம்பந்தமான சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் அவர்கள் வாழும் இல்லத்துள்ளும் வணக்கத்தளமான மசூதிக்குள்ளும் இருக்கும். அம் முஸ்லிம் வீட்டை விட்டோ அல்லது மசூதியைவிட்டோ வெளிப்பட்டு சமுதாய வீதியில் கால் வைத்துவிட்டால் தமிழருக்கென்று இருக்கக் கூடிய பொதுப் பண்பாட்டின் அடிப்படையிலேதான் அவன் இயக்கம் முழுமையும் அமைந்திருக்கும். இதுதான் தேசியப் பண்பாட்டின் சிறப்புத் தன்மை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம்

தமிழ்ப் பண்பாடு என்பது மொழி அடிப்படையில் அமைவது. மொழி என்பது மொழியப்படுவது. மொழி வழி உருவாகும் உணர்வுகளுக்கு வடிவம் தந்து வெளிப்படுத்துவது. இவ்வகையில் பல்வேறு மொழிகளின் பண்பாடுகள் அமைகின்றன. தமிழ்ப் பண்பாடு என்பதும் அவ்வகையில் அமைந்துள்ளதேயாகும்.

அவ்வாறாயின் தமிழ்ப் பண்பாடு எப்போது தோன்றியது? எல்லாவற்றிற்கும் வரலாறு உண்டு. வரலாறு இல்லாதது எதுவுமே உலகில் இல்லை. இந்த உலகம் எப்போது தோன்றியது? அதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதேபோல் தமிழ்ப் பண்பாடு என்று குறிப்பது எப்போது தோன்றியது? யாரால் வளர்க்கப்பட்டது? யார் யாரெல்லாம் அதை வளர்க்கப் பாடுபட்டார்கள்? யார் யாரெல்லாம் அதை வளப்படுத்த உழைத்தார்கள்? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதற்கும் ஒரு வரலாறு இருப்பது தெரிய வருகிறது.

அல்லாஹ் ஆதி மனிதர் ஆதாமோடு பேசிய மொழி தமிழ்

சென்னையில் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் என்ற பெரும் அமைப்பு உண்டு. அந்த அமைப்பிலே நானும் ஒரு உறுப்பினனாக இருந்தாலும், அதன் கூட்டங்களிலே நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். காரணம், அச்சங்கத்தில் இருக்கும் அங்கத்தினர்களில் பெரும்பாலோர் தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருந்த போதிலும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் உருது மொழியிலுமே நடைபெறுவது வழக்கம். இதனால் நானும் இன்னும் சில நண்பர்களும் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இது சங்க அங்கத்தவர்கள் பலருக்கும் தெரியும்.

ஒரு சமயம் ஹாஜி எஸ். எம். சுலைமான், ஐ. ஏ. எஸ். அவர்கள் சங்கத் தலைவரானார். அவர் என்னிடம் பேரன்பு கொண்டவர். நான் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத காரணம் அறிந்தவரும் கூட.

ஒரு சமயம் அச்சங்கம் சென்னை இம்பீரியல் ஹோட்டலில் 'ஈது கெட் டுகெதர்' கூட்டத்தை நடத்தியது. சங்கத் தலைவர் ஹாஜி சுலைமான் விழா தொடங்குவதற்கு முன்பு விழா நடக்கும் இடத்திற்கு விரைந்து வர வேண்டும் என்றும் மிக முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என்றும் மிக அவசரம் என்றும் கூறி என்னை வரச் சொன்னார். நானும் ஏதோ அவசரம் போலும் என்று கருதி கூட்டம் நடைபெறும் ஹாலுக்குள் நுழையவும் கூட்டம் தொடங்கவும் சரியாக இருந்தது.

என்னை ஆவலோடு வரவேற்ற தலைவர் ஹாஜி சுலைமான் அன்போடு வரவேற்ற கையோடு மேடைக்கு அழைக்க, நான் மறுத்தும் விடாது 'அழைத்து' என்று சொல்வதைவிட 'இழுத்து'ச் சென்று மேடையில் அமர்த்தினார் என்றே கூற வேண்டும். நானும் கெளரவம் கருதி அமைதியாய் அவருடன் மேடையில் அமர்ந்தேன்.

வரவேற்புரை முடிந்த கையோடு தலைமயுரையாற்றிய ஹாஜி சுலைமான், இன்றையக் கூட்டத்தில் உரையாற்ற மணவை முஸ்தபா வந்திருக்கிறார் எனக் கூறி, என்னைப் பற்றி முகமனாக பல செய்திகளைச் சொல்லி என்னைப் பேச அழைத்தார். நான் பேச எழுந்தவுடன் மேடையில் அமர்ந் திருந்த முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி பஷீர் அஹமது சையத் அவர்கள், என்னை ஓரளவு நன்கு அறிந்தவருங்கூட, என்னை நோக்கிச் சற்று உரத்த குரலில் “எந்த மொழியில் பேசப் போகிறீர்கள்?" என வினாவெழுப்பினார். அவர்கேட்ட விதம் எனக்கு மட்டுமல்லாது அங்கிருந்தவர்கட்கும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகச் சுழிப்பு வெளிப்படுத்தி கொண்டிருந்தன. என்றாலும், எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாது, அவரை நோக்கி நானும் சற்று உரத்த குரலில் "எந்த மொழியில் பேச வேண்டும்?” எனக் கேட்டேன்.

உடனே தலைவர் ஹாஜி சுலைமான் சாஹிப் எழுந்து “மணவை முஸ்தபா, தமிழில்தான் உரையாற்ற வேண்டும். அவரைத் தமிழில் பேசுவதற்காகத்தான், நம் கூட்டங்களுக்கு வராதவரை தந்திரமாக வரவழைத்துள்ளேன். அவர் தமிழில் உரையாற்றுவார்” எனக் கூறி பேசப் பணித்தார்.

நிலைமையை உணர்ந்த நான் “அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன்!” எனக் கூறி நிறுத்தினேன். நீதிபதி பஷீர் அஹமது உட்பட கூட்டத்தினர் அனைவரும் என்னையே நோக்கினர். சிறிது இடைவெளிக்குப் பிறகு 'மீண்டும் சொல்கிறேன். அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன்' எனக் கூறி நிறுத்தி, கூட்டத்தினரை நோட்டமிட்டேன். எல்லோரும் நெற்றியை உயர்த்தி வியப்போடு என்னை நோக்கினர். அல்லாஹ் பேசிய மொழி என்றால் அரபி தானே. அரபியில்தானே இறைவன் பெருமானார் மூலம் திருமறையை வழங்கியுள்ளான். ஆனால், அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன் என்று கூறிவிட்டு, தமிழில் பேசிக் கொண்டிருக்கிறாரே, இது என்ன வேடிக்கை!' என்றெல்லாம் அவர்கள் எண்ணுவதுபோல் முகபாவம். இருந்தது. இனியும் 'சஸ்பென்ஸ்' வைத்தால் அது 'சப்' பென்ஸாகி விடும் எனக் கருதி, தொடர்ந்து விளக்க முனைந்தேன்.

முதல்வேத மொழி தமிழ்

இஸ்லாமிய மரபுப்படி மக்களுக்கு இறைநெறி புகட்டி, நேர்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் பேர் என்பது இஸ்லாமிய மரபு. அவர்களுள் முதல் நபி முதல் மனிதரான ஆதாம் (அலை). இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களாவர். முதல் மனிதரும் முதல் இறை தூதருமான ஆதாம் (அலை) அவர்கட்கு, அவரது சந்ததியினருக்கு இறைநெறி புகட்டி, நேர்வழி காட்ட இறைவன் முதன் முதலாக இறைமறையை வழங்குகிறான். எந்த மொழியில்?

முதல்நபி பிறந்த குமரிக் கண்டம்

ஆதம் (அலை) எங்கே பிறந்தார். முதல் மனிதர் ஆதம் (அலை) வாழ்ந்த இடம் 'லெமூரியா கான்டினென்ட்' என்று நிலவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற 'குமரிக் கண்ட'மாகும். இப்பகுதி இன்றைய ஆஸ்திரேலியா தொடங்கி இந்தியா உள்ளடங்களாக உள்ள பகுதி. தொடக்கத்தில் இப்பெரும் நிலப்பகுதி பல நாடுகளாக இருந்து, பின் பிளவுபட்டு, கடலால் விழுங்கப்பட்டு நீர்ப் பகுதியானது என்பது பூகோளாய்வியல் வல்லுநர்கள் கருத்து.

