உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/மனிதன்
இரகசியம் - 2
மனிதன்
மனிதன் என்பவன் மகா சிருஷ்டி என்று பிரமிப்போடு வர்ணிக்கப்படுகிற ஒரு சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. உலகத்தில் வாழப் பிறந்த மனிதப் படைப்பு என்பதைவிட, உலகத்தை ஆளப்பிறந்த மனிதப் படைப்பு என்பதுதான் உண்மையான நிலைமை ஆகும்.
சாதாரணமாக வாழ்வதற்கே ஒரு தகுதி வேண்டும் என்றால், ஆள்வதற்கு என்று ஒரு தகுதி இருக்க வேண்டாமா? தகுதி இருக்கத்தான் வேண்டுமென்று எந்த தலைமை வந்து வற்புறுத்த முடியும்? வலியுறுத்த முடியும்? யாருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. யாரும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதுதானே மனித வரலாற்றில் வழிவழி வருகிற மாபெரும் சிக்கலாகும்.
ஆகவேதான், வாழப் பிறந்த மனிதன் எப்படி இருக்க வேண்டும்? ஆளப் பிறந்த மனிதன் எப்படித் திகழ வேண்டும் என்பதை வற்புறுத்தாமலேயே, இயல்பாகச் சொல்லிச் சென்று இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.இந்த ‘மனிதன்' என்ற சொல்லையும் இரகசியமாக இப்படித்தான் வடிவமைதது விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
மிகச் சாதாரணமாக உச்சரிக்கப்படுகின்ற ’மனிதன்’ என்ற சொல் எத்தனை விதமான எச்சரிக்கைகளை, உச்சக்கட்டமான அறிக்கைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு இருக்கிறது தெரியுமா!
மனிதன் என்ற சொல்லை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஒரு ஆரஞ்சுப் பழத்தில் சுளைகள் அழகாக அடங்கி அமைந்து உள்ளதுபோல இந்த சொல்லுக்குள்ளே பலவித வீரியம் நிறைந்த அழகான சொற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, இருக்கின்றன.
'ம, மன், மதன், மன்மதன், தமன், தன், னிதன், தம, தனி' ஒவ்வொரு சொல்லும் எத்தனை உயிரோட்டமாக உயிர்ப்புச் சக்தியுடன் விளங்குகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.
‘ம' - என்றால் காலம், நேரம். ‘மன்' என்றால் நிலை. பெற்ற என்பதாம், 'மதன்’ என்றால் அழகானவன். 'மன்மதன்’ என்றால் காணக் கவர்ச்சியானவன். ‘தமன்’ என்றால் உற்றான், உறவினன். ‘தம' என்றால் நிரம்பப் பற்றவன். 'தன்' என்றால் ஆத்மா உடையவன். 'னிதன் என்றால் நித்தியமும் இவ்வாறு இருப்பவன். ‘தனி’ என்றால் ஒப்புவமை இல்லாதவன்.
இனி இந்த அர்த்தத்தை எல்லாம் இனிதாகத் தொகுத்துப் பார்க்கலாமே.
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டு மென்று இலக்கணம் வகுத்துத் தந்த இந்தச் சொல்லின் இலக்கிய நயத்தை இப்பொழுது முழுமையாக அறிவோம்.
ஒரு மனிதன் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், தன் உடல் அமைப்பும், நிரம்பிய உளச்சிறப்பும் குறையாது, அழகானவனாகவும், காண்பதற்குக் கவர்ச்சியான வனாகவும், எல்லோரிடத்திலும் நல்ல உறவினனாகவும், நித்தமும் நிலை பெற்ற இந்தச் சத்துவக் குணங்களோடு வாழ வேண்டும்.
அதற்கு அவனுக்கு உதவுவது அவனது ஆத்மா. அதனாலே தான் மனிதன் என்ற சொல்லில் ‘தன்’ என்ற சொல் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவனுக்கு ஆத்மாவாகிய ‘தன்’ இருந்தால்தான், அவன் மனிதன் என்று அழைக்கப்படுவான்.
