ஈசாப் கதைப் பாடல்கள்/கொசுக்கடி
வழுக்கைத் தலையுடன் ஒருமனிதர்
வாசலில் அமர்ந்தார். அப்பொழுது,
கொழுத்துப் பருத்திடும் ஆசைமிகக்
கொண்டதோர் கொசுவும் வந்ததுவே.
வந்ததும், அந்த மனிதரது
வழுக்கைத் தலையில் அமர்ந்ததுவே ;
சந்தோ ஷத்துடன் கடித்ததுவே;
தலையில் ரத்தம் குடித்ததுவே.
கடித்ததும் வலியைத் தாங்காமல்,
கையை ஓங்கி அக்கொசுவை,
அடித்திட முயன்றார். ஆனாலோ,
அக்கொசு தப்பிப் பிழைத்ததுவே!
ஓங்கிய கையோ அவர்தலையின்
உச்சியில் ‘பட்’டென வீழ்ந்ததுவே.
ஆங்கே தப்பிப் பிழைத்தகொசு
அவரைப் பார்த்துக் கேட்டதுவே:
‘சின்னஞ் சிறிய என்கடியைச்
சிறிதும் பொறுத்திட முடியாமல்,
என்னை அடித்துக் கொன்றிடவே
எத்தனம் செய்தீர். இப்பொழுது—
‘பட்’டென உமது தலைமீதே
பலமாய் அடித்த உம்கையை
வெட்டி எறிந்து விடுவீரோ?
வேறு தண்டனை கொடுப்பீரோ?’
கொசுவின் வார்த்தையைக் கேட்டதுமே
கூறினர் அந்த மனிதருமே;
‘கொசுவே,இன்று தப்பியதால்
குறும்பாய்க் கேள்வி கேட்கின்றாய்.
வேண்டும் என்றே என்தலையை
விரும்பிக் கடித்த கொசுவே, கேள்.
வேண்டும் என்றா என்கையும்
வேதனை தந்தது? யோசனைசெய்.
கடித்துக் கடித்தே இரத்தமெலாம்
குடிக்கும் கொசுவே, உனைநானும்
அடித்துக் கொல்வேன். மேன்மேலும்,
அடிகள் கிடைப்பினும் பொறுத்திடுவேன்.
பிறர்க்குத் துன்பம் கொடுப்பதனால்,
பெரிதும் இன்பம் அடைவோரைத்
துரத்தித் துரத்தி அடித்திடுவேன்;
துயரம் வரினும் சகித்திடுவேன்’