உமார் கயாம்/32. வாளாயுதம் நீதி வழங்கிய காட்சி!
நிசாம் அல்முல்க் அவர்களுக்கு நேர் எதிராக ரத்தினக்கம்பளத்தில் உமார் உட்கார்ந்திருந்தான். அரசருடைய வானநூற் கலைஞன், உலக அமைப்பாளரான நிசாமிடம் எதிர்த்துப் பேசியது இதுதான் முதல் தடவை. அந்த வியப்பிலிருந்து அவர் இன்னும் மாறுதல் அடையவில்லை.
“நம்முடைய முன்னேற்றப் பாதையிலே நீ ஏன் மறுப்பு என்கிற கல்லைத் தூக்கி யெறிந்தாய்?” என்று நிசாம் திரும்பத் திரும்பக் கேட்டார்.
விஷயத்தை அறிந்து கொள்வதில் அவசரப்பட்டாலும் நிசாம் அமைதியாகவே விளங்கினார். சேல்ஜக் சாம்ராஜ்யத்தைக் கிட்டத்தட்ட இரண்டு தலை முறைகளாக அவர் பொறுப்புடன் நிர்வகித்து வளர்த்து வருகிறார். பாலைவனப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சீனத்துப் பெருஞ்சுவர் வரையிலும், கான்ஸ்டான்டிநோபிள் கோட்டை கண்ணுக் கெட்டுந்துரம் வரையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கால்வாயின் குறுக்காக அவருடைய உழைப்பின் பயனாக உருவான சாம்ராஜ்யம் பரந்து கிடந்தது. வடக்குப் பனிப் பிரதேசத்திலிருந்து தெற்குப் பாலைவனப் பிரதேசமான அரேபிய நாடு வரை யிருந்தது.
மெலிந்த தன் விரலில் இருந்த முத்திரை மோதிரத்தைச் சுற்றித் திருப்பிக்கொண்டே நிசாம் பேசினார். அரசர் உலகமென்னும் குடும்பத்தின் தந்தை போன்ற நிலையில் இருப்பவர். அவருடைய செயல்கள் அவருடைய பதவிக்குத் தகுந்தபடி இருக்க வேண்டும். அவருடைய போராடுந் திறமை வேற்று மதத்தைச் சேர்ந்த மக்களினங்களையும் அவர்களுடைய நாடுகளையும் இஸ்லாமியக்கொடியின் கீழ்க் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
அவரடைந்த வெற்றிகள் தாய்நாட்டில், அவருடைய நிலையை உயர்த்தியிருக்கின்றன. இவ்வளவு இருப்பினும், சுல்தான் மாலிக்ஷா நாகரிக மில்லாத துருக்கியன் ஒருவனின் பேரனே. அவருடைய நாற்பது லட்சம் படைவீரர்கள் படைகள், அமைதி தவழும் இந்தக் கொரசான் நாட்டு நகரங்களிலே தங்குமானால், மக்கள் அவர்களால் துன்புறும்படி நேரிடும். மேலும், போர்க்களத்திலே பயன்பட்ட முரட்டு வீரம், நாட்டுப்புறத்து மக்களைத் துன்புறுத்தத் தொடங்கிவிடும்.
இந்தப் பட்டாளம் என்பது என்ன? வடக்கில் உள்ள துருக்கியர்களும், போருக்காகவே அடிமைகளாக வளர்க்கப்பட்ட துருக்கியருக்குப் பிறந்த கெளலாமியர்களும் ஜார்ஜியர்களும், துருக்கோமியரும், காட்டுமிராண்டி அரபியரும் ஆகியோர் அடங்கிய கூட்டமே நம்முடைய சேனைப்பட்டாளம். இதிலே கொரசானியர் சிலரும், மிகக் குறைந்த அளவு பாரசீகர்க அல்லது பாக்தாது அராபியர்கள் கலந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டு, இந்தச் சேனைகளெல்லாம் வந்து வேலையில்லாமல் நம்மிடையே தங்கநேரிட்டால் வெறிபிடித்த அவர்களால் சும்மாயிருக்க முடியாது. உள்நாட்டுக் குழப்பம் உண்டாகி, நாடு பாழடைந்துவிடும். ஆகவேதான் அவர்களை எப்பொழுதும் போரிலேயே ஈடுபடுத்தி வைக்க வேண்டும். கீழ்த் திசையில் போர் முடிவுபெற்று விடுமானால், மேற்றிசையில் தொடங்கவேண்டும். அல்லா அருள்புரிந்தால் மேற்கேயுள்ள இரண்டு அருமையான பரிசுகள் நடிக்குக் கிடைக்கும். அந்தக் கான்ஸ்டாண்டி நோபிலும், எகிப்தும் ஆகிய இரு தேசங்களும் நம் வசமாகிவிட்டால் எவ்வளவு பெருமையாக இருக்கும்?
நிசாமின் கூர்மையான அறிவினால் தீட்டப்பெற்ற இந்தத் திட்டம் உமாரைத் திடுக்கிட வைத்தது. இஸ்லாத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த காலிப்பின் நாட்டையும், சீசர்களின் கடைசிப் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் ஓரிடத்தையும் வளைத்துக் கொள்ள ஒரு புனிதப்போர். இதே புனிதப் போரினால், தன் கண் முன்னே ஜெருசலம் வீழ்த்தப் பட்டதை உமார் பார்த்திருக்கிறான். காய்ந்து போன தோலுடன் கூடிய உருவம்போலத் தளர்ந்து காணப்பட்ட நிசாம், வெல்லப்பட முடியாத அதிகாரத்தின் ரசவாதியாக மனிதர்களின் விதிகளையெல்லாம் அடக்கியாளும் மாயவித்தைக்காரராகத் தோற்றமளித்தார். இந்தத் தோற்றம் சற்று நேரமே இருந்தது. பிறகு மாறிவிட்டது. ஒவ்வொரு படையெடுப்பிலும் ஏற்படக்கூடிய உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஈடுகட்டுவதற்கு மறுபடியும் ஒரு படையெடுப்பு நடத்தித் தீரவேண்டும். வெற்றியைத் தேடித்தரும் அமைப்பான செல்ஜுக் சேனைக்கு நிசாம் அவர்களுடைய புதிய சாம்ராஜ்யத்திலே இடமில்லை. அப்படியானால், போரிட்டுக் கொள்ளையடித்தே வாழ்க்கை நடத்தும் ஆயிரக் கணக்கான துருக்கியப் படைத்தலைவர்களுக்கும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போர் யானைகளுக்கும் வழி என்ன?
“ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைத் தாங்கள் சேனாபலத்தின் உதவியால் உண்டாக்கி விட்டீர்கள். ஆனால், அந்த சாம்ராஜ்யத்தை நிலைக்கவைத்துக் காப்பாற்றுவ்தற்கு, இன்னும் பெரிய சேனை தேவைப்படுகிறது. அந்தப் புதிய சேனைக்குத் தீனிபோடப் புதிய புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் இதன் முடிவுதான் என்ன?”
உமார் இந்தக் கேள்வியைக் கேட்டதும் நிசாம் அவனைத் திடுமென்று நிமிர்ந்து பார்த்தார். தன்னுடைய வான்நிலை ஆராய்ச்சியையும், எப்பொழுதாவது, எவளாவது ஒரு பெண்ணையும் திராட்சை மதுவையும் தவிர வேறு எதையும்பற்றி உமார் சிந்திப்பதில்லை என்று நிசாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தார். உமாரும், மாலிக் ஷாவும் ஒத்து வருகிறவரையிலே நிசாமின் திட்டங்கள் எந்தவிதமான இடையூறுமின்றி நடக்கமுடியும். ஆனால் மாலிக் ஷா, போர்க்களத்திலிருந்து கொரசானுக்குத் திரும்பி வந்தால் அவர் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்தத் தொடங்கிவிடுவார். அப்படி நேர்ந்தால் நிசாமின் அதிகாரம் குறைய நேர்ந்துவிடும். ஆகவேதான், அவர் அந்த சாம்ராஜ்யத்தின் நிர்வாகப் பொறுப்பு என்றென்றும் தன்கையிலேயே இருக்க வேண்டுமென்றும், சுல்தான் மாலிக்ஷா தொடர்ந்து படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அவ்வாறே தன் விருப்பப்படியே நடக்கவேண்டும் என்றும், அவ்வாறு நடக்குமென்றே ஆண்டவன் விதித்திருப்பதாகவும் அவர் உறுதியாக நம்பினார்.
“சுல்தான் அவர்கள் இந்தப் படையெடுப்புகளை நடத்த வேண்டுமென்பதும் நாம் இந்த நாடுகளை ஆளவேண்டு மென்பதும் ஆண்டவனுடைய திருவுள்ளப்படி நிச்சயிக்கப் பட்ட கட்டளையாகும்” என்று நிசாம் கூறினார்.
தன் கீழேயிருந்த இரத்தினக் கம்பளத்தின் நெசவமைப்பைப் பார்த்துக் கொண்டே “கிரகங்களின் பலனைப் பற்றி நான் சுல்தானுக்குப் பொய் கூறவேண்டு மென்பதும் திருவுள்ளக் கட்டளைதானோ?” என்று உமார் கேட்டான். அவனுடைய மனதில் ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் அதோடு தனக்கு என்று ஒரு திடமும் கூடவே வந்ததை உமார் அறிந்து கொண்டான்!
உமாருடைய கேள்விக்கு பதிலுக்குத் தானே ஒரு கேள்வி கேட்டார் அவர்.
“நட்சத்திரங்களைக் கொண்டு ஒரு மனிதனின் விதியையறிந்து கொள்ளலாம் என்பதை நீ நம்புகிறாயா?” என்றார் நிஜாம்.
“இல்லை.” என்றான் உமார்.
“நானும்தான் நம்பவில்லை” என்று புன்சிரிப்புடன் கூறிய நிசாம் இனிமேலாவது உமார் தன் ஏற்பாட்டுக்கு ஒத்து வருவானா என்று எண்ணினார். “நட்சத்திரங்களால் காணப்படும் பலன் பொய்யாக இருக்குமானால் சுல்தான் மாலிக்ஷா அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல பலனை நீ ஏன் கூறக்கூடாது? அவருக்கு எழுத நீ ஏன் மறுக்கவேண்டும்?” இப்படிக் கேட்ட நிசாமுக்கு, சில நாட்களாக அவரைக் குழப்பி வந்த ஒருவிஷயம் நினைவுக்கு வந்தது. உடனே அதையும் கேட்டார்.
“காசார்குச்சிக்கிலிருந்து நீ அனுப்பிய கடிதம் என் கைக்குக் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ஹசைன் இபின் சாபா என்ற ஒரு மனிதன் என்னிடம் வந்தான். வருங்காலத்தையறிந்து சொல்லக் கூடிய திறமையுள்ளவன் என்று கூறி, இன்னும் சிலநாட்களில் தங்களுக்கு, அரசருடைய வானநூற் கலைஞரிடமிருந்து “முடியாது” என்ற ஒரே சொல்லுடன் ஒரு கடிதம் வரும் என்று கூறினான். இந்த ஹாஸான் என்பவன் யார்? அவனிடம் நீ இரகசியங்களைக் கூறவேண்டிய காரணம் என்ன?
“அவன் ஒரு புதிய மதபோதகன்! ஜெருசலத்தில் அவன் என்னுடன் பேசினான். ஆனால் அந்தச் செய்தி அனுப்பப்படுவதற்கு முன்னால், நான் யாரிடமும் அதைப்பற்றிக் கூறவில்லை” என்று உமார் கூறினான்.
“இருக்கமுடியாது காசர் குச்சிக்கிலிருந்து இங்கு கடிதம் கொண்டு வந்த குதிரை வீரன் இங்குவந்து சேர எட்டுநாள் ஆயிற்று. ஆனால் அவன் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னாலேயே ஹாசானுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது”.
