உள்ளடக்கத்துக்குச் செல்

உமார் கயாம்/30. மாய இரவில் மயக்கும் மோகினி!

விக்கிமூலம் இலிருந்து

30. மாய இரவில் மயக்கும் மோகினி!

ஒரு விஷயத்தில் ஆயீஷா காசாலிக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருந்தாள். ஏனெனில், அவன் இருந்தவரை தான், மற்றவர்களும் அங்கு இருக்க முடிந்தது. அந்த இந்து வேதாந்தியின் பேச்சுக்களிலே ஆழ்ந்த கவனிப்புச் செலுத்திய உமார், மற்றவர்களைப் பற்றி இலட்சியம் செய்யவில்லை. ஆனால், அவன் விடைபெற்றுக் கொண்டு சென்ற பிறகு, மற்ற கூட்டாளிகளின் பேச்சு அவனுக்கு அலுப்புத் தட்டும்படி செய்தது. ஒரு நாள் மாலை, ஏதோ வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பிரமாதமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். உமாருக்குத் தலைவலி தாங்க முடியவில்லை. ஜபாரக்கினுடைய வெள்ளைக் கழுதையை நடுக் கூடத்துக்குள்ளே ஓட்டிக் கொண்டு வந்து, தன் நண்பர்கள் மத்தியிலே நிற்க வைத்தான். அவர்களெல்லாம் அவனுடைய பைத்தியக்காரச் செயலைப் பார்த்து வியந்து பேச்சை நிறுத்திவிட்டு அவன் மீது கவனம் செலுத்தினார்கள். “அன்பர்களே! இந்தக் கழுதை உங்களுக்கு எச்சரிக்கையாக விளங்குகிறது. ஏனென்றால், முந்திய பிறப்பிலே, ஒரு பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக இருந்து, உங்களைப் போல பல விஷயங்களை விவாதித்ததன் பயனாக இது இந்தப் பிறப்பிலே கழுதையாகப் பிறந்து விட்டது.” என்று கூறி அவர்களை அவமானப் படுத்தி விட்டான். அதனால் அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். தோட்டத்திலே, விண்மீனின் ஒளிவீசும் இரவு நேரத்திலே, உமார் உலவிக் கொண்டிருந்தான். தன்னந்தனியாக இருந்த அவனை நோக்கி அன்னநடை போட்டு வந்தாள் ஆயீஷா!

அவன் எதிரிலே அவள் மண்டிபோட்டு, அவன் கையைப் பிடித்துத்தன் நெற்றியிலே ஒற்றிக் காண்டு, “தலைவரே! தங்களுக்குச் சாந்தியுண்டாவதாக!” என்று வாழ்த்தி வணங்கினாள்.

“சாந்தி! சாந்தி! உனக்கும் சாந்தி உண்டாகட்டும்!” என்று உமார் பதிலுக்கு வாழ்த்தினான்.

“தலைவரே! சற்றுமுன் தரையோடு தரையாக நகர்ந்து வந்து ஒருவன் தங்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்தான். அதோ அந்த ரோஜாச்செடிகளுக்குப் பின்னால் அவன் ஒளிந்திருந்தான். இப்பொழுது அவன் திரும்பவும் மறைந்து சென்றுவிட்டான். அவன் முகத்தையும் நான் கவனித்தேன்” என்று அயீஷா கூறினாள்.

“அது யார்? தோட்டக்காரன் அகமதுதானே?”

“ஆம் அகமதுதான்; அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்!” என்றாள்.

பாலைவனக் குடிமக்களிடையே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் அயீஷாவுக்கு, உளவு பார்ப்பவர்கள் என்றாலே பிடிக்காது. அவர்களைப் போல் பகைவர் உலகில் வேறு யாரும் இல்லை என்பதும், அவர்களைக் கண்டால் நச்சுப்பாம்பைக் கொல்வது போல், தண்டித்து அனுப்ப வேண்டும் என்பதும் அவளுடைய எண்ணம்!

