உள்ளடக்கத்துக்குச் செல்

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்/வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

இரகசியம் - 1
வாழ்க்கை

வாழ்க்கை என்ற சொல், பல இரகசியங்களை உள்ளடக்கிய அதிநுட்பமான சொல், திட்பம் நிறைந்த சொல். தீர்க்க தரிசனம் நிறைந்த சொல். தெளிவான மனதையும், திண்மையான ஆத்மாவையும், திடமான உடலையும், வளர்த்துக் கொள்ளக்கூடிய நம்பிக்கையை ஊட்டுகிற நிறைவான சொல்.

‘சொல்’ என்ற சொல்லுக்கு இயம்பு என்று பொருள். சுகமான ஒருவித இசை நயத்தோடு சொல்லப்படுகிற சொல் என்றும் கூறலாம். சொல் என்றால் கட்டளை என்றும் பொருள்.

இப்படி அத்தனை பொருத்தங்களையும் வைத்துக் கொண்டு விளங்குவதுதான் வாழ்க்கை என்ற சொல்.

வாழ்க்கை என்ற சொல்லை வியப்புடன் பார்த்த நாம், இப்பொழுது அந்தச் சொல்லைப் பிரித்துப் பார்க்கிறோம்.

வா, வாழ், வாகை, கை - என்று நான்கு சொற்களாகப் பிரிவதை நாம் பார்க்கலாம்.

பிரிந்து நிற்கும் அந்த நான்கு சொற்களும், விரிந்து வளர்ந்தோங்கிய கட்டளைகளை விரித்து வைத்துக் கொண்டு நிற்பது போல் தோன்றுகிறது அல்லவா?

முதல் சொல் ‘வா’ என்கிறது அழுத்தமாக.

இரண்டாவது சொல்லான ‘வாழ்’, வந்து வாழ்ந்து கொள் என்று அழைப்புவிடுக்கிறது திருத்தமாக.

மூன்றாவது சொல்லானது ‘வாகை.’ அந்தச் சொல்லுக்கு வெற்றி என்பது ஒரு பொருள். மாலை என்பது ஒரு பொருள். வெற்றிகரமாக வாழ் என்பது வாழ்க்கையின் கட்டளை.

வெற்றிகரமான வாழ்வு எப்படிக் கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்? ஒழுங்காய் இருந்தால்தான் கிடைக்கும்.

ஆக, வாகை என்ற சொல்லுக்கு ஒழுங்காய் இரு.

ஒழுங்காய் இருப்பது எப்படி என்கிற கேள்விக்கு நல்லதொரு பதிலைத் தருவதுதான் ‘கை’ என்ற நான்காவது சொல்.

‘கை’ என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருள் அதாவது உலக ஒழுக்கம். செய்யத்தக்கது என்பதும் ஒரு பொருள். அதாவது உலக ஒழுக்கத்திற்கு, ஒழுங்குபட வாழ்வதற்குச் செய்யத்தக்கவைகளாகச் செய்கின்ற ஆற்றல் என்பது உண்மையான பொருள்.

இப்பொழுது நாம் ஒரு ஒருமித்த கருத்துக்கு வருவோம். இந்த உலகத்தில் நீ வாழ வந்து இருக்கிறாய். நீ வாழ வேண்டும். வாழ்ந்து கொள்வது உனது கடமை மட்டும் அல்ல. உனக்கு உள்ள உரிமையும் கூட. அந்த உரிமை நிறைந்த, பெருமை மிகுந்த வாழ்வை நீ ஒழுங்காக வாழ வேண்டும்.

அதாவது வெற்றிகரமாக வாழ்ந்தாக வேண்டும். அதற்காகச் செய்யத்தக்க செயல்கள் என்ன, என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அதற்கான ஆற்றல் உன்னிடம் இருக்கிறது என்கிற கருத்தைத்தான் ‘வாழ்க்கை’ என்கிற சொல்லிலே இருந்து நாம் கட்டளையாகப் பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் வாழ்கிற போது என்ன ஆகும்? அவர்களது வாழ்க்கை, கீழ்க்கை ஆகிவிடும்.