யாரேனும், ஒவ்வோர் இடத்திலும் வேறுவேறு குதிரைகளைப் புதிது புதிதாக மாற்றிக்கொண்டு வெகு வேகமாக வந்தால் கூட நான்கு நாட்களில் அவ்வளவுதூரம் வருவ தென்பது முடியாத காரியம். தான் செய்தியனுப்பிய ஆள் ரே நகரம் வந்து சேருவதற்கு முன்னாலே அந்நகரிலேயுள்ள யாருக்கும் தன்னுடைய செய்தியைப்பற்றித் தெரிந்துவிடும் என்று நினைக்கவே முடியாது. தன்னுடைய செய்தி காற்றிலே பறந்து வந்திருந்தால் ஒழிய, அது அவ்வளவு சீக்கிரம் இங்கே தெரியும் என்பதில் பொருள் இல்லை. உமார் தன் இடுப்பில் இருந்த வெள்ளிக் குழாயை நினைத்துக் கொண்டான். இந்தக் குழாயை ஒரு புறா கொண்டு வந்திருக்கிறது. அது போலவே, தான் நிசாமுக்கு அனுப்பிய செய்தியை ஒரு புறாதான், நான்கே நாட்களில் காசர்கச்சிக்கிலிருந்து ரே நகருக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.
அப்படியானால் யாரோ தன்னுடைய வீட்டிலே தன்னை உளவு பார்த்திருக்கிறார்கள். உளவறிந்து இரண்டு முறையும் ரே நகருக்குச் செய்தியனுப்பி யிருக்கிறார்கள். அயீஷா வாக இருக்குமா? அல்லது இஷாக்கா? அவர்கள் இரண்டு பேருமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லியிருக்கிறார்களே!
“இவ்வளவு தூரத்தை முன்றே நாட்களில் ஒரு புறா கடந்து வர முடியும்!” என்று உமார் கூறினான்.
உமார் எதைப்பற்றிக் கூறுகிறான் என்பதைக் கவனித்துணராத நிசாம், தன் திட்டத்திலேயே குறியாக, “அப்படியானால், உமார்! இப்பொழுதே சுல்தானுக்கு எழுது. போரை நிறுத்திவிட்டு வந்தால் ஆபத்து நேரிடும் என்று உடனே எழுதிக்கொடு. சாமர்கண்டிற்கு, ஒரு புறாவின் மூலம் இந்தச் செய்தியை அனுப்புவோம்.”
“ஆபத்து ஒன்றுமில்லையே! போர் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று நிசாம் விரும்புகிறார் என்று எழுதுகிறேனே!” என்றான் உமார் புன்சிரிப்புடன்!
“அட, ஆண்டவனே! உமார் நீ என்ன குழந்தை மாதிரி விளையாடுகிறாய்?”
“அப்படியானால், நான் உண்மையாகச் சொல்கிறேன். அப்படியும் எழுத மாட்டேன். இப்படியும் எழுத மாட்டேன். உண்மையையும் எழுத மாட்டேன்; பொய்யையும் எழுத மாட்டேன்; எதையுமே நான் எழுதப் போவதில்லை”.
அந்தக் கடைசி வாக்கியம் நிசாமின் காதில் அறைவதுபோல விழுந்தது. வலைபோல் பின்னிக் கிடந்த அவருடைய முகச் சுருக்கங்களுக்கு மத்தியின் இருந்த கண்களால் அவனை உற்று நாக்கினார். தன் கைகளால் முழங்கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, “என்னிடமா இப்படிச் சொல்லுகின்றாய்?” என்று கூவினார்.
“சொன்னது சொன்னதுதான்; சொல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அமைதியாக உமார் பதில் அளித்தான்.
சிறிதுநேரம் நிசாம் பேசாமல் இருந்தார். “சாதாரண கந்தைத் துணியுடன் திரிந்த மாணவனான உன்னை இந்த சாம்ராஜ்யத்தின் சிறப்புக்குரிய மூன்றாவது தகுதிக்கு நான் உயர்த்திவிட்டேன். புதிய பஞ்சாங்கம் அமைத்தபோது, முல்லாக்கள் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் காத்தவன் நான்! உன்னுடைய ஆராய்ச்சியிலே உதவி செய்வதற்குப் பெரும் பெரும் பேராசிரியர்களையெல்லாம் கொடுத்தேன். இப்பொழுது உனக்குச் சொந்தமாக எத்தனை அரண்மனைகள், எவ்வளவு சொத்துக்கள்! எவ்வளவு பொன் நாணயங்கள் இருக்கின்றன. அத்தனையும் யாரால் வந்தன? இப்பொழுது நீ உண்மையே பேசுவேன் என்கிறாயே, இதற்குமுன் சுல்தான் மாலிக்ஷாவிடம் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாதா? அதெல்லாம் போகட்டும், நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உண்மையாகப் பதில் சொல். என்னுடைய திட்டங்களைச் சிதைக்க வேண்டும் என்று நீ எண்ணுவதற்குக் காரணம் என்ன?”
“மாலிக்ஷா அவர்களைப் புதியபுதிய படை யெடுப்புகளில் ஈடுபடுத்தி, அவரை ஒரு படைத் தளபதியின் நிலையில் வெகு தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டால் தாங்களே இந்த சாம்ராஜ்யத்தை அரசாளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறீர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதுதான் உண்மை!”
நிசாம் ஒரு துணியை யெடுத்துத் தன் உதடுகளைத் துடைத்துக் கொண்டார். அவருடைய கை விரல்கள் நடுநடுவென்று நடுங்கின.
“உன்னைப்போல் இரண்டு மடங்கு வயதுடைய நான், என்னுடைய ஆயுள்காலத்திலே எனக்காக உழைக்கவில்லை யென்பதையும் இஸ்லாத்திற்க்காகவே பணிசெய்து வருகிறேன் என்பதையும் நீ மறுக்கிறாயா?”
“அது எனக்குத் தெரியும்” என்று உமார் கூறினான்.
“உன்னுடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. அரசாங்க நிதியிலிருந்து உனக்குப் பதினாயிரம் பொன்கொடுக்கச் சொல்கிறேன். அது போதுமா!” என்று நிசாம் கேட்டார்.
“அது போதாது! சுல்தான் முகமதுவின் தங்கச் சிங்காதனத்தைக் கொடுத்தாலும் எனக்குப் போதாது”
“பதினையாயிரம் பொன் தரச் சொல்கிறேன்.”
