உத்தரகாண்டம்/3
பின் பக்கம் மாமரத்தடியில் சருகுக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன. குட்டை, குளம், புற்று எல்லாம் போன பிறகு, இந்த வீட்டைச் சுற்றி அறங்காவலர் குழு, ஒரு கம்பி வேலி போட்டிருக்கிறது. கம்பி வேலிகளில் நொச்சி, தூதுவளை, ஆடாதொடை போன்ற எல்லா மூலிகைகளும் கிடைக்கும். ஒரு பக்கம் ராதாம்மாவின் நினைவாக இன்னமும் மருதோன்றிச் செடிகள் வேலியைக் காக்கின்றன. இந்த மருதோன்றி அரைத்து வைத்த ஒரு மணியில் பற்றிவிடும். இரவு சாப்பிட்டுப் படுக்கு முன் அரைத்து வைத்து விட்டுக் காலையில் எழுந்ததும் கைகளும் கால்களும் சிவப்புப் பவழங்களைக் கோத்து ஒட்டினாற்போல் அழகு மிளிரும் அதிசயத்தைக் குழந்தைகள் அநுபவிக்கும். பைசா செலவில்லாத அழகு... இது அரைப்பதற்கே பயன்பட்ட கல்லுரல் இன்னமும் கிணற்றடியில் கிடக்கிறது.
இந்தக் காலம் எப்படி மாறிப்போயிற்று? யார் மீதோ கோபம் பொங்குகிறது. யார் மீது? யார் மீது?
பறட்டுப் பறட்டென்று பெருக்குகிறாள்.
“அம்மா?...”
ரங்கன்தான்.
“ஏம்ப்பா, வைக்கோல் பிரிக்காரன் வந்திருக்கானா?”
“இல்லம்மா. சாயபு மவுத்தாயிட்டாராம்.”
அவள் துடைப்பத்தைக் கீழே போடுகிறாள்.
“யாரு... தியாகி சாயபுவா? ஒரு மாசம் முன்ன சைக்கில் ரிக்சாவில் ஏறிட்டு வந்தாங்க. அய்யாவின் நினைவு நாள்னு...”
“என்னமோ நெஞ்சு வலிக்கிதுன்னாப்புல. ஒருநா சங்கரி நர்சிங் ஹோம்ல வச்சிருந்தாங்களாம். அங்கியே ரா போயிட்டாராம். இத, ரமணி வந்திருக்கு...”
அந்தக் காலத்து மனிசன், ஒரே மனிசன்... போயிட்டீங்களா? என்று மனம் குன்றுகிறது.
இந்த ரமணி பால் பாக்கெட் போடுவான். அப்படியே படித்துக் கொண்டிருந்தான்.
“ஏம்ப்பா ? எந்த வீட்டில இருக்காங்க ? மகன் வீட்லதானா?”
“மெயின் ரோடுக்கப்பால, பேரன் சித்திக் வூட்டிலதான் வச்சிருக்காங்க. அவுருதா உங்ககிட்ட சொல்லிட்டுவரச் சொன்னாங்க...”
“ஓ, மருந்துக்கடை வச்சிருக்கான்னு சொன்னாங்க. ஜமிலா புள்ள.”
“ஆமா. அந்த மருந்துக்கடையிலதா நா வேலை செய்யிறேன்...”
“ஓ...” அவள் பேசாமல் அவனைப் பின் தொடர்கிறாள்.
