உள்ளடக்கத்துக்குச் செல்

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/இல்லற ஏந்தல்

விக்கிமூலம் இலிருந்து
1
இல்லற எந்தல்

“சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடையவை என்று கூறும்போது பழமையில் ஏதோ பெருமையிருப்பதாக எண்ணி, அதனைக் குறைத்துக் கூறி மகிழ்கின்ற அன்பர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். தமிழ் நல்கும் தேனும், பாலும் உண்டு வளரினும், அவர்களது உள்ளத்தில் தமிழ்பால் வேறுபட்டு நினைக்கும் ஒருவகை உணர்வு இருந்தே வருகிறது. அவர்கள் குருதியின் ஒவ்வொரு துளியினும் ஊறிநிற்கும் இவ்வேற்றுமை யுணர்வு நாளடைவில்தான் நீங்கும். ஏனெனில், அது அவர்கள்பால் பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றிப் பச்சை கொண்டிருப்பது!”

“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம்; மக்கள், தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம்; வைதிகம், பௌத்தம், சயினம் முதலிய சமய வுணர்வுகள் பெரிதும் பரவாத காலம்; புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணி வளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும், செல்வரும், அம் மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து, முத்தமிழ் வளர்த்த பெருமைக் காலம்; முதுபெரும் புலவர்கள் மன்னர் பேரவையில் இருந்து, அரசியற் கருத்துக்கள் அளவளாவி இருந்த அருமைக்காலம்!”

-இவ்வாறு, முப்பத்தேழு ஆண்டுகளுக்குமுன், ‘சங்க இலக்கியத் தனிச்சிறப்பு’ எனும் கட்டுரையில், முத்தமிழ் வளர்ந்த - வளர்த்த பான்மை குறித்தும், தமிழர்களில் ஒரு சிலர் தமிழின் பெருமை அறியாதிருக்கும் அவலநிலை குறித்தும் எழுதியவர் 'உரைவேந்தர்' என ஊரும் உலகமும் போற்றும் ஔவை சு. துரைசாமி பிள்ளையாவார்!

பிறப்பும் படிப்பும்

‘சான்றோர் உடைத்து தொண்டைநாடு’ என்பது பழமொழி. இந்நாட்டின்பாற்பட்ட தென்னார்க்காடு மாவட்டம், புலவர் பெருமக்கள் தோன்றிய சிறப்புக்குரியது. இம்மாவட்டத்தில், திண்டிவனத்திற்கு அண்மையில் அமைந்திருப்பது, ‘ஔவையார் குப்பம்’ என்னும் சிற்றுர், அவ்வூரில், கருணீகர் (ஊர்க் கணக்கர்) மரபில் தோன்றியவர் சுந்தரம்பிள்ளையாவார் என்பார்.

இவர்,தமிழின்மீது அளவற்ற அன்புடையார் மயிலம் முருகன்மீது, பல செய்யுள் நூல்கள் இயற்றிய மாண்பினர். இவருக்கு அருமை வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர் சந்திரமதி அம்மையார். இவர்களின் இல்லறப்பயனாய்ப் பெற்ற மக்கள் ஐவர். அவர்கள் முறையே மயிலாசலம், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியம், பூமாதேவி, துரைசாமி என்னும் பெயரினர். பூமாதேவியும், துரைசாமியும் இரட்டைப் பிள்ளைகள்.

5.9.1902இல், தோன்றிய அந்த ஐந்தாங் குழந்தையே ‘உரைவேந்தர்’ ஔவை சு.துரைசாமிபிள்ளையாவார்! பெண் குழந்தை பூமாதேவி இயற்கை எய்திவிட்டது!

உரைவேந்தர், தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த பிள்ளை. ‘தமிழ்ப்பாலில் திளைக்கப் போகும் இவர்க்குத் தாய்ப்பால் எற்றுக்கு?’ என இறைவன் கருதினன் போலும்!