ஆனால், உமார், “அவன் பிழைத்துப் போகட்டும். அவனை யார் அனுப்பினார்களோ, அவர்களிடம் சென்று கழுதை விஷயத்தைச் சொல்லட்டும். நான் இன்று அவனை அடித்துத் துரத்தி விட்டால் அவர்கள் மறுபடியும் அகமதை விட ஆபத்தான மற்றொருவனை அனுப்பக்கூடும்” என்று சொன்னான்.

அயீஷாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. தான் சொல்லுவதற்கு முன்னாலேயே, அவன் அகமது உளவு பார்ப்பதைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான். தான் அவனிடம் பானு சாபாத் தலைவன் மகள் என்று கூறியதைக் கூடப் பொய்யென்று, தெரிந்து கொண்டு விட்டானே? அவனுடைய மாயவித்தை பெரியதுதான். தான் அவனருகில் மண்டியிட்டு, அவன் தன் தலையில் கைவைத்த பொழுதுகூட, அவன் தன் எண்ணத்தைத் தெரிந்து கொண்டுதான் இருக்கவேண்டும் என்று அயீஷா எண்ணினாள். ஆனால், உமார் தன் போக்கிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தான். “அவர்கள் சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் நொடி நேர இன்பத்தைத் தவிர வேறு சொர்க்கம் என்று என்ன இருக்கிறது?” அவனுடைய மெளனத்தின் காரணம் தெரியாமல் ஆயீஷா தானும் பேசாமல் நின்றாள்.

“இந்தத் தோட்டம் அமைதியாகவேயிருக்கிறது. ஆனால் இங்கும் தேடிக்கொண்டு வருபவர்களும், பேச வருபவர்களும், வேவு பார்ப்பவர்களும் வந்து அமைதியைக் குலைத்து விடுகிறார்கள் ஆயீஷா! உன்னிடம் என் வேலைக்காரர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்களா?”

“ஆம்! தலைவரே. வீணையை எடுத்துக் கொண்டு வந்து நான் பாடவா? தாங்கள் என் பாட்டைக் கேட்கிறீர்களா?”

“மிக நேரமாகி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பொழுது விடியத் தொடங்கி விடும்! நீ போய்த் தூங்கு.”

பணிவுடன் ஆயீஷா தன் அறைக்குச் சென்றாள். இத்தனை நடவடிக்கைகளுக்கிடையில் அவர் தன்னை எங்கே கவனிக்கப் போகிறார் என்று தோன்றியது.

ஒரு பெண்ணிடம் பழகுகிற மாதிரியாகவா இருக்கிறது அவர் போக்கு? ஏதோ குதிரையைத் தட்டிக் கொடுப்பதுபோல் தலையிலே கைவைத்தார். இப்பொழுது, குழந்தைக்குச் சொல்வது போல் தூங்கப் போகச் சொல்லுகிறார் என்று எண்ணி ஏங்கினாள்.

உமார், தனியாக அந்தக் குட்டையின் அருகிலே உட்கார்ந்துகொண்டு, தன் சிந்தனையை ஓட விட்டான். அவன் நினைப்பிலே முதலில் வந்து நின்றவன், காசாலிதான். காசாலி, வேதாந்தி - ஆனால் இளைஞன். உமார், ரஹீமுடன் போர்க் களத்திற்குச் சென்ற போதும், யாஸ்மியிடம் ரோஜாப்பூ வாங்கிய போதும் எத்தனை வயதுடையவனாக் இருந்தானோ அத்தனை வயதுதான் இப்பொழுது காசாலிக்கு இருக்கும்! காசாலியின் வயதுக்கு அவனிடம் இளமை பொங்கிப் பூரித்து நிற்கிறது. ஆனால், அந்த இளமை ஏன் வீணடிக்கப்பட வேண்டும்? உமாருக்கு இப்பொழுது வயது முப்பத்தினான்குதான் இருக்கும். ஆனால், அவனிடமிருந்து இளமை பறிபோய் விட்டதாகத் தோன்றியது. இளமையின் இன்ப வாழ்வு என்ற அந்தப் புத்தகம் அவனைப் பொறுத்த வரையில் மூடப்பட்டதாகி விட்டது. இப்பொழுது வேறு புதிய புத்தகம் திறக்கப்பட்டிருக்கிறது. காசாலிக்கு வாழ்க்கை உறுதி பயப்பதாயிருக்கிறது; ஆனால் உமாருக்கோ நிலைகுலைந்து போயிருக்கிறது. புலனடக்கம் உள்ள அந்த வேதாந்திக்கு வாழ்க்கை விரித்து வைக்கப்பட்ட தேசப்படம் போல் விரிந்து காணப்படுகிறது. ஆனால், தன்னைப் போன்ற வான நூற்கலைஞனுக்கு, வாழ்வில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

காசாலி, பெரிய ஆசிரியராகத் திகழ முடியும், என்னால் அப்படியிருக்க முடியாது.

