உள்ளடக்கத்துக்குச் செல்

உபதேச ரத்தின மாலை

விக்கிமூலம் இலிருந்து
(உபதேசரத்தினமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்தினமாலை

(மணவாளமாமுனிகள் வைணவ உலகம்போற்றும் இரத்தினம்! இவர் திருவாய்மொழிப்பிள்ளையின் சீடர்களில் தலைவர். ஆழ்வார்திருநகரியில் ஐப்பசியில் திருமூலத்தில் எம்பெருமானாரின் அவதாரமாகத் தோன்றியவர். சகல சாத்திரங்களிலும் மிகத்தெளிந்த ஞானம்பெற்றவர். திருவரங்கநாதனுக்கே ஆசார்யராக அமைந்த பெருமையுடையவர்.அவர் அருளிச்செய்த திவ்வியப் பிரப்ந்தங்களுள் ஒன்றுதான் 'உபதேசரத்தினமாலை'. இது, அவர் அருளியவற்றுள் முதலாகவைத்துப் போற்றப்படுவது. மற்றவை 'திருவாய்மொழி நூற்றந்தாதி'யும், 'ஆர்த்திப்பிரபந்த'மும் ஆகும்.
வைணவ சமயத்தின் முக்கிய நாயகர்களாக விளங்கும் ஆழ்வார்கள் பற்றிய விவரங்களையும், அவர்களின் சிறப்புகளையும் தொகுத்துக்கூறும் வரலாற்று இலக்கியம் இது எனப்போற்றப்படும் சிறப்புடையது இந்நூல். ஆழ்வார்கள் அவதரித்த மாதங்கள், திருநட்சத்திரங்கள், தலங்கள், வியாக்கியான கர்த்தாக்கள், ஆசாரியர்கள், பிள்ளை லோகாசார்யரின் பெருமை முதலியவை மிக அழகிய முறையில் இப்பிரபந்தத்தில் அருளிச்செய்யப்படுகின்றன.
இந்நூலின் பெருமைபற்றி, "இத்திவ்வியப்பிரபந்தத்தின் அமைப்பினழகு நிகரற்றது. அமுதொழுகுகின்ற தமிழினி்ல் விளம்பிய சீர்மை சொலப்புகில் வாயமுதம் பரக்கும்"♣ என்று போற்றியுரைப்பர் சிறீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் அவர்கள்.)

-(♣. பார்க்க: நித்யாநுஸந்தானவுரை

இந்நூல் மொத்தம் 74 வெண்பாக்களால் ஆனது. வைணவசமயத்தையும் ஆழ்வார்களையும் பற்றி அறியவிரும்புவோர், ஆய்வுசெய்வோர் அவசியம் படிக்கவேண்டிய அரியநூல் இது.
(தனியன்)
முன்னந் திருவாய் மொழிப்பிள்ளை தாமுப தேசித்தநேர்
தன்னின் படியைத் தணவாத சொல்மண வாளமுனி
தன்னன்புடன் உபதேச ரத்தினமா லைதன்னை
தன்னெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரணமக்கே.
உரை விளக்கம்: முற்காலத்தில் திருவாய்மொழிப்பிள்ளை உபதேசித்து அருளிய முறையை, மாற்றாமல் பின்பற்றி்ச் சொல்லும் மணவாளமாமுனிகள், தாம் உயிர்கள்மேல் கொண்ட அன்பினாலே செய்தருளிய, உபதேசரத்தினமாலை எனும் திவ்வியப் பிரபந்தத்தைத் தம் நெஞ்சில் நினைவோடு தரிப்பவர், திருவடிகளே நமக்குத் தஞ்சம் ஆகும்.

