உள்ளடக்கத்துக்குச் செல்

உலகத்தமிழ்/நம் பொறுப்பு

விக்கிமூலம் இலிருந்து

17. நம் பொறுப்பு

ம்மாநாட்டில், டாக்டர் ஜீன் பிலியோசா ‘சமஸ்கிருதமும் தமிழும்’ என்பது பற்றிய கட்டுரையைப் படித்தார். ‘இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டும் இந்திய மொழிகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டு வளர்ந்தன. ஐரோப்பாவில் இலத்தின் மொழி கொண்டிருந்த இடத்தை சமஸ்கிருதமும் இந்தியாவில் கொண்டிருந்தது. தமிழ், தமிழநாட்டிலும் பிறநாடுகளிலும் தமிழர் மொழியாகப் பயன்பட்டு வந்திருக்கிறது’ என்று புலியோசா கருதுகிறார்.

இலங்கை நீதிபதி தம்பையா, ‘ஆரிய சட்டங்கள்’ பற்றிப் பேசினார். ஆங்கில நாட்டில் எழுதாச் சட்டம் உருவானது போல், இலங்கையில் ‘தேசவளமை’ -அதாவது நாட்டு மரபு, சட்டமாக உருவெடுத்தது என்று விளக்கினர்.

‘தமிழ்ச் சமுதாயமும் வாணிகமும்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசரத்தினம் கட்டுரை இருந்தது. பண்டை நாள் தொட்டுத் தமிழர் வாணிகத்துறையில் சிறந்து விளங்கியதை விளக்கினார். அவர் வாணிகத்தின் பொருட்டுப் பிற நாடுகளுக்குச் சென்ற தமிழர் தங்கள் நாகரிகத்தைப் பரப்பியதை எடுத்துரைத்தார்.

‘தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முருக வழிபாடு’ பற்றி மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த திரு. ஹின்ஸ் பெகர்ட் பேசினார்.

மேலும் பலர் பேசினர். எல்லோருடைய பேச்சுக்களையும் சுருக்கிக் கூறவும் இடமிராது.

இம்மாநாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, பாரிசு மாணவர் தமிழ் மன்றத் தொடக்கம். இது மாநாட்டிற்கு அப்பாற்பட்டது. தமிழ் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் தவித்த எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இம் மன்றத்தைக் கூட்டுவித்த திரு. ஜமாலுதீன், தமிழ் மாணவர் மன்றம் அன்று இது. மாணவர் தமிழ் மன்ற மாதலின் எல்லா நாட்டு மாணவர்களும் தமிழோடு தொடர்புகொண்டு அம் மொழியில் ஈடுபட இது கருவி யாக இருக்கும். பல்வேறு துறையில் மாணவர்களாக உள்ளவர்கள், தமிழைப் பயிலவும் ஆராயவும் இந்த மன்றம் வழிவகுக்கும்’ என்று கூறி விளக்கினர். திரு ஜமாலுதீன் பாரிசில் படிக்கும் தமிழ் மாணவர்; எங்களுக்கெல்லாம் பெருந்துணையாக இருந்தவர்.

மாணவர் தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு, புதுவை முதல் அமைச்சர் மாண்புமிகு திரு, பருக் மரைக் காயர் தலைமை தாங்கினார். தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தமிழைப் பரப்ப வேண்டுமென்ற நிலைக்கு வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். தமிழ் மன்றம் அத்தொண்டைச் செய்து, ஓங்கும்படி வாழ்த்தினார்.

மன்றத்தைத் திரு மதியழகன் தொடங்கி வைத்தார். இம் மன்றத்தை வாழ்த்துவதற்குத் தமிழுலகமே வந்திருக்கிறது என்று நினைவு படுத்தி, இதைத் தொடங்கும் மாணவர்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றார். தமிழின் பெருமையையும் அது எங்கும் பரவி வரும் இயல்பையுங் கண்டு பெருமிதம் அடைந்தார். இயற்கைதானே!

அம் மன்றத் தொடக்க விழாவில் அமெரிக்கப் பேரறிஞர் திரு பிராங்க்ளின், சுவிட்சர்லாந்து, தமிழ் அறிஞர் டாக்டர் கெல்லர், இலங்கைத் தமிழர் டாக்டர் சிவஞான சுந்தரம், திரு தெ. பொ. மீ., திரு ம. பொ. சி., திரு கி. வா. ஜ. ஆகியோர் அருமையாகப் பேசினார்களாம். எதிர்பார்க்கக் கூடியதே, அங்கு மேனாட்டு அறிஞர்கள் கூட தமிழில் உரையாற்றினர்களாம். இவற்றையெல்லாம் கேட்டு மகிழும் வாய்ப்பினை இழந்து விட்டேன். ஏன்?