இக்குழந்தை,பிற்காலத்தில் தமிழகத்தில், உரைஉலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறது என்று கருதித்தான் இறைவன் ‘ஔவை’ என்னும் சொல்லை முதலாகவுடைய ஊரில் இந்தச் செந்தமிழ்ச் செல்வம் பிறக்குமாறு செய்தனன் எனலாம்!

உள்ளுரில் தொடக்கக் கல்வி கற்ற உரைவேந்தர், திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் (அப்போது ஏ.ஏ.எம். உயர்நிலைப் பள்ளி என அழைக்கப்பட்டது; பின்பு வால்டர்ஸ் கடர் உயர்நிலைப் பள்ளி) பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார்.

பின்பு, வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (Intermediate) வகுப்பிற் சேர்ந்து பயின்றார். ஆனால் கல்வியைத் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாது போயிற்று.

தந்தைக்குப் பின்னர், தமையனார் மயிலாசலம் பிள்ளையின் பொறுப்பில் குடும்பம் இருந்தது; அவர்தம் துணைவியார் புண்ணியகோடி என்பவர். இவர்களின் நல்லாதரவு உரை வேந்தருக்கு இருந்தது எனினும், ஏதேனும் ஓர் அலுவல் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதலின் வருவாய்நாட்டத்தால், உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். ஆனால் அப்பணியில் நீடிக்க விரும்ப வில்லை. தமிழ்ப்பணி யாற்றுதற்கென்றே தோன்றியவராதலால், நகராட்சி மன்ற அலுவலிலிருந்து விலகினார்!

இளமையில் தமிழார்வம்

உரைவேந்தர், சைவக் குடும்பத்தில், அதிலும் தமிழின்மீது அளவிலாப் பற்றுக் கொண்ட குடும்பத்தில், செய்யுள் இயற்றும் வன்மையுடைய ஒருவரின் திருமகனாராகப் பிறந்தவராதலின் இயல்பிலேயே தமிழ்ப்பற்றுக் கொண்டவராயிருந்ததில் வியப் பில்லை, மேலும், அ.ஆ.ந. உயர்நிலைப் பள்ளியில் உரை வேந்தருக்குத் தமிழறிவுறுத்தியவர், தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார் ஆவார். அப்போதே, தம் தமிழாசிரியர்பாலிருந்து ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியினை ஆராயும் திறன் பெற்றிருந்தார் உரைவேந்தர். படிப்பை முடித்து, நகராட்சியில் அலுவல் பார்க்கத் தொடங்கியவர், ஆறே மாதத்தில் விலகி விட்டாரெனில், அதற்கு அவர்பாலிருந்த ஆழ்ந்த தமிழார்வமே காரணம் எனலாம். அவரது மனத்தில் ஓயாது அலைமோதிக் கொண்டிருந்த எண்ணம், ‘தமிழை முறையாகப் பயில வேண்டும் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ வேண்டும்’ என்பதேயாகும்!

கரந்தைக் கல்வி

அக்காலத்தில், தஞ்சையையடுத்துள்ள ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ தமிழுக்குச் செய்த தொண்டுகள் எண்ணில் பலவாம். ‘தமிழவேள்’ எனத் தரணிபோற்றும் த.வே. உமாமகேசுவரனார் அதன் தலைவராக இருந்து, அளப்பரிய தொண்டுகள் புரிந்து வந்தார்!

தனித்தமிழ் பயில்வதற்கு ஏற்ற இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்றுணர்ந்த உரைவேந்தர், தமது 22ஆம் வயதில், சொந்த ஊரான ஔவையார் குப்பத்தை விட்டுத் தஞ்சைத் திசைநோக்கித் தமது நெடிய இனிய தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினார்.

“அந்நாளில், ‘பழுமரம் நாடும் பறவை’போல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பேராலமரத்தினை நாடிச் சென்று, அதன் தண்ணிய நிழலிலே இளைப் பாறி, நற்றமிழ் நலம் மாந்தி, விழுதாக வெளிப் போந்து, பழந்தமிழின் வளமையையும், செழுமை யையும் தம் உரையாலும் எழுத்தாலும் வளர்த்துப் பரப்பிய பெருந்தொண்டில் ஈடுபட்ட புலவர் பெரு மக்கள் பலராவர். அவர்களுள் தலையாயவர் நம் ‘ஔவை’

என்று, கரந்தையில் வாழ்ந்த பேராசிரியர் கு.சிவமணி கூறுவது இவண் கருதத் தகும்!