அந்தத் ‘தன்’ இல்லாவிட்டால் அவன் ஜீவன் இல்லாத சவம்.
இந்தி மொழியிலே மனிதனை ‘ஆத்மி’ என்று அழைப்பார்கள். ஏன் என்றால் ஆத்மா உள்ளவன் ஆத்மி. அந்த ஆத்மாவை மிக வலிமையாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் மனிதனுக்குத்தான், ‘மகாத்மா’ என்று பெயர்.
அதனாலேதான் திருமூலரும் ‘தன்’ என்னும் ஆத்மாவை அறிய வேண்டும் என்று வற்புறுத்தினார். ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்று பாடினார்.இந்த இலக்கணத்திற்கு எதுவுமே எள்ளளவும் தகுதியில்லாத, இணக்கமில்லாத, பொருத்தமில்லாத மனிதனுக்கு என்ன பெயர் இருக்க முடியும். நிச்சயமாக அவன் மனிதனில்லை. அவனுக்கு வைக்கப்பட்டிருக்கிற பெயர் கினிதன்.
மனிதன் என்பதைக் கிண்டல் பண்ணுவதற்காக, கேலி செய்வதற்காகக் கினிதன் என்று பெயர் வைக்கவில்லை.
கினிதன் என்றால் பீடை பிடித்தவன் என்று பொருள். அதாவது பாழானவன் என்று அர்த்தம். குறைகள் நிறைந்தவன். கஷ்டப்படுபவன்.
மனிதனாக வாழ்வதை விட்டுவிட்டுக் கினிதனாக வாழ்வது நியாயம் இல்லை அல்லவா?
‘மனசு’ உள்ளவனைத்தான் ‘மனுசன்’ என்றனர். மனசு என்பது மனிதன் பெற்ற மதிப்பீட்டை அறிய ஒரு வரப்பிரசாதம்.
சிரிக்க, சிந்திக்க, சொல்ல, சுகத்தைப் பறிமாறிக் கொள்ள, உலக வாழ்க்கையை அனுபவிக்க, உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருக்கும் மனசை வைத்துக் கொண்டு, கீழான வாழ்க்கை வாழலாமா? என்கிற அற்புதமான அறிவை, அடைகாத்துக் கொண்டு ‘மனிதன்’ என்ற சொல் இரகசியம் காத்துக் கொண்டு இருக்கிறது.
தரத்தில் தாழ்ந்து போகிற மனிதனைக் ‘கினிதன்’ என்றால், தரத்தில் உயர்ந்து நிற்கிற மனிதனுக்குப் ‘புனிதன்’ - என்று பெயர்.அவன் தான் புண்ணியன். இந்த உலகத்தின் பெருமை காக்கின்ற கண்ணியன். இனியாவது இந்த இரகசியக் சொல் காட்டிய வழியில் நாம் இதமாக நடந்து சுகமாக வாழ்வோம்.
சராசரியாக வாழ்கிற ஒருவனை ‘மனிதன்' என்றும் அந்தத் தரத்திலிருந்து, மனதத் தன்மையிலிருந்து தாழ்ந்து போனவனைக் ‘கினிதன்' என்றும், சராசரி மனிதனை விடச் சகலத்திலும் மேம்பட்ட ஒருவனைப் ’புனிதன்’ என்றும் சான்றோர்கள் அழைக்கிறார்கள். மனிதனைப் பிரிக்கும் வகையில் இந்த மூன்று நிலையோடு யாரும் நின்றுவிடுவதில்லை. ஏதோ பொதுவாகவே அந்த ‘நாலு பேர்’ என்பார்கள்.
‘அந்த நாலு பேர் அறிய’ என்று சாட்சியும் அளிப்பார்கள். ’அந்த நாலு பேருக்கு நன்றி’ என்று கூறி நயம் பாராட்டுவார்கள். யாரைக் கேட்டாலும், அந்த நாலு பேர் யார் என்பதைச் சொல்ல மாட்டார்கள். அந்த நாலு வகையான மனிதர்களை இங்கே நாம் இனம் பிரித்துப் பார்க்கலாம்.