அன்றைய குமரிக் கண்டத்தில் உள்ள மலையொன்றில் தான் முதல் மனிதர் ஆதாம் (அலை) இறைவனால் இறக்கப்பட்டிருந்தார். அங்கிருந்துதான் அவரது சந்ததியினர் பல்கிப் பெருகினர். இன்றும் முதல் மனிதர் மண்ணுலகில் இறக்கப்பட்ட மலை 'ஆதம் மலை' என அழைக்கப்படுகிறது. இது இன்றைய இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதம் (அலை) அவர்களின் மக்களின் சமாதி இன்று இராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. இச் சந்ததியினர் பல்கிப் பெருகிய குமரிக் கண்டப் பகுதி 49 நாடுகளாகப் பிரிந்திருந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் பேசிய மொழி தமிழ். அங்குதான் முதல் தமிழ்ச் சங்கமும் இரண்டாம் தமிழ்ச் சங்கமும் அமைந்திருந்தது. கடல் கோளால் இந்நிலப் பகுதி பிளவுப்பட்டு, கடலுள் மூழ்கிய பின்னர்தான் எஞ்சிய நிலப் பகுதியான இந்தியத் தென்கோடி மதுரை நகரில் மூன்றாவது தமிழ்ச் சங்கம் அமைந்தது என்பது தொடர் வரலாறாகும்.

ஆதம் (அலை) பேசிய மொழி தமிழே

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிகண்ட மக்கள் அனைவரும் பேசிய மொழி தமிழ் என்றால் அப் பகுதியில் இறைவனால் இறக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம்(அலை) பேசிய மொழியும் தமிழாகத் தானே இருக்க முடியும். ஆதம் (அலை) அவர்கட்குத் தெரிந்த மொழியில்தானே இறைவன் தன் வேதத்தை வழங்கியயிருக்க முடியும். எனவே, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களோடு இறைவன் தமிழ் மொழில் தானே பேசியிருக்க முடியும். எனவே, இறைவன் பேசிய தமிழில் பேசுகிறேன் என்று கூறி, தமிழில் உரையாற்றி, அதுவரை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கதில் நிலவிய ஆங்கில, உருது மொழி ஆதிக்கத் திற்கு முடிவு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை அச்சங்க நடவடிக்கைகள் தமிழிலும் நடைபெற்று வருகின்றன.

உலகின் மிக மூத்த பண்பாடு

'பண்பாடு’ என்பது வேறொன்றுமில்லை, இதை சம்ஸ்கிருதத்தில் கலாச்சாரம் என்று சொல்வார்கள். கலை, ஆச்சாரம் என்ற இரு சொற்கள் இணைந்ததே கலாச்சாரம். ஆச்சாரம் என்பது மரபு வழிக் கைகொண்டு வரும் சடங்குகள். வழிவழியாக வரும் கலையையும் ஆச்சாரத்தையும் இணைத்துக் கலாச்சாரம் என வழங்குகிறோம். தமிழிலே இதைப் பண்பாடு எனக் குறிப்பிடுகிறோம். பண்பட்ட மனத்தை உருவாக்கி, அதனடிப்படையில் செயல்பாடுகளை அமைத்து இயங்குவதனால் அது பண்பட்டதாகிறது. ஆகவே, இந்தப் பண்பாட்டின் வேர் எங்கிருந்து வருகிறதென்றால் ஆதி மனிதரிலிருந்து வருகிறதெனலாம். ஆதி மனிதர் தன் பழக்க வழக்கங்களையெல்லாம் தன் வழியில் வந்த சந்ததியினர்க்குச் சொல்லியிருப்பார், அவரது வழித் தோன்றல் தங்கள் காலத்தில் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டவைகளையும் இணைத்துத் தங்கள் சந்ததியினருக்கும் கற்றுக் கொடுத்திருப்பார். இவ்வாறு வழிவழியாக வந்த பண்பாடுகளில் உலகிலேயே மிக மூத்த பண்பாடு என்று எடுத்துக் கொண்டால் அது தமிழ்ப் பண்பாடாகவே இருக்கவியலும்.

நான் இவ்வாறு உறுதிபடக்கூறுவதால் வெறும் தமிழ்ப்பற்றால் கூறுவதாக யாரும் எண்ண வேண்டாம். நம்மைப்பற்றி நாமே இன்னும் சரியாகத் தெரியாமலும் புரியாமலும் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

பண்பாட்டின் நிலைக்களனான சங்க இலக்கியம்

பழந்தமிழ்ப் பண்பாடுகளின் நிலைக்களனாக இருப்பவை நம் சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்களிலே சமயச் செய்திகளையோ சமயச் சடங்கு முறைகளையோ காண முடியவில்லை. குறிப்பிட்ட கடவுளர்களைப் பற்றிய குறிப்புகளைக் கூட காண முடியவில்லை. கடவுளை ‘கந்தழி' என்ற சொல்லால் குறிக்கிறான். ‘கட்டற்றது' என்பது அதன் பொருளாகும். 'கடவுள்' என்ற சொல்கூட 'அனைத்தையும் கடந்து நிற்பது' என்ற பொருளிலேயே கையாளப்பட்டு வருகிறது. பழந்தமிழனின் கடவுட் கொள்கை 'ஒருவனே தேவன்' என்பதாகும். அவனது சமுதாயக் கொள்கை 'ஒன்றே குலம்’ என்பதாகவே இருந்தது என்பதை இன்றும் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்பிக் கொண்டுள்ளன. எதார்த்தவானாக வாழ்ந்த அன்றையத் தமிழன் கடைப்பிடித்த பண்பாடுகளையே இன்றும் 'சங்கப் பண்பாடு' எனப் போற்றுகிறோம். அதன் அடித்தளங்கள் இன்றும் நம் வாழ்வில் இழையோடிக் கொண்டுள்ளன என்பது நாமே அறிந்துணராத உண்மைகள். இந்த உண்மை உரத்த குரலில் ஆதாரப்பூர்வமாக உலகத்துக்கு உணர்த்த வேண்டும் என்ற விழைவு 1978 ஆம் ஆண்டில் முழு வீச்சாக என்னுள் எழுந்தது. 

ஐக்கியநாடுகள் சபையின் பேரங்கமான யுனெஸ்கோ நிறுவனம் தமிழ் உட்பட முப்பது உலக மொழிகளில் 'யுனெஸ்கோ கூரியர்' என்ற இதழைக் கடந்த 45 ஆண்டுகட்கு மேலாக நடத்திக் கொண்டு வருகிறது. அரசியல் தவிர்த்து அனைத்து விஷயங்களையும் உலகளாவிய முறையில், அவ்வத்துறை உலகப் பெரும் வல்லுநர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளோடு வெளியிட்டு வருகிறோம். தமிழ்ப் பதிப்பின் ஆசிரியனாகக் கடந்த முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

அவ்வப்போது 30 மொழி ஆசிரியர்களும் தலைமையகமான பாரிசில் கூடி அடுத்துவரும் இதழ்களுக்கான கருப்பொருளை - தலைப்புகளை கலந்து பேசி முடிவு செய்வோம்.

