உமார் கயாம்/13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!

விக்கிமூலம் இலிருந்து

13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!

உமாருக்கு அசதியாக இருந்தது. எனினும் அவனால் தூங்க முடியவில்லை. எதுவும் சாப்பிடவும் அவன் விரும்பவில்லை. அந்த இரவின் மாயாஜாலத்திலேயே அவனுடைய புத்தி லயித்திருந்தது. தன் இருப்பிடத்தின் வாசலிலே சுருட்டிக் கொண்டு கிடந்த அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து உமார் புன்னகை புரிந்தான். அந்தப் பிச்சைக்காரன் இரவு வெகு நேரத்திற்குப் பின்னும் விதிகளிலே நொண்டிக் கொண்டு திரிவதை உமார் கவனித்திருக்கிறான். சும்மா இருக்க முடியாமல் அவனுடைய கால்கள் அவனைப் பூந்தோட்டத்திற்கு இழுத்துச் சென்றன. காவற்காரர்கள் தங்கள் கைகளில் விளக்குகளுடன் அல்லாவின் பெயரால் ஒவ்வொரு மணி நேரத்தையும் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வு, அந்த இரவின் விசித்திரக் காட்சிகளைப் பற்றி அவனை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. அவனுக்குப் பின்னாலே ஒரு நிழல் மரங்களின் ஊடே நுழைந்து செல்வதும், அந்த உருவம் அனாதைகள் படுத்துத் தூங்கும் ஒரு குளக்கரையை நோக்கி விரைவதும் போலத் தெரிந்தது. இரவின் மாயா ஜாலங்களைப் பற்றி எதுவுமே உணராமல் அந்த அனாதைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூனன் அருகிலே வெள்ளைக் கழுதையொன்று தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையோரத்திலே ஒரு துணியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்தக் கூணன் முடங்கி கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தக் கூனனையும், கழுதையையும் எங்கோ கனவில் கண்டது போல் இருந்தது உமாருக்கு. இப்போதிருக்கும் நிலையில் அப்பொழுது அந்த இரண்டு உருவங்களும் இருக்கவில்லை என்பதும் தெரிந்தது. ஆனால், எங்கே என்றுதான் நினைவில்லை.

உமார் அந்தக் கூனன் அருகிலே போய் உட்கார்ந்தான். அந்தக் கூனன் தண்ணீரைச் சுட்டிக் காண்பித்து, “கண்ணிர்க் கடலிலே மூழ்கிக்கிடக்கும் இந்த நிலாவைப் பார்த்தாயா அண்ணே!” என்று கேட்டான்.

அந்தக்குளத்தின் பரப்பிலே தோன்றிய பிறை நிலவின் உருவத்தை உமார் குனிந்து கவனித்தான். துன்பம் என்பது இந்த இரவிலே அவனுக்குப் பொருளற்ற ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் அந்தக் கூணன், துன்பப்படுவதை அவன் உணர்ந்தான்.

ஆதரவான குரலில் கூனனை நோக்கி, “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான் உமார்.

“நான் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். இதோ பார்; மற்றவர்களெல்லாம் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். ஆனால், நான் அமிழ்ந்து போன அந்த நிலவுக்குக் காவலாக இருக்கிறேன். ஏனென்றால், அதுதான் உண்மையான நிலவு. ஆகாயத்திலே இருக்கும் அந்த நிலவு உண்மையானதல்ல; ஏனென்றால் அது மாறுவதில்லை; அழிவதுமில்லை இந்த இரவைப் போலவே எல்லா இரவுகளையும் நினைத்துக் கொண்டு, அது மறைவதும் தோன்றுவதுமாக இருக்கும்” என்று அந்தக் கூனன் விசித்திர விளக்கம் கொடுத்தான்.

உமார், “உண்மை, உண்மை” என்று ஒத்துதினான்.

தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களைச் சுட்டிக் காட்டிய அந்தக் கூனன், “இதோ, இதோ, இவர்களுக்கெல்லாம் புதிய தலைவன் இருக்கிறான். ஆனால், எனக்கு யாருமில்லை. என்னுடைய தலைவரை நான் இழந்து விட்டேன். என் தலைவர் கருணைக் கதிரவன்; அதிர்ஷ்டமில்லாத அனாதைகளின் ஆதரவாளர்; அடிமையிலே மிகத் தாழ்ந்தவனான, அங்க ஹீனனான இந்த ஜபாரக்கை, அவர் அன்பாக நடத்தினார். கதிரவனின் உலகமான இதை விட்டுக் கதிரவன் பிரிந்து விட்டான்; நம்பிக்கையுள்ளவர்களை விட்டுப் பாதுகாப்பு விலகி விட்டது; ஜபாரக்கிடமிருந்து அவனுடைய உயிருக்கு உயிராய் இருந்தவர் போய் விட்டார். ஆய்லல்லா அல்லல்லா! சுல்தான் ஆல்ப் அர்சலான் கொலை செய்யப்பட்டு விட்டார்!” என்று மிக உருக்கமாகக் கதறினான்.

நீரில் ஆடி அலையும் நிலவின் சிதறிய ஒளியைக் கவனித்துக் கொண்டிருந்த உமார் அவன் சொன்னதை மனதுக்குள் வாங்காமலே, “எனக்குத் தெரியாதே!” என்றுரைத்தான்.

“நிசாப்பூர் முழுவதும் தெரியும் இன்றுதானே சாமர்க்கண்டிலிருந்து அவருடைய உடலைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தோம். அவருடைய விதி அவ்வளவுதான்! அண்ணே! அவருடைய ஆட்சியில் அவர் பலமும் உறுதியும் வாய்ந்தவராகத்தான் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படையே இருந்தது. இருந்தாலும் விதியின் செயலிலிருந்து விடுபட முடியவில்லை. சாமர்க்கண்டில் ஒரு பிடிபட்ட நாயை அவர் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் எதிரிலே அந்தக் கைதியைக் கொண்டு வரும்போது, வாள் பிடித்த இரண்டு வீரர்கள் இவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த நாய் நம் பேரரசரைப் பார்த்து இகழ்ந்து பேசியது. அதனால் சுல்தான் உள்ளத்திலே கோபம் கொழுந்து விட்டெரிந்தது. தன் கையிலே வில்லையும் அம்பையும் எடுத்து அந்த நாயின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்தார். அந்த நாயைப் பிடித்துக் கொண்டிருந்த வாள் வீரர்களை விலகி இருக்கச் சொல்லி விட்டு, நாணை இழுத்து விட்டார். ஒரே அம்பிலே கொல்லப்பட்டிருக்க வேண்டிய அந்தக் கைதியின் மேல் அந்த அம்பு படவில்லை. என்றும் குறி தவறாத இயல்புடைய எம் தலைவர் குறி அன்று எப்படியோ தவறி விட்டது. உடனே அந்த நாய் தன் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த இரு கத்திகளையும் உருவிக் கொண்டு, சுல்தான் அவர்கள் நெஞ்சிலே திடீரென்று பாய்ந்து மூன்று முறை குத்தி விட்டான். நான்கு நாட்கள் கழிந்த பிறகு அவர் அல்லாவின் திருவருளில் கலந்து விட்டார்” என்று கூறி முடித்த அந்த விகடன் ஜபாரக்கின் கன்னங்கள் கண்ணிரில் ஊறிப் போயிருந்தன.

“ஆமென்! சாந்தியுண்டாகட்டும் சாந்தி! சாந்தி!” என்று உமார் முணுமுணுத்தான். அந்தக் கரிய இருளிலே தூரத்துக்கப்பால், ரஹீமின் புதைகுழியும், அதன் அருகிலே பொருமிக் கொண்டிருக்கும் அவனுடைய வேலைக்காரனும் தோற்றமளிப்பதை உமார் கண்டான்!