எதிரேயிருந்த வயது முதிர்ந்த அந்த மனிதனை உமார் நிமிர்ந்து பார்த்தான். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துத் தன்னை வசப்படுத்த எண்ணும் சிறு மதியையும் நினைத்துப் பார்த்தான். “நிசாம் அவர்களே! இது நாள் வரையிலும் தாங்கள் எனக்கு உதவி செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், தாங்கள் என்னை விலைக்கு வாங்கி விடவில்லை என்பதையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். என்னை நானே விற்றுவிடவும் நான் எண்ணவில்லை.”
“அப்படியானால் அக்ரோனோசிடம் போ! மத விரோதிகளிடம் போ! எங்கேயாவது நீ விரும்புகிற இடத்துக்குப் போ! என்னுடைய ஆதரவை இனிமேல் எதிர்பார்க்காதே! என்னுடைய உப்பைத் தின்பவர்கள் என்னைப் போலவே இஸ்லாத்திற்குப் பணி செய்பவர்களாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள் என் முகத்திலே விழிக்கக் கூடாது” என்று சொல்லிக் கதவை நோக்கி கையைக்காட்டினார். உமார் எழுந்து, திரும்பிச் சென்றான். அவன் கதவின் அருகில் செல்லும்போது, நிசாம். ஏதோ சொல்வது போலிருந்தது. ஆனால் அவர் அவனைத் திரும்ப வரும்படி கூப்பிடவில்லை. தொழுகை விரிப்பின்மேல் மண்டியிட்டு மெக்காவை நோக்கித் திரும்பி, அல்லாவின் பெயர்கள் அத்தனையையும் கூறித் தொழுது கொண்டிருந்தார்.
“சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிக் கொண்டே உமார் வெளியேறினான்.
தன் வாழ்வுப் பாதைக்கு வழியாயிருந்த மற்றொரு கதவும் முடிக்கொண்டதை உமார் உணர்ந்தான். மீண்டும் திறக்க முடியாதபடி அந்தக் கதவு முடிக் கொண்டு விட்டது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காமல் நாற்சந்தி வழியாக நடந்து கொண்டிருந்தான் உமார். அவனுக்கருகிலே ஒரு மனிதன் கூப்பாடு போட்டான். திடுமென்று ஏற்பட்ட அந்தக் குழப்பத்தில் உடல்கள் உருண்டன. வளைந்த வாள்களின் ஒளி வெயிலில் தகதகத்தது. “மூலாஹித்துக்கள்! மத மறுப்புக்காரர்கள்!அடி, கொல்லு!” குரல்கள் கூக்குரலிட்டன. வெள்ளையங்கியும், சிவப்புக் கால்சட்டையும் அணிந்திருந்த ஓர் உருவம் தன் எதிரிலே வீரர்களின் மத்தியிலே சிக்கிக் கொண்டிருப்பதையும், அந்த மனிதனின் கழுத்திலேயிருந்து ரத்தம் பொங்கி வழிவதையும், வலையில் பிடிபட்ட மிருகம் போல அவன் வாய் திறந்து மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதையும் கண்டான்.
ஒரு கை அவன் முகத்தை நோக்கி வந்தது. விரல்கள் முக்கைப்பிடித்து ஆட்டிப் பின்னுக்குத் தள்ளின. வளைந்த கத்தியொன்று மறுபடியும் அவன் கழுத்தில் பாய்ந்து தலையை வேறுபடுத்தியது. துண்டுபட்ட அந்தத் தலை எல்லோருக்கும் தெரியும்படி உயரத்தில் தூக்கிக் காண்பிக்கப்பேட்டது.
இன்னொரு வெள்ளை உருவம் சந்தியின் குறுக்கே ஓடியது. தடுமாறிய அந்த உருவத்தை விரட்டிச் சென்றவர்கள் சூழ்ந்து, கொண்டார்கள். வாட்கள் அந்த உருவத்தின் மேல் பாய்ந்தன. அதன் வெள்ளை யாடைகள் செந்நிறமாக மாறின.
கொல்லுவதற்காகவே திடுமென்று கூடிய அந்தக் கூட்டத்தின் மத்தியிலே தாடியுடன் நின்ற முல்லா ஒருவர் தன் கைகளை யுயர்த்தி “மதமறுப்புக் காரர்கள் ஒழிக!” என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுவிட்டு ஒரு பத்து வயதுச் சிறுவன் அழத் தொடங்கினான். அந்த இஸ்லாமிய மதகுரு அந்தச் சிறுவன் இருந்த பக்கம் திரும்பி, “மதநம்பிக்கையுள்ளவர்களே, ஏழாவது கொள்கைக் காரர்களின் வாரிசு ஒன்று இதோ இருக்கிறது” என்றார்.
பயந்து கத்திக் கொண்டே, அந்தப் பையன் ஓடினான். உமாரைக் கண்டவுடன், அங்கே பாய்ந்து வந்து, அவனுடைய அங்கியைப் பிடித்துக் கொண்டு, “குவாஜா அவர்களே! இளவரசே! அவர்கள் என்னைத் துன்புறுத்தாமல் காப்பாற்றுங்கள்!” என்றான்.
கையில் கத்தியுடன் பாய்ந்து வந்த அரைத்தாடி வளர்ந்த இளைஞன் ஒருவன் அழுது கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பிடித்தான். உமார் அவனை அப்புறத்திலே தள்ளிவிட்டு, “என்ன இது? ரே நகரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளையா வேட்டையாடுகிறீர்கள்! எட்டி நில்!” என்று உமார் அதட்டினான்.
கத்தியுடன் நின்ற அந்த இளைஞனின் பக்கத்திலே கோபத்தால் முகத்தில் சிவப்பேறிய அந்த முல்லா தோன்றினார். “குவாஜா உமார் இபின் இப்ராஹீம் அவர்களே! அமைச்சர் நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படிதான், மத விரோதிகளான இந்த ஏழாவது கொள்கைக் காரர்கள் மரண மடைகிறார்கள். வாளாயுதம் என்னும் நீதி, மதமறுப்பு என்னும் நூலைத் துண்டிக்கிறது. இதிலே நீங்கள் தலையிடாதீர்கள்!” இவ்வாறு அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் தன் கத்தியால் பயந்து கொண்டிருந்த அந்தப் பையனைத் தாக்கினான்.