வாழும் தமிழர் பண்பாடு

1978ஆம் ஆண்டில் நடைபெற்ற அத்தகைய ஆசிரியர்கள். கூட்டத்தில் உலகத்தின் மிக மூத்த பண்பாடாகவும் - மூவாயிரம் ஆண்டுகட்கு மேலாக வாழும் பண்பாடாகவும் அமைந்துள்ள தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிச் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் எனக் கூறியபோது பிற ஆசிரியர்களெல்லாம் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார்கள். மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்பாடு வாழ்ந்து கொண்டிருக்கிறதா? உலகப் பெரும் பண்பாடுகளாகக் கருதப்பட்ட எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோம, கார்த்தேஜியப் பண்பாடுகளெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. அவற்றின் எஞ்சிய எச்சங்களை இடிபாடுகளிலும், மண்ணிற்குள்லும் மறைந்து போய்விட்டன. பழைய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மட்டுமே அவற்றை அறிய முடியும். இத்தகைய சூழலில் மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு பண்பாடு அழியாமல் இன்னும் மக்களுடைய அன்றாட வாழ்வில் ஊடாடி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால் அது உலக அதிசயங்களில் எட்டாவது அதிசயமாகத்தான் இருக்க முடியும் என கேலியும் கிண்டலும் கலந்த தொனியில் கூறி வியந்தனர். நான் ஏதோ தமிழ்ப் பண்பாட்டின் மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும் இவ்வாறு கூறுவதாக எண்ணிய அவர்கள் இவ்வுணர்வை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

வாழும் தமிழ்ப் பண்பாட்டை மறுத்துரைத்தவர்கட்கு பல்வேறு ஆதாரங்களைத் தந்து, இறுதியில் இனியும் உங்களுக்கு இதில் ஐயம் இருந்தால் உங்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சார்பில் தமிழ்நாடு அனுப்பி நேரிடையாக ஆய்வு செய்து, நான் கூறுவது அனைத்தும் உண்மை என ஆதார பூர்வமாகக் கண்டறிந்த பின் வாழும் ‘தமிழ்ப் பண்பாடு' பற்றிய சிறப்பிதழை வெளியிடுமாறு சவால் விடும் போக்கில் வேண்டினேன். கூட்டம் என் சவாலை ஏற்று 'யுனெஸ்கோ கூரியர்' இதழின் துணைத் தலைமையாசிரியர் திருமதி ஒல்கா ரோடலை அனுப்ப முடிவு செய்தனர். அவரும் தமிழகம் வந்தார்.

‘வாழும் தமிழ்ப் பண்பாடு' பற்றி ஆய்வு செய்ய பாரிசிலிருந்து சென்னை வந்த அவர்களை தமிழகமெங்கும் அழைத்துச் சென்றேன். கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை நேரிற்காட்டி விளக்கினேன். சங்கப் பாடல்களில் விவரிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே இன்றைய நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறையும் அமைந்திருப்பதை நேரில் காணச் செய்தேன். நிலத்தை உழுது பண்படுத்தும் பாங்கையும் உழைப்புத் தெரியாது ஏற்றப்பாட்டிலிருந்து, நாற்று நடவுப் பாட்டுவரை இசைக்கப்படுவதை சங்கப் பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டினேன். விருந்தினர்களை வரவேற்கும் பாங்கையும் அதற்கேதுவாக கிராமப்புற குடிசைவாசி கூட, வெளியூர் விருந்தாளி இரவாயினும் பகலாயினும் தங்கிச் செல்ல வாய்ப்பாக இன்றும் வீட்டைச் சுற்றி திண்ணை கட்டும் பாங்கையும் இன்னும் பற்பல பண்பாட்டும் கூறாகவும் சங்க இலக்கியம் கூறுகிறபடியே இன்றைய தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் படிந்திருக்கும் பண்பாட்டுக் கூறுகளை - தன்மைகளை அறிந்து மகிழ்ந்தார். இன்றும் நாட்டுப்புற மக்களின் நடையுடை பாவனைகளும் கைக் கொள்ளும் பழக்கவழக்கங்களும் அவை பழம் பெரும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை யெல்லாம் ஆய்வு செய்து, தமிழ்ப் பண்பாட்டின் உன்னதத்தை-உயர்வை நன்கு உணர்ந்தவராக பாரீஸ் தலைமையகம் திரும்பி, நான் தொடக்கத்தில் கொடுத்திருந்த தலைப்பான "தமிழரின் வாழும் பண்பாடு" (The Living Culture of Tamils) எனும் தலைப்பிலேயே எட்டு வண்ணப் பக்கங்களோடு சிறப்பிதழாக 30 உலக மொழிகளில் வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பம்சம் உண்டு. யுனெஸ்கோ கூரியர்" இதழ் தொடங்கப்பட்ட காலம் முதலே எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் அலசி ஆராயும் முறையில் வெளியிட்டதே இல்லை. கிரேக்க, ரோம, எகிப்திய, கார்த்தேஜியப் பண்பாடுகளைப்பற்றி பேச நேர்ந்த போது கூட அப்பண்பாடுகளின் நிலைக்களனாக அமைந்துள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது எப்படி? என்பதைப் பற்றிய ஆய்விதழாக அமைந்தது.

ஆனால், உலகப் படத்தில் குண்டூசி முனையளவேயுள்ள தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகப் பண்பாட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, அதன் பல்வேறு முகப்பட்ட பண்பாட்டு உயர்வுகளை உலகளாவிய முறையில் வெளிப்படுத்திய இதழ் இது ஒன்றேயாகும்.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், தொடக்கக் கட்டத்தில் யாரெல்லாம் தமிழ்ப் பண்பாட்டைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசினார்களோ அவர்களெல்லாம் சிறப்பிதழ் வெளி வந்தபின் பலவாறு தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை அடுத்த கூட்டத்தில் பாராட்டிப் பேசியதுதான். அது மட்டுமல்ல ஜப்பானிய, கொரிய, போர்ச்சுக்கீசிய மொழிகளில் வெளிவரும் பல்வேறு இதழ்களும் கூரியர் சிறப்பிதழில் வெளிவந்த தமிழ்ப் பண்பாட்டு கட்டுரைகளை மறு வெளியீடு செய்து வந்ததாகும்.

இதழின் சிறப்பை உணர்ந்த சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஒரு தொழில் நுட்பப் பல்கலைக் கழகமாக இருந்த போதிலும் 'வாழும் தமிழ்ப் பண்பாடு' சிறப்பிதழை சிறப்பான விழா நடத்தி, வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது.

உலகத்தமிழ் மாநாடுகள் சாதிக்காத சாதனை

இச்சிறப்பிதழ் வெளியீட்டினால் அச்சிறப்பிதழை வெளிவர பெரு முயற்சி மேற்கொண்ட எனக்கு, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சட்டத்தையே மாற்றி, கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த 'கலை மாமணி விருதை கலைத்துறையைச் சாராத எனக்கு 'உலகெங்கும் தமிழ்க் கலை, பண்பாட்டுப் பரப்புநர்' என்ற தலைப்பின் கீழ் வழங்கிச் சிறப்பித்தார்.

நம் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வை இன்னும் நாமே சரிவர அறிந்து, உணர்ந்து தெளியவில்லை. ஆழமான வேரில் உருவான இடப் பண்பாட்டின் உயர்வை உலகறியச் செய்ய வேண்டும்; முடிந்தால் உலகெங்கும் உள்ள ஒவ்வொருவரின் வீட்டின் படிப்பறைக்கே சென்று, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை விளக்கிக் கூற வேண்டும் என்ற என் தனியாத ஆர்வமும் இதன்மூலம் முழுமை பெற்றதென்றே கூற வேண்டும். “பல உலகத் தமிழ் மாநாடுகளால் சாதிக்க முடியாத இமாலயச் சாதனையை மணவை முஸ்தபா சாதித்துக் காட்டிவிட்டார்” என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி சிறப்பிதழை வெளியிட்டுப் பேசியது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி மகிழ்ந்தேன்.

அறிவியல் தமிழ்

தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் வானளாவப் புகழத் தெரிந்த அளவுக்கு அதன் ஆற்றலை உணரத் தவறிவிட்டோம். தமிழைப் பொருத்தவரை அன்றையக் காலப் போக்குக்கும் தேவைக்குமேற்ப இலக்கியத் தமிழாக, சமயத் தமிழாக, தத்துவத் தமிழாக வளர்ந்த போதிலும் அடிப்படையில் தமிழ் அறிவியல் மொழியாக அறிவியலை விளக்குவதற்கேற்ற மொழியாக அமைந்துள்ளதைக் கடந்த நாற்பதாண்டுகளாக உணர்ந்து, தெளிந்து, அதற்கேற்ப அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கும் பெரும்பணியை ஆற்றி வருகிறேன்.

அழியாததற்கு அடிப்படைக் காரணம்

எத்தனையோ பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டை அழிக்க முனைந்தும் தமிழ்ப் பண்பாடு தன் தனித்தன்மை சிறிதும் குன்றாமல் இன்றும் வாழும் பண்பாடாக மக்களின் வாழ்வில் ஊடாடி வாழ்ந்து வருகிறது. அதே போன்று எத்தனையோ மொழிகள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்ற போதிலும் தமிழ் அழியாமல், சிதையாமல் இன்று, வலுவோடும் வனப்போடும் இயங்கும் மொழியாக இருப்பதற்குக் காரணம் ஆழமான அடித்தளத்தில் அவை உருவாகி இருப்பதுதான் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டு வருகிறது.

