ஈரோட்டுத் தாத்தா/உரிமை வேட்கை

விக்கிமூலம் இலிருந்து

உரிமை வேட்கை

அன்னியர்கள் இந்நாட்டில் வாணி கத்தில்
அடிக்கின்ற பகற்கொள்ளை தனை ஒழிக்கத்
தன்முதுகில் துணிமுட்டை தூக்கி விற்றுத்
தனக்குள்ள சொல்வன்மை யாலே, மக்கள்
புன்கருத்தைப் போக்கியிந்த நாட்டி லுள்ளார்
புலையரென்றும் கடையரென்றும் ஒதுக்கப் பட்ட
இந்நிலையை ஒழித்துவிட எண்ணி நாளும்
எழுதிவந்தார், பேசிவந்தார் ஈரோட்டண்ணல்!

உடலுக்குத் தீமைதரும் கள்ளிற் செல்வம்
ஒங்குவதைக் கண்டந்த வெள்ளைக் காரர்
கடமையினை எண்ணாமல் ஆளும் போக்கில்
கள்ளினுக்குக் கடைபெருக்கக் கண்டார் காந்தி!
உடனொழிக்க வேண்டுமெனச் சித்தங்கொண்டார்
ஓங்கியதே பெரும்புரட்சி தமிழர் நாட்டில்
அடலேறு போலிளைஞர் ஈரோட் டண்ணல்
அன்றெழுந்தார்! தமிழர்களும் உடனெ ழுந்தார்!

தொண்டர்களில் நூற்றுவரை அண்ண லோடு
தொழுவத்தில் மாடுகட்டிப் போட்ட தேபோல்,
கொண்டடைத்தார் சிறையுள்ளே, மக்கள் நெஞ்சில்
கொழுந்துவிட்டு வயிறெரிய ஆட்சி யாளர்
கண்டனர்பத் தாயிரம்பேர் மறியல் செய்து
கடுஞ்சிறைக்குள் அண்ணலுடன் செல்ல, நெஞ்சில்
எண்ணினராய் நிற்கும்நிலை கண்டார் அங்கே
இடமில்லை சிறைக்குள்ளே வெளியில் விட்டார்!

காதலனின் நெஞ்சுவக்கத் தொண்டு செய்யும்
கற்புடையார் நாகம்மை யம்மை யாரும்
மாதரிடம் வீரமுண்மை காட்ட வென்றே
மாநிலத்தில் பிறந்ததங்கை கண்ணம் மாளும்
மோதிவரும் ஆர்வத்தால் இவர்கள் பின்னே
முன்னேறும் பெண்ணினமும் கள் ஒழிப்பை
ஆதரித்த ஈரோட்டுத் தாத்தா தம்பின்
அணிவகுத்துக் கிளர்ச்சிசெய்தார்! பணியைச் செய்தார்!

திருவாங்கூர் வைக்கத்தில் தெருவில் நாயைத்
திரியவிட்டுத் தமிழர்களில் ஒருவ குப்பை
வரக் கூடா தெனக்கட்டு வைத்தி ருந்தார்.
மனம்புழுங்கி மலையாளத் தலைவ ரெல்லாம்
ஒருபுரட்சி தொடங்கிடவும், சாதிப் பித்தம்
ஒங்குமுளத் திருவாங்கூர் அரசாங் கத்தார்
வருங்காலம் நினையாமல் தலைவ ரெல்லாம்
வாடத்தம் சிறைக்கூடத் தடைத்துப் போட்டார்.

நாட்டுநலம் கருதியஅத் தலைவ ரெல்லாம்
நன்றாய்ந்து தொடங்கிவிட்ட தொண்டு செய்யக்
கேட்டெழுதி ஈரோட்டிற்காள னுப்பிக்
கிளர்ச்சியினைத் தொடர்ந்துசெயப் பணித்த போதில்

வீட்டில்வயிற் றுக்கடுப்பால் படுக்கை தன்னில்
விழுந்திருந்த அண்ணலவர் எழுந்துவேண்டும்
மூட்டைகட்டி நாகம்மை யாரைக் கண்டு
முடிந்தது நோய் என்றுரைத்தார்! வைக்கம் வந்தார்!

ஈவேரா வைக்கத்தில் தலைமை ஏற்றார்
இவர் வீட்டில் பலமுை றகள் தங்கி டில்லி
போவாரவ் வரசர்அதை நினைத்துப் பார்த்துப்
போய்விருந்திற்.கழைக்கவெனப் பணிக்கக் கண்டிந்
நாவேந்தர், :தீமைக்கோ? புரட்சிப்போரை
நடவாமல் தடுப்பாரோ?” என்று மக்கள்
கூவாமல் நினைக்குங்கால், அண்ணல் நன்றி
கூறியதி காரிகளையனுப்பி வைத்தார்.

உரிமைக்குப் போராடத்தொடங்கி விட்ட
உடனவரைச் சிறையிட்டார்! பின் நாகம்மை
திரு.ராமநாதனுடன் வைக்கம் வந்தார்
சிலநாளிற் சிறைப்பட்டார் இராமநாதன்!
பெருவாரிப் பெண்களுடன் அம்மையார்தாம்
பெருங்கிளர்ச்சி செய்யுங்கால் ஈரோட் டண்ணல்
ஒரு மாதம் சிறையிருந்துவிடுத லைப்பட்
டூர்விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார்!

வெளியேற்றச் சட்டத்தை மீறி மீண்டும்
விளைத்தபெரும் புரட்சிகண்ட் ஆட்சி யாளர்
எளியாரின் உரிமைக்குப் பாடு பட்ட
எம்பெரியார் தலைச்சிதையில் ஆறுமாதம்
துளியேனும்,அருளின்றி அடைத்துப் போட்டார்
தொண்டுக்குச் சளையாத நாகம்மையார்
வெளிநின்று பெருங்கிளர்ச்சி செய்ய லானார்
வெற்றிபெற்றார்! உரிமைபெற்றார் தாழ்த்தப்பட்டோர்!.

தனித்தனியே பார்ப்பனர்க்கும் திராவி டர்க்கும்
தமிழ்நாட்டுக் குருகுலத்தில் உணவளித்துத்
தன் இனத்துக் குயர்வுதனை வ.வெ.சு. ஐயர்
தழைக்கவைக்க முயன்றதனால் பணங்கொடுக்க
இனிமுடியா தென மறுத்தார் தந்தை. காந்தி
இத்தவற்றைக் கண்டித்தும் ஐய ரோதாம்
நினைத்ததுதான் சரியென்றார்: பார்ப்ப னியம்
நீங்கும்வரை இழிவிருக்கும் என அறிந்தார்!

தன்னாலே யான வரை பார்ப் பனீயம்
தனையொழிக்க வழியாய்ந்தார் வகுப்பொவ் வொன்றும்
முன்னேற வேண்டுமெனும் கொள்கை நாட்ட
முதன்முதலில் குடியரசு தொடங்கிவைத்தார்
தென்னாட்டார்க் கென்னென்ன தேவை என்று
தெளிவாக ஆராய்ந்து மனுவின் நீதி
சொன்னாலும் வெட்கம்வரும் கம்பன் பாடல்
சூழ்ச்சிசொலும் புராணங்கள் எரிக்கச் சொன்னார்!