உத்தரகாண்டம்/4
இருப்பார். அவருடைய படம் கூட இன்றும் மாடியில் உள்ள படங்களிடையே இருக்கும். அந்தப் பாட்டன் முன்பே இறந்துவிட, பாட்டி காது தொள்ளையாக, உருத்திராட்ச மாலைக் கழுத்தாக, வெற்றுக்கைகளாக மாறிப் போனாள். இங்கிருந்த பனந்தோப்புகளில் கள்ளுக்காகக் கலயங்கள் கட்டக் கூடாதென்று, அம்மாவோடு பாட்டியும் சின்னம்மா, பெரியம்மா என்ற சொந்தங்களும் கூடக் காவல் இருந்திருக்கிறார்கள்.
பர்மா அகதிகள் வந்திறங்கிய போது, இது புகலிடமாக மாறியது. தொண்டர்கள் குழந்தையும் குட்டியுமாக இங்கே அழைத்து வருவார்கள். இங்கே கொல்லையில் கோசாலை இருந்தது. பால் கறப்பதும், தயிர் கடைவதும், வீட்டில் தவலை தவலையாக வடிப்பதும் குழம்புக்கு உரலில் மசாலை அரைப்பதுமாக நித்திய கல்யாணம். பூந்தமல்லிப் பக்கமிருந்து ஓர் ஐயங்கார் சுவாமி தையல் இலை கொண்டு வருவார். ஆயிரக்கணக்கில் வாங்குவார்கள். சாலை முழுதும் ஆலமரங்களில் இருந்து விழும் இலைகளைச் சுத்தம் செய்து, ஈர்க்கு ஒடித்துத் தைக்கும் தொழிலில் சீவனம் செய்தார்கள்... இப்போது?
பூதான முனிவர் வந்த போது பலரும் ஓடியொளிந்தார்கள். அய்யா, பொன் விளையும் பூமியை, இல்லாதவர்களுக்கென்று வழங்கினார். இப்போது அப்படி அவர் வழங்கிய காவேரி ஆற்றுப்பாசனத்து விளை நிலங்களை அரசியல்வாதியான மேல் சாதி ஆதரவுடன், எவனோ அநுபவிக்கிறானாம். இவள் செவிகளில் எத்தனையோ செய்திகள் விழுகின்றன. குருகுல வித்யாலயா வளைவில் அவள் கால் வைத்து எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. இந்த வீடு, சுற்றுப் புறங்களெல்லாம் ‘டிரஸ்ட்’ என்றுதான் செய்திருக்கிறார்கள். மகளின் பிரிவுத் துயரம் தாங்காத சரோஜினி அம்மை, ஓராண்டுக்கு மேல் இருக்கவில்லை. அவர்கள் இருவரும் போன பின், அய்யா சிறகொடிந்த பறவையானார். அவர்கள் போனது மட்டுமில்லை; இந்த நாட்டு அரசியலில், அவர்கள் கண்டிருந்த கனவுகளும் நொறுங்கிப் போனதுதான்.
ராதாம்மாவுக்கு அவள் காலமான போது ஒரு பையன் இருந்தான். அய்யாவைப் பார்க்க அந்த மருமகன் ஒரே ஒரு தடவை வந்தார். “குழந்தை நல்லாயிருக்காங்களா?” என்று மட்டும் துக்கம் தொண்டையடைக்கக் கேட்டாள். அவள் அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்ததாகக் கூட நினைவு இல்லை. அவள் திருமணம் முடிந்ததும், மஞ்சட் கதர்ச் சேலையும், பூமாலையும் தாலியுமாக, அதே மாதிரி கதர் வேட்டி உடுத்திய மருமகப்பிள்ளையிடம் அவளை அறிமுகம் செய்வித்ததை எப்படி மறப்பாள்? “எங்க தாயம்மா. அம்மா எங்கே போவாங்களோ, வருவாங்களோ, நேரம் தவறாமல் என்னை ஊட்டி வளர்த்தது தாயம்மா தான். இந்த வீட்டுக்கு எப்போதும் உயிர் தரும் தாயம்மா. இந்தச் சரணாலயத்தில் எத்தனை பறவைகள் வந்தாலும் தாயம்மா கவனிச்சிப்பா” என்று சொன்னதும் அவர்கள் இருவருமாக அவளைப் பணிந்ததும், சிறிதும் நிறம் மாறாத காட்சி.