ஐந்து அறிவியல் கலைச்சொற்களஞ்சிய அகராதிகளை என்னால் வெளியிட முடிந்ததென்றால், ஐந்து லட்சத்திற்கு மேல் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்க முடிந்ததென்றால், அதற்கு என் திறமை மட்டும் காரணமல்ல; தமிழுக்கே இயல்பாயமைந்துள்ள ஆற்றலே அதற்குக் காரணம் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அடித்தளம் பண்பாடு

யார்? என்று பாராமல் என்ன? என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவது தமிழ்ப் பண்பாடு. இது முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) காலந்தொட்டு வருகின்ற இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பாடுமாகும்.

இஸ்லாத்தினுடைய அடித்தளப் பண்பு மனிதத்துவத்துக்கு மதிப்புக் கொடுப்பதாகும். முதலில் மனிதன் மற்றதெல்லாம் பின்புதான். முதல் நபி ஆதாம் (அலை) தொடங்கி அண்ணல் நபி (சல்) ஈராக உள்ள அனைத்து நபிமார்களும் எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றியிருக்கிறார்கள் என்றால் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும், எல்லா மொழியிலும் இருப்பவர்களெல்லாம் உன்னைச் சார்ந்தவர்களே என்பதுதானே பொருள்.

'ஹஜ்' உணர்த்தும் அரும்பண்பாடு

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமை இதைத்தானே இன்று உலகுக்கு வெளிச்சப்படுத்திக் கொண்டுள்ளளது. நாடாளும் மன்னனாக இருந்தாலும் நாடோடியாக இருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏதுமற்ற ஒட்டாண்டியாக இருந்தாலும் ஹஜ்ஜின்போது ஏஹ்ராம் உடையான தைக்கப்படாத ஒரு துண்டை உடுத்தியும் மற்றொரு துண்டைப் போர்த்தியும் ஹஜ் கடமையாற்ற கஃபத்துல்லாவில் குழுமுகிறார்கள். பல்வேறு நாட்டவர், மொழியினர், நிறத்தவர், பண்பாட்டினர், நடையுடை பாவனையினர். அங்கு குழுமியுள்ள ஹாஜிகள், வேறுபாடுகள் அத்தனையையும் புறந்தள்ளி நாம் அனைவரும் மனிதர்கள். ஆதம் (அலை) வழிவந்த சகோதரர்கள் என்பதை மட்டும் நினைவிற் கொள்கின்றனர். மற்றவைகளெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. இம் மனிதத்துவ உணர்வு மட்டுமே ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் எப்போதும் உயர்ந்து நிற்க வேண்டும் என்பது ஹஜ் கடமை உணர்த்தும் உண்மை. பொருள் வசதியும் உடல் வலுவும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் நேரிடையாக இவ்வுண்மை உணர்ந்து தெளிய வேண்டும் என்பதுதான் இறைக் கட்டளை.

இராமலிங்க வள்ளலார் ஏற்ற இஹ்ராம் உடை

எளிமையின் முழுமையை வெளிப்படுத்தும் இதே எஹ் ராம் உடையைத்தான் கருணை வள்ளலாகப் போற்றப்படும் இராமலிங்க வள்ளலார் தம் வாழ்நாள் முழுமையும் அணிந்து காட்சித் தந்தார். அத்துடன் இறைவனை ஒளி வடிவாக (நூர்)க் கண்டு வணங்கி வந்தார். 'உலகின் ஒளியாக இறைவன் இருக்கிறான்' என்பது திருமறை தரும் அமுத மொழியாகும்.

ஏற்றமிகு எளிமைப் பண்பு

எல்லா வகையிலும் எளிமைக்கு ஏற்றம் தருவது இஸ்லாம். நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் எப்பக்கத்தைப் புரட்டினாலும் அங்கே நீக்கமற நிறைந்திருக்கும் பண்பு எளிமையாகும். எளிமை உணர்வு பொங்கும் உள்ளத்திலேதான் தன்னைப்போல் பிறரைக் காணும் மனித நேய உணர்வு பூத்துக் குலுங்க முடியும். மனித நேயத்தின் மறுஉருவாக வாழ்ந்தவர் பெருமானார் (சல்) அவர்கள்.

மனித நேயத்திற்கோர் மாநபி

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் அடிமையாக வாழ்ந்தவர். கருத்த உடலும் தடித்த உதடுகளையும் கொண்டவர். தன் எசமானனால் ஒரு மிருகத்துக்கொப்பாக நடத்தப்பட்டவர். பெருமானாரின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமானவர். இதனால் தன் எஜமானரால் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டவர். பின் முஸ்லிமானதால் பெருந்தொகை கொடுக்கப்பட்டு விடுதலையானவர். அண்ணலாரைப் பின்பற்றி மதினா மாநகர் சென்றவர்.

மதினாவில் முதன் முதலாகப் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டவுடன் தொழுகை அழைப்பான 'அதான்' எனும் பாங்கொலி எழுப்ப ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலரும் அப்பணியைச் செய்ய விரும்பினர். ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அப்பணியை நிறைவேற்றும் முழுத் தகுதிப்பாடுடையவர் பிலால் (நலி) அவர்களே எனத் தேர்வு செய்து அப்பணியை அவரிடத்திலே ஒப்படைத்தார். இயல்பாகவே இனிய குரல் வளம் படைத்த பிலால் (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்வோடு அப்பணியை நிறைவேற்றி மகிழ்வித்தார். மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படக் கூடிய கறுப்பராக அடிமையாக இருந்த ஒருவருக்கு உன்னதமான தொழுகை அழைப்புப் பணியைத் தந்து பெருமைப்படுத்தியதோடு, பிலால் (ரலி) அவர்களை 'செய்யதினா' என்ற அடைமொழியோடு அழைத்துச் சிறப்பளித்தார் பெருமானார் (சல்) அவர்கள். 'செய்யதினா' என்பதற்கு ‘என் தலைவரே' என்பது பொருள். அறுவறுப்பான தோற்றமுடைய, அடிமையாக இருந்த ஒருவரை இறைவனின் இறுதித் தூதராக, அவனிக்கோர் அருட் கொடையாக வந்துதித்த பெருமானார் (சல்) அவர்கள் 'என் தலைவரே' என அடை மொழியிட்டு மதிப்போடும் மரியாதையோடும் அழைத்துப் பெருமைப்படுத்தினார் என்றால் மனித நேயத்துக்கு இதைவிட சிறந்த எடுத்துக் காட்டை வரலாற்றில் காணமுடியுமா?

இச் செயலின் உன்னதத்தை, அதன் விளைவை அறிந்துணரும் வாய்ப்பு நான் 1986ஆம் ஆண்டு இரண்டாவது, முறையாக அமெரிக்கா சென்றிருந்தபோது கிட்டியது.

உய்திக்கு ஒரே வழி

டல்லாசிலிருந்து ஹல்ஸ்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'கிரே ஹவுண்டு' பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்தவர் என்னோடு ஏதேதோ பேசிக் கொண்டு வந்தார். ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிப் போய்விட்டார். தனியாக அமர்ந் திருந்த நான் 'யா அல்லாஹ்' என்று கூறியபடி நெட்டியுயிர்த்தேன். இச் சொல்லைக் கேட்டமாத்திரத்தில் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த பெரியவர் என்னை நோக்கி 'சலாம் அலைக்கும்’ என்று கூறி புன்முறுவல் பூத்தபடி என்னருகில் வந்து அமர்ந்தார். இச்செயல் எனக்கு வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

பஸ்ஸில் ஏறியதிலிருந்தே அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவரது தாடியும் கையில் உருண்டு கொண்டிருந்த தஸ்பீகை ஜெபமாலையாக நான் கருதியதால் அவரை ஒரு கிறிஸ்துவப் பெரியவராக நினைக்கத் தூண்டியது. 'சலாம்' கூறியதைக் கேட்டபின் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு நானும் அவருக்குப் பதில் சலாம் கூறி, அவர் அமர இடம் ஒதுக்கித் தந்து சற்று தள்ளி அமர்ந்தேன்.

