உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு மாவட்ட வரலாறு/004-043

விக்கிமூலம் இலிருந்து


4. தொல்பழங்காலம்


அ) தொல்லுயிரி எச்சங்கள் (FOSSILS)

மண்ணில் புதையுண்ட மரம் அல்லது விலங்குகளின் உடல் உறுப்புக்கள் நுண்கிரிமிகளால் (Bacteria) அழிந்தது போக மீதிப்பகுதி நிலத்தடி நீரில் உள்ள மணல் சத்தை (SILICA) உள்வாங்கி மாற்றம் அடைந்து கல்லின் தன்மையைப் பெறுகின்றன. இவற்றைத் “தொல்லுயிரி எச்சங்கள்” என்று கூறுவர்.

பெருந்துறை வட்டம் வெள்ளோட்டில் விலங்கின் (வாய்த்)தாடையின் (காட்டெருது அல்லது காட்டு மாடு) தொல்லுயிரி எச்சம் கிடைத்துள்ளது காங்கயம் வட்டம் சங்கரகவுண்டன் வலசிலும், கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்திலும் அது போன்ற விலங்கின் கால் தொடைப்பகுதிகள் கிடைத்துள்ளன. இவை 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது.

காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூர் மலையை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் கற்படிவங்கள் இக்காலத்தைச் சேர்ந்தவை இருந்தன. 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் மின்னல் தாக்கியதால் அவை மிக அதிக வெப்பமும் உடனடிக் குளிர்ச்சியும் பெற்று உடைந்து சிதறிக் குழாய் வடிவமாக உருமாறின. கண்ணாடி மெழுகு போல் அவை காணப்படுகின்றன. இரண்டு நாட்கள் அப்பகுதியில் மிகுந்த வெப்பநிலை இருந்ததாம்.

எனவே ஈரோடு மாவட்டப் பகுதி 20 லட்சம் ஆண்டுகட்கு முன்பே உயிரினங்கள் பல வாழ்ந்த பகுதி என்று தெரிகிறது. அதனால் ஈரோடு மாவட்டப் பகுதியின் தொன்மை புலப்படுகிறது.

ஆ) பழங்கற்காலமும் புதிய கற்காலமும்

(கி.மு.10000 - கி.மு. 1000) பழைய கற்காலத்தின் இறுதிக்காலம் முதல் புதிய கற்காலத்தின் தொடக்கத்திலிருந்து ஈரோடு மாவட்டப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 1855 ஆம் ஆண்டு கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தவர் டாக்டர் பால்பர். அவர் ஆறு வட்டார அருங்காட்சியகங்களை ஏற்படுத்தினார். அவை கோயமுத்தூர், பெல்லாரி, கடலூர், மங்களூர், உதக மண்டலம், இராச முந்திரி ஆகிய இடங்களில் அமைந்தன.

அப்போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய டாக்டர் ஸ்டோனி அவர்களின் பெருமுயற்சியால் முதலாவதாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருள்கள் கோவை அருங்காட்சியத்திற்காகச் சேகரிக்கப்பட்டன.

டாக்டர் இராபர்ட் புரூஸ்புட் அவர்கள் கொங்குப் பகுதியில் அப்பணியை மேற்கொண்டார். புருஸ்புட் 1863 முதல் 1904 வரை இந்தியா முழுவதும் 45 பழைய கற்கால மக்களின் வாழ்விடங்களையும் 252 புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களையும் அவர்கள் விட்டுச் சென்ற பல விதமான கற்கருவிகளையும் கண்டுபிடித்தார்.

புரூஸ்புட் கண்டுபிடித்த புதிய கற்காலக் கருவிகளில் மிகவும் சிறப்புமிக்கதும் தொன்மையானதும் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அவர் கண்டுபிடித்த புதிய கற்கால ஆயுதங்கள் ஆகும். (சேர்க்கை எண்கள் 194-201 வரை) 1887ஆம் ஆண்டு பர்கூர் மலையில் எட்டுப்புதிய கற்காலக் கருவிகளை அவர் கண்டுபிடித்தார்.