இவள் அந்த ‘மெயின் ரோடை’த் தாண்டிப் போய் வெகுநாட்களாகிவிட்டன. பழைய சாலையா அது? அது வெறும் பொட்டலாக இருந்த காலத்தை அவள் அறிவாள். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், இராணுவ வண்டிகள் செல்லத்தான் அந்தச் சாலை பெரியதாகப் போடப்பட்டதாக அய்யா சொல்வார். அருகில் விமான தளம், பயிற்சிக் கூடம்... என்று சூழலே மாறிற்று! இப்போதெல்லாம் அந்தப் பக்கம் செல்லவே முடியாது. அருகே இரயில் நிலையம், மிகப் பெரிதாக இறக்கை விரித்துக்கொண்டு இரு புறங்களிலும் படிகளும் தளங்களும்மாக மனித நெருக்கடிக்குச் சாட்சியாக இருக்கிறது. பேருந்து நிலையம் என்று ஒதுக்கிய இடம் பிதுங்கி எங்கே பார்த்தாலும் பேருந்துகள், கடைகள் என்று மனித - இரண்டு சக்கர, மூன்று சக்கரங்களின் போக்குவரத்து நெரிசல்கள். ஆனாலும் இந்தப் பெருவழிச்சாலை துப்புரவான, ஆரோக்கியமான வணிக வீதிகளைச் சந்திக்கும் சாலையாக இல்லை. என்னென்னமோ கடைகள். இவளுக்குத் தெரிந்ததெல்லாம் காபிக் கிளப், வெற்றிலை பாக்கு சோடாக் கடைகள், மளிகை, வீட்டு சாமான் கடைகள், துணிக்கடைகள், தையல் கடைகள்தாம். அந்த அடிப்படையே இல்லை. ஒரு கஜம் மல்துணி என்றால் துணிக்கடைக்காரருக்குத் தெரியவில்லை. இவளுக்குக் கைத்தறி முழு வெள்ளைச் சேலை கூடக் கிடைப்பதில்லை... குஞ்சிதம் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.
நடுச்சாலையில் கோழி உரிக்கிறான். மாட்டுச்சதையைக் கண்டம் போடுகிறான். வண்டியில் சமையல் நடக்கிறது. காலை, மதியம், இரவு உணவு வகைகள் இங்கேயே. சாலை கடந்து, ரயில் பாதையும் கடந்து ரமணி அவளைக் கூட்டிச் செல்கிறான். கிளைத் தெருவொன்றில் கடைகள் திறக்கும் நேரம். ஜமீலா மெடிகல்ஸ் என்ற பெயர் விளங்கும் சிறு கடை திறக்கவில்லை. அருகே, டாக்டர் யமுனாதேவி, குழந்தை நல, பெண்கள் மருத்துவர் என்ற பலகையும் தெரிகிறது.
அந்த சந்தில்தான் மரணம் நிகழ்ந்த வீடு என்பதை அறிவிப்பது போல் ஆட்கள் தெரிகின்றனர். சாயபுவின் மூத்த மகன் அகமது தான் பெரிய சாலையில் மளிகைக் கடை நடத்தி வந்தான். குடும்பம் ஒன்றாகத்தான் இந்த வீட்டில் இருந்தது. இரண்டாவது மகனுக்குச் சிங்கப்பூரில் இருந்து பணக்காரர் ஒருவர் சம்பந்தம் கிடைத்ததும், குடும்பம் பிளவு பட்டுவிட்டது. மூன்று பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கம் ‘பிஸினஸ்’ என்று போய் விட்டார்கள். ஏழெட்டு வருசத்துக்கு முன்பே அவர் வந்து இதைச் சொல்லி வருத்தப்பட்டார். ஜமீலாவின் புருசன் சிறு வயசிலேயே இறந்துவிட்டான். இந்தப் பையனைப் படிக்க வைத்து, இந்தக் கடையும் வைத்திருக்கிறான். இந்த மருந்துப் படிப்புத்தான் படித்திருக்கிறான் என்றார்.
பேரன் பெண்சாதி பாசமாகத் தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவனுக்கு இரண்டு பிள்ளைகள்.
தாயம்மாளைக் கண்டதும் பேரன் பெண்சாதி அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழுகிறாள். வழக்கமான துக்க விசாரணைகளில், எல்லா இனத்தவரையும் அவள் பார்க்கிறாள். ரமணியின் அம்மா, பொட்டும்பூவும் இழந்த கைம்பெண். ஆயிஷாவின் செவிகளில், வந்தவர்களுக்குக் காபி கலந்திருப்பதாகத் தெரிவிக்கிறாள். ஊதுவத்தி, மாலைகள் என்று சூழல் இறந்த வீட்டுக்குரியதாகத் தெரிவித்தாலும், துயரும் ஆன்ம சாந்திக்குரிய அமைதியுடனேயே தோன்றுகிறது.
சந்துக்கு வெளியே கார்கள் வந்து நிற்கின்றன. இந்தச் சூழலில், ஏதோ விபரீதம் புகுவது போல் இவளுக்குச் சுருக்கென்று உறைக்கிறது. காஜிபோல் அவர்கள் மதச்சடங்கு செய்பவர் வருகிறார்.