சிவமணக்கும் இன்சொல்; உருமணக்கும் திருநீறு இயலருள் ஒழுகும் கண்கள்; அருள் மணக்கும் திருநோக்கு இளநகை ஒளிர் செவ்வாய்; சொற்பொறுக்கும் செவிகள்; வீரவுரை நவிலும் நாக்கு: செம்பாகத் தமிழ் பேசிச் சிரிப்புக் காட்டும் முகம் எடுப்பான திருவுருவம் - இத்தனையும் கொண்டு விளங்கியவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார். பொங்கு தமிழ்த்தாய்ப் பணி போற்றி நின்ற புலவர் குழாம் குடியேறத் தகுந்தவாறு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வளர்த்த சான்றோர் இவர்! இத்தகு சங்கத்தோடு அணுக்கத் தொடர்புடைய புவர்கள் பலர். அவருள் குறிப்பிடத்தகுந்தோர் இருவர். ஒருவர், ‘கரந்தைக் கவியரசு’ சு. வேங்கடாசலம் பிள்ளை. மற்றவர், ‘நாவலர்’ ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

‘கரந்தைக் கவியரசு’ தஞ்சை தூய பேதுரு உயர்கலாசாலை, திருவையாற்று அரசர் கல்லூரிகளில் தலைமைத் தமிழ்ப் புலவராயிருந்து, கரந்தைக் கல்லூரிப் பேராசிரியராய் விளங்கியவர். இலக்கணத்தையும் இனிமையுறக் கற்பிக்கும் திறனும், எவரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்பும் கொண்டவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் திங்களிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவ்வாறே, ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், திருச்சி பிசப் ஈபர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராக இருந்து, பின்னர்க் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைவராகவும் இருந்தவர். சிலப்பதிகாரம், அகநானூறு முதலான நூல்களின் உரையாசிரியர்.

இவ்விருவர்பாலும் தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வர வேண்டும் என விரும்பியதனால்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடி வந்தார் உரைவேந்தர்.

ஒருவரைப் பார்த்த அளவிலேயே அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல் பெற்ற ‘தமிழவேள்’, தம் சங்கத்தின் பெருமைகருதி வந்த உரைவேந்தரைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியிலமர்த்தினார். அதனுடன், சங்க நூலகப் பணியும் தரப்பெற்றது. இவ்விரண்டுமே, உரைவேந்தர் மனம் மகிழும் நற்பணிகளாயின.

உரைவேந்தர், தம்முடைய அருங்குணம், அருஞ்செயல்களால் தமிழவேளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து கொண்டார் என்பதற்குச் சில சான்றுகள் காட்டலாம்.

சங்கத்தின் சார்பில், ‘தொல்காப்பியம் - தெய்வச் சிலையார் உரை’ நூல் வெளியிட ஏற்படாயிற்று. ஒலைச் சுவடி படிப்பதில், முன்பே பயிற்சி பெற்றவர் உரைவேந்தர். எனவே தெய்வச் சிலையார் ஏட்டினைப் படித்து, அதனைப் பகர்த்து எழுதும் பணி இவருக்குத் தரப்பட்டது. அப்போது, தமிழவேள் உரைவேந்தரை யழைத்து, ‘Juries to Students’ என்ற ஆங்கில நூலைக் கொடுத்து, ‘முதலில் இந்த நூலைப் படிக்கவும்’ என்று கூறினார். உரை வேந்தரும் அதனைப் படித்து இன்புற்றார்.

‘தமிழவேள்’ தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாளைய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர்ஹோப் என்பவர் பேசிய ஆங்கிலப் பேச்சை அப்படியே ஏற்ற இறக்கத்துடன் தமிழில் மொழிபெயர்த்து, அனைவரின் பாராட்டைப் பெற்றவர். இத்துணையளவு ஆங்கிலப் புலமையிருந்தும் மற்றவர்களுடன் தமிழில்தான் உரையாடி மகிழ்வார்! இவருடனிருந்து பழகிய பான்மையினால்தான், உரைவேந்தரும், பிற்காலத்தில் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமைபெற முடிந்தது!