இப்படி ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று, கைதட்டி ஓர் ஆளைக் கூப்பிட்டான். வேலைக்காரன் ஒருவன் வேகமாக ஓடி வந்து சிறிது தூரத்தில் மரியாதையுடன் நின்றான். “என்னுடைய அறைக்குள்ளே பட்டுத் துணிகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் பக்கத்திலே என்னுடைய ரத்தினப் பெட்டியிருக்கிறது. அதை எடுத்துவா” என்றான். அந்த ஆள் போகுமுன் அவனை நிமிர்ந்து பார்த்த உமார் திடுக்கிட்டான். அவன் அகமது!

அவன் பெட்டியைக் கொண்டு வந்தான். அதன் பூட்டைத் திறந்து அதில் உள்ள பொருள்களைப் பார்வையிட்டான். “வேறு எதுவும் வேண்டுமா?’ என்று அகமது கேட்டான். “இல்லை நீ போகலாம்” என்று சொல்லிவிட்டு, அதிலே இருந்த பழைய நாணயங்களைப் பார்த்தான், உமார். அவ்வப்போது தனக்குக் கிடைத்த பழைய நாணயங்களை அதில் சேர்த்து வைத்திருந்தான். அவைதாம் எத்தனையெத்தனை சரித்திர நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றன. அந்த நாணயங்களிலே காணப்பட்ட உருவங்களையுடைய அரசர்களெல்லாம், இப்பொழுது செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டிருப்பார்கள். சிலச் சிலருடைய அரசாட்சி ஆட்டங்கண்டு விட்டது. சில தேசங்கள், பெருமைக்குரிய நம் பேரரசரான மாலிக்ஷாவின் ஆட்சியில் வந்து சேர்ந்திருக்கின்றன. வெற்றி முழக்கமிட்டு வரும் இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியிலே தடைபட்டுக்கிடக்கும் மேல்நாடுகள் எத்தனை?

அவருடைய ஆட்சியிலே, நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படி, இதுவரை அவன் ஒரே சமயத்தில் மூன்றுபேர் செய்யக் கூடிய வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறான். இன்னும், முன்னைக் காட்டிலும் அதிகமான உழைப்பை அவர் எதிர்பார்க்கிறார். நிசாம் நினைவு வந்ததும், அவனுக்கு இந்தப் பெட்டியை அகமது தூக்கி வர நேர்ந்தது பற்றி வருத்தம் தோன்றியது. அகமதுவின் தோற்றம், அவன் தன்னை வேவுபார்க்கிறான் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. இந்த வேவு பார்ப்பதிலிருந்து விடுதலை பெற முடியாதா? ஒரு பக்கம் நிசாமின் ஒற்றர்கள் மற்றொரு பக்கம் அவருடைய எதிரிகளின் உளவாளிகள். இப்படித் தன்னைச் சுற்றி எப்பொழுதும் உளவாளிகளே உலாவிக் கொண்டிருந்தால், தான் எப்படிச் சுதந்திரமாக இருக்க முடியும்? என்றெல்லாம் உமாரின் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும்போது,

மற்றொரு வேலைக்காரன் வந்து ஏதோ கேட்டான்.

“இப்பொழுது, எந்தக் கடிதமும் பார்க்க முடியாது, எனக்கு எந்த விதமான உணவும் இப்போது தேவையில்லை. இஷாக், இந்தப் பெட்டியைக் கொண்டு போய் உள்ளேவை. தோட்டத்துக்குள்ளே யாரும் வராமல் பாதுகாத்துக்கொள்!”

“ஆனால...”