தாயம்மாள் மெள்ள வெளியேறுகையில், சீதாவையும் பத்மநாபனையும் பார்க்கிறாள்.
“மாமி? எப்படி இருக்கிறீங்க? கால செத்தமுன்ன தான் ரமணி ஃபோன் பண்ணினான். சாயபு மாமாவை நான் பத்து நாளைக்கு முன்ன யதேச்சையா பஸ்ஸ்டாப்புல பார்த் தேன். “என்னம்மா, எம்மு? எப்படி இருக்கே?"ன்னு கேட்டாரு. அப்பா இறந்து போனப்ப வந்திருந்தாரு. இவங்ககிட்ட எப்பவும் பிரியமா, “எப்படிப்பா இருக்கே, சீதா நல்லா இருக்கா? அவங்கம்மா குடிசைப் பிள்ளைங்களுக்கு எழுத்தறிவுத் தொண்டு பண்ணுறதாத் தெரிஞ்சிட்டேன். அவங்கள ஆதரவா வச்சுக்குங்கப்பா, ஆண்டவன் நல்லதே பண்ணுவான்னு சொல்வாங்க...”
சீதா இவளிடமே துக்கம் விசாரிப்பவள் போல் மடை திறக்கிறாள். சாயபுவின் சொந்தக் குடும்பத்துக்கு அவரிடம் நெருக்கம், ஜமிலாவின் பையனுடன் சரி. இவர் சுதந்தரப் போராட்டத்துடன் நிற்கவில்லை. சமூக சமத்துவம் சார்ந்த ஒரு விடுதலைப் போராட்டங்களிலும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். சுதந்தரம் வரும்போதே அரசியல் கட்சி காந்தியின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாத செயல்பாடுகளில் பிளவுகளுக்கு இடம் கொடுத்த காரணத்தால் அரசியல் பதவி, ஆட்சி என்ற எல்லைகளை விட்டு விலகியே தொண்டில் ஈடுபட்டவர், அவள் கண்டிருந்த தியாகி. ஆனால் இந்த சாயபு அய்யா, சமத்துவ சித்தாந்தத்தின் பக்கம் உறுதியாக நின்று தெழிற் சங்கப் போராட்டங்களில் முழு முனைப்பாகச் செயல்பட்டவர். அந்தக் கட்சியே பிளவு பட்டதும் இவர் உளம் உடைந்து போனார்...
எப்ப பாத்தாலும் “என்னம்மா, எம்மு ? எப்படியிருக்கே?” ம்பாரு இப்பக்கூட. நா சின்னப்பிள்ளயா இருக்கையில, அப்பா ரொம்பத் தீவிரம். எங்க வீட்டுக்கு சாயபு மாமா, மணி மாமா, செந்தில் மாமா, ராசு மாமா எல்லாரும் வருவாங்க. எனக்கு சொந்த உறவுக்காரங்களும் தெரியாது, சாதி மத பேதமும் தெரியாது. அப்படி இருக்கறச்சே, இவங்க கட்சி பிரிஞ்சதும், சாயபு மாமா, மணி மாமா வந்தாக்க, அவங்ககூட பேசக் கூடாதுன்னு அம்மாகிட்ட அப்பா சொன்னாங்க. எனக்குப் புரியல. அப்புறந்தான் தெரிஞ்சிச்சு. நாங்க வெளையாட்டுல கட்சி- சோடி சேருறாப்பல, இதுவும்னு நினைச்சிட்டேன். அப்ப எங்கண்ணன் ரமணா, “சீதா, நாமெல்லாம் எம்மு. சாயபுமாமா, மணிமாமால்லாம் அய்யி. ஜயி, எம்மு. எம்முதா நல்லவங்க. ஐயி கெட்டவங்க”ன்னான். ‘சீ போடா, சாயபுமாமா எப்ப வந்தாலும் என்னைக் கூட்டிட்டுப் போயி மிட்டாயும் மிக்ஸ்சரும் வாங்கித் தராங்க. அவங்க ஒண்ணும் கெட்டவங்க இல்ல!...’ன்னேன். அன்னிக்கு சாயங்காலம் சாயபு மாமா வந்தாங்க. நான் வழிமறிச்சிட்டு, “மாமா, எனக்கு ஒண்ணு தெரியணும்... நீங்க எம்தானே?”ன்னேன்.