வழக்கமான ஆற்றுப்படுகைகளில் இவை கிடைக்காமல் சுண்ணாம்புக்கல் வகையில் உருவாக்கப்பட்ட இயற்கைக் குகைகளின் இடுக்குகளில் இவை கிடைத்தது மிகவும் சிறப்பானதாகும். தமிழ்நாட்டின் புதிய கற்காலக் கருவிகளின் காலத்தை நிர்ணயம் செய்ய ஈரோடு மாவட்டப் பர்கூர் புதிய கற்காலக் கருவிகள் பயனுடையவைகளாக இருந்தன.

இந்த எட்டுப் புதிய கற்கால ஆயுதங்களும் முழுமையாக முற்றுப் பெறாதவை, இவைகளை வெட்டும் கருவிகளாக உருவாக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். அவை பழைய கற்கால ஆயுதங்களாகக் கூட இருக்கலாம் என புரூஸ்புட் ஊகித்துள்ளார். பர்கூரில் கல் ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இவற்றை அண்மையில் சிறப்பாக ஆய்வு செய்த டாக்டர் நாசிம்மையா அவர்கள் இவை "புதிய கற்காலக் கருவிகளின் முன் காலம்" என்று கூறி அவற்றின் காலம் கி.மு.3500 என்று நிர்ணயம் செய்துள்ளார். இவை கிடைத்த பகுதியில் அக்காலத்திற்குரிய பானை ஓட்டுத் துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை புதிய கற்காலத்துக்கு முன் பானைகளைப் பயன்படுத்திய மக்கள் உருவாக்கியவை.

நரசிம்மையா புதிய கற்காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளார். முதல் காலகட்டம் கி.மு. 2800 - 2200; இரண்டாம் கால கட்டம் கி.மு.2200-1800; மூன்றாம் காலகட்டம் கி.மு.1800-கி.மு.500 ஆகும். ஆனால் பர்கூர்ப் புதிய கற்கால ஆயுதங்கள் முதல் காலகட்டத்திற்கு முந்திய காலம் கி.மு.3500 என்று அவர் நிர்ணயம் செய்துள்ளார். எனவே பர்கூர் கருவிகளைப் பழைய கற்காலக் கருவிகளோடு ஒப்பிடலாம்.

பர்கூர் மக்கள் மலைத் தளங்களில் படிக்கட்டு வயல்களை உண்டாக்கி வேளாண்மை செய்துள்ளனர். இக்கருவிகளைக் கிழங்குகள், காய்கறிகளைத் துண்டாக்க அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தொல்லியலார் கருத்தாகும். அல்லது வேட்டையில் கிடைத்த பறவைகள் மற்றும் சிறு விலங்குகளின் தோலை உரிக்கவும் இறைச்சியை வெட்டவும் இக்கருவிகள் பயன்பட்டிருக்கலாம்.

இ) பெருங்கற்காலம்

(கி.மு. 1000 - கி.பி..100)

19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் 1800-1810 ஆண்டுகளில் நில அளவை அலுவலர் மெக்கன்சியின் உதவியாளர்கள் இம்மாவட்டத்தில் உள்ள பெருங்கற்காலப் பண்பாட்டு. இடங்களைப் "பாண்டுக் குழிகள்" என்றும், ஈமத்தாழிகளை "மூத்தாந்தாழிகள்" என்றும்அறிவித்துள்ளனர்.

பழைய, புதிய கற்காலத்திற்குப் பிறகு பெருங்கற்காலப் பண்பாடு வருகிறது. அதுவே தமிழ்நாட்டின் சங்ககாலம் ஆகும். பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், இடுகாடுகள், ஈமக்குழிகள் நூற்றுக்கணக்கில் இம்மாவட்டப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில அகழ்ந்தாயப்பட்டுள்ளன.