அதே சமயத்தில், உமாரின் பின்னாலிருந்து அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்ட இரண்டு வலியகைகள் அவனைப் பின்னுக்கு இழுத்தன. “வந்துவிடு அல்லது உன்னுடைய உயிரும் பறிக்கப்பட்டுவிடும், விரைவில் வா” என்று அக்ரோனோஸ் அவன் காதுக்குள்ளே சொல்லிக்கொண்டிருந்தான். இதற்குள் அந்தப் பையன் வயிற்றிலே பலமுறை குத்தப்பட்டு, அவனுடைய அழுகுரல் படிப்படியாகக் குறைந்துபோயிருந்தது. அக்ரோனோஸ் அவனை இழுத்துக் கொண்டே, மெதுவாக நடந்து கொண்டே “என்னிடம் வியாபார விஷயமாகப் பேசுவதாக நடித்துக் கொண்டு வா” என்றான்.
உமாருக்கு, நாற்சந்தியிலே நடக்கும் குழப்பத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையே குதிரையின்மேல் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒரு பருத்த மனிதனைக் கவனித்தான்.
அவ்வளவு தூரத்தில் இருந்தும் கூட, நீலத் தலைப்பாகையுடன் இருந்த நிசாமின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் அவன் என்பதை உமார் அறிந்து கொண்டான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சந்திலே தான் நிற்பதை உமார் கண்டான். அவனுக்கு எதிரே சற்று தூரத்தில், ஒரு குயவன் சக்கரத்தில் பானைகள் செய்து கொண்டிருந்தான். மீண்டும், மீண்டும், தன் கைகளுக்கிடையே இருந்த களிமண்ணுக்கு அந்தக் குயவன் உயிர் கொடுத்துப் பாண்டமாக உருவாக்கிக் கொண்டிருந்தான்.
ஆனால், அந்த நாற்சந்தியிலே மனிதப் பாண்டங்களை ஒளிவீசும் உருக்குக் கத்திகள் உடைத்துக் கொண்டிருப்பதையும் புழுதி மண்ணிலே குருதி விழுந்து கலப்பதையும் உமார் கண்டான்.
“என்னோடு, மெதுவாக நடந்து வாருங்கள் ஒற்றர் தலைவன் நம்மைத் தொடர்ந்து வருகிறான்” என்று அக்ரோனோஸ் கூறினான்.
அவர்களுக்குப் பின்னாலே ஒரு குதிரை, மேலே போகாமல், சண்டித்தனம் செய்து கொண்டு நின்றது. அதன் கடிவாளச் சங்கிலிகளின் ஓசை கேட்டது. கடைகளில் இருந்த மனிதர்கள், கூட்டங் கூட்டமாக நாற்சந்தியை நோக்கி ஓடினார்கள். “அந்த நாய்!” என்று உமார் கத்தினான்.
“மெதுவாகப் பேசுங்கள்! அந்த நாய் நிசாமின் நாய் தாங்கள் நிசாமின் ஆதரவை இழந்து விட்டீர்கள்” என்று அக்ரோனோஸ் எச்சரித்தான்.
“நாங்கள் சச்சரவிட்டுக் கொண்டால் என்ன? நான் அவருடைய பகைவன் அல்ல. நான் இந்த நாய்க்குப் பயப்பட வேண்டியதில்லை.”
“ஆனால், நான் இந்தக் கும்பலுக்குப் பயப்பட வேண்டியருக்கிறதே! இப்படியொரு கும்பல் முல்லாக்களால் தூண்டிவிடப்பட்டு, இரத்த வெறி பிடித்துத் திரிவதை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?”
கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களின் முதுகுப்புறமாகக் குனிந்தபடி, உமாரை இழுத்துக் கொண்டு சென்ற அக்ரோனோஸ் ஒரு கம்பளி வியாபாரியின் கடைக்குள்ளே நுழைந்தான்.
அந்த வியாபாரி, வெளியில் நடக்கும் குழப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த ஒரு முட்டையைச் சுட்டிக் காட்டிய அக்ரோனோஸ், “ஹபி, எங்களுக்கு ஏழு வேண்டும்” என்றான்.
எவ்விதமான பதிலும் பேசாமல் கடைக்காரன் அவர்களைப் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றான்.
ஒரு குறுகிய கதவை மறைத்துக் கொண்டிருந்த ஒரு திரையை இழுத்து, “ஏழு பொருளுக்குரியவர்கள் இந்த நேரத்தில் மதுவருந்தி மகிழ்ந்திருப்பார்கள்” என்று சொன்னான். அவர்கள் உள்ளே நுழைந்ததும் மறுபடி அந்தத் திரையையிழுத்து மறைத்து விட்டான்.
“என் இடுப்பைப் பிடித்துக் கொண்டு இறங்குங்கள். வளைந்து செல்லக்கூடிய படிகள் கிட்டத்தட்ட இருபது இருக்கின்றன” என்று கூறிக்கொண்டு அக்ரோனோஸ் கீழே இறங்கினான். இருளிலே, உமாரும் அவன் பின்னே இறங்கிச் சென்றான். சிறிது தூரம் இறங்கிய பின், அந்த படிகள் வளையும் ஓரிடத்திலே, வெளிச்சம் தெரிந்தது. சுவர் மாடக்குழி ஒன்றிலே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ் அதை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்குப் பலமுறை வந்து போன பழக்கமுடையவன் போல முன்னே நடந்தான்.
குவித்து வைத்திருந்த பொருள்களுக்கிடையேயும், குப்பைக் கூளங்களுக் கிடையேயும், உமாரை அழைத்துச்சென்ற அவன், ஒரு பெரிய கம்பளி முட்டையருகிலே வந்தவுடன், “கொஞ்சம் இதை நகர்த்துவதற்கு உதவி செய்யுங்கள். சிறிது தூரம் நகர்த்தினால் போதும் நாம் என்ன ஒற்றர் தலைவன் போல் பருமனாகவா இருக்கிறோம்?” என்றான்.
“நீதான் என்னோடு இருந்தால் எவ்விதமான ஆபத்தும் இல்லையே! ஏன் இந்த எலி வளைக்குள்ளே போய் ஒளிய வேண்டும்?” என்று உமார் கேட்டான்.
அக்ரோனோஸ் பொறுமையில்லாமல் நிலவறைப் படிகளை நோக்கினான். தான் மட்டுமே அந்த முட்டையை நகர்த்த வேண்டியிருந்தது.