“திரியின்மை நீக்கிய விசேடம், இயைபின்மை நீக்கிய விசேடம் என்ற இடங்களிலும் எங்கள் ஐயத்தைத் தமிழவேள் போக்கினார். இதுபோல் பல சமயங்களில் எங்கட்கு ஆசிரியராகவும், சிக்கல்களில் நடுவராகவும்

இருந்தார். 1924ஆம் ஆண்டிலேயே இதைச் செய்தார். அவரிடத்து மீளா அடிமையாகக் கூடிய மனப்பான்மை எங்கட்குத் தோன்றியது!

“அவர் தமிழில் பேசிய பேச்சுக்கள், எங்களைக் கவர்ந்தன. அவர் பேச்சில் வேற்றுமொழி கலக்கவே கலக்காது; எங்களைத் தமிழில் பழக, ஊக்குவித்தவர் அவரே!”

என்று நற்றமிழில் பேசும் பெற்றியைத் தமிழவேளிடமிருந்து கற்றுக் கொண்டதாக உரைவேந்தர் கூறுவது எண்ணத்தக்கது.

1925ஆம் ஆண்டு முதல் 1928ஆம் ஆண்டுவரை, கரந்தையில் தங்கியிருந்தார் உரைவேந்தர்; ஆசிரியப்பணி, ஏடு பெயர்த்தெழுதும் பணி, தமிழவேள் முதலான அறிஞர்களுடன் அவ்வப்போது உடன் சென்று உதவும்பணி ஆகிய இவற்றுக் கிடையே, வேங்கடாசலம் பிள்ளை, நாட்டார் ஆகியோரிடம் அமயம் நேரும் போதெல்லாம், தமிழ்ப்பாடம் பயின்று. 1930-இல், சென்னைப் பல்கலைக்கழக 'வித்துவான்' தேர்வும் எழுதி வெற்றி பெற்றார். பிற்காலத்தில் ‘பேராசிரியப் பெருந்தகை’; ‘சித்தாந்த கலாநிதி’, ‘உரைவேந்தர்’ முதலான பெரும் புகழ் பெற்றமைக்கு அடித்தளமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமே எனில், மிகையன்று!

இல்லறம் ஏற்றல்

உரைவேந்தர்தம் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தவர், உலோகாம்பாள் ஆவார். கோட்டுப்பாக்கம் (காவேரிப்பாக்கம்) என்ற ஊரில் வாழ்ந்த அண்ணாபிள்ளை - இலட்சுமி ஆகியோரின் முதல் மகள்! வள்ளுவர் மொழிந்த ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்பதற் கேற்ப, உரைவேந்தருக்கு எல்லா வகையானும் நலமாக அமைந்தவர். அதனால்தான், உரைவேந்தர் எவ்விதக் கவலையு மின்றித் தமிழை ஆராய்வதிலும், ஆசிரியப்பணி ஆற்றுவதிலும், மிகப்பெரிய மாநாடு, அல்லது கூட்டங்களில் தலைமை தாங்கிப் பேருரை அல்லது சொற்பொழிவு செய்வதிலும் ஓர் இம்மியளவும் தவறாமல், கடமை யாற்ற முடிந்தது; பெரும்புகழும் பெற முடிந்தது.

இவ்விருவர்தம் இல்லறப் பயனாய்ப் பெற்ற மக்கள் பதினொரு பேராவர்.

