உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு மாவட்ட வரலாறு/003-043

விக்கிமூலம் இலிருந்து


3. நாடும் நாட்டுப் பிரிவுகளும்


கொங்கு நாடு

வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையும் எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு சேர. சோழ, பாண்டிய நாடுகளுடன் தொண்டைநாடு, கொங்குநாடு ஆகியனவும் சேர்ந்து ஐந்து பகுதிகளாக விளங்கியது.

‘வியன் தமிழ்நாடு ஐந்து’ என்று, தண்டியலங்கார மேற்கோள் பாடலும், 'தமிழ் மண்டிலம் ஐந்து" என்று திருமூலரின் திருமந்திரமும் கூறுகின்றன. தமிழின் தொன்மையான தொகைப்பாடல்களான சங்க இலக்கியங்களில் பல இடங்களில் 'கொங்கு' 'கொங்கர்' என்னும் சொல்லாட்சிகள் குறிக்கப் பெறுகின்றன.

'ஆகெழு கொங்கர் நாடு"
"கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து'
'கொங்கர் படுமணி ஆயம்'

என்பன சங்க இலக்கியத் தொடர்கள்.

பெயர்க்காரணம்

கொங்கு என்றால் காடு, பொன், மணம், தேன் என்று பல பொருள்கள் உண்டு, காடுகள் மிகுந்த நாடு, பொன்நாடு, மண நாடு, தேன் நாடு என்ற பொருள்களில் கொங்கு நாட்டிற்குப் பெயர் அமைந்தது என்பர். கொங்கின் உள்நாட்டுப் பிரிவுகள் பல தலைநகர்களால் பெயர் பெற்றது போல 'கொங்கு' என்ற பழம்பெரும் ஊரால் இந்நாட்டிற்குப் பெயர் வந்திருக்கலாம். தாராபுரம் அருகில் உள்ள 'கொங்கு' என்ற அந்த ஊர் இன்று கொங்கூர் என வழங்கப்பெறுகிறது.

எல்லைகள்

வடக்கில் பெரும்பாலையையும் தெற்கில் வைகாவூர் நாட்டுப் பழனியையும் மேற்கில் வெள்ளியங்கிரி மலையையும் கிழக்கில் குளித்தலையையும் எல்லைகளாக உடையது கொங்கு நாடு. இதனை

“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவு கொங்கு”

என்ற பாடல் தெரிவிக்கிறது.

ஈரோடு மாவட்ட நாட்டுப் பிரிவுகள்

கொங்கு நாடு தென்கொங்கு, வடகொங்கு, மேல்கொங்கு, கீழ்கொங்கு என நான்கு பெரும் பிரிவுகளாக அழைக்கப்பட்டது. அவற்றில் ஈரோடு மாவட்டம் தென்கொங்கு, வடகொங்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. இவ்விரு பகுதிகளையும் ஆட்சி புரிந்த கொங்குச் சோழர்கள் சிலர், “இருகொங்கும் ஆண்ட” என்ற அடை மொழியைச் சேர்த்துக் கொண்டனர்.

மேலும் கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,

1) பூந்துறை நாடு 2) தென்கரை நாடு 3) காங்கய நாடு
4) பொன்கலூர் நாடு 5) ஆறை நாடு 7) திருவாவிநன்குடிநாடு
8) மண நாடு 9) தலைய நாடு 10) தட்டய நாடு
11) பூவானிய நாடு 12) அரைய நாடு 13) ஒடுவங்க நாடு
14) வடகரை நாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்கா நாடு
17) வாழவந்தி நாடு 18) அண்ட நாடு 19) வெங்கால நாடு
20) காவடிக்கா நாடு 21) ஆனைமலை நாடு 22) இராசிபுர நாடு
23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்பு நாடு என்பனவாம்.

ஈரோடு மாவட்டப் பகுதி நாடுகளும் இன்றைய வட்டங்களும்

1) மேல்கரைப் பூந்துறைநாடு

- ஈரோடு வட்டம்

2) தென்கரை நாடு

- தாராபுரம் வட்டம்

3) காங்கய நாடு

- காங்கயம் வட்டம்

4) மேல்கரை அரைய நாடு

- ஈரோடு வட்டம்

5) ஓடுவங்க நாடு

-சத்தியமங்கலம் வட்டம்

6) வடகரை நாடு

- பவானி வட்டம்

7) காஞ்சிக்கோயில் நாடு

- கோபி வட்டம்

8) குறுப்பு நாடு

- பெருந்துறை வட்டம்

தென்கரை நாட்டுப்பகுதி கல்வெட்டுக்களில் நரையனூர் நாடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. காங்கய நாட்டில் காரையூர்ப்பகுதி நற்காவிரி நாடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிக்கோயில் நாட்டுக்கும் மேல்கரைப் பூந்துறை நாட்டுக்கும் இடைப்பட்ட சில பகுதிகள் காஞ்சித்துண்டம் எனப்பட்டது. குறுப்பு நாட்டின் தென்பகுதி தென்குறுப்பு நாடு என்றும், வீரசோழபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. குறுப்பு நாட்டின் தென்பகுதியிலும் பொங்கலூர்க்கா நாட்டின் வடபகுதியிலும் சில ஊர்கள் இரண்டு நாடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்நாட்டுப் பிரிவுகள் கி.பி.9ஆம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் வந்தன. பிற்காலத்தில் மக்கள் புதிய குடியேற்றத்தால் நாடுகள் பெருகி கொங்குநாடு 42 நாடுகள் ஆயின. அவை தாராபுரம் குழ்ந்த நாடுகள் 24; குன்றத்தூர்த் துர்க்கம் சூழ்ந்த தாடுகள் 12; டணாயக்கன் கோட்டை சூழ்ந்த நாடுகள் 6 என்பனவாம் (குன்றத்தூர் - சங்ககிரி}.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/003-043&oldid=1491964" இலிருந்து மீள்விக்கப்பட்டது