'நீங்கள் முஸ்லிமாக....' நான் முடிக்கும் முன்பே அவர் ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார். கிருஸ்தவனாக இருந்த நான் இஸ்லாத்தில் இணைந்து ஐந்தாறு ஆண்டுகளாகிவிட்டன. ராணுவத்தில் பணியாற்றும் என் அண்ணன் மகனைத் தவிர எங்கள் குடும்பம் முழுக்க இஸ்லாத்தில் இணைந்துவிட்டோம் என்று கூறும்போது அவர் முகம் பூரிப்பால் நிறைந்திருந்தது. "உங்கள் குடும்பத்தவர்கள் யாராவது அரபுநாடுகளில் வேலை செய்கிறார்களா? நீங்கள் இஸ்லாத்தின் இணையக் காரணம் எதுவாக இருந்தது?" என்று கேட்டவுடன் அம் முதியவர் வாஞ்சையாக என் கைகளைப் பற்றியவராக "அடிமை வாணிகம் மூலம் அடிமை விலங்குகளாக இந்நாட்டில் என் மூதாதையர் விற்கப்பட்ட பின்னர் என் குடும்பத்தவர் எவருமே அமெரிக்காவை விட்டு வெளியே சென்றது கிடையாது.

பல ஆண்டுகட்கு முன்பு எங்கள் இனத்தைச் சேர்ந்த பாக்சர் கிளேசியஸ் கிளே இஸ்லாத்தில் இணைந்து 'முஹம்மது அலி' என்ற பெயரோடு இஸ்லாத்தைப் பற்றி சொற்பொழிவாற்றியதைப் பலமுறை கேட்டேன். அப்போதெல்லாம் அவர் பிலால் (ரலி) பற்றி குறிப்பிடுவதுண்டு.

ஒருமுறை முஹம்மதலியின் இஸ்லாமிக் ஸ்டடி சென்டருக்குச் சென்றிருந்தேன். அங்கே பிலால் (ரலி) பற்றிய நூல் கிடைத்தது. அந்நூலைப் படித்தபோது, பல விதமான எண்ண அலைகள் என்னுள் எழுந்தன. கறுப்பு இன மக்களாகிய எங்களையெல்லாம் மிருகங்களை விடச் சற்று மேம்பட்டவர்களாகக் கருதி, ஆடு, மாடுகளைப் போல் விற்று, வாங்கிவந்த காலகட்டத்தில் எங்களையெல்லாம் மனிதர்களாக மதிக்கக் கற்பித்த ஒரு மார்க்கம் இஸ்லாம். மதீனாவில் முதல் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதான் எனும் பாங்கொலி எழுப்ப எங்களின் இனத்தைச் சார்ந்த பிலால் (ரலி) அவர்களை அண்ணலார் தேர்வு செய்ததன் மூலம் மனிதர்களில் மேம்பட்ட உன்னத நிலையை உருவாக்கியதை அறிந்தபோது மனம் நெகிழ்ந்து விட்டேன். சட்டபூர்வமாக 'சமநிலை’ என்று சொன்ன போதிலும் வெள்ளையர்களால் தாரதம்மியத்தோடு நடத்தப்படும் கறுப்பு இனமக்கள் உய்ய இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை என உணர்ந்து இறைநெறியாகிய இஸ்லாத்தைத் தழுவி, பெருமானார் (சல்) அவர்களின் முன்மாதிரி பெருவாழ்வை பேணி வருகிறேன். எங்கள் குடும்பத்தில் ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரைத் தவிர அனைவருமே முஸ்லிமாகி விட்டோம். இப்போது என்றுமே அனுபவித்திராத சமத்துவத்தை - மதிப்பு மரியாதையை முஸ்லிம் என்ற முறையில் அனுபவித்து வருகிறேன்” என்று கூறும்போதே அவர் கண்கள் ஆனந்தக் கண்ணிரைப் பொழிந்தன.

பெருகிவரும் பிலால் அலை

அண்மையில் நான் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த போது கஃபத்துல்லாவில் அஸர் தொழுகையை முடித்து 'மக்ரிப் தொழுகைக்காகக் காத்திருந்தபோது அருகில் உரையாடிக் கொண்டிருந்த இந்தோனேசியப் பேராசிரியர் ஒருவரிடம் இச்சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த துணுக்குப் பின்னாலிருந்து அழுகுரல் கேட்டது. அழுகுரல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நான் பேசி முடித்தபோது, கண்கள் நீரைச் சொறிய கறுப்பின இளைஞர் ஒருவர் என் கைகளைப் பற்றியவராக நீங்கள் இதுவரை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண் டிருந்தேன். நீங்கள் பேசியது அத்தனையும் சத்தியம். அமெரிக்க என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது முஹம்மதலியின் சொற் பொழிவைக் கேட்டேன். அதன்பிறகு பல இஸ்லாமிய நூல்களைப் படித்தேன். அந்தக் காலத்திலேயே கறுப்பரான பிலால் (ரலி) அவர்கட்கு இஸ்லாமும் பெருமானாரும் தந்த பெருமை மிகு சிறப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தேன். இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தேன். நான் இஸ்லாத்தில் இணைந்தபின்னர் அவளையும் இஸ்லாத்தில் இணையுமாறு கூறினேன். இணையும்வரை காத்திருப்ப தாகவும் கூறினேன். அவளும் மனம் மாறி இஸ்லாத்தில் இணைந்தபின் எங்கள் நிக்காஹ் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இப்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். இன்னும் இரண்டாண்டுகளில் குடும்பத் தோடு ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளோம். நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் வெள்ளையர்கள் என்னை நடத்திய தற்கும் நான் முஸ்லிமானபின் என்னை நடத்துவதற்கும் மாபெரும் இடைவெளியைக் காண்கிறேன். இன்று மதிப்பாகவும் மரியாதையாகவும் நடத்துகிறார்கள். 'கறுப்பர் என்ற மன நிலைக்கு மாறாக ஒரு முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தோடு சரிநிகர் சமானமாக, பவ்வியமாகப் பழகுகிறார்கள் என்று உணர்ச்சி வசப்பட்டவராகக் கூறி முடித்தார்.

இந்த நிகழ்ச்சிகளை எதற்காகக் கூறுகின்றேன் என்றால் இஸ்லாம் மனித நேயத்தை மையமாகக் கொண்டே மனித குலத்தை அணுகுகிறது. அரவணைக்கிறது.

மனவளர்ச்சி அளவுகோலே மனித நேயம்

ஒருவர் மன வளர்ச்சி பெற்றிருக்கிறார் என்றால் அதன் கன பரிமாணத்தை அறிந்து கொள்ளும் அளவுகோலே அவர் வெளிப்படுத்தும் மனித நேய உணர்வுதான். யாராவது ஒருவர் மற்றொருவரை விரும்பினால், நேசித்தால், அவருடைய நடத்தையில் அன்பும் அக்கறையும் கட்டத் தொடங்கிவிட்டால் அவர் மனவளர்ச்சி பெற்றுவிட்டார் என்பதற்கு அதை ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். பிறர் மாட்டு மனித நேயத்தை எப்படிப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு பெருமானார் பெருவாழ்வில் எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம் என்றாலும் ஒரு சம்பவத்தை இங்குக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


முரடனை மனிதப் புனிதனாக மாற்றிய மாநபி

நபிகள் நாயகம் (சல்) அவர்களை நேரில் கண்டு, மார்க்கம் பற்றி விவாதிக்க ஒரு குழுவினர் அண்ணலார் இருப்பிடம் வந்தனர். அக்குழுவில் முரட்டு சுபாவமுள்ள மூர்க்கன் ஒருவனும் இருந்தான். அக்குழுவினர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நன்றாக இருட்டி விட்டது. அதற்குமேல் அக்குழுவினர் தங்கள் ஊர் போய் சேருவது கஷ்டம். எனவே, பெருமானார் அவர்கள், அக்குழுவில் இருந்தவர்களை அங்கிருந்த முஸ்லிம் குடும்பத்திற்கு ஒருவர் வீதம் அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று பணித்தார்கள். அவ்வாறே அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த முரட்டு மனிதனை யாரும் அழைத்துச் செல்ல விரும்பாததால், அவன் மட்டும் தனித்து விடப்பட்டான். நிலைமை உணர்ந்த பெருமானார் அம்முரடனைத் தன் விருந்தாளியாக அழைத்துச் சென்றார்கள். பெருமானார் (சல்) அவர்களின் வீடு நோக்கி நடக்கும்போதே அம்மூர்க்கன் தன் மனதுக்குள் 'இன்று பெருமானார் வீட்டிலுள்ள அத்தனை உணவுகளையும் உண்டு, வீட்டிலுள்ள அனைவரையும் பட்டினி போட வேண்டும்' என எண்ணியவனாய் பெருமானார் இல்லத்துள் புகுந்தான். பெருமானார் குடும்பத்துக்கு என அன்று சமைத்து வைத்திருந்த உணவு வகைகளையெல்லாம் பெருமானார் அம்முரடனுக்கு அன்போடு உண்ணக் கொடுத்தார். அக்குடும்பத்தினரும் உண்ண வேண்டுமே என்ற எண்ணம் அறவே இல்லாதவனாக, அக்குடும்பத்தினர் அனைவரையயும் பட்டினி போட வேண்டும் என்ற வஞ்சக உணர்வோடு கொஞ்சமும் மீதம் வைக்காமல் தின்று தீர்த்தான். பெருமானாரும் குடும்பத்தவர்களும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் விருந்தளித்தனர்.