“ஒரு நாய் கூட உள்ளே வரக்கூடாது. மீறி வந்ததோ, உன் கால்களுக்குச் சவுக்கடி கிடைக்கும். போ. நிற்காதே!”

“ஆனாலும், தலைவரே ஒருவர்.”

“அட கடவுளே! நீ போகிறாயா, இல்லையா? என்று உமார் உறுமினான். அவன் ஓடி விட்டான். இருளின் இடையே வானில் மின்னும் நட்சத்திரங்களின் சிறிய ஒளி, தரையில் மரங்களின் ஊடே பரவிக்கிடந்தது. மெல்ல எழுந்த காற்று, குளத்தின் ஒரு சிறு அசைவை உண்டாக்கியது. உமாரின் சிந்தனை மீண்டும் வேலை செய்தது. நகரை நோக்கிச் செல்லும் மலைப் பதையிலே நடந்து செல்லும் காசாலி, தன்னந்தனியாக இருக்கும் நிலையிலும் மகிழ்ச்சி கண்டான். பலபேருக்கு மத்தியிலே வேலை செய்தாலும், உமாருக்கு எந்த வேதாந்தியைக் காட்டிலும் அதிகமான தனிமைநிலை இருப்பதாகத் தோன்றியது. காசாலி, தன்னுடைய கருத்துக்களைச் சீடர்களிடம் கூறி மகிழ முடியும். ஆனால், உமாருக்குத் தன் எண்ணங்களில் பங்கு கொள்ளக் கூடிய ஆள் யாரும் இல்லை.

இருளின் ஊடே இனிய வீணையின் நாதம் எழுந்தது. அத்துடன் ஒரு பெண்ணின் குரலும் இழைந்து வந்தது. பாலைவனத்துப் பாதையிலே போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் படைவீரர்கள் பாடுவது போன்ற கருத்துடைய பாடல் அது. அரபிமொழியிலே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்த அந்த ஆள், தனக்கு மிக அருகாமையிலேயே வீணையை மீட்டிக் கொண்டிருப்பதை உமார் உணர்ந்து கொண்டான்.

“என்ன இது? என்று உமார் கோபத்துடன் கேட்டான். இருள் நிறைந்த இடத்தை விட்டு ஆயீஷா வெளியே வந்தாள். மானைப்போன்று நடந்து வந்து அவனருகிலே உட்கார்ந்து கொண்டு, அவள் தன் மடியில் இருந்த வீணையை மீட்டத் தொடங்கினாள். முன்னேற்பாடாக, முகத்தை மறைத்திருந்த முக்காட்டை முழுக்க முழுக்க விலக்கி விட்டிருந்தாள். “பானு சாபா நகரத்தின் கீதத்தை நீங்கள் கேட்டதில்லையே? இதோ தொடர்ந்து பாடுகிறேன் தலைவரே கேளுங்கள்” என்று இனிய குரலில் நரம்புகளை அதிர வைத்துத் தன் குரலுக்கு மெருகு சேர்த்தாள்.

படிமம்:Page245 உமார் கயாம் (புதினம்).jpg

“ சற்று மு ன், யாரும் தோட்டத்திற்குள்ளே வரக் கூடாதென்று கட்டளையிட்டேன். நீ எப்படி உள்ளே வந்தாய்? யார் உன்னை அனுமதித்தது? என்று கடுமையான குரலில் உமார் கேட்டான். தன்னுடைய தனிமையக் குலைப்பதற்கு ஏதாவது ஒரு சனியன் வந்து கொண்டே யிருக்கிறதே என்ற கோபம் உமாருக்கு.

“தாங்கள் கட்டளையிடும் நேரத்தில் நான் தோட்டத்திற்குள்ளேயேதான் இருந்தேன். ஆகையால், நான் தங்கள் உத்தரவை மீறி வரவில்லை” என்று ஆயிஷா கூறினாள்.

“சரி, சரி. பேசாமல் இரு” என்று எரிந்து விழுந்தான் உமார். பணிவுடன், வீணையைத் தூக்கி அப்புறம் வைத்து விட்டுக் கால்களை மடக்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்தாள். சிறிது கூட ஓசையெழுப்பாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். பிறகு, பேசாமலும், ஒசைப் படாமலும் தன்னுடைய கூந்தலை அவிழ்த்து விட்டாள். தோளிலும், முதுகிலும் விரிந்து கிடந்த அந்தக் கூந்தலின் மெல்லியமணம் எங்கும் பறந்தது.