பழைய ஆய்வுகள்

ஈரோடு மாவட்டத்தின் பழங்கால வரலாற்றுப் பெருமையைத் தொல்பொருள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியவர்கள் மேலை நாட்டின ரேயாவர். எம்.ஜே. வால்ஹௌஸ், அலெக்ஸாண்டர் ரீ போன்றோர் அவர்களுள் முக்கியமானவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், கணியாம்பூண்டி, நல்லாம்பட்டி போன்ற ஊர்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலேயே சில பெருங்கற்கால சவக்குழிகள் திறக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு கல்வட்டம் (Cairan Circle). கல்லறை (Dolmenoid Cist), தாழி (Urn}. நெடுங்கல் (Menhir), நடுகற்கள் {Hero Stones - Memorial Stones), ஆகியவை கிடைத்துள்ளன. கொங்குப் பகுதியில் ஈரோடு மாவட்டத்திலேயே இவை அதிகம் கிடைக்கின்றன.

இவற்றிலிருந்து இரும்புக் கருவிகள், குதிரை லாடம், செப்புப் பாத்திரங்கள், தங்க அணிகலன்கள், வெண்கலப் பொருட்கள், சுடுமண் பொம்மைகள், பலவகை மட்பாண்டங்கள், காதணிகள், சங்கு அணிகலன்கள், பெரில், அக்குவா மெரினா, கார்னீலியன், ஜாஸ்பர், அகேட், குவார்ட்ஸ் போன்ற வண்ணக் கற்களால் செய்யப்பட்ட பாசிகள், மணிகள், சுடுமண் விளையாட்டுப் பொருள்கள். தக்கிளிகள் எடைக்கருவிகள், கடவுள் உருவங்கள் ஆகியவை கிடைத்துள்ளன.

இவை பற்றிய விரிவான அறிக்கை "கல்கத்தா ராயல் ஆசியாடிக் சொஸைட்டி" பருவ இதழ் 7இல் பக்கம் 17 முதல் 34 வரை 1875இல் எம்.ஜே.வால்ஹௌஸ் அவர்களாலும், 1910-11ஆம் ஆண்டு தொல்லியல் துறை ஆண்டறிக்கையில் பக்கம் 12 முதல் 15 வரை அலெக்ஸாண்டர் ரீ அவர்களாலும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அரசினர் அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறைக் காப்பாட்சியராக இருந்த வி.என். சீனிவாச தேசிகன் 1964-68ஆம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டப் பகுதியில் விரிவான தொல்லியல் கள ஆய்வுப்பணி மேற்கொண்டு பல பெருங்கற்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் - தொல்லியல் துறை முன்னாள் தலைவர் முனைவர் கா.ராஜன் 1980 முதல் ஈரோடு மாவட்டத்தில் மேலும் பல பெருங்கற்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்தார்.

கொடுமணல் அகழாய்வுகள்

பதிற்றுப்பத்தில் கபிலரும், அரிசில் கிழாரும் தொழில் திறனுடன் வேலைப்பாடுமிக்க சிறந்த அணிகலன்களை உருவாக்கும் "கொடு மணம்" என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

"கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம்" (பதிற் 67)
"கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்" (பதிற் 74)

என்பன அப்பகுதியாகும்.

அச்சிறப்புமிகு பேரூர் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நொய்யலாற்றின் வடகரையில் "கொடுமணல்" என்ற பெயருடன் விளங்குகிறது. இம்மூதூர் கேரள மாநிலத்தில் பெரியாற்றின் வாயிலில் அமைந்திருந்த முசிறித் துறைமுகத்தையும், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்திருந்த கொங்குச் சேரர் தலைநகரான கருவூர் வஞ்சியையும் பாலக்காட்டுக் கணவாய் வழியாக இணைக்கும் வணிகப் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பேரூரின் புதையுண்ட எச்சங்கள் உள்ள பரப்பு வாழ்விடம், ஈமக்காடு என்று இருபெரும் பகுதிகளாக உள்ளது.