அந்தக் கனத்தைத் தன்னால் தள்ள முடியாது என்றதும் அக்ரோனோஸ் தொடர்ந்து, “குவாஜா உமார் அவர்களே, ஒரு வேளை உங்கள் வீட்டிலேயிருந்தால், நான் பத்திரமாக இருக்கலாம்! ஆனால் சற்று முன்னே உங்கள் காலடியிலே சரணமடைந்தானே அந்தச் சிறுவன் தப்பினானா?” மதக் கலகத்திலிருந்து தப்பியோடுவது என் வாழ்வில் இது முதன் முறையல்ல. மேலும், டுன்டுஷ் என்னை எப்படியாவது பிடித்துவிடவும் என் மீது ஏதாவது குற்றம் சுமத்தி உடனடியாகக் கொன்று விடவும் காத்துக் கொண்டிருக்கிறான். இதை நான் உறுதியாகச் சொல்லமுடியும். என்னைக் கொன்று விட்டு என்னுடைய கடையில் உள்ள பொருள்களையெல்லாம் கொள்ளையடித்து விடுவான். தங்கள் பொருள்களும் அங்கேதான் இருக்கின்றன. தாங்கள் தயவுசெய்து என் பின்னே வாருங்கள்! இப்பொழுது இந்த மூட்டையை, இந்தக் கயிற்றைக் கொண்டு சுவர் அருகில் இழுத்து மறைக்க உதவி செய்யுங்கள்” என்றான்.
கம்பளி மூட்டை மறைத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சென்ற ஒரு குறுகிய வழியில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நின்று கவனித்த பிறகு அக்ரோனோஸ் உமாரை அழைத்துக் கொண்டு சிறுக சிறுக உயர்ந்து கொண்டே சென்ற அந்தப் பாதை வழியாக மூடப்பட்டிருந்த கதவுக்கு வந்து சேர்ந்தான். உடனே, கொஞ்சம் கூடத் தயங்காமல் அந்தக் கதவைத் திறந்து அதன் அருகில் இருந்த ஒரு பரணில் மெழுகுவர்த்தியை வைத்தான்.
இதமான குளிர்ச்சியும், மதுவின் மணமும் பொருந்திய ஒரு நிலவறைக் குள்ளே தாங்கள் செல்வதை உமார் உணர்ந்தான். சுவர் ஒரமெல்லாம் சிறிய பீப்பாய்களும், பெரிய பீப்பாய்களுமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த இடத்தில் ஒரு விரிப்பின் மேல் ஆறு மனிதர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவிர்கள் அருகிலே விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸின் பக்கம் சாதாரணப்பார்வையுடன் திரும்பிய அவர்களின் கண்கள், உமாரைக் கருத்துடன் ஆராய்ந்து பார்க்கத் தொடங்கின.
நீண்ட சலாம் ஒன்று செய்து விட்டு பணிவுடன், அக்ரோனோஸ் விலகிக் கொண்டான், கல்லூரிப் பேராசிரியர் போலத் தோன்றிய ஒருவர் உமாரை வரவேற்க முன்வந்தார்.
“வருக! வருக! நட்சத்திரங்களின் தலைவரே! அழித்து ஒதுக்கப் பெற்ற இந்த ஆத்மாக்களின் கூட்டத்திற்கு வருக!
“இன்று எங்கள் ஒவ்வொருவருடைய தலைக்கும் விலை கூறப்பட்டிருக்கிறது” என்று இன்னொருவன் விளக்கங் கூறினான்.
உமார் அவர்களை வியப்புடன் ஆழ்ந்து கவனித்தான். ஒருவன், எகிப்திய மொழியின் மிகக் கனமான உச்சரிப்புடன் பேசினான்; ஒருவன் கிழிந்த மேலங்கியணிந்து கையில் ஒரு தடியும் சாமியார்கள் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரமும் வைத்திருந்தான். மற்றவர்கள், நல்ல பணம் படைத்த வணிகர்கள் போல் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டார்கள். அவர்கள் கண்கள், அவர்களுடைய அறிவின் திறத்தையும் நல்ல மனப்பான்மையையும் காட்டுவனவாயிருந்தன. எதையும் செய்து முடிக்கக்கூடிய காரியவாதிகளாகவும் அவர்கள் தோன்றினார்கள்.
“குவாஜா உமார் அவர்களே, வாளாயுதத்திற்குப் பயந்து தற்காலிகமாக மறைந்திருக்கும் இந்த நல்ல கூட்டாளிகளைப் பற்றி தங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன். நான் ஒரு பேராசிரியன். அதோ அங்கே இருக்கிறாரே, அவர் உலகச்சுற்றுப் பிரயாணம் செய்து வருபவர். அவருடைய கதைகளிலே மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவர். அந்த அடுத்த ஆள் சாமியார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. நான்காவதாக இருப்பவர் பருமனாக இருக்கிறாரே அவர்தான் எள்ளு வியாபாரி - அழிக்கப்பட்ட ஆனால் இனிமையான சரக்குகளையும் அவர் வியாபாரம் செய்கிறார். அப்புறத்தில் இருக்கும் இரட்டையர்கள் இஸ்கானிலிருந்து ஓய்வுக்காக வந்திருக்கும் கனவான்கள். சூதாட்டத்தில் மட்டும் அவர்களை நம்பக்கூடாது. அன்பர்களே! இப்பொழுது, உமார் அவர்களைச் சேர்த்து நாம் ஏழு பேராகி விட்டோம். நட்சத்திரப் பேராசிரியர் அவர்கள் நம்முடன் சேர்ந்து, பெருமைப் படுத்துவார்களானால் நாம் இப்பொழுதே புறப்படலாம்.”
“தங்களுடைய பண்பினால் நான் பெருமைப் படுத்தப் படுகிறேன்” என்று உமார் புன்சிரிப்புடன் கூறினான்.