பிறகு சிறிது நேரம் தன் தலையை நிமிர்த்தி அண்ணாந்து விண்ணின் மீன்களை நோக்கினாள். அதன்பிறகு, தன்னுடைய காலில் அணிந்திருந்த வெள்ளித் தண்டைகளை ஒவ்வொன்றாகக் கழட்டி எடுத்தாள். அப்படி ஒவ்வொன்றையும் கழட்டும்போதெல்லாம் வெடுக்கு வெடுக்கென்று திருப்பி உமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். தன்னுடைய ஏகாந்த சிந்தைனையைத் தொடர்ந்து நடத்த முடியாத உமார், அவளுடைய செய்கைகளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அயீஷாவினுடைய அந்த அழகான கைகள், கழட்டிய வளையல்களை, மடியில் கோபுரம் போல் அடுக்கிக் கொண்டிருந்தன. உயர்ந்து கொண்டே வந்த கோபுரம் திடுமென்று சரிந்து விழுந்து ஓசை எழும்பியது. துஷ்டத் தனமுள்ள குறும்புக்காரச் சிறுமி பதறுவது போல, அவள் மூச்சையிறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மெல்ல அவளுடைய தோள் உமாரின் உதட்டிலே உராய்ந்தது. பட்டுத் துணிக்குக் கீழேயிருந்த அந்தத் தோளின் கதகதப்பு அவனுடைய உதடுகளுக்கு உணர்வூட்டியது. எந்தப் பொருளையும் பார்க்க முடியாத அளவு இருள் சூழ்ந்திருந்தது அந்தச் சமயத்திலே.

உட்கார்ந்திருந்த அவள் தன் கைகளைத் தூக்கிக் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டாள். அவளுடைய உடலிலிருந்து கிளம்பிய மெல்லிய மணம் உமார் உணர்வில் கலக்கத் தொடங்கியது. அவள் எதுவுமே பேசாவிட்டாலும், அன்று இரவில் அந்த நேரத்தில் உமாருக்கு அவளே எல்லாமாக இருந்தாள். உலகத்தின் நினைவுகள் அனைத்தையும் மறந்து அவள் ஒருத்தியையே கருதும் நிலையில் அவன் இருந்தான். சிறிது நேரத்திற்கு முன் அவனுடைய சிந்தனை, பேச்சு அனைத்தும் முக்கியம் வாய்ந்த பெரிய விஷயங்களில் ஈடுபட்டிருந்தன. இப்பொழுதோ அந்தப் பெண்ணின் சிறு சிறு அங்க அசைவுகளே பெரிய விஷயமாகத் தோன்றின. அவனுடைய கைகள் அவளுடைய இடையைத் தொட்ட போது, அவை நடுங்கிக் கொண்டிருந்தன. தலையைக் கோதிக் கொண்டிருந்த தன் கைகளை இறக்காமலே, அவள் தலையை அவன் பக்கம் திருப்பினாள். அவனைப் பார்த்துக் குறுநகை காட்டினாள். அவளை முத்தமிடுவதற்காக அவன் குனிந்தான். அவள் வெடுக்கென்று நழுவிக் கொண்டு எழுந்தோடினாள்.