இந்தச் சரணாலயம் வெறுமையாகிவிட்டது. அறங்காவலர் குழுத்தலைவன் பராங்குசம்தான். அய்யாவின் மறைவுக்குப்பின், கீழிருந்த மரப்பீரோக்கள் முதல், படங்கள் புத்தகங்கள் எல்லாமே மாடிக்குப் போய்விட்டன. பெரிய பாத்திரம் பண்டங்கள் எல்லாமும் போய்விட்டன. கூடத்தில் காந்தி படமும், பெரிதாக்கப்பட்ட அம்மாவின் படமும், ராதாம்மாவின் படமும் ஏற்கெனவே இருந்தன. அய்யாவின் படத்தையும், குருகுலத்தில் இருந்து கொண்டு வந்து மாட்டச் சொன்னாள். அய்யா இருந்த போதும் மறைந்த பின்னரும் வெள்ளிக்கிழமை மாலைகளில் பிரார்த்தனை பஜனை நடந்து கொண்டிருந்தது. பின் ஒவ்வொருவராக... பர்மா நிக்கொலஸ், சாயபு, ராமுண்ணி, குஞ்சும்மா, சுபலட்சுமி, ராமசுப்பிரமணியம்... பிறகு... ஏதோ வசந்த காலச் சாரல் போல் பக்கத்தில் வந்து குடியிருந்த மிலிடரிக்காரர்...
பராங்குசம் அனுப்பித்தான் அவர் இங்கே வந்தார். காடாகக் கிடந்த இடத்தை அவரே சுத்தம் செய்தார். கம்பி வேலி கட்டினார். இந்த வீட்டுக்கும் ஓர் அரண் போல் அது அமைந்தது. வேலியில் மூலிகைச் செடிகளை அழகாக விட்டு, ஒழுங்கு செய்தார். கொவ்வைக் கொடிகளை அடர்த்தியாகப் படரும்படி பின்புறம் மாமரம் வரையிலும் கட்டினார். இந்த வேலையில் தாயம்மாவும் பங்கு கொண்டாள். “நீங்க எதுக்கும்மா, வயசானங்க. ஆள்வச்சி செய்துக்குங்கன்னுதா, சொன்னாங்க. நா ஒரு ஆள்தானே?...”
நல்ல சிவப்பு; ஒட்ட வெட்டிய கிராப்பு. மீசை எள்ளும் அரிசிபோல் இருந்தாலும் அழகாக வெட்டி இருந்தார். அடிக்கடி பல்லால் கடித்தபடி, வரிசை பற்கள் தெரியச் சிரித்தார். ஒரு பனியனும் காக்கி அரை நிஜாரும் தான் உடை.
“அய்யா, நீங்க இத்தே பெரிய வீடு இருக்கையிலே, எங்கே போய்த் தங்கிட்டு வரிங்க? இங்க வீடு கட்டுற வரையிலும் நம்ம வீட்ல தங்கிக்கலாம், சாப்பாடு நான் செய்து தாரேன். அசைவம் தான் கிடையாது. சைவம். ஒரு சோறு சாம்பார் பொரியல் ரசம் செய்வேங்க...” என்றாள்.