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பண்டைய வாழ்விடமும் அதன் வடக்கிலும் கிழக்கிலும் 50 ஏக்கர் பரப்பளவில் ஈமக்காடும் பரவியுள்ளன. இங்கு 1985, 1986, 1989, 1990, 1997 ஆகிய ஆண்டுகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழக அரசு தொல்லியல் துறை ஆகியவை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு வெளிப்படுத்தப்பட்ட பண்பாட்டை "நொய்யல்கரை நாகரிகம்” என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். கொடுமணல் தொல்லியல் பரப்பில் 10 விழுக்காடு கூட இதுவரை அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை. இங்கு மீண்டும் அகழாய்வு தொடர ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கம்பு, வரகு, சோளம் முதலிய புன்செய் சாகுபடியில் ஈடுபட்ட கொடுமணல் மக்கள் நல்ல எழுத்தறிவு பெற்று இந்தியாவின் பிற மாநிலங்களுடனும், இலங்கை, ஆப்கானிஸ்தான், உரோம் முதலிய நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு உடையவர்களாக இருந்தனர். அரிய வண்ணக் கல்மணிகள் பாசிகள் உருவாக்குதல், இரும்பு - எஃகு கருவிகள் செய்தல் போன்ற தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

பெரில் என்ற பச்சைக்கல் படியூரிலும், சபையர் எனப்படும் நீலக்கல் சிவமலையிலும், குவார்ட்ஸ் எனப்படும் பளிங்குக்கல் கிடைக்கும் வெங்கமேடும் அரசம்பாளையமும் கொடுமணல் அருகேயும் உள்ளன. இவை ஓரளவு கொடுமணலிலும் கிடைத்தன. இவற்றுடன் ஆப்கானிஸ்தானத்து லேபிஸ் லசுலியும், குஜராத்தின் கார்னீலியன் என்ற சூதுபவளமும், இலங்கையின் பூனைக்கண் மணியும் கொடு மணலில் இறக்குமதி செய்யப்பட்டு அழகுமிகு அணிகலன்கள் உருவாக்கப்பட்டன.

ஏர் உழும்போதும், கால்நடை மேய்க்கும் பொழுதும், மழை பெய்த மண் அரிப்பிலும், கிழங்கு தோண்டும் போதும் கொங்கு நாட்டில் மணிக்கற்கள் கிடைத்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

ஏராளமான மணிக்கற்களும் பாசிகளும் வீட்டுப் பயன்பாட்டு ஆயுதங்கள் என இரும்புப் பொருள்கள் பலவும் கிடைத்துள்ளன. செம்பு, வெள்ளி, தங்க உலோகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்குப் பொருள்கள். எலும்புப் பொருள்கள், சுடுமண் பொருள்கள், முத்திரை பதிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் ஆகியவை அங்கு கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் கிடைத்த பல்வேறு வகையான குறியீடுகளையும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புக்களையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

கண்ணன் ஆதன், குவிரன் ஆதன், அந்துவன் ஆதன், பண்ணன், வன்மூலன், சம்பன், கூலந்தை அகல், வருணிய அகல், சாத்தந்தை போன்ற பெயர்கள் கிடைக்கின்றன. ஆதன் என்ற பெயர் சேரர் தொடர்பைக் காட்டுகிறது. வணிகக் குழுவைக் குறிக்கும் நிகம, விஸாகி, குவிரன்,வருணில் போன்ற சொற்கள் கொடுமணல் வட இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்பை நன்கு உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலேயே அதிக எழுத்துப் பொறிப்புக்கள் உள்ள பானை ஓடுகள் கொடுமணலில் மட்டுமே கிடைத்துள்ளன.

உரோம் நாட்டு நாணயங்களும் அரிட்டைன், ரௌலடெட் என்ற உரோம் நாட்டு ஓடுகளும் அவர்களின் மதுக்குடங்களான அம்போராவின் மாதிரிகளும் உரோம்நாட்டுச் சூரியக் கடவுளான அப்பல்லோவின் சுடுமண் பொம்மையும் கொடுமணலில் கிடைத்திருப்பது உரோமானியர் தொடர்பை வெளிப்படுத்துகிறது. இங்கு செய்யப்பட்ட அரிய கல் மணிகளை மேற்குக் கடற்கரைக்கு மலைபடு பொருட்களை வாங்க வந்த உரோமானியர்கன் வந்து வாங்கிச் சென்றுள்ளனர். இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதி கொங்கு நாட்டு நொய்யல் கரையேயாகும். இப்பகுதியில் 1500க்கு மேற்பட்ட உரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன.