“மாமா, சிரிச்சிட்டு, எம்முன்னா என்னம்மா?”ன்னாரு.
“எம்முன்னா நல்லவங்க, ஐயின்னா கெட்டவங்க. நீங்க நல்வங்கதானே?”
அவங்க பெரிசாச் சிரிச்சாங்க. எங்கம்மா உள்ளேந்து ஓடி வந்தாங்க.
“வாங்கண்ணே... ஏண்டி போக்கிரி? இப்பிடியா கேக்கிறது? உள்ள வாங்க. இவங்க போக்கு புடிக்கல. பிள்ளைங்ககூட இப்பிடி நினைக்கும்படியா சொல்லிக் குடுப்பாங்க? நீங்க மனசில வச்சிக்காதீங்கண்ணே”ன்னு சொன்னது எனக்கு இப்ப போல நினப்பு வருது.”
“அம்மா அண்ணங்கிட்டத்தா இருக்காங்களா?”
“இருக்காங்க. இவங்க கட்சி கிட்சி இல்லேன்னாலும், ஏழைப்பிள்ளைங்களத் தேடிட்டுப் போயி படிப்பு சொல்லிக் குடுக்கிறாங்க. பொண்ணு சம்பந்தமா போராட்டம்னு வந்திட்டா கலந்துக்குறாங்க. இதெல்லாம் ரமணா சம்சாரம் அதா அண்ணிக்குப் புடிக்கல. பனிப்போர் சமாசாரம்தான்...”
“சரிம்மா, நீ பாத்திட்டுவா... எதோ நம்ம காலத்துல மிச்சமிருந்த ஒரு தொடர்பு அதும் முடிஞ்சி போச்சி...”
எம்மு, அய்யி...
சிரிக்கும்படி இருந்தாலும், துயரம் தான் முட்டுகிறது. கிளையும், பூவும், காயும், கனியுமாகத் தாங்கிய மரத்தில் இருந்து, எல்லாம் விடுபடுகின்றன. மரத்தின் வேரில் பூச்சி பிடித்துவிட்டதா?
அரிவாளும் சுத்தியலும் சின்னமிட்ட கட்சி பற்றி அவளுக்குத் தெரியும். சுதந்தரப் போராட்டத்தில் ஒன்றாகப் போராடியவர்கள் வருவதற்கு முன் பிரிந்து போனார்கள். வெடி மருந்து, சதி என்று பலரும் சுதந்தரம் வந்த பின்னரும் கொடிய சிறை தண்டனை அநுபவித்தார்கள். கேரளத்து ராமுண்ணி தூக்கு மேடைக்குப் போய், விடுதலை பெற்று வந்தவர். கட்டைக்குட்டையாக, குடையை இடுக்கிக் கொண்டு அய்யாவைப் பார்க்க வருவார். எப்போதும் மகிழ்ச்சி கூத்தாடும் முகம். பேச்சு “தாயம்மா அக்கா? எப்படி இருக்கிறீங்க? சுகமா?” என்று விசாரிப்பார்.
“தியாகி சார்? எனக்கு உங்களப் பார்க்கிறப்ப வல்ய சந்தோஷமாகும். ஏன் தெரியுமா?”
“தெரியலியே!”
“பால்யத்தில் விவாகம் கழிச்சும், ரொம்பக் காலம் பார்யையின் முகம்பாராமல் ஸ்பரிசம் இல்லாமல் இருந்ததும், அவங்களும் சத்யாக்கிரகம்பண்ணி ஜெயிலுக்குப் போனதும் எத்ர ஒரு பாக்கியம்? இம்சையை விட அஹிம்சைக்கு வலிமை அதிகம்; அதை நான் உங்களையும், சரோஜனி ஏடத்தியையும் பார்க்கிறப்ப தெரிஞ்சிப்பேன்...”
“தம்பி, நான் உங்களைப் பார்க்கிறப்ப, குற்ற உணர்வு கொள்கிறேன். ஏன் தெரியுமா? சுதந்தர சர்க்காரின் சிறைக் கொடுமைகளை நீங்கள் அநுபவித்தீர்களே? நீங்கள் மட்டும் கடைசி நேரத்தில், விடுதலையாகிவிடவில்லை என்றால்...”