மனிதனுக்கு என்று விசேஷமான சிறப்பு ஒன்று உண்டு. அவனுக்கு அவனது பெற்றோர்கள் வைக்கும் பெயர் ஒன்றாக இருந்தாலும் அவன் வாழ்கிற இடத்திற்கேற்ப, செய்கிற தொழிலுக்கேற்ப, அனுபவிக்கிற முறைகளுக்கு ஏற்ப, வகிக்கிற பதவிகளுக்கு ஏற்பப் பெயர் மாறிக் கொண்டேவரும்.
உதாரணமாக, செய்கிற வேலையைப் பொருத்து தச்சன், கொத்தன், ஆசாரி என்பார்கள். அவன் அனுபவிக்கிற நோய்களுக்கேற்ப தொழு நோயாளி காசநோயாளி, என்பார்கள். உடலின் அமைப்பிற்கு ஏற்பக் குள்ளன், குண்டன், ஒட்டடைக்குச்சி, சோளக்கொல்லை பொம்மை என்பார்கள்.
அதைப்போல அவன் புத்திசாலியாக இருந்தால் அறிஞன் என்னும், அறிவு இழந்தவனை மந்தன் என்றும் பலவாறு கூறுவார்கள்.
இங்கே நாம் அந்த நான்கு பேர்கள் யார் யார் என்று, அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும், ஒழுக்க பூர்வமாகவும் பிரித்துப் பார்க்கிறோம்.
1. மரன்
2. பாமரன்
3. அறன்
நான் விளக்க வந்த இந்த நான்கு பேர்களைப் பற்றியும் ஒரு சிறிது விளக்கமாகக் காண்போம்.
1. மரன்
அவ்வை ஓரிடத்தில் பாடுகிறார். “சபை நடவே நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்” என்று. தானே குறிப்பாகச் சொல்லத் தெரியவில்லை. ஒருவாறு குறிப்புக் கொடுத்தாலும் சொல்ல முடியவில்லை. அதாவது தனக்குச் சொந்தமாகவும் தெரியவில்லை. சொல்லியும் தெரியவில்லை. அதாவது சொந்த புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. இப்படிப்பட்டவர்களைத்தான் அவ்வையார் மரம் போன்றவர்கள் என்கிறார்.மரம் போன்று வாழ்கின்ற ஒருவனை ‘மரன்’ என்று அழைக்கிறோம். இப்படிப்பட்டவர்களால் பிறருக்குத் துன்பம் ஏற்பட்டுவிடுவதில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு சமுதாயத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே இரைந்து கிடக்கிறார்கள்.
2. பாமரன்
மரம் போன்றவர்களை விட இவர்கள் கொஞ்சம் சூட்சமம் தெரிந்தவர்கள். சொன்னால் விளங்கிக் கொள்பவர்கள். சொன்னபடி நடந்து கொள்ள முயற்சிப்பவர்கள். தானே சிந்தித்துச் செயல்படுகிற தன்மையும், திண்மையும் நிறைந்தவர்கள்.
சமுதாயத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற அறிவு ஜீவிகள். பாமரத்தனமாக என்றவொரு வார்த்தைக்குப் பாத்திரமானவர்கள்.
3. அறன்
வள்ளுவர் தமிழ்ச் சமுதாயத்தை மிகக்கற்பனையுடன் கண்டுகளித்து, மேம்பட்ட தமிழ் மகனை மனிதன் என்று கூறாமல் ‘அறன்’ என்று கூறினார். ‘அறன்’ என்றால் ஒழுக்கம். ஒழுக்கமானது மூன்று வகைப்படுகிறது. மூன்று வகையான ஒழுக்கங்கள் உடல் ஒழுக்கம், நா ஒழுக்கம், உணர்வு ஒழுக்கம்.