வந்த விருந்தாளி உண்ட களைப்புத் தீர, உறங்க உயர்தர படுக்கை விரிப்புகளை விரித்து உறங்கச் செய்தனர். மகிழ்ச்சிப் பெருக்கோடு உறங்கச் சென்ற அத்துவுடன் அளவுக்கதிகமாக உண்டதால் செரியாமைக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டான். நள்ளிரவில் வாந்தி, பேதியால் அவ்வறையை நாசப்படுத்தினான். விடிவதற்குள் வெளி யேறி ஓடி விட வேண்டும் என எண்ணி, விடியுமுன் வெளி யேறினான். அவன் நீண்டதுரம் வந்தபின்பே நன்றாக 2 விடிந்தது. அப்போதுதான் தான் தங்கியிருந்த அறையில் தன் போர்வாளை வைத்துவிட்டு, வெறுங்கையோடு ஓடிவந்தது நினைவுக்கு வந்தது. உடல் நலிவும் வெளியேற வேண்டும் என்ற சங்கட நிலையும் அவனுக்கு வாளைப்பற்றிய சிந்தனை இல்லாமல் செய்துவிட்டது. விலைமதிப்புள்ள அவ்வாளை இழக்க அவன் உள்ளம் சம்மதிக்கவில்லை. எவ்வாறாயினும் போர்வாளை மீண்டும் பெற்றே தீருவது என்ற எண்ணத்தில் தான் இரவு தங்கியிருந்த அண்ணலார் வீடு நோக்கி ஓடி வந்தான்.

பொழுது விடிந்ததும் விருந்தாளி தங்கியிருந்த அறையை வந்து பார்த்தார் அண்ணலார் (சல்) அவர்கள். அங்கு யாரும் இல்லாததோடு அறை, படுக்கை, விலையுயர்ந்த விரிப்பு, போர்வை எல்லாமே வாந்தி, பேதியால் மிகவும் அசுத்தமாகக் கிடந்தன. இரவு விருந்தாளிக்கேற்பட்ட சுகக் கேட்டை எண்ணி வருந்தியவராக அறையைச் சுத்தப் படுத்தி, அசுத்தமாகிவிட்ட போர்வையைத் துவைக்க எடுத்துச் சென்று சுத்தப்படுத்தலானார்.

இந்நிலையில் வாளை மீண்டும் எடுத்துச் செல்ல பெருமானார் இல்லத்தை முரடன் அணுகியபோது அங்கே அண்ணலார் முரடனால் அசுத்தப்படுத்தப்பட்ட விரிப்புகளையும் போர்வைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அக்காட்சி அவனை மிகவும் வருத்திவிட்டது.

விருந்தாளி திரும்ப வந்திருப்பதைக்கண்ட அண்ணலார் (சல்) அவர்கள் விரைந்து சென்று விருந்தாளியை அணுகி, “நண்பரே! இரவு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது எப்படி இருக்கிறீர்கள். உங்கள் உடல் சீர்பட மருந்து வைத்திருக்கிறேன். உண்டு இளைப்பாறிச் செல்லலாம். நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போனவாள் இதோ எடுத்து வருகிறேன்” என்று கூறிச் சென்று மருந்தையும் வாளையும் எடுத்து விரைந்து வந்தார்.

பெருமானார் (சல்) அவர்களின் பேச்சும் செயலும் அம்முரடனின் மனதை வெகுவாக நெகிழச் செய்துவிட்டது. தன் செயலுக்காக வெட்கமும் வேதனையும் அடைந்தான். மனித நேயத்தின் சிகரமாக இருக்கும் இம் மாமனிதரைத் தவறாக எண்ணியதற்காக மனதிற்குள் குமைந்தான். தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான். இஸ்லாத்தில் இணைந்து தன்னையும் மனிதப் புனிதனாக மாற்றிக் கொண்டான். இச் செயல் மனித நேயத்திற்கோர் மகத்தான சான்றாக இன்று அண்ணலார் வாழ்வில் மின்னிக் கொண்டுள்ளது.

ஆட்டுப்பால் கறந்த அண்ணலார்

ஒருமுறை குடும்பத் தலைவர் ஒருவர் இஸ்லாமியக் காரியமாக மற்றவர்களுடன் வெளியூர் சென்றுவிட்டார். அந்த வீட்டின் வருமானத்துக்கு ஆதாரமாக பால்கறக்கும் சில ஆடுகள் இருந்தன. அக்குடும்பத் தலைவருக்குப் பால் கறக்கத் தெரியும். ஆனால், அவரது மனைவிக்குப் பால்கறக்கத் தெரியாது. இந்நிலையில் அக்குடும்பத் தலைவர் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் ஆடுகளிடம் பால்கறக்க வழி தெரியாது திகைத்த அவர் மனைவி, அண்ணலாரை அணுகி தாங்கள் ஆடுகளிடம் பால்கரந்து தந்து உதவ வேண்டும் என வேண்டினார். அவரும் அவ்வாறே பால்கரந்து உதவினார். தொடர்ந்து அப்பெண் தன் கணவர் வெளியூரிலிருந்து திரும்பும் வரை தொடர்ந்து பால் கரந்து தந்து உதவுமாறு வேண்ட, பெருமானார் (சல்) அவர்களும் அவ்வாறே பால் கரந்து உதவினார் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சிகளெல்லாம் மனித நேயத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு பேணி நடந்து, இறையுவப்புக்கு ஆளாக வேண்டும் என்பதற்கு வாழும் சான்றுகளாகும்.

மனச்சுமை இறக்கிய மாநபி

மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது மட்டுமல்ல, அவர்களின் மனச் சுமையை இறக்கிவைக்க சிறிது நேர சுமைதாங்கியாக மாறுவதும் ஓர் உயர்ந்த மனித நேயப் பண்பாகும். இதனை விளக்கும் எத்தனையோ சம்பவங்கள் பெருமானார் பெருவாழ்வில் காணலாமாயினும் அவற்றில் ஒரு சிறு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

வயது முதிர்ந்த மூதாட்டியொருவர் குடும்பக் கவலைகளால் மிகவும் துவண்டு போய் நின்றார். தன் மனக் கவலைகளை யாரிடமாவது சிறிது நேரம் இறக்கிவைத்து இளைப்பாற விரும்பினார். இவரது மனக்கவலைகளைக் காது கொடுத்துக் கேட்க யாருமே தயாராக இல்லை. இதனால் மன பார அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் அவ்வழியாகப் பெருமானார் (சல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவரது நல்லியல்புகளை நன்குணர்ந்திருந்த மூதாட்டி, அவரையே தன் கவலைகளை-மன உளைச்சல்களை இறக்கி வைக்க ஏற்றதொரு சுமைதாங்கியாகக் கருதி அவரிடம் தன் கவலைகளை விவரிக்கத் தொடங்கினார். வழி நெடுக அவைகளைப் பொறுமையாகக் கேட்டதோடு அப்பிரச் சினை, கவலைகளுக்குத் தீர்வும் சொல்லிக் கொண்டு வந்தார். நீண்ட நேரம் தன் மனச்சங்கடங்களைப் பொறுமையாகக் கேட்டு தீர்வு சொன்ன அண்ணலாரின் செயல் அம் மூதாட்டிக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது. மனச் சுமைகளை இறக்கி வைத்தவராக, லேசான மனதுடன் நன்றி கூறிச் சென்றார்.