‘கீழ்க்கை’ என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஈனக்குலத்தார், இழிகுலத்தார்; ஈனம் என்றாலே, கூற முடியாத குறைபாடுகளும், கேடுகளும், இழுக்குகளும், பொல்லாங்குகளும் நிறைந்தது என்று சொல்வார்கள். அத்தகைய ஈன வாழ்க்கைக்குப் போய்விடக்கூடாது என்பதை, ‘வாழ்க்கை’ என்ற சொல் இரகசியமாக வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறது பார்த்தீர்களா!

வாழ்க்கை என்ற சொல்லை மதித்து வாழ்ந்தால், உயர்ந்த வாழ்வைத் தரும். மேலான வாழ்வைத்தரும்.

மேல் என்ற சொல்லுக்கு ‘வருங்காலம்’ என்ற ஒரு பொருளும் உண்டு. ஆக, மேல்க்கை என்கிற மேன்மை மகுந்த வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு, வாழ்க்கை என்பது வளமான எதிர்காலத்தையும், வருங்காலத்தையும் தந்து வாழ்விக்கும் என்று இந்த ‘வாழ்க்கை’ என்ற சொல் சொல்லாமற் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

வாழ்வது நம்மால் முடியும். வாழ்க்கை நம் கையிலேதான் இருக்கிறது. வாழ்க்கையின் வசந்தம் நம் வசத்தில்தான் இருக்கிறது. வானத்திலிருந்து அசரீரியாக ஆயிரம் குரல்கள் வந்து மண்ணுலகில் பொழிந்தாலும், அவற்றை வரவேற்கும் மனிதர்கள், நம்பிக்கையுள்ள மனிதர்கள் நாட்டிலே அதிகம் கிடையாது.

அசரீரியை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லையா? அல்லது அவர்களது அந்தரங்கத்துக்குள்ளே ஏற்பட்டிருக்கிற அலட்சியமா? அல்லது ஏற்கெனவே அடிபட்டு, அதிர்ச்சியுடன், அலங்க மலங்க விழிக்கின்ற ஆதங்கமா என்றால், ஏதுமே அவர்களிடமில்லை. கையில் கிடைக்கும் வரை அதை கற்பனை, கனவு என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்.

வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். நம் வாழ்க்கை ஒரு தீபகற்பம் போல. மூன்று பக்கமும் தண்ணீர். ஒரு பக்கம் மலைப்பிரதேசம்.

நமது வாழ்வு முறையே நான்கு வகையாக இருக்கிறது. இதில் முதல் மூன்று நிலை சுற்றிலும் சூழ்ந்திருக்கும் தண்ணீர் போல. அந்தத் தண்ணீரில், நீந்தலாம், குளிக்கலாம்; விளையாடலாம். படகோட்டிப் பண்பாடலாம். ஆனால், நான்காவது பகுதி மலையிலே நடப்பதும், ஜீவிப்பதும்தான் நம்மால் இயலாமல் போய்விடுகிறது.

அப்படியென்ன நான்கு வகைப் பிரிவு என்று கேட்கலாம்.

1. வேகம்
2. விவேகம்
3. யோகம்
4. வியோகம்

1. வேகம்

‘வேகம்’ என்பது உடலிலே இருக்கும் இளமையின் எழுச்சி. அதன் ஆற்றலால் எண்ணங்களில் வேகம் இருக்கும். சொற்களில் வேகம் இருக்கும். செயலிலே வேகம் இருக்கும். சிந்தித்துச் செய்வதும், செய்து விட்டுச் சிந்திக்கிற பாங்கே மேலோங்கி நிற்கும்.

அந்த வேகத்தின் ஆரம்பம் தெரியும். முடிவு தெரியும். இடையிலே என்ன நேர்கிறது என்பது எவருக்கும் தெரியாது. ஒரு சூழ்நிலையை, வாழ்கிற நிலையை விபத்தும், விபரீதமும் கலந்த வேதனையான சந்தர்ப்பங்களை விளைவித்துவிடும் தன்மை இந்த வேகத்திற்குண்டு.