கொரசான் நாட்டிலே, ஒரு புதிய மதத்தைப் போதிக்கக் கிளம்பியிருக்கும் ஏழாவது கொள்கைக்காரர்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் கேள்விப்பட்ட கதைகள் ஒன்றுக்கொன்று முரணாயிருந்தன. ஏழாவது நபி ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கும் நம்பிக்கை யுடையவர்கள் என்று அவர்களைப் பற்றிச் சிலர் கூறினார்கள். புதிய மதத்தைப் போதித்து, இஸ்லாமிய மதத்தை மறுப்பவர்கள் என்று சிலர் கருதினார்கள். மற்றும் சிலரோ, அவர்கள், தேவதைகளின் அருளாலோ, அல்லது துர் ஆவிகள், குட்டிச்சாத்தான் இவற்றின் உதவியாலோ மாயவித்தைகள் செய்பவர்கள் என்று கூறினார்கள். அருகிலே உள்ள நாற்சந்தியிலே தங்களைச் சேர்ந்தவர்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்பொழுது, இங்கே உட்கார்ந்து வேடிக்கை பேசிக் கொண்டிருக்கக்கூடிய இவர்களின் மனிதத் தன்மையைப் பற்றி உமார் வேறு விதமாக நினைத்தான். இருப்பினும், இந்தச் சமயத்தில் அவர்களுடைய போர்வையைக் கிழித்தெறிய முயற்சிப்பது முட்டாள் தனமாகிவிடும் என்று பேசாமல், இருந்தான்.
“ஹாசான் இபின் சாபா உங்களுடன் இருக்கிறானா? நான் அவனைப் பார்க்க வேண்டும்” என்று உமார் கேட்டான். அந்த ஆறு பேரும் ஒரே மாதிரியாக, அவன் பக்கம் திரும்பினார்கள். அந்தப் பேராசிரியர் கூடப்பேசாமல் இருந்தார். பிறகு, அக்ரோனோஸ்தான் முதலில் பேசினான்.
“குவாஜா உமார்! தங்களைப் பார்ப்பதற்காக ஹாசான் மாதக் கணக்காக காத்துக் கொண்டிருக்கிறான்” என்றான் அக்ரோனோஸ்.
அவர்களுடைய பயம் தளர்ந்தது. பேராசிரியர் பேசத் தொடங்கினார். “ஹாசான் இங்கு இல்லை. சில நாளைக்கு முன் அவன் நிசாமைப் பார்க்கச் சென்றான். ஆனால் இப்பொழுது மலைக்குப் போய்விட்டான்!”
நீண்ட நாளைக்கு முன் கேள்விப்பட்ட ஒரு விஷயம், சட்டென்று உமாரின் உள்ளத்தில் பளிச்சிட்டது. முதன் முதலில் பாபிலோன் மணல் மேட்டிலே ஹாசானைச் சந்திக்க நேர்ந்தபோது, அவன் தான் என்றும் உயரமான இடங்களிலேயே உலவுபவன் என்று கூறியிருக்கிறான். ரே நகருக்குப் பின்னால் உள்ள மலைப் பிரதேசத்தில்தான் ஹாசான் பிறந்து வளர்ந்தவன். ஏழாவது கொள்கைக் காரர்களின் தலைவன் பெயர் ஷேக் அல்ஜெபலா என்றும், மலைத்தலைவன் என்றும் மக்கள் பேசிக் கொள்வதையும் கேட்டிருக்கிறான். அப்படியானால் ஹாஸானும், மலைத் தலைவனும்...? உமாருக்கு விஷயம் ஒருவாறு புரிவது போலத் தோன்றியது.
ஹாஸானை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று உமார் விரும்பினான். சந்தித்து, தன்னைப் பற்றிய செய்திகளை, காசா குச்சிக்கில் வேவு பார்த்த ஒருவனிடமிருந்து, தபால் புறாவின் மூலம் அவன் தெரிந்து கொண்டது ஏன் என்று கேட்க வேண்டும். தன்னை அவன் உளவு பார்க்க வேண்டிய காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், டுன்டுஷ் உடைய கண்களின் எதிரில் ரே நகரில் இருந்து வருவது அவனுக்குப் பிரியமில்லை. மீண்டும் தன்னை நிசாம் அழைக்கும்படி ஏற்பட்டு விடுவதையும் உமார் விரும்பவில்லை.
அக்ரோனோஸ், உமார் அருகிலே நெருங்கி வந்து சாய்ந்துகொண்டு, மெல்லிய குரலிலே, ஹாஸான் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். தங்களுடைய கண்ணைக் கவர்ந்த அழகி ஒருத்தி அவனிடம் இருக்கிறாள்” என்றான்.
அற்ப நேரத்துக்குத் தன் கண்களுக்கு அழகாகத் தோன்றிய பெண்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களில் இவள் யாரோ? என்று நினைத்த உமாருக்கு, அயீஷாவின் நினைவு வந்து இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டது.
“சரி நீ என்னை ஹாஸானிடம் அழைத்துச் செல்கிறாயா?” என்று கேட்டான்.
அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த பேராசிரியரின் பக்கம் திரும்பினான் அக்ரோனோஸ் “நாங்கள் அங்கேதான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறிய அவர்கள் பேச்சில் துன்பம் தொனித்தது. “இருப்பினும், முற்றிலும் புதியவரான தங்களுக்கு அது எளிதான வழியல்ல; பாதுகாப்பானதுமல்ல. அரசரின் வானநூற்கலைஞர், நிசாப்பூர் நகரத்து குவாஜா உமார் என்ற உயர்ந்த நிலையில் இருந்தாலும்கூட அது தங்களை அழைத்துச் செல்ல உகந்த வழியல்ல.”
“நாங்கள் ஒரு புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அளவுக்குத் தங்களுக்கு எங்களைப்பற்றி நன்றாகத் தெரியும். அதைத் தெரிந்து கொண்டு, நாங்கள் இங்கே இருப்பதையும் பார்த்துவிட்டு, தாங்கள் வெளியிலே சென்று வீதியிலே திரியும் ஓர் ஒற்றனிடமோ, அல்லது ஒரு முல்லாவிடமோ இபின்கு ஷாக்கின் நிலவறையில், ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும், எங்கள் உடல்களிலிருந்து எங்கள் தலைகள் உடனே துண்டித்து விடப்படும். அத்தனை ஆபத்தானது இந்த விஷயம்!”
“உண்மைதான்” என்று விரக்தியுடன் உமார் ஒப்புக்கொண்டான்.
