ஈரோடு மாவட்ட வரலாறு/005-043

விக்கிமூலம் இலிருந்து

 

5. மலைகளும் காடுகளும்



மனிதர்கள் இன்றி மரங்கள் வளர்கின்றன. ஆனால் மரங்கள் இன்றி மனித இனம் வாழ, வளர முடியாது. தேவையான உணவு. உடை, உறைவிடம், பெற அடிப்படைக் காரணம் மலைகளும் மலைகளைச் சார்ந்து காடுகளில் காணப்படும் இயற்கைச் செல்வங்களான மரங்களே. மலைகளும் மலைசார்ந்த இடங்களும் காடுகளைச் சுமந்து நிற்கின்றன. மரங்கள் அடர்ந்த காடுகள் வெள்ள அரிப்பைத் தடுக்கின்றன. நாட்டின் இயற்கைப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.

நிலத்தில் பெரும்பகுதி காடாக இருந்தபோது வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் வழிகள் ஏற்படுத்தவும் ஏரி, குளம் அமைக்கவும் தேவைகளுக்கேற்ப மட்டுமே காடுகளை அழித்தனர்.

"காடுகொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கி
கோயிலொடு குடி நிறுவி"

என்பது சங்க இலக்கியத் தொடர். தேவைக்கு அழித்தன போக எஞ்சிய காடுகளைப் பாதுகாத்தனர். "உசிர் உள்ள மரங்களை வெட்டக் கூடாது" என ஒரு அரசன் ஆணையிட்டான். "தோப்பில் உள்ள மரங்களுக்குத் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் வரும்" என்பது ஒரு கல்வெட்டுத் தொடர். இறைவனோடு இறை ஆலயத்தில் உள்ள 'தல விருட்சங்களும்' வணங்கத்தக்கன என்பதால் மரங்களின் புனிதம் விளங்கும்.

ஈரோடு மாவட்ட வனப்பருதிகளில் முதலில் கவனம் செலுத்தியவர் திப்பு சுல்தான். சந்தன மரங்களை அரசு மரங்கள் (Royal Trees) என்று அறிவித்து அவற்றைப் பாதுகாக்க உரிய அதிகாரிகளை (NAYAKS) நியமித்தார்.

1799இல் ஈரோடு மாவட்டப் பகுதியில் கும்பினியார் அதிகாரத்திற்கு வந்தாலும் 1850 வாக்கிலேயே காடுகளின் மீது அக்கறை செலுத்தினர். நாடு முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கத் தொடங்கிய போது தண்டவாளங்களை இணைக்கத் தேக்கு மரத்தைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து அவைகளை வெட்டிக் கொடுக்கத் தனியார் சிலரை ஒப்பந்தத்தின்பேரில் அமர்த்தினர். மரத்தின் 'சுவை' அறிந்த தனியார் அரசுக்கு அளிக்கும் மரங்களோடு தேக்கு, மருது, போன்ற மரங்களைத் தாங்களாகவே வெட்டி கப்பல் கட்டும் தளங்களுக்கு அனுப்பினர். இவ்வாறுதான் மரத்திருட்டுத் தொடங்கியது. மரங்களின் திருட்டு அதிகமானதும் முதல் முறையாக சத்தியமங்கலத்தில் 1856இல் டாக்டர் கிளேகார்ன் என்பவரை வன அலுவலராக பாதுகாப்புக்கு நியமித்தனர். பின் 1860இல் தலைமலையிலும் 1864இல் பர்கூரிலும் வன அலுவலர்களை நியமித்தனர். தேக்கு மரங்களோடு சந்தன மரங்களையும் அரசு வெட்டிப்பயன் பெற்றது.

கிழக்கிந்தியக்கும்பினி வரும்வரை வனங்களின் கொடையாகிய மரங்களை வணிகநோக்கில் எவரும் வெட்டியது கிடையாது. 1879இல் வனத்துறை தொடக்கப்பட்டது. வடகோவை வளத்துறை 1883இல் கொள்ளேகால், சத்தியமங்கலம், பவானி என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 1909இல் தலைமலை தனிப்பகுதி ஆனது. 1910இல் பவானியிலிருந்து பர்கூர் தனிப்பிரிவாகப் பிரிக்கப்பட்டுப் பின் 1921இல் கொள்ளேகாலோடு இணைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அமைந்தவுடன் 1980இல் ஈரோடு வனப் பகுதி சத்தியமங்கலம் வனக்கோட்டம், ஈரோடு வளக்கோட்டம் என இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டது. 1999இல் கோபிசெட்டி பாளையத்தில் மூங்கில் வனக்கோட்டம் தனியாக அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட வனப்பகுதி ஈரோடு கோட்டத்தோடு இணைக்கப்பட்டது. ஈரோடு கோட்டம் அந்தியூர், மேட்டூர், காங்கயம், ஈரோடு, பெருந்துறை என 5 பிரிவுகளாகவும் சத்தியமங்கலம் கோட்டம் சத்தியமங்கலம், ஹாசனூர், தூக்கநாயக்கன்பாளையம், தாளவாடி, பவானிசாகர் என 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டது. 1919 முதல் சந்தனமரங்கள் விற்பனைக்கென சத்தியமங்கலத்தில் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்ட மொத்தப்பரப்பில் 28.3% காடுகள் உள்ளன. மாநில சராசரி காடு 18% ஆகும்.

