உள்ளடக்கத்துக்குச் செல்

உலகத்தமிழ்/இதழ்களின் தமிழ்ப் பணி

விக்கிமூலம் இலிருந்து

18. இதழ்களின் தமிழ்ப் பணி

மாநாட்டிற்குத் திரும்பிப் போவோம். இக்காலத் தமிழ் இலக்கியத்தை மேலும் சிறிது கவனிப்போம். சென்னை, இலயோலா கல்லூரிப் பேராசிரியர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளாரின் உரையைக் கேட்போம். 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான, வார, மாத இதழ்களைப் பற்றிய ஆராய்ச்சியுரை யொன்றை அவர் நிகழ்த்தினார்.

சென்ற ஆண்டு அக் கல்லூரிப் பேராசிரியர் சிலரும், மாணவர் சிலரும் சேர்ந்து தமிழ் வார மாத இதழ்களை ஆராய்ந்தார்களாம். ஏன்? பல இலட்சக் கணக்கானவர்கள் வீடுகளிலும் வெளியிலும் அலுவலகங்களிலும் படிப்பவை இவையே. இவையே, அத்தனை மக்களின் நோக்கையும் போக்கையும் உருவாக்குகின்றன. இவ்விதழ்கள் எவ்வகை, படிப்போர் அவ்வகை.

‘கல்கி’ ‘ஆனந்தவிகடன்’ ‘தினமணி கதிர்’ ‘குமுதம்’ ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்கள் அவர்களால் ஆராயப் பட்டன, ‘கலைக்கதிர்’, ‘தீபம்’, ‘மஞ்சரி’, ‘கண்ணதாசன்’ ஆகிய மாத இதழ்களும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.

வார இதழ்கள் பெரிதும் சிறுகதைகளை நம்பியுள்ளனவாம். இச் சிறுகதைகள் பெரும்பாலும், காதல், கலப்புக் திருமணம், சமூக முன்னேற்றம் ஆகியவை பற்றி இருந்தனவாம். இவை கதைக்கு வற்றாத ஊற்றல்லவா?

சென்ற ஆண்டு காந்தி நூற்றாண்டு அல்லவா? அவ் வாண்டில் சிலராவது காந்தியை நினைத்தார்களாம். சிலருக்குக் காந்தியம் - சிறு கதைகளுக்கு உடலாக உதவிற்றாம். லாட்டரிச் சீட்டால் விளையும் கேடுகளைப் பற்றியும் சிலகதைகள் வந்தனவாம்.

மனிதர்கள் பால் அன்பு, கீழ்ப்படிதல், தியாகம் ஆகியவற்றைப் பல கதைகள் போதித்தனவாம். கதையை முடிப்பதற்குத் தற்கொலை கைகண்ட மருந்தாக இருந்ததாம் பலருக்கு.

கடவுள் நம்பிக்கை எவ்வளவு இடம் பெற்றது இக் கதைகளில்? இதை ஒருவர் ஆராய்ந்தாராம். ஆத்திகர் அதிர்ச்சி அடைய வேண்டாம். இருநூறு சிறுகதைகளை வெளியிட்ட ஒரு வார இதழ் 9 கதைகளில் கடவுளைப் பொதுவாக இழுத்ததாம். அதே இதழ், ஒரே ஒரு கதையில் மட்டுமே கடவுளை மையமாக வைத்ததாம். எல்லா வார இதழ்களிலும் வந்த 725 சிறுகதைகளில் 43ல் மட்டுமே கடவுள் கம்பிக்கையை அடிப்படையாக வைத் துள்ளனராம். 122 கதைகளில் கடவுள் பற்று பொதுவாக வருகிறதாம். இப் பத்திரிகையாளர்கள் யாரும் நாத்திகர் அல்லர் என்பதை நினைவு படுத்துகிறேன். அது எப்படியோ போகட்டும்.

பெரும்பாலான சிறுகதைகளில் கருத்துச் சிறப்போ, உணர்ச்சி உயர்வோ இல்லையாம். பொழுது போக்க மட்டுமே பயன்படுபவை பலவாம். இக் கதைகளில் தேவைக்கும் அதிகமாகப் பிறமொழிச் சொற்கள் கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டது - மறைத்திரு. ஞானபபிரகாச அடிகளாரின் தமிழ் உள்ளம். பல இதழ்கள் மொழித் துய்மையைப் பொருட்படுத்து வதே இல்லையாம்! இருபது ஆண்டுகளுக்கு முன் எல்லோருக்கும் தெரிந்திருந்த வடமொழிச் சொற்கள் இப்போது பெரும்பாலோருக்குப் புரியாதனவாக உள்ளன. அதை அறியாது பழைய வடமொழிச் சொற்களைப் பெய்வதிலேயே சிலர் மகிழ்ச்சியடைகிறார்களாம். பிற மொழிச் சொற்களை அப்படியே இறக்குமதி செய்துகொள்வது தமிழ் மொழியின் சொல் வளத்தைக் குறைத்து விடுமோ என்று வேதனைப்பட்டார். மெய்யன்றோ?

விற்பனைப் பெருக்கத்திலேயே குறியாக இருப்பதால் தமிழ் இதழ்கள். தமிழ்ச் சமுதாயத்தின் ஞானிகளாகவும் குரவர்களாகவும் இருந்து தொண்டாற்றும் கடமையினை மறந்து விடுவார்கள் என்று அஞ்சினார். காரிருளில் மின்னல் கீற்றுகளையும் காட்டினார் அடிகளார். கல் கண்டில் வரும் துப்பறியும் கதைகளில் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்காக அதன் ஆசிரியர்-தமிழ் வாணனுக்குப் பாராட்டுக் கூறினார்.