கரிப்பகுப்பாய்வு C14 முறைப்படி கொடுமணல் நாகரிகக் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சங்க காலத்திற்கு இணையான பெருங்கற்படைச் சின்னங்கள் காணப்படும் இடங்கள் பின் வருமாறு.

ஈரோடு வட்டம்

அஞ்சூர், கதிரம்பட்டி, ஈரோடு, எலவமலை, சிவகிரி, சோளங்க பாளையம், பஞ்சலிங்கபுரம், பழமங்கலம், பெரியசேமூர், மாணிக்கம் பாளையம், முக்குடிவேலம்பாளையம், மூலக்கரை (சோமாசிகாடு) விருமாண்டம்பாளையம்.

காங்கயம் வட்டம்

அகிலாண்டபுரம், அரசம்பாளையம் (பட்டாலி), எருக்கங்காட்டு வலசு, கந்தம்பாளையம், கல்லேரி, கவசப்பாளி, காமாட்சிபுரம், காடையூர், குமரபாளையம், கோயில்பாளையம். பரஞ்சேர்வழி, பெருந்தொழு, மருதுறை, மீனாட்சிவலசு, மேட்டாங்காட்டுப் புதூர். மேட்டுக்காட்டு வலசு, வட்டமலை, வள்ளியறச்சல்.

கோபிசெட்டிபாளையம் வட்டம்

இக்கரை நெகமம், இருகாலூர், கரிதொட்டம்பாளையம், நம்பியூர், நல்லூர், பனையம்பள்ளி, புங்கம்பள்ளி, புதுப்பீர்க்கடவு, மலையம் பாளையம்.

சத்தியமங்கலம் வட்டம்

அத்தியூர், அந்தியூர் புதூர், கடம்பூர், கணுவக்கரை, காடன ஹள்ளி, சின்னக்குள்ளபாளையம், புளியம்பட்டி. பெரியகுள்ள பாளையம், பெருமுகை.

தாராபுரம் வட்டம்

உத்தமசோழபுரம், கம்புளியம்பட்டி, காசிலிங்கம்பாளையம், கொங்கல்நகர், சாலையூர், தாயம்பாளையம், பிரமியம், புளியம்பட்டி, பொன்னாபுரம், பொன்னிவாடி.

பவானி வட்டம்

அந்தியூர், ஆப்பக்கூடல், ஊசிமலை, ஓரிச்சேரி, கல்பாவி, கற்கேகண்டி, குறிச்சி, கோரவஹட்டி, சித்துகனி, சின்னமோள பாளையம், செம்மங்குழி. ஒட்டக்கரை. தாமரைக்கரை, துரிசினம் பாளையம், தொட்டிபாளையம், பர்கூர், புன்னம், பருவாச்சி, பெருந்தலையூர், பெஜ்ஜல்பாளையம், நெல்லூர், வேம்பத்தி, ஜம்பை.

பெருந்துறை வட்டம்

எழுதிங்கன்பட்டி, கத்தாங்கண்ணி, கருமாண்டிசெல்லிபாளையம், கொடுமணல், சர்க்கார் பெரியபாளையம், செஞ்சேரியாம்பாளையம், ஞானிபாளையம், தளவாய்பாளையம், திங்களூர், நடுப்பட்டி, நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், பிரப்நகர். வெள்ளோடு.

கொடுமணல், பிரப்நகர், நல்லாம்பட்டி, நிச்சாம்பாளையம், ஞானிபாளையம், முக்குடிவேலம்பாளையம் போன்ற பல இடங்களில் “நெடுநிலை தடுகற்கள்” உள்ளன.

பெருங்கற்படையுள்ள இடங்களை உள்ளூர் மக்கள் பாண்டியன் குழி, பாண்டியர் குட்டு, பாண்டியன் காடு, கோட்டை, ராசாக்கோவில், வேட்டுவன் காடு, சாம்பக்காடு, பாண்டியன் கோட்டை, சோளக்குழி, நத்தக்காடு, நத்தமேடு என்று பலவாறாக அழைக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/004-043&oldid=1491967" இலிருந்து மீள்விக்கப்பட்டது