உள்ளடக்கத்துக்குச் செல்

உலகத்தமிழ்/உலகப் பல்கலைக்கழகச் சேவை

விக்கிமூலம் இலிருந்து

8. உலகப் பல்கலைக் கழகச் சேவை

ஜூலைத்திங்கள் மூன்றாம் நாள் காலை 8-45 மணிக்கு, நண்பர் நாதன் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். நான் சிற்றுண்டி உண்டுவிட்டு, பெட்டியோடு ஆயத்த மாயிருந்தேன். ஒட்டலுக்கு கட்டவேண்டியதைக் கட்டி விட்டு வெளியேறினோம், நேரே நாதன் அலுவலகத் திற்குச் சென்றோம்.

திரு. சிதம்பரநாதன், ‘உலகப் பல்கலைக் கழகச் சேவை’ என்னும் உலக அமைப்பின் செக்ரடரி ஜெனரல். அந்த அமைப்பின் அலுவலகம் பழைய ஜினிவாவில் இருக்கிறது. அது அமைந்துள்ள தெரு குறுகலானது. நாதன் தம் காரை நிறுத்துவதற்காகக் குறுகிய தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தார். கடைசியில் ஒரு கோடியில் இடம் கிடைத்தது. அங்கே நிறுத்திவிட்டு ஐந்து நிமிடம் நடந்து அலுவலகம் சேர்ந்தோம்.

“இந்தப் பாடுபடுவதற்குப் பதில், வீட்டிலிருந்து நடந்தே வந்துவிடலாம் போலிருக்கிறது” என்றேன்.

“ஆம். நண்பர்கள் வரும்போது பயன்படவே கார்!” என்று புன்முறுவலோடு பதிலுரைத்தார்.

நண்பர்கள் என்றால் யார்? அவர்கள் எப்போதோ வருபவர்களா?

நண்பர்கள் பல நாட்டவர்கள். வாரத்திற்குப் பாதி நாள் யாராவது வந்து போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஊக்கு வித்துச் சேவை செய்வதே உலகப் பல்கலைக் கழகச் சேவையின் (உ.ப. சே.) வேலை.

அலுவலகக் கட்டடத்தை நெருங்கினோம் பழங்காலக் கட்டடமாகக் காட்சியளித்தது. பழைய கட்டடமோ? என்றேன். ஆம். மிகப் பழையது. பல நூற்றாண்டுகளுக்கு முன், கிறித்துவச் சமயாச்சாரியர்களுள் ஒருவராக விளங்கிய கால்வின் இக் கட்டடத்தில் இருந்தே சமயத் தொண்டாற்றினர்' என்று நாதன் விளக்கினார். அத் தெருவிற்குத் ‘கால்வின் தெரு’ என்று பெயர்.

பழம் பெரும் கட்டடத்தில், புதியதொரு மானுடத் தொண்டு நடக்கிறது; ஐம்பது ஆண்டுகளாக நடக்கிறது. எத்தகைய தொண்டு அது?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுக் கால வரம்பில் முதல் உலகப்போர் நடந்தது. முன்னரெல்லாம் கண்டப் போராக இருந்தது அப்போது உலகப் போராக மூண்டது. விளைவு? சொல்லொணாத் துன்பம் எழுத முடியாத அழிவு: கணக்கிட முடியாத ஆட்சேதம்.

முன்னர் மாட மாளிகைகளாக எழுந்து நின்றவை போரின் முடிவில் கற்குவியல்களாக, பிணங்களை அடக்கிக் கொண்டிருக்கும் குவியல்களாயின. பெரும் பெரும் ஆலைகளெல்லாம் நாற்றமடிக்கும் இடிபாடுகளாயின. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இத்தகைய அழிவிலிருந்து தப்பவில்லை. கல்லூரிகள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வகுப்பறைகளைக் காணோம் விடுதிகளைக் காணோம். படிக்க நூல்கள் உண்டா? அவையும் அழிந்து போயின. விளக்கு உண்டா? முயன்று உற்பத்தி செய்தாக வேண்டும். இவை கிடக்கட்டும்; உண்ண உணவு கிடைத்ததா? மாணவர்க்காவது உடுத்த உடையுண்டா? போட்டுக் கொள்ள காலணி எங்கே? நாளெல்லாம் அல்லற்பட்ட மாணவர் சமுதாயம் படுத்து உறங்கவாவது இடமுண்டா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ ஒரு பல்கலைக் கழகத்தின் நிலை:

வியன்னா பல்கலைக் கழகம். அங்கே பதினையாயிரம் மாணவ மாணவியர். அவர்களில் ஆயிரத்து நானூறு பேர் பெண்கள். அவர்களுக்கு ஒரே வேளை உணவு. சுரீரென்று தைக்கும் பனித்தரையில் வெறும் காலோடு நடக்க வேண்டிய நிலை பலருக்கு. மேலும் பலருக்கு ஒட்டைகள் நிறைந்த காலணி உடையாவது போதிய அளவு உண்டா? இல்லை. மாற்றுடை இல்லாதவர்களே பெரும்பாலோர், உறங்கும்போது வேற்றுடை இல்லை. எங்கே உறங்கினார்கள் தெரியுமா? பலருக்குக் படுக்கை அறை கிடையாது. எனவே, புளி முட்டைகள் போல் கழிவறைப் பாதைகளில்கூட உருண்டு உறங்கினார்கள். இன்னும் என்ன கொடுமை வேண்டும்! இத்தனை கொடுமைகளின் விளைவாக நோய்கள் தாக்கி உலுக்கின.

மண்ணாசை பிடித்த, ஆதிக்கவெறி பிடித்த நாட்டுத் தலைவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகளிலே போர் முடிந்த வேளை. அப்பொழுது அனுபவித்த அவல நிலைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. மற்றப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நிலையும் கொடுமையானதே; கடுமையானதே.

இதை அறிந்த நல்லோர் சிலர் கசிந்து உருகினர். தீயோரைத் திட்டிக்கொண்டே ஆறுதல் அடையாமல், அழிவிலிருந்து ஆக்கத்திற்கு உயர்த்த உறுதி கொண்டனர்: உழைக்க முன்வந்தனர். கட்டாயம் ஏதுமின்றி, விரும்பிக் கொடுக்கும் பணத்தையும் பொருள்களையும் திரட்டி, பஞ்ச நிவாரண வேலை, பட்டினி ஒழிப்புப்பணி, நோய் நீக்கும் மருத்துவ சேவை, தன்னுதவிக்கு உதவி, உடைக்கொடை, நூல் கொடை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தனர். இவ்வேறுபாடுகளைக் கவனிக்க, ஐரோப்பிய மாணவர் நிவாரணம் என்ற பெயரில் ஒரமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் மூலம் பலர், இத்தகைய மாணவர் தொண்டிலே குதித்தனர்.

எடுத்த எடுப்பிலே அன்னதானம்; உடைதானம்; மருந்துக் கொடை எப்போதும் கொடை கொடுத்துக் கொண்டிருப்பது கொடுப்போர்க்கும் நல்லதன்று; பெறுவோர்க்கும் நல்லதன்று. திடீர் ஆபத்தில் கொடை வாங்கலாம். விரைவில் அதிலிருந்து விடுபடவேண்டும்.தன் காலில் நிற்க வேண்டும்; தன் உழைப்பினால் வாழ வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் அப்படியே ஏற்பாடு செய்தனர். உடை தைக்க, பழுது பார்க்க வேண்டிய கருவிகளைத் தந்து உதவினர். மாணவர்கள் ஓய்ந்த நேரத்தில் தங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் உடை தைத்து உதவினார்கள். காலணி தைக்கவும் கருவிக் கொடை விடுதியைக் கட்டிக் கொடுக்கவில்லை. விடுதி கட்டுவதற்கான பொருள்களைத் தந்தனர். முறை தெரிந்த கட்டட வல்லுநர்களின் ஆலோசனையை அவர்களுக்கு ஈந்தனர். இவற்றையெல்லாம் பெற்ற மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொண்டு வறுமையினின்றும் பட்டினியிலிருந்தும் படிக்க முடியா மையிலிருந்தும் விடுபட்டு, தன்னம்பிக்கை பெற்று தன்னூக்கத்தைத் திரும்பப் பெற்று, தம் முயற்சியினால் மறுவாழ்வு- நல்வாழ்வு-பெற்றார்கள்.