இதைத்தான் ஆங்கிலத்தில் Speed Thrills என்பார்கள். இப்படி வேகமுள்ள இளமையைத்தான், கல்லா இளமையென்றும், பொல்லா இளமையென்றும் பேசுவார்கள். ஆக இந்த கல்லா இளமையையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இப்படிக் கட்டுப்படுத்தும் இரகசியத்தைத்தான் ‘இளமையில் கல்’ என்றார்கள்.

வேகமுள்ள இளமையை ஆற்றுப்படுத்த அடக்கிச் சாந்தப்படுத்த, அன்பால் அமைதிப்படுத்த, விளையாட்டு, இசை, நாடகம் போன்ற நுண்கலைகள், எல்லாமே பயன்படுகின்றன. வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்புகிறவர்கள், வேகத்தை கொஞ்சம் அறிவார்ந்த முறையில் பயன்படுத்தினால், சேரவேண்டிய இலட்சியத் தூரத்தைச் சீக்கிரமாகச் சென்றடைந்து, பயன்பெற்று வாழ முடியும்.

2. விவேகம்

அறிவான வேகம் என்பதனையே விவேகம் என்று அழைக்கிறோம். ‘வி’ என்றால் அறிவு. ‘விவேகம்’ என்றால் அறிவான வேகம். எதை அறிவான வேகமென்று சொல்லுகிறோம் என்றால், ஒரு காரியம் செய்வதற்கு முன்னே, எண்ணித் துணிவது. சிந்தித்துத் தெளிவது. முழுமுனைப்புடன் செயல்படுவது. வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடி வினையாற்றுவது.

இவ்வாறு துணிந்த பிறகு மீண்டும் எண்ணுவதையோ, பின் வாங்குவதையோ, இழுக்கு என்று மனதுக்குள் நினைப்பது. இதுதான் அறிவான விவேகம். விவேகம் உள்ளவர்களைத்தான் விவேகி என்பார்கள். அவர்கள் செயலிலே வேகம் இருக்கும். சிந்தையிலே விவேகம் இருக்கும். ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தே இவர்கள் செயல்படுவார்கள்.

3. யோகம்

இது மூன்றாவது நிலை. முதலாவது உடலின் வேகம் இரண்டாவது உள்ளத்தின் வேகம். மூன்றாவது உடலும் உள்ளமும் ஒடுங்கிப் போய் ஒருங்கிணைந்து செயல் படுகிற வேகம். இதுதான் யோகம். உடலால் ஓரிடத்தில் இருந்து, உள்ளத்தை அலைபாய விடாமல் ஓரிடத்தில் வைத்து, ஒரு காரியத்தில் சித்தியடைகிற சீரிய முயற்சியை மேற்கொள்வதுதான் யோகம். இந்த மூன்றாவது நிலையும் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள்ளதே.

ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதற்கு ஆசனம் என்றும், உள்ளத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதைத் தியானம் என்றும் சொல்வார்கள். ஆசனமும், தியானமும் ஒருவரை அறிவிலும், ஆற்றலிலும், அந்தரங்க சுத்தியிலும், ஆர்ப்பாட்டமான மனோ தைரியத்திலும் வாழ வைக்கும்.

4. வியோகம்

இது காடுமலைப் பிரதேசம்போல. நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாதது. வியோகம் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? வியோகம் என்றால் இறப்பு என்று அர்த்தம். இறப்பு மட்டும் அல்ல பிறப்பும் நம் கையில் இல்லை. இறக்கிறவரை வாழ்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அது எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் நம்முடைய சமத்துவ, சமத்காரமும் அடங்கிக் கிடக்கிறது.

புத்திசாலி மனிதன் தான் பெற்ற வாழ்க்கையைப் பெருமையாகக் கருதி பேணி வாழ்கிறான். முட்டாளானவன் மோசமான ஆண்டி போல பெற்ற உடலென்னும் தோண்டியைப் போட்டு உடைத்துத் தானும் அழிகிறான். தன் தேசத்தையும் அழிக்கிறான். இதை வாழ்க்கையின் இரகசியமாகக் கொண்டால் அது வியோகமான வாழ்க்கைதானே!

☐☐☐