1. திருவள்ளுவன் - பிறந்த சில நாட்களில் இறந்து போனான்

2. பாலகுசம் - கணவர் இரமணன் (காதல் மணம்)

3. நடராசன் - மனைவி தாரா

4. மணிமேகலை - கணவர் சுப்பிரமணியம்

5. திலகவதி - கணவர் நரசிம்மன்

6. தமிழரசி - கணவர் குமாரவேலு

7. ஆண்மகவு - பிறந்த சில நாட்களில் இறப்பு

8. திருநாவுக்கரசு - மனைவி முத்துலட்சுமி

9. திருஞானசம்பந்தன் - மனைவி சந்திரிகா

10. மெய்கண்டான் - மனைவி சீதா

11. நெடுமாறன் - மனைவி கலாவதி

உரைவேந்தர் ‘மணிமேகலை’ என்ற நூலினை எழுதுங் காலத்துப் பிறந்த மகவுக்கு ‘மணிமேகலை’ என்றும் மெய்கண்டார் அருளிய ‘சிவஞானபோதம்’நூலினை எழுதுங்காலத்துப் பிறந்த மகனுக்கு ‘மெய்கண்டான்’ என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

உரைவேந்தர் குடும்பங்களில் ஒருவருக்காவது ‘நடராசன்’ என்று பெயர் வைப்பது தொன்று தொட்டுவரும் வழக்கமாக இருந்துள்ளது!

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘உரைவேந்தர்’ சொற்பொழி வாற்றிக் கொண்டிருக்கும்போது தம் குழந்தை (7ஆவது) இறந்த செய்தி வந்தது. 'அக்குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுக; கூட்டம் முடிந்த பின் வருகிறேன்' என்று சொன்னாரெனில் இவரது கடமையுணர்வையும் ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று எண்ணும் மனவுறுதியையும் அறிய முடிகின்றது.

துணைவியார் உலோகாம்பாளே, பிள்ளைகளை நன்முறையில் பேணிவளர்த்த பெருமாட்டியாவார்! பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருப்பார்; சில நேரங்களில் வெகுண்டு கடிந்துரைப்பதும் செய்வார்.

உரைவேந்தர் இறந்தபின் (1981), தமது இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ 70 வயது வரை), மருத்துவராகத் திகழ்ந்த மகன் மெய்கண்டானது இல்லத்திலேயே இருந்து, காலமானார். மெய்கண்டானின் மனைவி சீதாவின் பேரன்பும் பராமரிப்பும் உலோகாம்பாளுக்கு இருந்தது!

உரைவேந்தரின் மூத்த மகனார் ஔவை. நடராசனார், தம் தந்தையைப் போன்றே சொல்லேருழவர். தமது விடாமுயற்சியால் பல்வேறு உயர்பதவி வகித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்து பேரும் புகழும் பெற்றவர்!

ஏனையோரனைவருமே உயர் படிப்புப் படித்துப் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

உரைவேந்தரின் மக்கள் பதினொருவரில், பிறந்தவுடனே இறந்த இருவர் போக எஞ்சிய ஒன்பது பேரில், மூத்தமகள் பாலகுசமும், மகன் திருஞானசம்பந்தனும் இயற்கை எயதி விட்டனர்!

சற்றுப் பருமனான உடம்பு; குட்டையான வடிவம்; முழுக்கை (ஜிப்பா)ச் சட்டை; அடிக்கடி ‘பொடி’ போடும் பழக்கம்; தலைமுடியைக் குறைத்து வைத்திருப்பார் நெற்றியில் திருநீற்றின் மணம் வீசும் வீட்டில் கைமேசை வைத்தே எழுது வார்; பெரும்பாலும் ‘பேனா’வைப் பயன்படுத்தாமல் மைதொட்டு, அழகாக நிறுத்தி எழுதுவார்; எப்போதும் தமிழ் - சைவச் சிந்தனையே! குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்வதில் வல்லவர்; மறந்துங்கூட மனைவியிடத்திலோ, பிள்ளைகளிடத்திலோ கடிந்து பேசமாட்டார்! செந்தமிழ் நடையில்தான் பேசுவார்! ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நூலைப் படித்தபின் தான் படுக்கைக்குச் செல்வார்; பெரும்பாலும் அஃது ஆங்கில நூலாகவே இருக்கும்!

இவ்வகையில் ‘இல்லற ஏந்தலா’கத் திகழ்ந்தவர் ‘உரைவேந்தர்’ எனலாம்.