ஐரோப்பிய மாணவர் நிவாரணம் (ஐ. மா. நி.) பெற்ற தொண்டு அனுபவமும், அமைப்பும் வீணாகாமல் தொடர்ந்து பற்பல நாடுகளில் பற்பல நெருக்கடிகளின் போது, கைகொடுத்து உதவின. இரண்டாம் உலகப் போரின் போதும், அதற்குப் பிறகும், அதன் சேவை அறிந்தது. ஐரோப்பவிற்கு அப்பால் அவதிப்பட்ட நாடுகளின் மாணவர்களுக்கெல்லாம் அதன் நீண்ட கரம் எட்டி உதவியது. 1920ஆம் ஆண்டில் ஐ. மா.நி என்ற பெயரில் முளைத்த இச் சேவா நிலையம் இன்று, உலகப் பல்கலைக் கழகக்சேவை (உ.ப.சே.) என்ற புதுப் பெயரில் உலகத்தின் அறுபத்தெட்டு நாடுகளில் விழுதுவிட்டு, நிழல் தந்து துணை புரிகிறது. உ. ப. சே.யின் பொது அவை ஈராண்டுக்கு ஒரு முறை கூடும்; வெவ்வேறு நாடுகளில் கூடும். இவ்வாண்டு (1970) உ. ப. சே. யின் பொன் விழா ஆண்டு. பொன் விழா ஆண்டில் கூடும். பொது அவைக் கூட்டம், சென்னையில் கூடிற்று. எழும்பூர் ஸ்பர்டாங் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் கூடிற்று. ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் 29ஆம் நாள் வரை கூடி, அடுத்த

இரண்டாண்டிற்கான திட்டங்களை வேலை முறைகளை முடிவு செய்தது.

இக்கட்டடத்தைப் பற்றிச் சில சொற்கள். இது ஐந்து மாடிக் கட்டடம். பதினாறு இலட்ச ரூபாய்க் கட்டடம். எதற்கு இது? உ. ப. சே.யின் சென்னை மையம் இது. இங்கே என்ன உண்டு? மருத்துவ சோதனை நிலையம் உண்டு. ‘எக்ஸ்ரே’ படம் பிடிக்க, பல் வைத்தியம் செய்ய, கண் சோதனை செய்ய, காது சோதனை பார்க்கக் கருவிகள் உள்ளன. சென்னையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் இந் நிலையத்தை நடத்துவார்கள். மருத்துவ சோதனை நிலையம் மட்டுமல்ல இது. நூலகம் இருக்கும்; கலைக்கூடம் இருக்கும்; மாணவர் விடுதியுண்டு; வங்கி வசதியும் உண்டு.

கட்டடத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது தெரியுமா? டென்மார்க் அரசு, எல்லாவற்றிற்குமாகப் பதினெட்டு இலட்சம் ரூபாய் வழங்கிற்று. தளவாட சாமான்களுக்கான இரண்டு இலட்சம் ருபாயை நாம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஆ! என்ன தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்!

ஜினிவாவின் சிறப்பைக் காட்டிக் கொண்டிருந்தவன் திடீரென முன்னறிவிப்பின்றி, பொத்தெனச் சென்னையின் தொல்லையில் உங்களை இறக்கிவிட்டேனா? அதிர்ச்சி அடையாதீர்கள்!

மீண்டும் ஜினிவாவிற்குப் பறந்து செல்வோம். இதோ, உ. ப. சே. யின் அலுவலகம். நானும் சிதம்பரநாதனும் உள்ளே நுழைந்தபோது காலை 9.25 மணி. அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் இடத்தில் இருந்தனர். அதுமட்டுமா? அலுவலில் முழ்கியிருந்தனர்!