நூல்

[தொகு]
எந்தை திருவாய் மொழிப்பிள்ளை யின்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தை- சிந்தைசெய்து
பின்னவருங் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னியசீர் வெண்பாவில் வைத்து. (01)
பதப்பிரிப்பு:
எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன் அருளால்
வந்த உபதேசமார்க்கத்தைச்- சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து.
இதன்பொருள்: எமக்கு ஆசிரியரான திருவாய்மொழிப்பிள்ளை என்கின்ற திருமலையாழ்வாருடைய இன்னருளால் நமக்குக் கிடைத்த உபதேசவழியினைச் சிந்தித்துப் பின்புள்ளவர்களும் இதனைக் கற்கும்வண்ணம், நிலைத்தசிறப்புடைய வெண்பா யாப்பிலே அமைத்து உபதேச வடிவாய்ப் பேசுகின்றேன்- என்பதாம்.
விளக்கம்: 'மன்னியசீர்' என்பதனை வெண்பாவிற்கு அடையாக ஆக்காமல், 'மன்னிய சீர்களைப் பேசுகின்றேன்' என, 'ஆழ்வார் ஆசாரியார்களின் திருக்குணங்களைப் பேசுகின்றேன்' என்று உரைசெய்வாரும் உளர்.
'மன்னியசீ்ர் வெண்பா' என்றது, நிலைத்த சிறப்புடைய வெண்பா என்பதாம். நிலைத்த சிறப்பாவது, வேற்றுத்தளை விரவாதும், வெண்டளை பிறழாமலும் வரும் சிறப்பு
கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னி லாசையுள்ளோர்
பெற்றோ மெனவுகந்து பின்புகற்பர்- மற்றோர்கள்
மாச்சரியத் தாலிகழில் வந்ததென்னெஞ் சேயிகழ்கை
ஆச்சரிய மோதா னவர்க்கு. (02)
பதப்பிரிப்பு:
கற்றோர்கள் தாம் உகப்பர் கல்விதன்னில் ஆசை உள்ளோர்
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர்- மற்றோர்கள்
மாச்சரியத்தால் இகழில் வந்தது என் நெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோதான் அவர்க்கு.
இதன்பொருள்: நெஞ்சமே! கற்றவர்கள் (இப்பிரபந்தத்தைப் பெற்று)மகிழ்வார்கள். கல்வியில் விருப்பம் உள்ளவர்கள் இது கிடைக்கப்பெற்றோமே என மகிழ்ச்சியடைந்து பிறகு இதனைக் கற்பார்கள். மற்றவர்கள், மாச்சரியத்தினால் இதனை இகழ்ந்து கூறினால், அதனால் நமக்கு ஆவதென்ன? (ஒன்றுமில்லை) அப்படிப்பட்ட குணமுடையவர்கள், நல்லவிசயங்களை இகழ்வது என்பது ஆச்சரியமோ? (அது அவர்களின் இயல்பே என்க.)
உரைவிளக்கம்: 'கற்றோர்கள் மகிழ்வர், மற்றோர்கள் இகழ்வர் மாச்சாரியத்தால்' என்பதால், அவர்காலத்தில் இந்நூலைப் போற்றியவர்களும், பொறாமையால் தூற்றியவர்களும் உண்டு என்பதனை நாம் அறிகின்றோம்.
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
தாழ்வாது மில்குரவர் தாம்வாழி- ஏழ்பாரும்
உய்ய அவர்க ளுரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து. (03)
பதப்பிரிப்பு:
ஆழ்வார்கள் வாழி அருளி்ச்செயல் வாழி
தாழ்வு ஆதும் இல் குரவர்தாம் வாழி- ஏழ் பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.
இதன்பொருள்: பொய்கையார் முதலான ஆழ்வார்கள் வாழ்க! அவர்கள் அருளிச்செய்த திவ்வியப் பிரபந்தங்கள் வாழ்க! தாழ்வு ஏதும் இல்லாத எம்பெருமானார் முதலான ஆசாரியர்கள் (குரவர்) வாழ்க! ஏழுலகங்களும் உய்ய அவ்வாசிரியர்கள் அருளிச்செய்தவைகளும், (சிறீசூக்திகள்) செம்மையான வேதங்களோடு சேர்ந்து வாழ்க!- என்பதாம்.
உரைவிளக்கம்: செய்யமறை- வேதங்கள் (மானுடரால் செய்யப்படாமல்) செம்மையின் வடிவமான பரம்பொருள் அருளிச்செய்தவை ஆதலால் வேதங்களைச் 'செய்யமறை' என்றார்.
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்ய னருள்மாறன் சேரலர்கோன்- துய்யபட்ட
நாதனன்பர் தாள்தூளி நற்பாணன் நன்கலியன்
ஈதிவர்தோற் றத்தடைவா மிங்கு. (04)
பதப்பிரிப்பு: பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை ஐயன், அருள் மாறன், சேரலர்கோன், துய்ய பட்டநாதன், அன்பர்தாள் தூளி, நல் பாணன், நன் கலியன், ஈது இங்கு இவர் தோற்றத்து அடைவு ஆம்.
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்
இந்தவுலகி லிருணீங்க- வந்துதித்த
மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய
ஈதென்று சொல்லுவோமி யாம். (05)
பதப்பிரிப்பு: அம் தமிழால் நல்கலைகள், ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள், இந்த உலகில் இருள்நீங்க, வந்து உதி்த்த, மாதங்கள் நாள்கள்தமை, மண்ணுலகோர் தாம் அறிய, ஈது என்று, யாம் சொல்லுவோம்.