“மிக மிக உண்மை! எங்களைப் பொறுத்தவரையில் தாங்கள் இஸ்லாத்தை மூடநம்பிக்கையுடன் பின்பற்றுகிறவர் அல்ல என்பது நன்றாகத் தெரியும். இன்னும் தாங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதி சொன்னால் அந்த உறுதி குலையாமல் காப்பாற்றுவீர்கள் என்பதையும் அறிவோம். ஆகவே, தாங்கள் இங்கே கண்டதையோ, ஹாஸனைப் பார்க்கப்போகும் வழிகளில் காணப் போவதையோ, தாங்கள் யாரிடமும் கூறமாட்டீர்கள் என்று உறுதிகூற வேண்டு மென்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
உமார் சிறிதுநேரம் யோசித்து விட்டு, “சரி நான் உறுதி கூறுகிறேன்” என்றான்.
“நன்று! நன்று!” என்று ஆமோதித்த அந்த சாமியார், “திருக்குரான் மீது ஆணையிட்டு நாம் சத்திம் செய்யவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், உண்மைவாதிகள்! இந்த உலக இயந்திரத்தில் கடவுளை எதிர்பார்ப்பதை நாங்கள் நிறுத்தி வெகு நாட்களாகின்றன. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த நாங்களும் தங்களை மோசம் செய்ய மாட்டோம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எங்களிலே யாரும் இதுவரை வாக்குமாறியதில்லை. எங்களிலே சிலர், இரகசியத்தை வெளியிடச் செய்வதற்காக உயிருடன் தோலுரிக்கப் பட்டிருக்கிறார்கள். உயிர்போயிருக்கிறதே தவிர, இரகசியம் போனதில்லை!”
அதிகம் பேசாத அர்மீனியனான அக்ரோனோஸ், கண்ணாடிக் குவளைகளை எடுத்து, ஒரு சிறிய பீப்பாயிலிருந்து வெள்ளை மதுவை யூற்றி ஏழுபேருக்கும் கொண்டு வந்து கொடுப்பதை உமார் வியப்புடன் கவனித்தான்.
“காவல்காரர்களை ஏமாற்றுவதற்காக நாம், திருமறையால் பழிக்கப்பட்ட மதுவை மறைவாகக் குடித்துவிட்டுப் பிதற்றுகிற குடிகாரக்கும்பலைப்போல் நடிக்க வேண்டும். நகர்க்காவலர்கள், இதுபோன்ற சிறிய பாவங்களையும் அதற்காகக் கிடைக்கும் சிறிய கைக்கூலியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள்! இப்பொழுது உங்கள் குவளைகளைத் தூக்கிக்கொள்ளுங்கள். எங்கே போகிறோம் என்றோ எதற்குப் போகிறோம் என்றோ நமக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே பேராசிரியர் உமாரை உற்று நோக்கினார்! தத்தம் குவளைகளை உயரத்துக்கி அனைவரும் மதுவைக் குடித்தார்கள்.
இரண்டுநாள் பயணத் தொலைவில் மலைப்பிரதேசத்தில் உள்ள ஓரிடத்தில் அனைவரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக நிலவறையை விட்டு வெளிக்கிளம்பினார்கள். உமாருடன் கூடவே செல்ல வேண்டிய அக்ரோனோஸ், உமாரை யாரும் எளிதில் தெரிந்துகொள்வார்கள். ஆகையால், அவன் மாறுவேடம் போட்டுக் கொள்ளவேண்டும் என்றான். அதன்படி உமாரை மது வியாபாரி ஒருவனுடைய கடையின் மேல் அறையொன்றுக்கு கூட்டிச் சென்றான். அங்கேயிருந்த ஒருபெண், உமாரினுடைய தாடியைச் சிறிது வெட்டி யெடுத்து அதற்குச் சாயம் பூசி மாற்றினாள். பிறகு, அவன் முகத்தையும் கழுத்தையும் தாடியைக் காட்டிலும் கருப்பாக வரும்படி ஆளிவிதைச் சாற்றைத் தடவினாள்.
“தேசாந்திரம் பயணம் செல்லும் எல்லா மனிதர்களையும் செல்மாவுக்குத் தெரியும். இந்துப்பக்கிரி யொருவரை ஆப்பிரிக்கா தேசத்துக் கொக்காக மாற்றிவிடக் கூடிய திறமை அவளுக்கு இருக்கிறது” என்று அவளைப் பாராட்டிப் பேசினான் அக்ரோனோஸ்.
செல்மா அசடுபோல் சிரித்தாள். அவள் உமார் போன்ற அழகிய கனவான் யாருடனும் இதுவரை பழகியதில்லை. அவளுடைய கணவனும் பாராட்டுத்தலைக் கேட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
செல்மா அவளுடைய ஒப்பனை வேலையை முடித்ததும் உமார் எழுந்து நின்றான். மிருதுவான பட்டுச் சட்டையுடன் அகன்ற தோல்கால் சராய் அணிந்து, விரல்களுக்குமேலே வளைந்து செல்லும் மிதியடியுடன் நின்றான். “இவர்தான் போக்கரானிய குதிரை வியாபாரி மட்டக்குதிரைகள் வாங்குவதற்காக மலைப் பிரதேசத்திற்குச் செல்கிறார்” என்றான், அக்ரோனோஸ். “அப்படியானால், துருக்கிய மொழியில் பேசுங்கள். அடிக்கடி எச்சில் துப்பிக்கொண்டிருங்கள். இரண்டு கைகளாலும் சாப்பிடவேண்டும. இதோ இப்படி மூச்சுவிட வேண்டும்” என்று வேகமாக மூச்சுவிட்டுக் காண்பித்த செல்மா, ஒருமாதிரியாக நடந்து காண்பித்து, “இப்படிலேசாக முழங்காலை வளைத்து நடக்கவேண்டும். அப்பொழுதுதான், இடைவிடாமல் குதிரையில் உட்கார்ந்ததால் இந்த போக்கரானியனுக்கு முழங்கால் வளைந்துவிட்டது என்று தோன்றும். எல்லோருக்கும் எதிரில் கழுதைப் பாலைக் குடிக்கவேண்டும். இப்படியெல்லாம், வேஷத்துக்குத் தகுந்தபடி நடந்தால் உங்கள் சொந்த மனைவிகூட உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது” என்று செல்மா யோசனை கூறினாள்.