இதைக் கண்ணுற்ற நபித் தோழர்கள் 'இம் மூதாட்டியின் புலம்பல்களுக்கு இவ்வளவு பொறுமையோடு பதில் கூற வேண்டுமா?’ என்றபோது, “வயதான அம் மூதாட்டி தன் மனச்சுமைகளை இறக்கிவைக்கத் துடிக்கின்றபோது, அவள் சகோதரனாகிய நான் ஏன் இரு கரமேந்தி வாங்கிக் கொள்ளக் கூடாது? நம்மால் பிறருக்கு மகிழ்வும் மனச்சாந்தியும் தரமுடியும் என்றால் நாம் ஏன் அதை அவர்கட்கு வழங்கக் கூடாது?” எனக் கூறி மனித நேயத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டி, பின்பற்றத் தூண்டினார்கள்.

பிறருக்குத் துணையாக, ஆதரவாக இருப்பது மட்டுமே மனித நேயமாகிவிடாது. முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் எந்நிலையிலும் யாருடைய மனமும் புண்படாமல் நடந்து கொள்வதும் மனித நேயத்தின்பாற்பட்டதுதான் என்பது நபி வழியாகும்.

ஒரு சமயம் அலி (ரலி) அவர்கள் சாலைவழியே சென்று கொண்டிருந்தார். அவருக்குச் சற்று முன்னதாக ஒரு யூதர் சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த அலி (ரலி) அவர்கள் மனதில் ஒரு விபரீத எண்ணம் எழுந்தது. ஒரு யூதனுக்குப் பின்னால், அவனைப் பின் தொடர்வதுபோல் ஒரு முஸ்லிம் நடப்பதா? கூடாது. ஒரு முஸ்லிமைப் பின் தொடரும் முறையிலேதான் ஒரு யூதன் நடக்க வேண்டும் எனக் கருதியவராகத் தன் நடையின் வேகத்தைக் கூட்டினார். மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க நடந்து, அந்த யூதனைக் கடந்தவராக மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குபவராக பெருமானார் முன்னிலையில் சென்று நின்றார். அலி (ரலி) வந்து நின்ற கோலத்தைக் கண்ட அண்ணலார் என்ன அலியார் அவர்களே! ஏதேனும் அவசர காரியமா? மிகமுக்கிய அவசரக் செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா? என வினவியபோது, அலியார் அவர்கள் யூதனை முந்தி வந்தக் காரணத்தைக் கூறியபோது, அண்ணலாரின் முகம் வாட்டமடைந்து விட்டது. "மாபெரும் தவறு செய்து விட்டீர்கள் அலியார் அவர்களே! நீங்கள் முந்தி நடக்க முனைந்த காரணத்தை அந்த யூதர் அறிய நேர்ந்திருந்தால் அவர் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும். ஒரு முஸ்லிம் யாருடைய மனமும் எந்தக் காரணத்திற்காக வும் வருந்தும்படி நடந்து கொள்ளவே கூடாது. ஆயினும், தெரிந்தோ தெரியாமலோ அந்த யூதன் மனம் வருந்தும்படி நடந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் அந்த யூதனிடம் சென்று, தங்களை முந்திக் செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்து சென்றதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி மன்னிப்புப் பெற்றுவரப் பணித்தார்கள். அலி (ரலி) அவர்களும் அவ்வாறே மன்னிப்புப் பெற்று வந்தார் என்பது வரலாறு.

மனித நேய உணர்வின் வளர்ப்புப் பண்ணை

மனித நேய உணர்வுகளின் வளர்ப்புப் பண்ணையாக அமைவது பண்பட்ட உள்ளமும் மனப்பக்குவமுமாகும். ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இவைகளை உருவாக்கும் வழிமுறையின் செயல்பாடுகளே ஐம்பெருங் கடமைகள். ஆன்மிக அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் ஆராய்வோர் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

'ஈமான்' எனும் இறை நம்பிக்கை இதயத்தில் முளை விடுகிறபோதே அவன் மனிதத்வத்தை உணர்ந்து தெளியக் கூடியவனாக உருமாறத் தொடங்குகிறான். இறைவன் ஒருவனே; அவன் உருவ மற்றவன்;அவன் ஆணும் இல்லை, பெண்ணுமில்லை, அலியுமில்லை; அவன் யாராலும் பெறப்படவுமில்லை; அவன் யாரையும் பெறவுமில்லை என்ற உறுதி ஒருவனுடைய உள்ளத்தில் அழுத்தம் பெற அவன் உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் எல்லாம் அகலத் தொடங்குகின்றன. மன மாசுகள் அகல இங்கே வாய்மை குடிகொள்கின்றது. இருளடர்ந்த வீட்டில் விளக்கேற்றினால் இவ்விருள் இருக்குமிடம் தெரியாமல் அகல, அங்கே வெளிச்சம் கோலோச்சுவது போல் இறை நம்பிக்கையால் நிரம்பிய உள்ளத்தில் தீய உணர்வுகள், சிந்தனைகள் மறைந்தொழிகின்றன. இறை நம்பிக்கை ஒருவித வைராக்கியத்தை அவனுள் தோற்றுவிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நேரத் தொழுகையின் போதும் இறைவன் முன்னிலையில் தொழுவது போன்ற மனநிலையைத் தொழுகையாளி பெறுவதால் இறைநெறி நின்று வாழ வேண்டும். இறை நெறி பிறழ்ந்து வாழ நேர்ந்தால் இறைத் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இறைநெறி பேணி வாழ்ந்தால் சுவர்க்கப் பெருவாழ்வு எனும் இறை வெகுமதி நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உறுதி உள்ளத்தில் எழும்போதே ஒருவித நல்லுணர்வெழுச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது.

வைகறைக்கு முன்னதாக உண்பதையும் பருகுவதையும் நிறுத்தி விடும் நோன்பாளி மாலை மயங்கும்வரை பசி என்பது எத்தகையது. தாகத்தின் தகிப்பது எவ்வாறானது என்பதையெல்லாம் நேரிடையாக அனுபவித்து அறிந்து, உணர்ந்து, தெளிகிறான். இவ்வாறு முப்பது நாட்கள் நோன்பு நோற்பதால், யார் உண்ண, பருக வழியில்லாது தவிக்கிறாரோ அவருக்கு வலியச் சென்று உதவத் துடித்தெழுகிறான். மனக்கட்டுப்பாட்டுடன் பிறர்க்குதவும் பேராண்மையாளனாகவும் மாறுகிறான்.

'ஜகாத்' எனப்படும் ஏழையின் பங்கும் அதே முறையில் அமைந்திருப்பதுதான். தான் தேடிய பொருளின் நிகர வருமானத் தொகையில் இரண்டரை விழுக்காட்டை ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் போன்றவர்களைத் தேடி இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாமல் தானம் வழங்கும் முறை ஈகைக் குணத்தைப் பேணி வளர்க்கிறது. நாம் தேடியவையா யினும் அதில் பிறருக்கும் பங்குண்டு என்ற எண்ணமும் அனைவருக்கும் உதவ வேண்டும்; எல்லோருக்கும் எல்லாம் என்ற தயாள உணர்வை உள்ளத்தை ஊட்டி வளர்ப்பதாயமைந்துள்ளது.

ஹஜ் எனும் புனிதப் பயணம் மக்கள் அனைவரும் சமமானவர்கள், அனைவரும் ஆதம் (அலை) வழிவந்த சகோதரர்கள், எவ்வித வேறுபாடும் தாரதம்மியமும் இல்லாது எல்லோர்க்கும் துணையாகவும் உதவியாகவும் இருப்பது இன்றியமையாக் கடமை என்பதை மனித நேய உச்ச உணர்வை ஊட்டி வளர்க்கும் உந்து விசையாயமைவதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் அனைத்துமே மனித நேயத்தை, சகோதரத்துவத்தை ஊட்டி வளர்த்து, மனித வாழ்வை வளப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