சத்தியமங்கலம் கோட்டத்தில் 145530.92 எக்டேரும், ஈரோடு கோட்டத்தில் 83230.65 எக்டேரும் காடுகள் உள்ளன. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் குடியாலத்தூர், குடியாலத்தூர் விரிவு, உல்லே பாளையம், பாரபெட்டா, தலைமலை, அக்கூர்ஜோரை, அக்கூர் ஜோரை விரிவு, நீலகிரி கீழ் சரிவு, விளமுண்டி ஆகியவையும், ஈரோடு வனக் கோட்டத்தில் நகலூர், எண்ணமங்கலம், பர்கூர் தெற்கு, பர்கூர் வடக்கு, தாமரைக்கரை, அறச்சலூர், வெள்ளிக்கரடு, வாய்ப்பாடி, சென்னிமலை, கொங்கம்பாளையம், அட்டமலை, தளவாய்பட்டினம், ஊதியூர், பெரியமண்மலை ஆகியனவும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகள் ஆகும்.

சிவமலை, வட்டமலை, திருமண்கரடு. மலைப்பாளையம் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை, அரசண்ணாமலை, திண்டல் மலை, பெருமாள் மலை, ஊராட்சிக்கோட்டை மலை, பருவாச்சி மலை, தவளகிரி, பச்சைமலை, பவளமலை, அருள்மலை, திட்டமலை, ஒழலக்கோயில் மலை, சுதித்தமலை, அணியரங்கமலை, குட்டிக்கரடு. விஜயகிரி, புஷ்பகிரி ஆகியவை பிறமலைகள் ஆகும்.

மலைக்காடுகளை சந்தனமரக்காடுகள், விறகுக் காடுகள், மூங்கில் காடுகள், பெருமரக்காடுகள், சிறுவனப் பொருள் காடுகள் என 5 வகைகளாகப் பிரிப்பர். சந்தன மரங்களால் அரசுக்குப் பெரிய அளவில் வருமானம் வருகிறது. மேட்டூர் சந்தன எண்ணெய் ஆலைக்குச் சந்தன மரங்கள் அனுப்பப்படுகின்றன. காகித ஆலைக்கு மூங்கில்கள் அனுப்பப் பட்டன. இப்போது காகித ஆலையினர் வேறு மரங்களையும் பயன் படுத்துகின்றனர்.

மலைகளில் மரங்கள் குறைவதால் பருவமழை குறைகிறது. இயற்கை ஆர்வலர்கள் மரங்களையும், காடுகளையும் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். வனத்துறை வெட்டும் மரங்களுக்கு ஈடாகவும், பிற மரங்களையும் நட்டு மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

காட்டு விலங்குகளாலும், வறட்சியாலும், தெருப்பினாலும், நோயினாலும், மரத்திருடர்களாலும் பெரும் அழிவுக்கு உட்பட்டு வரும் காடுகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் 'பெரியகுளம்' என்ற பெயரில் ஒரு சிறுகுளம் உள்ளது. அக்குளத்தில் உள்ளூர்ப் பறவைகளோடு வெளியேயிருந்து வரும் பிற பறவைகளும் தங்குகின்றன. அதனால் அரசு அதைப் பறவைகள் சரணாலயம் என்று அறிவித்தனர். (G.O. MS No. 237, ENVIRONMENT & FOREST (FRY) Dated 30.06.1997).

குளத்தின் பரப்பளவு 77,185 எக்டேர் ஆகும். வனத்துறையினர் பார்வையாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வேண்டிய பார்வைக் கூட வசதி செய்துள்ளனர். சுற்றுப்புறத்தில் சமூகக் காடும், 19 வகையான தாவரங்களும் உள்ளன. குளத்தில் ஆறு வகையான மீன்களும், நீர்ப்பாம்பு முதலிய பல வகை விலங்கினங்களும் உள்ளன. அங்கு காணப்படும் 74 வகையான பறவையினங்களுள் 50 வெளியூர் இனங்கள். கோடைகாலத்தில் பறவைகள் தங்கும் முக்கிய இடமாக இது உள்ளது.

அவல்பூந்துறை, ஊஞ்சலூர், கடெசல். சுத்தாங்கண்ணி, காங்கயம், கொளாநல்லி, கொடுமுடி, தாமரைக்கரை. தாளவாடி, தலமலை, திம்பம், நசியனூர், பர்கூர் மலை, வெட்டுக்கரை, ஹாசனூர், ஆகிய நீர்வளமிக்க இடங்களும் பறவைகளைக் கவருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 43 பறவைக் குடும்பங்களைச் சேர்ந்த 128 பறவையினங்கள் இருப்பதாகப் பறவையின ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வனச்செல்வம்

வனமே ஒரு செல்வம். அது தன்னுள் பல்வேறு செல்வங்களைப் பெற்றிருக்கிறது. யானை, புலி, சிறுத்தை, நரி, செந்நாய், கரடி, காட்டெருமை, குரங்கு, மான். காட்டுப்பூனை, மரநாய், முள்ளம்பன்றி ஆகிய விலங்குகளும் பல்வேறு பறவையினங்களும் வனத்தில் வாழ்கின்றன. காடுகளில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இறந்த யானைகளின் தந்தம், புலி, மான் ஆகியவற்றின் தோல், மான்கொம்பு ஆகியவை வனத் துறையினரால் சேகரிக்கப்படுகின்றன.

தேக்கு, மூங்கில், வாகை, மருது, ரோஸ்வுட், ஆல், அரசு, நெல்லி, புளி, வேம்பு போன்ற பல்வேறு மரங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் கோரை, புளி, நெல்லி, புங்க விதை, விறகு, கடுக்காய், கல்பாசம். பேரீச்சை போன்ற மலைபடு சிறுவிளை பொருள்களை சேகரித்து அவற்றை வனத்துறைக்குத் தந்து விலை பெறுகின்றனர்,

 
"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/005-043&oldid=1503004" இலிருந்து மீள்விக்கப்பட்டது