முதலாழ்வார்கள் திருவவதாரத் திருநாள்

[தொகு]
ஐப்பசியி லோண மவிட்டஞ் சதயமிவை
ஒப்பிலவா நாள்க ளுலகத்தீர்- எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்றுசிறப் பால். (06)
பதப்பிரிப்பு: உலகத்தீர்! எப்புவியும் பேசு புகழ், பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார், தேசுடனே தோன்று சிறப்பால், ஒப்பு இலவாம் நாள்கள், ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை.

(முதலாழ்வார்கள் என்று கூறுவதற்கான காரணம்)

மற்றுள்ள வாழ்வார்களுக் குமுன்னேவந் துதி்த்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த- பெற்றிமையோர்
என்றுமுத லாழ்வார்களென் னும்பேரிவர்க்கு
நின்ற துலகத்தே நிகழ்ந்து. (07)


திருமங்கையாழ்வாரின் திருவவதாரத் திருநாள்

[தொகு]
பேதைநெஞ்சே யின்றைப் பெருமை யறிந்திலையோ
ஏதுபெருமை யின்றைக் கென்றென்னில்- ஓதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகைநாள் காண். (08)
மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆறங்கங் கூற வவதரித்த- வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநா ளின்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்கணெஞ்சே வாழ்த்து. (09)

திருப்பாணாழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
கார்த்திகை யுரோகிணிநாள் காண்மினென்று காசினியீர்
வாய்த்தபுகழ்ப் பாணர்வந் துதிப்பால்- ஆத்தியர்கள்
அன்புடனே தானமல னாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள். (10)

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்றமெனி லுரைக்கின்றேன்- துன்னுபுகழ்
மாமறையோன் தொண்ட ரடிப்பொடியாழ் வார்பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள். (11)

திருமழிசையாழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
தையில் மகமின்று தாரணியீர் ஏற்றமிந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன்- துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்தநா ளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள். (12)

குலசேகராழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
மாசிப் புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர்
தேசித் திவசத்துக் கேதென்னில்- பேசுகின்றேன்
கொல்லி நகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள். (13)

நம்மாழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
ஏரார் வைகாசி விசாகத்தி னேற்றத்தைப்
பாரோ ரறியப் பகர்கின்றேன்- சீராரும்
வேதம் தமிழ்செய்த மெய்யனெழில் குருகை
நாத னவதரித்த நாள். (14)
உண்டோவை காசி விசாகத்துக் கொப்பொருநாள்
உண்டோ சடகோபர்க் கொப்பொருவர்- உண்டோ
திருவாய்மொழிக் கொப்பு தென்குருகைக் குண்டோ
ஒருபார் தனிலொக்கு மூர். (15)