அவர் சிரிப்பார் மகிழ்ச்சி பொங்கி வரும் “ஓ, அது எந்தொரு கிளைமாக்ஸ், வாழ்க்கையில்? நாற்பது வயசில் நான் மறுஜனனம் ஆகி, சுதந்தர பூமியில் வாழ்க்கையைத் தொடங்க அடி வைத்தபோது, கையில் காசில்லை, தங்க நிழலில்லைன்னு கவலைப்படலை. அதே விடுதலை சந்தோஷம் சொல்லி முடியாது. வெளியெங்கும் சிநேகம் நிறைஞ்ச ஜனங்கள். என் அநுபவங்களே மறுவடிவம் எடுத்தப்ப எல்லாரும் எனக்குப் பிரியப்பட்டவர்களானார்கள். பிரேமையை நான் கல்யாணம் செய்து கொண்டேன். எண்டே பையனுக்கு அச்சன் நாராயணன் பெயர்தான். பிரேமை, நான் பத்திரிகையில் எழுதியதைப் பார்த்து, என்னைத் தேடிவந்தவள். காலமே எல்லாம் செய்து கொடுத்திட்டு ஆஸ்பத்திரி ஜோலிக்குப் போகும்...”
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ந்து அநுபவிக்கும் ராமுண்ணி தான் ராதாம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் எல்லோரும் பம்பாய் சென்றிருந்த போது ஒருநாள் பதறிப்போய் வந்தார்.
“தாயம்மா அக்கா?... நாள் கேள்விப்படுவது நிசமா?... மோளுக்கு லுகேமியாவாமே?”
அந்தப் பெயர் சடைப்பூரான் போல் செவிகளில் நுழைந்தது.
“ஐயோ இதென்ன ஒரு சோதனை? தியாகி சாருக்கு, சரோஜினி எடத்திக்கு இப்படி ஒரு சோதனை வருமா? எனக்கு நேத்து, ஒரு சினிமாக்கதைக்கு வசனம் எழுதணும்னு நடராசன் வந்து கூப்பிட்டான். அப்ப உங்க மகனப் பத்திப் பேச்சு வந்திச்சி. அவுரு படத்தில ஒரு சில்லறை வேசமிருக்கு, வரீங்களான்னு கேட்டாரு. ‘ஐநூறு, ஆயிரம்னாக்கூட எனக்குக் காசுதான். அதுக்காக, நான் எந்த ஒரு இடத்துக்கும் போய் நிக்கத் தயாராயில்ல’ன்னேன். அப்பத்தான் அவன் சொன்னான், இந்த மாதிரின்னு; உங்க மகன், ஒரு பெண் சாதி குழந்தைகன்னு இருக்கையிலே, இன்னொண்னும் கட்டி, அரசியலில் இருக்கிறவங்களுக்கெல்லாம் ஒழுக்கம் தேவையில்லன்னு ஒரு சட்டமால்ல வச்சிட்டாங்க ? இப்பக்கூட, புதுசா பின்னணி பாடுற ஒரு பொண்ணுகூ...அடசீ! அதவிடுங்க. நீங்க, பெத்தபுள்ள, அவர் பதவி, பணம், செல்வாக்கு எல்லாத்தையும் ஒதுக்கிட்டு இருக்கிறது எவ்வளவு பெரிய விசயம்?”