“அயீஷா !” என்று மெல்லிய குரலிலே அவன் அழைத்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தான். அவள் விண்மீன் வெளிச்சங்கூடத் தெரியாத மரநிழலுக்குள்ளே ஓடினாள். பதில் பேசாத அந்தப் பெண், அற்புதமாக மாறி விட்டாள். அவள் இப்பொழுது விலைக்கு வாங்கப்பட்ட அடிமையாக இல்லை. உமாரின் கடுகடுத்த முகத்தைக் கண்டு கலங்கும் நிலையில் இல்லை. அவனையே ஆட்டிப் படைக்கும் அன்பரசி ஆகிவிட்டாள். ஒடிக் கொண்டிருந்த உமாரின் கைப்பிடியில் ஒரு தடவை எதிர்பாராமல் அவள் சிக்கிக்கொண்டாள். அவனுடைய கைகள் அவளுடைய நெஞ்சு மேட்டின் பஞ்சு போன்ற இடத்திலே பட்டபோது சிட்டுக்குருவி போல பறந்து போய் விட்டாள். தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிய அவள், காலில் எதுவும் அணியாமல் போனதால் எந்தப் பக்கம் போனாளென்றே தெரியவில்லை. முத்தமிட முயன்ற உமாருக்கு முத்தமிட வேண்டுமென்ற எண்ணம் மறந்து போய் விட்டது. இப்பொழுது அவளைப் பிடிக்கவேண்டும் என்ற மனநிலையே இருந்தது. அவளைத் தேடி இருட்டிலே விரட்டிக் கொண்டு அவன் ஓட ஓட அவன் நரம்புகளிலே ஓடும் இரத்தமும் வேகமாக ஓடத் தொடங்கியது.

அயிஷா போனதிசை தெரியாமல், சிறிதுநேரம் நின்றான். சற்று தூரத்தில் மெல்லிய சிரிப்பொலி கேட்டது. ஆவலுடன் அந்த திசையில் பாய்ந்தவன் ஒரு மரத்தின் மீது முட்டிக் கொண்டான். மறுபடி கேலியான அவளுடைய சிரிப்பொலியைக் கேட்டு, அவன் ஓசைப்படாமல் அவளை நோக்கி விரித்த கைகளுடன் சென்றான். அவள் பாய்ந்து தப்புவதற்காக முயன்றபொழுது அவனுடைய விரித்த இரு கைகளுக்கிடையேயும், வகையாகச் சிக்கிக்கொண்டாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்வதற்காகத் திமிறினாள். ஆனால் வலிமை மிகுந்த அவனிடம் அவள் அடங்கிப்போக நேர்ந்தது. அவளை இறுக்கியணைத்தபடியே உதட்டுடன் உதட்டைப் பொருத்தினாள். கதகதப்பான அவளுடைய உதடுகள் அவனுடைய உதடுகளில் அழுந்திக் கொண்டன. அவளுடைய விரிந்த கூந்தல் அவன் தோளிலும் மார்பிலும் புரண்டது. அவளை அப்படியே தூக்கி மெதுவாகத் தரையில் படுக்க வைத்தான். அவள் அசையவில்லை. எழுந்து தப்பித்து ஓடவில்லை. பேச்சு மூச்சில்லாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கிடந்தாள். அவள் உள்ளத்துக்குள்ளே எழுந்து எரிந்துகொண்டிருந்த ஆசைத்தீ, அவளை மீறிக் கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்துவிட்டது. அவளுடைய இதயம் வேகவேகமாக அடித்துக் கொண்டது. அப்படியே ஒருவருடன் ஒருவர் ஒன்றிக்கிடந்த அமைதியான நிலையில் அரைமணி நேரம் கழிந்தது. அதன் பிறகு, மனநிறைவு பெற்ற உமார், அவளுடைய இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

இப்படியே, அரை குறையான தன்வசமிழந்த நிலையில் கிடக்கும் இந்தப் பெண்ணைப்போல் வேறு ஒருபெண் இருந்ததில்லை; உமார் எத்தனையோ, ஆட்டக்காரப் பெண்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் இந்த அரபியப் பெண்ணைப்போல் அவனை நேசித்தவர்கள் யாருமில்லை!

அயீஷாவைப் பொறுத்த வரையில் இந்த மாய இரவு, அவளுடைய குணசித்திரத்தையே மாற்றியமைத்து விட்டது. உறவற்ற நிலையில் பேசாமல் அமைதியாக இருந்துவந்த நிலை அடியோடு மாறிவிட்டது. இந்தத் திடீர் மாறுதலால், அவள் ஒரு சிறு குழந்தைபோலத் தன் கைகளால் தாளம் போட்டுக்கொண்டு, இனிமையாகப் பாடத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டே, அவனுடைய கையைப்பிடித்து இழுத்துக் குளத்தில் குளிக்க வரும்படி கேட்டுக் கொண்டாள். அவள் தன்னுடைய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருக்கும் போது நட்சத்திர வெளிச்சத்தில் அவளுடைய மென்மையான உருவ அமைப்பையும் அதன் அழகையும் அவன் தெளிவாகக் காணமுடிந்தது. கதகதப்பாக இருந்த அந்த நீருக்குள்ளே அவனுடன் இறங்கிய அவள், மகிழ்ச்சியுடன் அவன்மேல் தண்ணீரை வாரியிறைத்தாள். அவள் அந்தக் குளத்திற்குள்ளே இறங்கியதும் அந்தக் குளமே உயிர்பெற்றது போல் இருந்தது. அந்த இரவும் - குளத்து நீரும் - ரோஜாப்பூக்களின் மணமும் எல்லாம் அவளுடையதாகி விட்டன. எல்லாம் அவளால் உயிர்பெற்றன.