பெரியாழ்வார் திருவவதாரத் திருநாள்

[தொகு]
இன்றைப் பெருமை யறிந்திலையோ ஏழைநெஞ்சே
இன்றைக்கென் னேற்றமெனி லுரைக்கின்றேன்- நன்றிபுனை
பல்லாண்டு பாடியநம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லா னியில்சோதி நாள். (16)
மாநிலத்தின் முன்நம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனிதன்னில் சோதியென்றா லாதரிக்கும்- ஞானியர்க்கு
ஒப்போ ரிலையிவ் வுலகுதனி லென்றுநெஞ்சே
எப்போதும் சிந்தித் திரு. (17)

(பெரியாழ்வார் என்று கூறுவதற்குக் காரணம்)

மங்களா சாசனத்தில் மற்றுள்ள வாழ்வார்கள்
தங்களார் வத்தளவு தானின்றிப்- பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வா ரென்னும் பேர். (18)

(திருப்பல்லாண்டின் முதன்மை)

கோதிலவா மாழ்வார்கள் கூறுகலைக் கெல்லாம்
ஆதி திருப்பல்லாண் டானதுவும்- வேதத்துக்
கோமென் னுமதுபோல் உள்ளதுக்கெல் லாம்சுருக்காய்த்
தான்மங்கல மாத லால். (19)

(ஒப்பிலா உயர்வு)

உண்டோ திருப்பல்லாண் டுக்கொப்ப தோர்கலைதான்
உண்டோ பெரியாழ்வார்க் கொப்பொருவர்- தண்டமிழ்நூல்
செய்தருளு மாழ்வார்கள் தம்மிலவர் செய்கலையில்
பைதனெஞ் சேநீயுணர்ந்து பார். (20)
ஆழ்வார் திருமகளா ராண்டாள் மதுரகவி
யாழ்வா ரெதிராச ராமிவர்கள்- வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கடம்மின் வாசியையும்
இந்தவுலகத் தோர்க்குரைப்போமி யாம். (21)

ஆண்டாளின் திருவவதாரத் திருநாள்

[தொகு]
இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோவிங் காண்டா ளவதரித்தாள்- குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்
தாழ்வார் திருமகளா ராய். (22)
பெரியாழ்வார் பெண்பிளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை- ஒருநாளைக்
குண்டோ மனமே யுணர்ந்துபா ராண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு. (23)
அஞ்சுகுடிக் கொருசந் ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப்- பிஞ்சாய்ப்
பழுத்தாளை யாண்டாளைப் பத்தியுட னாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து. (24)

மதுரகவியாழ்வாரின் திருவவதாரத் திருநாள்

[தொகு]
ஏரார் மதுரகவி யிவ்வுலகில் வந்துதித்த
சீராருஞ் சித்திரையில் சித்திரைநாள்- பாருலகில்
மற்றுள்ள வாழ்வார்கள் வந்துதித்த நாள்களினு
முற்றதெமக் கென்றுநெஞ்சே யோர். (25)
வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை- ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்களருளிச் செயல்நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து. (26)

எம்பெருமானார் (இராமானுசர்) திருநாள்

[தொகு]
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்ததிரு வாதிரைநாள்
என்றையிலு மின்றிதனுக் கேற்றமென்தான்- என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் காண்மின் எதிராசர் தம்பிறப்பால்
நாற்றிசையுங் கொண்டாடும் நாள். (27)
ஆழ்வார்கள் தாங்க ளவதரித்த நாட்களினும்
வாழ்வான நாள்நமக்கு மண்ணுலகீர்- ஏழ்பாரு
முய்யவெதி ராச ருதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவா திரை. (28)
எந்தை யெதிராசர் இவ்வுலகி லெந்தமக்கா
வந்துதித்: நாளென்னும் வாசியினால்- இந்தத்
திருவா திரைதன்னின் சீர்மைதனை நெஞ்சே
ஒருவாம லெப்பொழுது மோர். (29)

ஆழ்வார்கள் திருவவதாரத் தலங்கள்

[தொகு]

(முதலாழ்வார்கள், கலியன், திருப்பாணாழ்வார்)

எணணருஞ்சீர்ப் பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்
வண்மைமிகு கச்சிமல்லை மாமயிலை- மண்ணியீனீர்
தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்
ஓங்குமுறை யூர்பாண னூர். (30)
(பொய்கையாழ்வார்- காஞ்சி: பூதத்தார்- திருக்கடல்மல்லை: பேயார்- மயிலை:
திருமங்கையாழ்வார்- குறையலூர்: திருப்பாணாழ்வார்- உறையூர்)

(தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேகராழ்வார்)

தொண்ட ரடிப்பொடியார் தோன்றியவூர் தொல்புகழ்சேர்
மண்டங் குடியென்பர் மண்ணுலகில்- எண்டிசையும்
ஏத்துங் குலசேகர னூரென வுரைப்பர்
வாய்த்த திருவஞ்சிக் களம். (31)
(தொண்டரடிப்பொடியாழ்வார்- மண்டங்குடி: குலசேகராழ்வார்- திருவஞ்சிக்களம்.)

(திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார்)

மன்னு திருமழிசை மாடத் திருக்குருகூர்
மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்- நன்னெறியோர்
ஏய்ந்தபத்தி சார ரெழில்மாறன் பட்டர்பிரான்
வாய்ந்துதித் தவூர்கள் வகை. (32)
(திருமழிசையாழ்வார்- திருமழிசை: நம்மாழ்வார்- திருக்குருகூர்: பெரியாழ்வார்- திருவில்லிபுத்தூர்.)

(ஆண்டாள், மதுரகவிகள்)

சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர்
ஏராரும் பெரும்பூதூ ரென்னுமிவை- பாரில்
மதியாரு மாண்டாள் மதுரகவி யாழ்வார்
எதிராசர் தோன்றியவூ ரிங்கு. (33)
(ஆண்டாள்- திருவில்லிபுத்தூர்: மதுரகவியாழ்வார்- திருக்கோளூர்.)

அருளிச்செயல்களுக்கான வியாக்கியானங்கள்

[தொகு]
ஆழ்வார்க ளேற்றம் அருளிச் செயலேற்றம்
தாழ்வாது மின்றியவை தாம்வளர்த்தோர்- ஏழ்பாரு
முய்யவவர் செய்த வியாக்கியைக ளுள்ளதெல்லாம்
வையமறி யப்பகர்வோம் வாய்ந்து. (34)
ஆழ்வார் களையு மருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்க டாம்நரகில்- வீழ்வார்க
ளென்றுநினைத்து நெஞ்சே யெப்பொழுதும் நீயவர்பால்
சென்றணுகக் கூசித் திரி. (35)

நாதமுனி முதலான ஆசாரியர்கள்

[தொகு]
தெருளுற்ற வாழ்வார்கள் சீர்மை யாரறிவார்
அருளிச் செயலை யறிவாரார்- அருள்பெற்ற
நாதமுனி முதலாம் நந்தேசி கரையல்லால்
பேதைமனமே யுண்டோ பேசு. (36)

எம்பெருமானாரின் ஏற்றம்

[தொகு]
ஓராண் வழியா உபதேசித்தார் முன்னோர்
ஏரா ரெதிராச ரின்னருளால்- பாருலகில்
ஆசை யுடையோர்க் கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று
பேசி வரம்பறுத்தார் பின். (37)

எம்பெருமானார் தரிசனம் என்று வழங்கக் காரணம்

[தொகு]
எம்பெருமானார் தரிசனமென்றே யிதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்- அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலறிகைக் கா. (38)

திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தருளியவர்கள்

[தொகு]
பிள்ளான்நஞ் சீயர் பெரியவாச் சான்பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் - பிள்ளை
மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த
குணவாள ரென்றுநெஞ்சே கூறு. (39)

வியாக்கியானகர்த்தாக்களுக்கு நன்றிபாராட்டல்

[தொகு]
முந்துறவே பி்ளளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைக ளன்றாகில்- அந்தோ
திருவாய் மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குருவாரிக் கால(ம்)நெஞ்சே கூறு. (40)

ஆறாயிரப்படி அவதரித்தமை

[தொகு]
தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால்- உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்த(து)
இன்பமிகு மாறாயி ரம். (41)

ஒன்பதினாயிரப்படி அவதரித்தமை

[தொகு]
தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால்- எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை யாய்ந்துரைத்த(து)
ஏரொன் பதினாயி ரம். (42)