எப்படியும் என்பது பிற சமயம்
இப்படித்தான் என்பது இஸ்லாம்

இஸ்லாம் விதித்துள்ள ஐந்து கடமைகளை பிற சமயங்களும் வலியுறுத்தவே செய்கின்றன. இதை யாரும் மறுத்துரைக்க முடியாது. இஸ்லாம் விதித்துள்ள ஈமான் எனும் இறை நம்பிக்கையை எந்த மதம் வலியுறுத்த வில்லை? உலகிலுள்ள சிறிய, பெரிய மதங்கள் அனைத் துமே வலியுறுத்துகின்றன. ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒரே இறைவன்; உருவமற்றவன் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. தொழுகை எனும் இறை வணக்கத்தை எல்லாச் சமயங்களும் வலியுறுத்திய போதிலும் இஸ்லாம் மட்டுமே ஒரு நாளைக்கு ஐந்து முறை என வரையறுத்திருப்பதோடு எப்போது தொழ வேண்டும் எப்படித் தொழ வேண்டும் என்பதற்கு செயல் முறைகளையும் வகுத்தளித்துள்ளது. நோன்பு எனும் விரதத்தை வலியுறுத்தாத சமயம் எதுவுமே உலகில் இல்லை. ஆனால், வைகறையிலிருந்து அந்தி நேரம் வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல் எதையும் உண்ணாமல் புகைக்காமல் ஒரு மாதம் முழுமையும் நோன்பு நோற்பதை இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வரையறையோடு கடைப்பிடிக்கப் பணிக்கிறது. ஜகாத் எனும் தான தருமத்தை அனைத்துச் சமயங்களும் தம்மளவில் வலியுறுத்தவே செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டுமே ஜகாத், சதக்கா, ஃபித்ரா எனப் பிரித்து தானமளிக்கச் சொல்கின்றது. ஆனால், எந்தச் சமயமும் தானமளிப்பதைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தம் சொத்தில் நிகர வருமானம் உடையவர், அவ் வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் குறிப்பிட்ட ஏழை, எளியவர்கட்கு வழங்கக் கட்டாயமாக்கிக் கட்டளை யிடுகிறது. அதேபோல் ஹஜ் எனும் புனிதப் பயணத்தை அனைத்துச் சமயங்களும் வற்புறுத்திய போதிலும் இஸ்லாம் மட்டுமே உடல் வலுவும் பொருள் வசதியும் உள் ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்கள் நகரிலுள்ள கஃபா எனும் இறையில்லம் சென்று மீள வேண்டும் எனப் பணிக்கிறது.

சுருங்கச் சொன்னால் இவ்வைந்து கடமைகளையும் மற்ற சமயங்கள் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் எனக் கூறுகின்றன. ஆனால், இஸ்லாமிய மார்க்கம் இவ்வைம் பெரும் கடமைகளையும் இப்படித் தான் நிறைவேற்ற வேண்டும் என வரையறையோடு கூடிய செயல்பாடுகளை கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கக் கட்டளையிடுகிறது.

இஸ்லாமிய கடமைகள் ஏற்படுத்தும் நம்பிக்கை

இக்கடமைகளை முறையாகக் கடைப்பிடித்து வாழும் ஒரு முஸ்லிம் மீது மற்றவர்களுக்கு ஏற்படும் மதிப்பும் மரியாதையும் தனி. இபாதத்துடன் வாழும் முஸ்லிம் மீது மற்றவர்கள் கொள்ளும் நம்பிக்கை அலாதியானது. அத்தகையவர்களை மனிதப் புனிதனாகவே கருதிப் போற்றுவது தவிர்க்கவியலா ஒன்றாகிறது.

தனி மனிதனும் சமுதாய மனிதனும்

உயர் பண்பு நலனைப் பேணி வாழ, வெற்றி பெற வாழ்வியல் போக்கை நன்கு உணர்ந்து தெளிய வேண்டும். அப்போதுதான் வாழ்வின் வெற்றிக் கனிகளை எளிதில் எட்ட முடியும். எந்த மனிதனும் இருவகைகளில் செயல் படக் கூடியவனாக இருக்கிறான். ஒன்று தனிமனிதன்; மற்றொன்று ‘சமுதாய மனிதன்'. மனித சுதந்திரமும் தனி மனித சுதந்திரம், சமுதாய மனித சுதந்திரம் என இருபெரும் பிரிவுகளுக்குள் அடங்குகிறது எனலாம். ஒரு மனிதன் தன் வீட்டிலிருக்கும்போது அவனுக்கு எல்லா விதமான சுதந்திரம் உண்டு. அதை அவனளவில் எப்படி வேண்டுமானாலும் அனுபவித்து மகிழலாம். எப்படி வேண்டு மானாலும் உடையணியலாம், இல்லாமலும்கூட இருக்கலாம். தனக்கு விருப்பமானவற்றை தனக்குப் பிடிக்கும் வகையில் உண்ணலாம். பருகலாம். புகைக்கலாம். தன் வழிபாட்டு முறை எதுவாயினும் அம்முறையிலேயே சடங்கு சம்பிரதாயங்களோடு செய்து கொள்ள முழுச் சுதந்திரம் உண்டு. வழிபாட்டுச் சுதந்திரம் என்ற முறையில் அவன் சுதந்திரம் கோயில், மசூதி, சர்ச், குருத்வாரா, ஜெபாலயம், பெளத்த மடம் என அவரவர் சமயச் சார்பான வழிபாட்டுத் தல வளாகங்கள்வரை மத அடிப்படையிலான சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை படைத்தவர்களாக உள்ளனர். இப்பகுதிகளெல்லாம் அவரவர் சமயச் சார்பான வரையறைகளோடு கூடிய தனிப் பகுதிகளாகும். இங்கே அவரவர் சமயச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க அந்தந்த மதத்தவர்கட்கு முழுச் சுதந்திரம் உண்டு.

ஆனால் அதே மனிதன் தன் வீட்டைவிட்டு, தன் சமய வளாகத்தை விட்டு அனைவரும் உலவும் சமுதாயப் பொதுச் சாலைக்கு வந்து விட்டானென்றால் அவன் பொது மனிதனாக-சமுதாய மனிதனாக மாறிவிடுகிறான்.

சமுதாயவீதி என்பது பலதரப்பட்ட மனிதர்கள் உலவும் இடம். அங்கே பல்வேறு சிந்தனைகள், சித்தாந்தக் கோட் பாடுகள், நடையுடை பாவனையுடையவர்கள் உலவும் இடம். ஒவ்வொரு சமுதாய மனிதனும் தனிப்பட்ட தம் விருப்பு வெறுப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு, எல்லோருக்கும் பொதுவான பொதுக் பண்புகளைப் பேணி நடப்பவனாகத் தன்னை எல்லா வகையிலும் கட்டுப்படுத்திக் கொண்டு நடமாடுகிறான். இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைச் சொல்லுவார்கள். சமுதாய வீதியில் கம்பைச் சுழற்றிச் செல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு என்றாலும் யாருடைய கண்ணிலும் படாதபடி சுழற்றிச் செல்ல மட்டுமே உரிமை உண்டு.

எனவே, சமுதாய வீதிக்கென்று உள்ள பொதுப் பண்பைக் கையாண்டு வாழ வேண்டும். ஏரிக்கு ஏரி கரை வேண்டும். வயலுக்கு வயல் வரப்புத் தேவை. அப்போது தான் அவையவை தத்தமது கட்டுக்குள் சிறப்பாகச் செயல்பட முடியும். இந்த உண்மையைத்தான் இஸ்லாம் வற்புறுத்துகிறது.

பெருமானார் (சல்) அவர்களின் பெருவாழ்வும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுள்ளது.

வரையறையோடு கூடிய வாழ்வியல் முறையே இஸ்லாம்

மனிதன் எல்லாவகையிலும் வரையறைக்குட்பட்டு வாழ முனைய வேண்டும் என்ற உன்னத வாழ்வியல் முறையைத்தான் இஸ்லாம் உலகுக்கு உணர்த்திக் கொண்டுள்ளது. ‘எப்படியும் வாழலாம்' என்பது இஸ்லாமிய முறையன்று. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்பதுதான் அண்ணலார் உணர்த்தும் இறை நெறி வாழ்க்கை முறை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் இன்றையச் சமுதாயச் சீர்கேடுகள் பலவும் தலைதூக்க வழியில்லாது போய் விடும். எல்லாவற்றுக்கும் மேலாக நாடு, இன, மொழி, நிற வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட நிலையில், எல்லோரும் ஆதாம் பெற்ற மக்களே எனும் உணர்வில் மனிதத்தைப் பேணும் வகையில் மனித நேயத்தைப் பேணி வளர்க்க இஸ்லாமும் பெருமானார் பெருவாழ்வும் நமக்கு வழி காட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகின்றன.

(10.7.98 அன்று துபாய் தமிழ்ப் பண்பாட்டுக் கழகச் சார்பில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் ஆற்றிய சொற்பொழிவுச் சுருக்கம்).