அதற்கும் ஒரு சிரிப்பு. ஆனால் அவர் சாப்பிட வரவில்லை. “வீடு ஒன்றும் பெரிதில்லை. ஒரு கூரைக் குடில் தான் போட்டுக் கொள்ளப் போறேன், மா. நாலு நாள்ள சுவர் எழுப்பிடுவாங்க காலேஜ் பக்கம் என் சிநேகிதங்க இருக்காங்க. பஞ்சாபுக் காரங்க. அவங்க ஒருவாரம்னாலும் தங்கனும்பாங்க!” என்றார்.
“எங்கே, பொத்துரு காலேஜிங்களா?”
“ஆமா. அதா வரிசையா இருக்கே?...” என்றார்.
சரசரவென்று ஒரே வாரத்தில் சுவரெழுப்பி, பூசி, தரையை உயர்த்தி சிமிட்டிபூசி, மேலே அழகாகக் கூரை போட்டுவிட்டார். தோட்டமாக மாற்ற, பூச்செடி விதைகள், வேம்பு நாற்று, எல்லாம் வைத்தார். இந்த வீட்டு எல்லையில் தாவரவேலி இருந்தாலும் பின் பக்கம் மாமரத்தடிக்குப் போக முடியும். பின்புறம் புற்றுக் கோயில் வரை எல்லை இருந்தது.
இந்த வீட்டுக்குள் வந்து, படங்களின் கீழிருந்த பெஞ்சியில், காலையில் பூத்த பூக்களைக் கொண்டு வைப்பார். காசித்தும்பை, ஒற்றை, இரட்டை என்று வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கின. செம்பருத்திச் செடிகள், கன்றாகவே கொண்டு வைத்திருந்தார். வாசல் பக்கம், ஒரு மூங்கில் பிளாச்சுக்கதவுதான். வாசலில் ஒரு சாய்வு நாற்காலி-துணி போட்டு மடிக்கக் கூடியது, அதைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து ஏதேனும் படித்துக் கொண்டிருப்பார். உள்ளே அவர் சமைத்துச் சாப்பிட்டதில்லை. தெருநாய்க்குட்டி ஒன்று அவரைச் சுவீகாரம் செய்து கொண்டிருந்தது. காலையில் அவர் நடந்து போனால் அதுவும் போகும். அது ஆறு மாதத்தில் பெரிய நாயாக வளர்ந்துவிட்டது.
“இங்கே வெள்ளிக்கிழமை பஜனை செய்வீங்களாமே?” முதல் நாளே அவர் கேட்டார்.
“ஆமாங்கையா. அய்யா எத்தனை வருசமாகவோ நடத்திட்டிருந்தாங்க. அவரு போனப்புறமும், அவங்கல்லாம் வராங்க. யார் வந்தாலும் வராவிட்டாலும், சாயபு அய்யாவும் குஞ்சம்மாவும் விடாம வருவாங்க...” என்றாள்.
அடுத்த வெள்ளியன்று வீடுகட்டும் வேலை முடிந்து அவர் சிநேகிதர் வீட்டுக்குப் போய்க் குளித்து, வெள்ளைச் சட்டை, பனியன் அணிந்து, ஒரு சைகிளில் ஒரு பானையையும், கொண்டு வந்தார். அன்றைக்கு நிறையப் பேர் பஜனைக்கு வந்து இருந்தார்கள். நிக்கலஸ், சந்தானம், ராமமூர்த்தி, என்று வராதவர்களும் வந்திருந்தார்கள். அவருடைய பஞ்சாபி நண்பன் சிங், அவர் மனைவி, இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். அந்தக் கல்லூரி வளாகத்தில் இருந்து வந்திருந்த ராமசாமி ”ஸார், ரொம்ப நல்லாப்பாடுவார். கடம் வாசிப்பார்; மிருதங்கம் வாசிப்பார்...” என்று சந்தோசமாகச் சொன்னார். சிங் உடனே, “வெஸ்டர்ன், இந்துஸ்தானி, எல்லாம் பாடுவாங்க!” என்றார்.
