உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/உடை

விக்கிமூலம் இலிருந்து

இரகசியம் - 8

உடை

ரு ஏழைப் புலவன் ஒரு திருமணத்திற்குச் சென்று பந்தியிலே உட்காருகிறான். அவனுக்கு இலை போடப்பட்டுப் பண்டங்கள் பறிமாறப்படுகின்றன. பரிமாறிய பதார்த்தங்களைப் பார்த்து அவன் எகத்தாளமாகச் சிரிக்கிறான்.

போட்டிருந்து சட்டையைக் கழட்டுகிறான். "ஏ... சட்டையே... இந்தா விருந்து. சாப்பிடு" என்று கத்துகிறான். அவன் கூப்பாட்டைக் கேட்டுச் சுற்றி யிருந்தவர்கள் ஒடி வந்து என்னவென்று கேட்கிறார்கள்.

அவன் எல்லோரையும் வெறிக்கப் பார்க்கிறான். முறைத்துப் பார்த்தபடி பேசுகிறான். முதலில் நான் கிழிந்த உடை போட்டுக் கொண்டு வந்தேன். என்னை உள்ளே விடமாட்டேன் என்று விரட்டியடித்தார்கள். நான் ஒடிப்போய் சலவைத் தொழிலாளி ஒருவனிடம் இந்த ஆடைகளை வாடகைக்கு வாங்கி அணிந்து கொண்டு வந்தேன்.

எனக்குப் பலமான வரவேற்புத் தந்து பந்தியிலே உட்கார வைக்கிறார்கள். இது என்ன நியாயம் ஒரு மனிதனுக்கு மரியாதையில்லை. இந்த ஆடைக்கென்ன அவ்வளவு கெளரதை” என்று கூறியவனை நோக்கி ஒரு பெரியவர் சொன்னார்.

“தம்பி ஆடை இல்லாதவன் அரை மனிதன். அவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் குறை மனிதன்தான். முழு மனிதன் இல்லை’ என்றார்.

'ஆடை' என்றாலே ‘உயர்ந்த வெற்றியைத் தருவது’ என்று அர்த்தம். 'ஆ' என்றால் வெற்றி. 'டை என்றால் உயர்ந்த என்று அர்த்தம். உயர்ந்த வெற்றியை அடைபவனுக்குத்தான் ஆடவன் என்று பெயர். ஆடவன் என்றால் வெற்றியாளன் என்று அர்த்தம்.

இப்படிப்பட்ட ஆடவன் என்ற வார்த்தை எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? கக்கூஸ் என்கிற சுவற்றில். ஒரு மனிதனின் படத்தைப் போட்டு, அதற்குக் கீழே ஆடவன் என்று எழுதி வைக்கிறார்கள். பேசப்படுகிற வார்த்தைகளுக்கும், இடங்களுக்கும் ஏற்ப நிலைகளுக்கும் ஏற்ப மரியாதை கிடைக்கும் என்கிறார்கள்.

ஆடை என்பதைத்தான் 'உடை’ என்று சொல்லுகிறார்கள். உடலுக்கு உடுப்பதினால் அதை உயர்வாக அமையும்படி பார்த்துக்கொள் என்பதற்காகவே அதற்கு உடை என்று பெயரிட்டனர். இந்த உடையை எப்படி உடுத்திட வேண்டும் என்பதைக் குறிக்கவே உடுக்கை என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

'கை' என்றால் ஒழுக்கம். ஒழுக்கமாக உடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உடுக்கை என்று பெயர் வைத்தனர். உடுக்கை என்ற அந்தச் சொல் ஒரு மனிதனின் மானத்தைக் காப்பாற்றவே உதவுகிறது என்று சொன்னால் அது உண்மைதான்.

அதனால்தான் வள்ளுவரும், 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்றார். ஒழுக்கக் குறைவாக உடையணிந்து கொள்கிறவனுடைய ஒழுக்கமும் பாழாகிறது என்பதால் தான் கை போல என்றார். ஒருவனைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற ஆடையணிந்தால் அவனைப் பார்த்தவுடனேயே எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. அவனிடம் ஒரு அபரிமிதமான கனிவும் பிறக்கிறது. அவன் மற்றவர்கள் மத்தியிலே தலைவன் போல் ஆகிவிடுகிறான்.

நன்றாக உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற 'உடுக்கை' என்ற சொல் போலவே, வாழ்க்கையிலும் வடிவமைத்து வழங்கியிருக்கிறார்கள்.

படுக்கையில் ஒழுங்காகப்படு என்பதைக் குறிக்கப் 'படுக்கை' என்றனர். உட்காரும்போது, ஒழுங்காக உட்கார வேண்டும் என்பதற்காக அதனை இருக்கை' என்றார்கள். ஆனால் நமது மக்கள், அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஆடைகளை அணிகிறார்களே தவிர அவை உடலுக்கு ஏற்றதா, தகுதிக்கு உரியதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. நமது உடலின் தட்ப வெப்ப நிலையைப் பாழ்படுத்தினாலும் பரவாயில்லை. நான் மற்றவர்களைப் போலவே என்று தடித்தமாக, தாறுமாறாக அணிந்து கொண்டு தறிகெட்டு அலைகிறார்கள்.

உதாரணத்திற்கு சென்னை ஒரு சூடான பிரதேசம். அதிக வெப்பம் இருந்தாலும், அதிகம் குளிர் தாக்காத பகுதியைக் கொண்டது. மைசூர், காஷ்மீர் போன்ற இடங்கள் பயங்கரக் குளிருக்குப் பேர்போனவை. அங்கே உள்ளவர்கள் இயற்கையின் சீற்றமான சிலுசிலுப்பிலிருந்து காத்துக் கொள்ள தோலாலான மற்றும் கம்பளியாலான உடைகளை அணிந்து கொள்கிறார்கள். அந்த கதகதப்பான ஆடைகளை வாங்கிக் கொண்டு வந்து சென்னையிலே அணிந்து கொண்டு திரிந்தால் பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா? உடலும் அனலுக்குள் அவதிப்படாதா?

இவ்வாறு ஏறுக்குமாறாக உடையணிந்து கொள்வதென்பது இயற்கைக்கு மாறானது. அதனால்தான் நமது முன்னோர்கள் ஆடை அணிவதில் அழகும் வேண்டும், எச்சரிக்கையும் வேண்டும் என்பதால்தான் ஆடை என்றும், உடை என்றும், உடுக்கை என்றும் மகிழ்ச்சியின் மர்மத்தைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி நமக்குச் சரணாகும். இல்லையென்றால் அவமானம்தான்.

☐☐☐