இருபத்தினாலாயிரப்படி அவதரித்தமை

[தொகு]
நம்பிள்ளை தம்முடைய நல்லருளா லேவியிட
பின்பெரிய வாச்சான் பிள்ளையதனால்- இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்ன(து)
இருபத்தி னாலாயி ரம். (43)

ஈடு முப்பத்தாறாயிரப்படி அவதரித்தமை

[தொகு]
தெள்ளியதா நம்பிள்ளை செப்புநெறி தன்னை
வள்ளல் வடக்குத் திருவீதிப்- பிள்ளையிந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்த(து)
ஈடுமுப்பத் தாறா யிரம். (44)

பன்னீராயிரப்படி பிறந்தமை

[தொகு]
அன்போ டழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா- தம்பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்த(து)
ஏதமில்பன் னீராயி ரம். (45)

பெரியவாச்சான்பிள்ளையின் பெருமை

[தொகு]
பெரியவாச் சான்பிள்ளை பின்புள்ள வைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்- அரிய
அருளிச் செயற்பொருளை ஆரியர்கட் கிப்போ(து)
அருளிச் செயலாய்த் தறிந்து. (46)

ஒருசில பிரபந்தங்களுக்கு உரையிட்டவர்கள்

[தொகு]
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்(கு)
எஞ்சாமை யாவைக்கு மில்லையே- தம்சீரால்
வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில. (47)


ஈடுமுப்பத்தாறாயிரப்படி வந்த வழிமுறை

[தொகு]
சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளைஎழு
தேரார் தமிழ்வேதத் தீடுதனை- தாருமென
வாங்கிமுன் நம்பிள்ளை யீயு்ண்ணி மாதவர்க்குத்
தாம்கொடுத்தார் பின்னதனைத் தான். (48)
ஆங்கவர் பால்பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை
தாங்கொடுத்தார் தம்மகனார் தம்கையில்- பாங்குடனே
நாலூர்பிள் ளைக்கவர்தாம் நல்லமகனார்க் கவர்தாம்
மேலோர்க்கீந் தாரவரே மிக்கு. (49)

'நம்' என்ற அடைமொழி பெற்றவர்கள்

[தொகு]
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யென்பர் அவரவர்த மேற்றத்தால்- அன்புடையோர்
சாத்துதிரு நாமங்கள் தானென்று நன்னெஞ்சே
ஏத்ததனைச் சொல்லிநீ யின்று. (50)

நம்பிள்ளை லோகாசாரியர் என்ற நாமம் பெற்றவிவரம்

[தொகு]
துன்னுபுகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம்முகப்பால்
என்ன வுலகாரியனோ வென்றுரைக்க- பின்னை
உலகாரிய னெனும்பேர் நம்பி்ள்ளைக் கோங்கி
விலகாமல் நின்றதென்றும் மேல். (51)

வடக்குத்திருவீதிப்பிள்ளை தம் திருக்குமரார்க்கு ஆசார்யர் திருநாமம் இடல்

[தொகு]
பின்னை வடக்குத் திருவீதிப்பி்ள்ளை அன்பால்
அன்ன திருநாமத்தை யாதரித்து- மன்னுபுகழ்
மைந்தருக்குச் சாத்துகையால் வந்துபரந்த தெங்கும்
இந்தத் திருநாம மிங்கு. (52)

வசனபூடணத்தின் பெருமை

[தொகு]
அன்ன புகழ்முடும்பை யண்ணலுல காசிரியன்
இன்னருளால் செய்தகலை யாவையிலும்- உன்னில்
திகழ்வசன பூடணத்தின் சீர்மையொன்றுக் கில்லை
புகழலவிவ் வார்த்தைமெயிப் போது. (53)

வசனபூடணம் என்றதன் காரணம்

[தொகு]
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னைமிகக் கொண்டுகற்றோர் தம்முயிர்க்கு- மின்னணியாச்
சேரச் சமைத்தவரே சீர்வசன பூடணமென்
பேரிக்கலைக் கிட்டார் பின். (54)