அவளுக்கு அன்றைய பஜனை மிகவும் சந்தோசமாக இருந்தது. அய்யாவும், அம்மாவும், ராதாம்மாவும் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட்டார்கள். அய்யாவுக்கு மிகவும் பிடித்த ‘ஹரி துமஹரோ’ பாட்டை அவர் தனியாகப் பாடினார். ஒரு இங்கிலீஷ் பாட்டும் இடம் பெற்றது. எல்லோரும் ராம்துன் பாடினார்கள். அந்தக் கூடத்தில் தொங்கிய ‘பல்ப்’ வெளிச்சம் போதவில்லை என்று நினைப்பாள். அன்று அப்படித் தோன்றவில்லை. இந்த பஜனையில் சுண்டல் கிடையாது. கர்ப்பூரம், மணி அடித்தல் எதுவுமே கிடையாது. பழங்கள் கொண்டு வருவார்கள். அதைப் பங்கிட்டு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். ஆங்காங்கு குடிசைகளில் உள்ள பிள்ளைகள் சில சமயங்களில் வரும்... அவர் பொறி கடலை வாங்கி வைத்திருந்து கொடுப்பார்.
“அய்யாக்கு, மக்க மனுசங்க...?” என்று அவள் கேட்டாள்.
“எல்லாம் இருக்காங்க...” என்று மனம் துளும்பும் பாவத்துடன் கண்கள் மூட விடை கூறினார்.
அதற்குமேல் எங்கே இருக்காங்க, எதற்கு நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீங்க என்று கேட்க, தூண்டித் துருவ அவளுக்குத் தெம்பு இல்லை. அப்போதெல்லாம் கொட்டிலில் ஒரு கறவைப் பசு இருந்தது. உழக்குப்பால் எடுத்துக் கொண்டு சென்று “அய்யா, பால் கொண்டாந்திருக்கிறேன். காச்சிருக்கிறேன். காபி, டீ எதுனாலும் போடட்டுமா?” என்று கேட்டபோது அவர் சிரித்தார்.
“நான் பால், காபி எதுவும் சாப்பிடுறதில்ல. சுத்தமான தண்ணீர், அதுதான் குடிப்பேன். உங்கள் கிணற்று நீர் அம்ருதம்” என்றார்.
அவள் மலைத்தாற்போல் நின்றாள்.
“சாப்பாடுதான் வேணாம்னு தெரிவிச்சிட்டீங்க. நீங்க இங்க சமைக்கிறாப்பலவும் தெரியல. ஒரு கஞ்சி, கிஞ்சி... எங்கய்யாவுக்குக் கேழ்வரகு முளை கட்டிக்காய வச்சு அறைச்சுக் கஞ்சி வைப்பேன். நானும் அதான் குடிக்கிறது. உங்களுக்கு வச்சித் தரட்டுமா?” என்றாள்.
இதற்கும் ஒரு சிரிப்பு மறு மொழியாக வந்தது.
“அம்மா, நீங்க எனக்குத் தாயாக இருக்கும் வயசில் இருக்கிறீங்க. இந்த வயசில் மகன்தான் உங்களுக்கு எல்லாம் செய்து காப்பாத்தணும். மணிக் கூண்டுக்குப் பக்கத்தில், ராமையா சந்தில் ஒரு அம்மா மெஸ் மாதிரி வச்சிருக்காங்க. நோயில் விழுந்த புருசனைக் காப்பாத்தி, புள்ளையைப் படிக்க வைக்க இப்படித் தொழில் பண்ணுறாங்க. சும்மா பணம் குடுத்தா அது அவங்களுக்குக் கௌரவமாகாது. அங்கே தான் சாப்பிடுறேன். தப்பா நெனைச்சுக்காதீங்க!” என்றார்.