‘கலைக்கதிர்’ திங்கள் இதழ், பலதுறை அறிவியலையும் துாய தமிழிலே தருவதிலே முன்னோடியாக இருந்து, தனி இடம் பெற்றுள்ளதை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார்.

‘கல்கண்டை’ உண்டு மகிழ்ந்தார்களாம் ஆராய்ச்சியாளர்கள். இவ்வார இதழில் பால் உணர்ச்சிக் கதையே கிடையாது; செய்தித் துணுக்குகள் ஏராளம். 1969ஆம் ஆண்டில் 5981 துணுக்களின் மூலம் அறிவினை வளர்த்தாராம் ‘கல்கண்டு’ ஆசிரியர். இவ்வகையில் படிப்போர்க்குப் பலதுறை அறிவு ஏற்படுகிறதாம். இத்தனை தகவல் துணுக்குகளில், அரசியல் பற்றி 568; இயற்கை மருத்துவம் பற்றி 586; பொது ஆலோசனை 327; பெண்களுக்கு அறிவுரை 344; சினிமா உலகம் பற்றி 1652 — இடம் பெற்றனவாம். திரு தமிழ்வாணன் அவர்களே, இப்படிக், கணக்கப் போட்டு பார்த்திருப்பாரோ என்னவோ?

இன்றைய மனிதனுக்கு அமைதியாக உட்கார்ந்து முழு சாப்பாடு உண்ண நேரமில்லை. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம், விரைந்து விழுங்கிவிட்டு வேலையைப் பார்க்க, வேண்டியதாக இருக்கிறது. இதேபோல், பொறுமையாக, நீண்ட கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளப் பலருக்கு நேரமில்லை. எனவே, பயனுள்ள சிறு சிறு தகவல்களின் மூலம் மக்களுக்கு அறிவூட் டுவதாகக் கல்கண்டு’ ஆசிரியர் கூறினாராம்.

ஆராய்ச்சி உரை மேலும் கூறுவது இதோ:

‘கல்கண்டு, முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரை திரு. தமிழ்வாணனுடையது. ஒருவரே அத்தனையும் எழுதி வருகிறார். எவ்வளவு காலமாக? இருபத்திரண்டு ஆண்டுகளாக, தனியொரு ஆசிரியரே வார இதழ் முழுவதையும் எழுதிடும் வியத்தகு புதுமை திரு. தமிழ்வாணனால் நிகழ்வதாகக் கூறிப் பூரித்தார். அவையைச் சுற்றிப் பார்த்தேன்; சுட்ட பழங்களையும் கண்டேன்.

தமிழ்வாணனின் இத்தகைய பெருமைக்கு, நான் கறுப்புப் பொட்டாக நேர்ந்து விட்டேன். குற்றவாளி நானல்லன். இது என் திட்டத்தின் விளைவன்று; நான் தேடியபெருமையன்று. இது திடீர் விளைவு, இதுவே என் வாழ்க்கை. யான் என்ன செய்வேன்?

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்புமாக முடிந்தது. சென்னையில், அனைத்து நாடுகளின் தமிழ் கல்விக் கழகத்தை அமைப்பதைப் பற்றிய திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு கலைந்தது.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு இலங்கையில் நடக்குமாம். அது 1973 இல் இருக்கலாம்.

மாநாடு முடிந்த அன்று இரவே, நான் பாரிசை விட்டுக் கிளம்பிவிட்டேன். அங்கிருந்து இலண்டன் சென்றேன். ஒரிரவு அங்குத் தங்கிவிட்டு, மறுநாள் பிற்பகல் அங்கிருந்து புறப்பட்டேன். மாஸ்கோ, டெல்லி பம்பாய் வழியாகத் திரும்பினேன்.

முடிப்பதற்கு முன் ஆசையொன்றை வெளியிட்டு விடுகிறேன்.

பாரிசு மாநாட்டிலிருந்து திரும்பி வந்த நான் மறுபடியும் கனடா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு திங்கள் பயணஞ் செய்ய நேர்ந்தது. கடைசியாக, சிங்கப்பூரைப் பார்த்துவிட்டு மலேசியா விமான சர்விஸ் மூலம் சென்னைக்குப் புறப்பட்டேன். வானூர்தி மேலே கிளம்பியதும் சாப்பாட்டுப் பட்டியலைக் கொடுத்தார்கள். என்ன கண்டேன்? ‘தக்காளி ரசம்’, ‘பூரிக்கிழங்கு’ ‘சோறு’, ‘கோழிக்கறி’, ‘பாலாடை’ இப்படியாகத் தமிழ் உணவுகளைத் தமிழில் அச்சிட்டிருந்தார்கள். ஆங்கிலத்தில், மலேசியா மொழியில், அச்சிட்டதோடு தமிழிலும் அச்சிட்டிருந்தார்கள். கண்டு புளங்காங்கிதம் அடைந்தேன். இந்திய விமானங்களில், தமிழைக் காண இயலா விட்டாலும், மலேசியா-சிங்கப்பூர் விமானத்திலாகிலும் அதுஇடம் பெற்றுள்ளதே என் பூரிப்பு. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் உள்ள தமிழர்கள் இதைக் காப்பாற்றிக் கொள்ளும் விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டு மென்ற ஆசை, தவறு இல்லையே.

தமிழ் காற்றிலேறி விண்ணெலாம் முழங்கும் நிலை உருவாகும். நாம் பற்றோடு நின்று விடாமல், பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு; துறைதொறும் துறை தொறும் வல்லுநர்களாகி, வீரத்தையும் விவேகத்தையும் இணைத்துக் கருமம் சிதையாது பாடுபடவேண்டும்.



வணக்கம்