இதன் பொருள் அறிவது மற்றும் அனுட்டானம் அரிது

[தொகு]
ஆர்வசன பூடணத்தின் ஆழ்பொருளெல் லாமறிவார்
ஆரதுசொன் னேரி லனுட்டிப்பார்- ஓரொருவ
ருண்டாகி லத்தனைகா ணுள்ளமே எல்லார்க்கும்
அண்டாத தன்றோ வோது. (55)

வசனபூடணத்தின் பொருளையறிந்து பின்பற்றி உய்யவேண்டும் எனல்

[தொகு]
உய்யநி னைவுடையீ்ர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையகுரு முன்னம் வாய்மொழிந்த- செய்யகலை
யாம் வசனபூடணத்தி னாழ்பொருளை கற்றதனுக்
காம்நிலையில் நில்லு மறிந்து. (56)

வசனபூடணத்தைக் கல்லாதது ஏனோ?

[தொகு]
தேசிகர்பால் கேட்ட செழும்பொருளை சிந்தைதன்னில
மாசறவே யூன்ற மனனஞ்செய்(து)- ஆசரிக்க
வல்லார்கள் தாம்வசன பூடணத்தின் வான்பொருளை
கல்லாத தென்னோ கவர்ந்து. (57)

வசனபூடண வியாக்கியானங்களை ஆதரிக்க

[தொகு]
சச்சம் பிரதாயம் தாமுடையோர் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியைக ளுண்டாகில்- நச்சி
அதிகரியும் நீர்வசன பூடணத்துக் கற்ற
மதியுடையீர் மத்தியத்த ராய். (58)

வசனபூடணத்தின் செம்பொருள் இனிது

[தொகு]
சீர்வசன பூடணத்தின செம்பொருளை சிந்தைதன்னால்
தேறிலுமாம் வாய்கொண்டு செப்பிலுமாம்- ஆரியர்காள்
என்றனக்கு நாளும் இனிதாக நின்றதையோ
உந்தமக்கெவ் வின்பமுள தாம். (59)

திருவசனபூடணத்தின் உயிரான சிலபொருள்கள்

[தொகு]
தன்குருவின் தாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்
அன்புதன்பால் செய்தாலு மம்புயைகோன்- இன்பமிகு
விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்
நண்ணா ரவர்கள்திரு நாடு. (60)

ஆசாரியரை(குருவை) அடைந்தால் வைகுந்தம் தருவான்

[தொகு]
ஞானமனுட் டானமிவை நன்றாக வேயுடைய
னான குருவை யடைந்தக்கால்- மாநிலத்தீர்
தேனார் கமலத் திருமா மகள்கொழுநன்
தானே வைகுந்தம் தரும். (61)

குருவின்திருவடியில் அன்பு வையுங்கள்

[தொகு]
உய்யநினைவுண்டாகில் உங்குருக்கள் தம்பதத்தே
வையுமன்பு தன்னையிந்த மாநிலத்தீர்- மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபத முங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி. (62)

குருவை விட்டுப் பிரியாதே

[தொகு]
ஆசாரியன் செய்த உபகார மானவது
துய்தாக நெஞ்சுதன்னில் தோன்றுமேல்- தேசாந்
தரத்திலிருக்க மனந்தான் பொருந்த மாட்டாது
இருத்தலினி யேதறியோம் யாம். (63)

ஆசாரியனைப் பிரிந்து ஆரிருப்பார்

[தொகு]
தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதவன்
இந்நாடு தன்னி லிருக்குநாள்- அந்நே
ரறிந்துமதி லாசையின்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பா ரார்மனமே பேசு. (64)

ஆசாரியன் சிச்சன் (சிஷ்யன்) ஆருயிரைப் பேணுபவன்

[தொகு]
ஆசாரி யன்சிச்ச னாருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை- ஆசையுடன்
நோக்கு மவனென்னும் நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்
ஆர்க்குமந்நேர் நிற்கையரி தாம். (65)