“எத்தனை இன்பம் ஒ அல்லாவே! என் தலைவருடன் இருப்பதில் எத்தனை இன்பம்!” என்று மெதுவாகக் கூறினாள்.

ஆனால் கரையில் ஏறி, ஈரத்தைத் துடைத்துக் கொண்டு, உடையணிந்து கொண்டதும், அயீஷா ஏதோ ஒரு மாதிரியாக மாறிவிட்டாள். ஏதோ ஒன்றைக் கவனித்துப் பயந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிக் கொண்டிருந்தாள்.

வந்துவிட்டாயா? என்று சீறிக்கொண்டே, பக்கத்தில் இருந்த்வ்ன் கையில் இருந்த வாளை யுருவித் திருப்பிப் பிடித்துக்கொண்டு அவன் முதுகிலே, இரத்தக்காயம் ஏற்படும் வரை அடி அடியென்று அடித்து விட்டான். முக்கி முனகிக்கொண்டே, இஷாக் பொறுமையுடன் அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டான். ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் நேரத்தில் அவன் குறுக்கிட்டது தவறு என்பதை அவன் உணர்ந்தான். அவன் பொறுமைக்கு இது ஒரு காரணம். மற்றொரு காரணம், இப்பொழுது, அடிக்கிற தலைவர், ஒரேயடியாக அடித்துவிட்டால் பின்னால் தன்னை மன்னித்துத் தன் காலை வாங்கும்படி உத்தரவிட மாட்டார் அல்லவா? தங்களுடைய ஆயுதங்களை ஒளித்து மறைத்துக் கொண்ட மற்ற காவல்காரர்கள், இஷாக் நன்றாக அடிபடட்டும் என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இஷாக்கை அடிக்கிற நினைப்பில், தங்களை அடிப்பதை மறந்துவிடுவார் என்பது அவர்கள் எண்ணம். அவர் அடித்தாலும் கூடத் தாங்கள் வந்து பார்த்தது தங்கள் கடமை என்றும் சரியானதே யென்றும் நினைத்தார்கள். ஆனால், சொல்லவில்லை.

சிறிது நேரத்தில், தன் கத்தியைக் கீழே இறக்கிவிட்டுச் சிரித்தபடியே, “மூளையில்லாத மடையர்களே, இனிமேல் இந்தத் தோட்டமும் அந்தப்புரமாகிவிட்டது. ஆண்கள் யாரும் நுழையக்கூடாது. நினைவு வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

இஷாக் தன் உதட்டில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, “தலைவரே, அப்படியானால், ஹீசேன், அலி, அகமது முதலிய தோட்டக்காரர்கள் என்ன செய்வது? தோட்டவேலை பார்க்க வேண்டுமே!” என்று நடுங்கியபடி கேட்டான்.

“அவர்கள் இல்லாமலே, தோட்டம் நன்றாக இருக்கும். அவர்களை குதிரை லாயத்தில் ஈயடிக்கச் சொல்லு” என்றான் உமார்.

அவர்கள் சென்று மறைந்தவுடன், தான் மறைந்திருந்த இடத்தைவிட்டு அயீஷா வெளியே வந்தாள். “உங்கள் வேலைக்காரர்கள் சோம்பேறிகளாயிருந்தது நல்லதாய்ப் போயிற்று. சுறுசுறுப்பானவர்களாயிருந்து, கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்தார்களானால்... என்று கூறிச்சிரித்தாள் அயீஷா.