அப்போது ரங்கசாமி இங்கே வேலைக்குச் சேர்ந்து ஒருவருசம் தானாகி இருந்தது. பஞ்சமியின் புருசன் வகை என்று சொல்லிக் கொண்டு புதுக்கோட்டைப் பக்கமிருந்து, இவன் அம்மா இவனைக் கூட்டிக் கொண்டு அவளிடம் வேலைக்குப் பரிந்துரை செய்யக் கோரி வந்தாள்.
பஞ்சமி, இரண்டு தரம் கருவுற்று முழுப்பிள்ளை பெறவில்லை. மூன்றாம் பேற்றில், பிள்ளையோடு மாண்டு போனாள். அவள் அண்டியிருந்த குடும்பத்திலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் புயலடித்துச் சோர்ந்த நேரம். வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்து குத்திவிட்டது. அவள் புருசன் பிறகு அங்கே இருக்கப் பிடிக்காமல் ஊரோடு போனான். அவனுக்குச் சொந்தமாம். அந்தப் பையன் நல்ல பையன். ‘எலக்ட்ரிக்’ வேலை செய்து கொண்டு, சேவிகா வேலை செய்த பஞ்சமியுடன் அன்பாகக் குடும்பம் பண்ணினான். குடி, கிடி, சூது ஒரு மாசு மருவில்லாத பிள்ளை.
தலை முழுகிய போது கண்ணீரும் அருவியாக வந்தது. நல்லவர்களுக்கு மட்டும் ஏன் நல்ல வாழ்வு அமைவதில்லை? அவள் பெற்றதில் நல்ல கொடி எச்சமில்லாமல் பட்டுப் போயிற்று. இவன் பராங்குசத்தின் ‘சிபாரிசில்’ இங்கு வந்திருக்கிறான் என்று தெரியும். ஒப்புக்கு இவளுக்கு ஒரு சேதி, அவ்வளவுதான். மாதா கோயில் வளைவில் தங்கக்சி அவள் புருசன், இவன் மனைவி, அம்மா என்று குடும்பம் வைத்து ஊன்றிவிட்டான். ‘அம்மா’வின் நெருக்கத் தொடர்பு, தன்னைத் தவிர வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என்பது போல் நடந்தான்... ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அய்யா மிக நெருக்கமாக இவளிடம் உறவு பாராட்டுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் கவடும் சூதும் நிறைந்த தன்மையை அப்போதுதான் அவள் உணரத் தலைப்பட்டாள்.
“சின்னக்கா...”
கூடத்துக்குள் நுழையும் போதே குரல் கொடுப்பவளைக் கொல்லையில் இருக்கும் தாயம்மா புரிந்து கொண்டு விரைந்து வருகிறாள்.
வெயில் சுட்டெரிக்கிறது. “ஆயா, உள்ளே கீழே விழுந்திருக்கும் மாங்காயெல்லாம் எடுத்துக் கிடலாமா?” என்று பின் பக்கம் வேலிக்கப்பாலிருந்து ஒரு குழந்தை கேட்டது. எண்ணெய் கண்டு யுகமான முடி. புழுதி படிந்த மேனி. இடுப்பில் ஒரு அழுக்குக் குழந்தையுடன் இன்னொரு சிட்டு...
அந்தக் குழந்தைகள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்ற ஆவலுடன் “அதுக்கென்ன, எடுத்துத்தாரேன்...” என்று சொல்லும்போது, மேலிருந்து ஏதோ அவள் கையில் விழுந்ததும் நெருப்புத்துண்டு பட்டாற் போல் உறைத்ததும் திடுக்கிட்டு, கையைத் தேய்த்துக் கொண்டாள். அப்போதுதான் அந்தக் குரல் அவளை இழுக்கிறது. அவள் கிணற்றுக்கரை தாண்டி வரும்போது, ராசம்மாளே பின் நடை கடந்து வந்து விடுகிறாள். அவளுடன் ஒரு இளம் பெண், பேரப் பெண்ணா? தெரியவில்லையே?
“எப்ப வந்தே ராசம்மா? இது பரிமளத்தின் மூத்த மகளா?”