இந்த மூன்று ஒழுக்கங்களிலும் சிறந்து விளங்குகின்ற ஒரு இல்லறத்தானை அவர் ‘அறன்’ என்று அழைத்தார் அறன் என்பதற்கு, ஒழுக்கமானவன், ஒழுக்க சீலன் என்று பொருள். அவனது மனைவி அதே நற்குணங்களைப்
பெற்றிருக்கும்போது 'அறணி' என்று அழைக்கப்பட்டாள்.
இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன், குணநலன்களில் தனவானாகத் திகழ்கின்ற பொழுது அறன் என்று அழைக்கப்படுகிறான்.
4. இந்திரன்
இந்திரலோகத்து தேவனான இந்திரன் இங்கே எங்கே வந்தான் என்று நீங்கள் கேட்கலாம். அவன் பெயரில் மட்டும்தான் இந்திரன். இந்தரியங்களின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு, ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு, மண்ணிலும், விண்ணிலும், மானத்தை இழந்த ஒரு தேவத்தலைவன் என்ற கதைக்கு உரியவன் அந்த இந்திரன்.
ஆனால், நான் சொல்கின்ற இந்திரன் அப்படிப்பட்டவனல்ல. ஐம்புலன்களாகிய இந்திரியங்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்கப் பண்பினால் உலகத்திற்கு குருவானவன். சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் தன்னுடைய பஞ்சேந்திரியங்களை அடக்கித் தலைமை யேற்று அவன் வழி நடத்துகிறவன்.
இந்திரியங்களின் திறனை வாழ்க்கையின் மேம்பாட்டுக்காக, மக்கள் சமுதாயத்தின் உயர்வுக்காகத் தத்தம் செய்தவன். அவனுடைய செய்கைகளும், சொற்களும் எப்பொழுதும் அமுதமாகவே வெளிவரும் பின்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே சான்றாகும்.
"இந்திரன் அமுதம் இயைவதாயினும்
தமியராய் உண்டலும் இலரே”
இந்திரன் அமுதம் என்பது இந்திரலோகத்துத் தேவாமிர்தம் அல்ல. 'அமுதம்' என்ற சொல். 'அ' + 'முதம் என்று பிரிகிறது. 'முதம்' என்றால் மகிழ்ச்சி 'அ' என்றால் உள்ளும் புறமும்.
ஆக இந்திரனாகியவன் குரு போன்றவர். அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும், உள்ளும் புறமும் மகிழ்ச்சியைத் தருவதினால்தான் அதனை அமுதம் என்றனர். வாழ்வுக்கு ஆனந்தம் அளிக்கும் என்றனர்.
இப்படிப்பட்ட அமுதச் சொற்களை வாங்கிக் கொண்டவர்கள் அவற்றைத் தனியாக அனுபவித்து மகிழ முடியாது. பிறருடன் கலந்து பேசிக் கூடித் துய்ப்பர். அதனால்தான் தமியராய் உண்டலும் இலரே என்றனர்.
துக்கத்தைப் பிறர் துணை இன்றித் தனியாக அனுபவிக்க முடியும். ஆனால் சந்தோசத்தைத் தனியாக யாரும் அனுபவிக்க முடியாது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம். இந்தத் தத்துவத்தின் படிதான் 'இந்திரன் அமுதம்' என்றார்கள்.
ஆக, மரன், பாமரன், அறன், இந்திரன் என்ற அந்த நான்கு பிரிவினர்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தகைய அரும் பெரும் மனிதத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மாண்புமிகு மனிதனாக வாழலாம். வணக்கத்திற்குரிய மனிதனாகவும் விளங்கலாம்.
இந்த நான்கு வகைப்பட்ட மனிதர்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டும், புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும், நம் வாழ்க்கையைச் சீராக்கிக் கொண்டால், செம்மைப்படுத்திக் கொண்டால், உயரிய வாழ்க்கையை,
உன்னத வாழ்க்கையை நாம் வாழ்ந்து உய்யலாமல்லவா!