“நீங்க அதையெல்லாம் இப்ப எதுக்கு நினைப்பூட்டுறீங்க?... ராதாம்மா நோயி, நா வேண்டாத தெய்வமில்ல. ஒரு புழு பூச்சிக்குக் கூடத் தீம்பு நினைக்காதவங்க... அய்யா, நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கணும், அதுவரை பிரும்ம சரியம்னு இருந்தாங்க. அம்மா மனசு ரொம்ப இடிஞ்சி போனாங்க. அப்ப காந்தி வந்திருக்காங்களாம். அய்யா பாத்திட்டு வந்த பிறகு, அம்மா, தனியாப் பாக்கணும்னு போனாங்களாம். பாபுஜி, இவங்க இப்படி விரதம்னு சொல்றாங்க. எனக்கு ஒரே ஒரு புள்ள வேணும். பெண்ணாகப் பிறந்ததன் பலனை, தாயாக அநுபவிக்கணும்னு சொன்னாங்களாம். உடனே காந்திஜி கூப்பிட்டனுப்பி ஆசீர்வாதம் பண்ணினாராம். அதுக்குப் பிறகு இந்தப் பொண்ணு பிறந்ததும் தந்தியடிச்சுத் தெரிவிச்சு, அவுரே ராதாபாயின்னு பேருவக்கச் சொல்லி பதில் தந்தி குடுத்தாராம்...” என்று தொண்டைக்கரகரக்கச் சொன்ன போது, “அப்படியாம்மா? எவ்ளோ பெரிய விசயம்? அந்தக் காலத்துல, எங்க இயக்கத்துல யு.ஜில- இருப்பம். அப்ப எங்களுக்குப் பாதுகாப்புக் குடுக்கிற குடும்பத்தில் வயசுப் பெண்கள், இருப்பாங்க. அவங்கதா, பல சமயங்களிலும் தெரியாம சாப்பாடு கொண்டாந்து குடுப்பாங்க. போலீசின் துப்பாக்கியவிட, பசிக் கொடுமை பெரிசு. பின்னால அந்தப் பொண்ணுங்க பேருக்கோ, கட்சிக்கோ களங்கம் வரக் கூடாதுன்னு அந்தத் தோழர்கள், சாதி, மதம், ஏழை பணக்காரர், படித்தது படியாதது என்று வேத்துமையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பகிரங்கமா கல்யாணம் பண்ணிட்டாங்க. கட்சி-கொள்கை வலுப்பட்டது... அந்தக் கட்சி பிளவு பட்டது, சோகம்...” என்று வருந்தியது நினைவில் மின்னுகிறது.
“ஆயா? புள்ள கிட்ட சொல்லிட்டு வந்திட்டியா?... ரோடு மேல போற?” என்ற கூச்சலில் திடுக்கிட்டு சாலை ஓரம் வருகிறாள்.. ரயில் கேட் வரவில்லை. சாலை முழுதும் பெரிய பேருந்துகள், இரு சக்கர மக்கள் ஊர்வலங்கள், உறுமும் லாரிகள், ஆட்டோ வாகனங்கள்...
டக்கென்று சிமிட்டிப் பலகை போடப்பட்ட நடை பாதையில் ஏறுகிறாள். வரிசையாகக் கடைகள். ‘நடைபாதை’ என்று போடப்பட்ட சிமிட்டிப்பலகைகள் வரிசையாகப் பெயர்க்கப்பட்டு இடுக்குகளில் குடியிருக்கும் குடும்பங்களைக் கரையேற்றிக் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள், பழைய பத்திரிகைகள் என்று அடுக்கி வாணிபம் செய்யும் கடைக்கும், ஜிராக்ஸ் என்ற பலகையின் பின் உள்ள இடுக்குக்கும் இடையே ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது. வெயில் பட்டுப் பட்டுச் சவுங்கிப் போன மாதிரியான முகமுடைய பெண் ஒருத்தி, இடுப்பில் பிளாஸ்டிக் குடத்தில் நீருடன் வருகிறாள்...
“எந்தா.. அம்மே. தியாகி எஸ்.கே.ஆர். வீட்டம்மையில்ல?” இவருக்கு நினைவுப் பொறி தட்டுகிறது.
அவள் உள்ளே செல்ல வழிவிடுவது போல் கீழே அழும் பெண் குழந்தையை இடுப்பில் எடுத்துக்கொள்கிறாள்.
“நீ. சிவலிங்கத்தின் சம்சாரமில்ல?”
“ஆமாம். நல்ல நினைப்பு வச்சிருக்கிறீங்க...” என்று குழந்தையை வாங்கிக் கொண்டு, “உள்ள வாங்கம்மா, வாங்க..” என்று கூப்பிடுகிறாள்.