அதே கட்டடத்தில், அதே நேரத்தில் கடந்த— சென்னையில் நிறுவ இருக்கும் அனைத்து நாடுகளின் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத் தில் கலந்து கொள்ள வேண்டியவனாகிவிட்டேன். அந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்காகவே நான் பாரிசுக்குச் செனறது. அக் குழுவில் பலரும் இருந்தனர். முதல் இரண்டாண்டுகளில் புதிதாக அமைக்கப் போகும் தமிழ்க் கழகம் ஆற்ற எண்ணியுள்ள வேலைத் திட்டத் தைப்பற்றிக் கடுமையான வாதம். ஒரு நிலையில், தமிழைத் தொடங்குவதற்குப் பதில் வேறு துறையைத் தொடங்கி விடுவார்களே என்ற அச்சம் கூட ஏற்பட்டது. பல நாட்டவர் கூடும்போது ஆளுக்கொரு பக்கம் இழுத்தல் சாதாரணம். அதன் விளைவாகச் சில வேளை, ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிவதுமுண்டு.’ அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ் மொழித் திட்டத்திலே தொடங்கி, பிறகே சமூக இயல், வரலாறு, தொல் பொருள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமென்ற முடிவுக்குத் கொண்டு வரப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

மாணவர் தமிழ்மன்றத்தில் நானும் பேசுவதாக அறிவித்திருந்தார்கள். ஆலோசனைக் குழுவிலிருந்த எனக்கு ஒரு முறைக்குமேல் அழைப்பு வந்தது குழுவி லிருந்து விடுதலை பெற்று, அநேகமாகக் கடைசி நேரத் தில் தமிழ் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

“பழம் பெரும் அரண்மனையிலே பாவலர் போற்ற, காவலர் இமையாது காக்க, அரியணைமேல் கொலு வீற்றிருந்த தமிழ்த்தாயை, உலக அரங்கிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். இது நம் பொறுப்பினைப் பன்மடங்கு அதிகமாக்கிவிட்டது.

“மக்களிடையே வந்துவிட்ட தலைவர் கென்னடிக்குப் போதிய பாதுகாப்புச் செய்யத் தவறியது எத்தனை தீங்காக முடிந்தது! அது நமக்குப் படிப்பினை. அரண்மனையை விட்டு அழைத்து வந்துள்ள நம் தமிழ் அன்னையைக் காக்க மிக விழிப்பாயிருக்க வேண்டும். புதிய பாதுகாப்பு முறைகளை அறிந்து, நன்கு பயின்று கொள்ள வேண்டும். தமிழைக் கற்பதில் எவ்வளவு ஆர்வங் கொண்டிருந்த போதிலும்; வெளிநாட்டார் நம் மொழியைக் காப்பாற்றுவார் என்று ஏமாந்து விடக் கூடாது. இளைஞர்கள் அதிக விழிப்போடும் அதிக ஆர்வத்தோடும், தேவையான அத்தனை அறிவையும் பெற்றுத் தமிழைப் பாதுகாக்க வேண்டு'மென்று வேண்டிக் கொண்டேன், அறுபதை எட்டும் நான் வேறு என்ன செய்ய முடியும்?

இதைப் பற்றியே இரவு பகலாய்ச் சிந்தித்தேன், சிந்திக்கிறேன். என்னுள் எழும் அச்சத்தை உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல?

நாட்டுப் புறத்தில் நல்ல மூக்குமுழியோடு பிறந்து, கள்ளம் கபடு அறியாது வளர்ந்த சிவப்புக் கன்னி பொருத்தி புகழ் ஆசையால் உந்தப்பட்டு, தன்னந் தனியே திக்குத் தெரியாத புது நகரத்திற்கு வந்தால் என்ன ஆவாள்? அத்தகைய நிலைக்குக் கன்னித் தமிழை ஆளாக்கி விடுவோமோ என்ற அச்சம் என்னை அலைக் கழிக்கிறது. நான் அஞ்சிப் பயன் என்ன? ஏழை சொல், அம்பலம் ஏறுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=உலகத்தமிழ்/நம்_பொறுப்பு&oldid=1412252" இலிருந்து மீள்விக்கப்பட்டது