ஈரோட்டுத் தாத்தா/தமிழ்காத்த போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்காத்த போராட்டம்

தன் வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
   வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வேரா
   முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
   புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சர்வர் கட்டாயம்
   ஆக்கிவிடத் திட்டம் செய்தார்:

தாய் மீதில் விருப்பற்ற ஒரிளைஞன்
   தன்னுழைப்பைத் தாய்நாட் டிற்கே
ஈயென்றால் மதிப்பானா?, எதிரிமொழி
   மதித்துயிர்வைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
   மறைத்திந்தி தோன்றின் நாடே.
தாயென்ற நிலைபோகும் தமிழ்சாகும்!
   இந்தியெனும் கனிமே லாகும்!

ஈதறிந்த ஈரோட்டுத் தாத்தாதாம்
   ஓயாமல் எழுத்தி னாலும் - மோதியுணர்
வலையெழுப்பி மக்களைத்தம்
   வயப்படுத்தும் மொழியி னாலும்,
தீதுவரும் இந்தியினால் முன்னேற்றம்
   தடையாகும்! தீந்த மிழ்க்கும்
ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!
   இந்திஉயர் வாகும் என்றார்.

சிறுதுரும்பும் பற்குத்த உதவும் இந்த
   இந்தியெனும் தீமை மிக்க
சிறு மொழியால் எட்டுணையும் பயனில்லை!
   அது வளர்க்கச் செலவ ழிக்கும்
பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும்.
   படிக்கவரும் பெரும்பா லோர்தாம்
வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
   வித்தைகற்ற மேலோர் என்றார்!

ஆட்சிசெயும் முதலமைச்சர் பார்ப்பனராய்
   இருந்தமையால் அவர்வ டக்குப்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
   தமிழ்கெடுக்கும் பெருவிருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
   மக்களுக்குச் சொன்னார் தாத்தா
‘சீச்சியிவர்’ துரோதி எனச்செந்தமிழ்
   ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார்!.

தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
   காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார் தலைமையிலே
   கூடிநின்ற மிக்க ஆர்வம்

பாய்தமிழர் மாநாட்டைத் திருச்சியிலே
   பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
   நினைவெடுத்த தோற்றம் என்றார்!

கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
   புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
   தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லை யெமக்
   கெனவுரைத்துத் தமிழ்வாழ் கென்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
   வேறென்ன கேட்க வேண்டும்?

இந்து-தியா லாஜிக்கல் பள்ளிமுன்னும்
   முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
   வீரரெலாம் சென்று நின்று
இந்திவிழ! தமிழ்வாழ்க! என முழங்கப்
   பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
   செல்லாதென் றாணை யிட்டான்!

தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவிலை
   மற்றெவர்க்குத் தண்டிப் பென்றால்
எமைவிட்டின் எதிர்நின்று வசைமொழிந்த
   தாற்செய்தோம் என்று சொன்ன
அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத்
   தாத்தாஒர் அறிக்கை யிட்டார்:
தமிழர்களே இனிஅமைச்சர் வீட்டின்முன்
   கிளர்ச்சியின்றித் தமிழ்காப் பீரே!

தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம்
   ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும்
நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின்
   எதிர்வாலை நீட்டி நின்று
அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம்
   சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்!
இலை எம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை
   அரசியலார்க் கேறிற் றன்றே!

மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற
   அரசியலை மட்டந் தட்ட
அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத்
   திருச்சியினிள் றனுப்பி வைத்துத்
தமிழ்காத்துத் திரும்பிடுவீர் என வாழ்த்துக்
   கூறியந்தத் தமிழர் போற்றும்
தமிழ்த்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற்
   சென்னைக்குத் தாமும் சென்றார்!

சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு
   கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல்
மின்னனைய மாதர்களும் ஆடவரும்
   இளைஞர்களும் மிகுந்த ஆண்டு
சென்றவரும் தமிழகத்தார் எல்லோரும்
   சேர்ந்திருந்து செய்மு ழக்கம்
நின்றுகடல் செய்த அலை ஓசையினும்
   பெரிதாக நிறைந்த தன்றே!