“நான் இப்ப உள்ள வர்றதுக்கில்லம்மா. உன் பேரு மறந்து போச்சி... நான் இப்ப ஒரு துட்டிக்குப் போயிட்டுவரேன். வேண்டப்பட்ட ஒருவர் இறந்து போயிட்டார். இங்க தான் பக்கத் தெருவில்-”
“ஓ... மருந்துக்கடை சாயபுவா?... நேத்தே காலம, உடம்பு சரியில்லன்னு சங்கரி நர்சிங் ஹோமுக்குக் கூட்டிப் போனாங்க. ராமுண்ணிசேட்டன் மோன் இன்ஜினிரிங் காலேஜில படிக்கிது. அதைப்பாக்கணும்னு சொன்னாராம். இப்பதா, குழாயடில, மரகதம் ஆயா சொல்லிட்டிருந்தது. அவங்க நைட் முடிச்சிட்டுப் போகுது...”
என்ன சொல்கிறாள் இவள்?...
சிவலிங்கத்தின் சம்சாரம், கொழுகொழுவென்ற கன்னங்களுடன் இருந்த பெண் வற்றித் தேய்ந்து, கண்கள் பாதாளத்தில் இறங்க... பேச்சில் மலையாள வாடை வீச...
“எந்தா அம்மே அப்படிப் பார்க்கிறது? நான் சுந்தரிதா. சிவலிங்கத்தின் சம்சாரமான்னு கேட்டீங்க...”
குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு அதன் இரு குஞ்சுக்கரங்களையும் சேர்த்து, “பாட்டிக்கு வணக்கம் சொல்லு...” என்று ஒரு சிரிப்பை இழைய விடுகிறாள்.
“நீ முன்ன சீலை உடுத்திருந்தேம்மா. இப்ப இந்தக் கவுனு போட்டிருக்கிறியா. புரியல... ஆமா, நீ ராமுண்ணி சேட்டான்னு சொன்னே. யாரு, தூக்கு தண்டனையிலேந்து மீண்டு வந்து கலியாணங்கட்டிக் கிட்டிருந்தாரு. அவரு போயி ஏழெட்டு வருசமாச்சி போல. அவுரு மகனா?...”
“ஆமம்மா. அவரு போனப்ப பையன் எய்த் படிச்சிட்டிருந்தது. அதுக்கு மின்னயே அவருக்கு உடம்பு சரியில்லாம போயி, ரொம்பக் கடனாயிட்டது. துபை ஆசுபத்திரில நல்ல வேலை வந்திச்சி. ஆனா புள்ளைய அழச்சிட்டுப் போக முடியல. சாயபு அய்யாதாப் பாத்து, ஹோம்ல சேர்த்தாரு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போயிப் பாப்பாங்களாம். மாசாமாசம் அம்மை பணம் அனுப்பிச்சிக் குடுக்கும் போல. பையனைப் புள்ளலூர் இன்ஜினிரிங் காலேஜில சேத்திருக்காங்க. படிக்கிதோ, படிச்சிரிச்சோ தெரியல...” அவள் பேசி முடிக்கும் வரையிலும் குழந்தையின் கை இவளைக் கும்பிட்டுக் கொண்டே இருக்கிறது.
தன்னிச்சையான செயல் போல், அவள், புடைவைக்குள் செருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் குழந்தை கையைப் பிரித்து வைக்கிறாள்.
“அய்யோ, இதெல்லாம் எதுக்கம்மு?” என்று மொழிந்த சுந்தரி, “தாங்க்ஸ் சொல்லு, குட்டி, தாங்க்ஸ் சொல்லு?” என்று குழந்தை கையை நெற்றியில் மலர்த்தி வைக்கப் பணிக்கிறாள்.
கரப்பான் பூச்சியைத் தொட்டுவிட்டாற்போல் இருக்கிறது. இருட்டு அறையில் பட்டாம்பூச்சி பறக்காது. கரப்பான் பூச்சி...
சிவலிங்கம் அவள் கண்களில் வெகு நாட்களாகப் படவில்லை. அன்றையப் பொழுதில் அவள் பார்த்த மனிதர்கள், சந்திப்புகள், துக்கத்துக்குச் சென்ற இடத்தில் வந்து விழுந்த செய்திகள்...
எதையுமே அவளால் சீரணம் செய்து கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்ததும், கிணற்றில் இருந்து நீரிறைத்து, வாளி வாளியாக ஊற்றிக் கொள்கிறாள். சாயபு... ஒரு பந்தம் போய்விட்டது.