பின்பழகிய பெருமாள் சீயர் போல் அடிமைசெய்க

[தொகு]
பின்பழக ராம்பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பதுவு மற்றுமிக்க வாசையினால்- நம்பிள்ளைக்
கான வடிமைகள்செய் யந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற வெப்பொழுது மோர். (66)

ஆசாரியர்கள் முன் ஆதரித்த ஆசாரத்தையே பின்பற்றுக

[தொகு]
ஆசாரியர்க ளனைவருமுன் னாதரித்த
ஆசாரந் தன்னை யறியாதார்- பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தநிலை தன்னைநெஞ்சே சேர். (67)

நாத்திகர்,ஆத்திகர், ஆத்திகநாத்திகர்

[தொகு]
நாத்திகரும் நற்கலையின் நன்னெறிசே ராத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை- ஓர்த்துநெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கரென விட்டுநடுச்
சொன்னவரை நாளும் தொடர். (68)

சத்சங்கத்தின் மகிமை

[தொகு]
நல்லமண முள்ளதொன்றை நண்ணி யிருப்பதற்கு
நல்லமண முண்டாம் நலமதுபோல்- நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி யிருப்பார்க்கு
குணமதுவே யாம்சேர்த்தி கொண்டு. (69)

தீயோர்கூட்டுறவின் தீமை

[தொகு]
தீயகந்த முள்ளதொன்றைச் சேர்ந்திருப்ப தொன்றுக்கு
தீயகந்த மேறும் திறமதுபோல்- தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி யிருப்பார்க்கு
குணமதுவே யாம்செறிவு கொண்டு. (70)

முன்னோர் மொழிந்த முறைதப்பாமல் மொழிக

[தொகு]
முன்னோர் மொழிந்த முறைதப்பா மல்கேட்டு
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே- தம்நெஞ்சி்ல்
தோற்றினதே சொல்லி யிதுசுத்தவுபதேசவர
வாற்றதென்பர் மூர்க்கரா வார். (71)

பூருவாசாரியர்கள் கூறும் வார்த்தைகளைக் கொள்க

[தொகு]
பூருவாசிரியர்கள் போதமனுட் டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டுநீர்- தேறி
இருள்தரு மாஞாலத்தே யின்பமுற்று வாழும்
தெருள்தரு மாதேசிகனைக் கொண்டு. (72)

இந்நூலின் பயனுரைத்துத் தலைக்கட்டுதல்

[தொகு]
இந்த வுபதேச ரத்தினமா லைதன்னை
சிந்தைதனில் நாளும் சிந்திப்பார்- எந்தை
எதிரா சரின்னருளுக் கென்று மிலக்காகி
சதிராக வாழ்ந்திடுவர் தாம். (73)

மணவாளமாமுனிகள் பெருமை

[தொகு]
மன்னுயிர்கா ளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன். (74)

எம்பெருமானார் எழுபத்திநான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்தருளினவர் ஆதலால் அந்தக்கணக்கிலே 74 பாசுரமாக இத்திவ்வியப் பிரபந்தத்தை இயற்றியருளவேண்டும் என்று மணவாள மாமுனிகள் திருவுள்ளம் பற்றியிருந்தாராம்: மணவாளமாமுனிகள் 73 பாசுரங்களை இயற்றி முடித்தபோது, அவரையே தெய்வமாகக்கொண்ட ஒருமகாசார்யர் "மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்" எனத் தொடங்கும் இப்பாசுரத்தை(74)ப் பாடி, இந்தப்பாசுரம் உபதேசரத்தினமாலையோடு சேர்ந்தே பாட அருள்புரியவேண்டும் என்று பெரியபெருமாள் திருவடிகளிலே வணங்கி வழிபட்டு வேண்ட, அப்படியே பகவந்நியமனமாயிற்று என்று பெரியார் கூறக் கேட்டிருக்கை. ஆனதுபற்றியே 73 பாட்டாலே தலைக்கட்டினார் மணவாளமாமுனிகள்.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே சரணம்

மணவாள மாமுனிகள் இயற்றியருளிய உபதேசரத்தினமாலை முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=உபதேச_ரத்தின_மாலை&oldid=1526448" இலிருந்து மீள்விக்கப்பட்டது