எழுபதினா யிரமக்கள் தமிழ்வாழ்க
   ஒழிகஇந்தி என ஒ லிக்கக்
கிழவரவர் எனினுமொரு இளைஞரென
   முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய

எழுந்தனர் அங் கோர்மேடை தனிலேறி
   நின்றாரவ் ஈரோட் டண்ணல்!
எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
   மனிதஉரு வெடுத்துக் கொண்டே!

விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
   செயச்செய்த வீரப்பேச்சை;
எழுந்துதமிழ்ச் சொற்களினால் இளைஞர்களைத்
   தட்டிவிட்ட இலக்கியத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
   செயஅன்றே கொளுத்திவிட்ட
செழுந்தமிழின் வீறார்ப்பைச் செவிமடுத்தோர்
   உணர்வடைந்தார்! சிங்க மானார்!

தாய்மொழியைக் காப்பாற்றத் துடித்தெழுந்து
   கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
   சிறைக்கூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
   தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார்! அரசியலார்
   கைவிட்டார்: பொருமிற் றுள்ளம்!

மறைமலை பார் தமிழ்க்களித்த திருநீலாம்
   பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்'டில்
   கூடிநின்றோர் நெஞ்சிற்பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
   உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
   வரலாறோ சிலம்புக் காதை !

நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப்பெண்கள்
   தமையெல்லாம் நீ எழுப்பித்
தொடுப்பீர் போர், தமிழ்த்தாயைத்தொலைக்கும்வழி
   தடுத்தென்றே தூண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனை நீ யபராதம்
   கொடுவென்று கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள்
   தாத்தாவைக் கம்பிக் கூட்டில்!

வெள்ளியமென் தாடிய சைந் தாடத்தன்
   மேனியிலே முதுமை தோன்ற
அள்ளி உடை ஒரு கையில் தடியை மறு
   கையிலெடுத் தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே
   மலர, உடல் மெலிந்து, கண்டோர்
உள்ளமெலாம் கசிய, மழை போற்கண்ணீர்
   பொழிய, சிறைக் குள்ளே சென்றார்!

தாத்தாவைச் சிறையிட்டுத் தமிழர்களை
   எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார்.அவ்வரசியலார் பயனில்லை!
   தமிழகத்தைப் பார தத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
   பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு த மிழர்க்கே’’
   எனுந் திட்டம் தமிழர்க் கீந்தார்!

தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்,
   சிறையிருக்கும் தாத்தா வைப்போல்
அமைத்தஉரு வம்தலைவ ராகப்பன்
   னீர்ச்செல்வம் அருகு வந்தார்.

சுமைசுமையாய் மறவரெலாம் தனக்கிட்ட
   மாலைகளைத் தூக்கி வந்து
எமதுபெருந் தலைவரே என் றடிபணிந்து
   மாலைபடைத் தெழுந்தார் செல்வம்!

மலைபோலும் மலர்மாலை தனைப்பன்னீர்ச்
   செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த
தலைவர் சிலை முன்படைத்த போதிலங்குக்
   கூடிநின்றோர் தாத்தா உள்ள
நிலைநினைந்தார். உளம்நொந்தார்! அருவிஎனக்
   கண்களினால் நீர் பொழிந்தார்!
தலைவணங்கிப் பெரியாரே தலைவரென
   உறுதிசொன்னார் தமிழ்நாட் டிற்கே!

ஓயாத உழைப்புத்தான் உடல்நலத்தைக்
   காப்பாற்றும்! உழைப்புக் கெட்டால்
நோயாகும் உடல்மெலியும் இவ்வியற்கை
   முறைப்படியே நோய்வாய்ப் பட்டுப்
போய்விடுமோ உயிரென்று தமிழரெலாம்
   ஏங்குகின்ற போதில் நாட்டின்
தாய்போன்றான் தந்தைதனை விடுதலைசெய்
   தரசியலார் தமிழர்க் கீந்தார்!

நோயோடு வெளிவந்தார் விரைவில்தன்
   வலிகுறைத்த நோய்ப றக்க
ஓயாமல் உழைத்திட்டார்! ஊரெல்லாம்
   தன் கொள்கை உரைத்து வந்தார்!
தீயாரின் அரசியலை மதமாயை
   தனையொழிக்கத் திட்டம் சொன்னார்!
பாயாத புதுவெள்ளம், பரவாத
   பெருநெருப்புப் பார்த்த துண்டோ?