ராமுண்ணி, உடம்பு சரியில்லாமல், நடக்க முடியாமல் படுத்திருப்பதாக, சாயபு தான் வந்து சொன்னார். அவருடனே அவள் பழைய மாம்பலம் வீட்டில் பார்க்கச் சென்றாள். சாக்கடையும் கொசுக்களும் நிறைந்த பகுதியில் ஒரு பழைய ஓட்டு வீட்டில் இருந்தார். அவர்கள் சென்ற போது, பையன் பள்ளிக் கூடம் சென்றிருந்தான். பிரேமா, அவள் பணி புரிந்த ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தாள்.
“குனிஞ்சு வாங்க தாயம்மா, இந்த வாசல் இடிக்கும்” என்று அவர் எச்சரித்த குரல் கேட்டு, நாடாக் கட்டிலில் படுத்திருந்த ராமுண்ணி எழுந்து உட்கார்ந்தார். சிரித்தார்.
“இந்த நாட்டின் சிறந்த மனிதர்களை, உயர்ந்த மனிதர்களைத் தலை குனிய வைக்கும் வாசல் இது.”
சாயபுவும் சிரித்தார். பையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களையும் பிஸ்கோத்துப் பொட்டலத்தையும் அருகில் இருந்த சுவரலமாரியில் வைத்தாள். சாயபு கட்டிலில் ஒரு பக்கம் உட்கார்ந்தார். “உட்காருங்கம்மா?” என்று அவளை உபசரித்தார்.
“மூணு மணிக்கு பிரேமை வந்திடுவா. அந்த நாற்காலிய இழுத்திட்டு உட்காருங்க...”
எப்போதும் மகிழ்ச்சி பொங்கிப் பூரித்து வரும் முகம், சோக உருவமாக இருந்தது. பேச்சே எழவில்லை. சிறிது நேரத் தில் விம்மி விம்மி அழலானார். “அம்மே, நான் தூக்குக் கயிற்றில் முடிந்திருக்கலாம்... இந்த பாரத சமுதாயம், கனவு கண்ட, சமத்துவ, ஜனநாயக, அஹிம்சைச் சமுதாயம் அந்தக் கனவு துண்டுதுண்டாய் போயிட்டதம்மா...” என்று அழுதார்.
காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஆனால், தங்கள் கனவுகள் உடைந்து சிதறுவதைக் காண முடியாமல், அந்த நொறுங்குதலுக்குச் சாட்சிகளாக இருக்க விரும்பாமலே கண்களை மூடிவிட்டார்களே? ராமுண்ணி இறந்த போது, ஐயா இறந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவருக்கு வாரிசு போல் அவருடைய பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதாக உலகுக்கு அடித்துக் கூறுவதுபோல், அந்த மரணத்தைப் படம் எடுக்கச் செய்து, விளம்பரப் படுத்தினான் பராங்குசம். சாதிமதம் தெரியாமல் அநாதையாகப் பிச்சை எடுத்த தலையெழுத்தை அழித்து, ராமகிருஷ்ணர் விடுதியில் சேர்த்து ஒழுக்கப்பிடிப்பு படிக்க வைத்தார் என்று அம்மா சொல்வார். அவளுக்குத் தெரிந்து அவன் சேவாகிராமத்தில் ஆதாரக்கல்விப் பயிற்சி பெற்று வந்தவன். சுப்பய்யா, மருதமுத்து, சுசீலா என்று தங்கள் மிக விசாலமான தோட்டத்தில் ஆங்காங்கு கூரைக் கொட்டகை போட்டு, குருகுல வித்யாலயத்தைத் துவக்கிய போது, இந்தப் பெரிய வீட்டில் பர்மா அகதிகளின் புகலிடத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த அவள் தேனாம்பேட்டை இல்லத்துக்குப் பெயர்ந்தாள்.
சரோஜாம்மாவின் மூதாதையர் வீடு இது. பெரிய சிவப்புக் கல் தோடும், பிடிபிடியாகச் சங்கிலியும் வளையல்களும் அணிந்திருந்த பாட்டியை அவள் சிறு வயதில் பார்த்திருக்கிறாள். கண்ணமங்கலம் கிராமத்தில் அங்காயி திருவிழாவின் போது வருவார்கள். பாட்டனையும் தெரியும். பெரிய மீசையும், திறந்த மார்பில் உருத்திராட்சமுமாக