“ஒன்பது மணி, அதிகாலையல்லவா?” என்று கேட்டேன்.

பல அலுவலகங்கள் 8-30 மணிக்கே தொடங்கி விடும் என்ற பதில் வந்தது. கல்விக்கூடங்களும் அவ்வளவு காலையில் தொடங்கி விடுமாம். பனிக் காலங்களில் கூட அப்படியாம்.

உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொன் விழா அவைக் கூட்டத்தைச் சென்னையில் நடத்துவது என்று இரண்டு நாள்களும் காரில் பயணஞ் செய்யும்போது திட்டமிட்டோம். அதுபற்றிய நிகழ்ச்சி நிரல்கள், செயல் முறைகள், செலவுக் கணக்குகள், வருவாய் வழிகள் ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்தவற்றை நாங்கள் எழுத்து வடிவில் உருவாக்கினோம். அவற்றைத் தட்டெழுத்தாக்கினோம்.

தமிழ் நாட்டு அரசிடம் நிதி உதவி கோரும் கடிதத் தையும் ஆயத்தஞ் செய்தார் சிதம்பரநாதன்.

உ. ப. சே. ஐம்பதாண்டுக் காலமாகப் பல்கலைக் கழகப்பணி புரிந்துளது. எதிர்காலத்தில் பல்கலைக் கழகச் சமுதாயத்தைக் கொண்டு பொதுச் சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென்னும் எண்னம் கருக்கொண்டிருக்கிறது. எந்தச் சேவையைப் பொதுச் சமுதாயத்திற்குச் செய்வது? எவ்வளவு செய்வது? எப்படிச் செய்வது? இவற்றைப்பற்றிச் சென்னையில் நடக்கும் அவையில் முடிவு செய்வார்களென்று அறிந்தேன்.

இவ்வாண்டு அனைத்துலகக் கல்வி ஆண்டு. எனவே, கல்விபற்றிய பொதுச் சமுதாயச் சேவை பொருத்தமாக இருக்குமென்று கருதப்பட்டது. முதியோர் கல்வி அத்தகைய சேவையின் முளையாகத் தோன்றிற்று.

1969ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் சென்னை நகரில் கூடிய முதியோர் கல்விக் கருத்தரங்கில், என்னால் படைக்கப்பட்டு, கருத்தரங்கால் செப்பம் செய்யப்பட்ட, ‘தமிழ் நாட்டிற்கான முதியோர் கல்வி ஐந்தாண்டுத் திட்டம்’ நினைவில் மின்னிற்று. அதன் உருவம் என்ன?

தமிழ் நாட்டின் மக்கட்தொகை மதிப்பு நான்கு கோடி தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர் மதிப்பு நூற்றுக்கு அறுபது விழுக்காடு. இவ்வளவு பெரிதா என்று திகைக்காதீர்கள். இரண்டு கோடிப் பேருக்குமேல் நம் செந்தமிழ் நாட்டில், தேன்மொழியாம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நம் உடன்பிறப்புகள் தற்குறிகள்!

வறுமையினால் ஒரு தமிழன் கற்கவில்லையென்றல் இங்குள்ள எல்லோரும் நாணவேண்டும். என் ஆணை யன்று; பாவேந்தர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆணை, தாசரின் தாசர்களாகிய நமக்கு இட்ட ஆணை.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஐந்து வயதிற்கு உட்பட்டவர்களும் உண்டு; தள்ளாதவர்கள் உண்டு. எழுத்தறிவு இயக்கத்தை எந்நாட்டில் தொடங்கினாலும், பச்சைக் குழந்தைகளையும் பாட்டன் பாட்டிகளையும் கணக்கில் சேர்க்காமல் விட்டுவிடுவது வழக்கம். சாதாரணமாகப் பதினைந்து முதல் நாற்பது வயதுக்குள் அடங்கியவர்களுக்கே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது வழக்கம்.

இம் மரபுப்படி 15-40 வயதினர் ஒரு கோடிப் பேருக்கு-எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கோடிப் பேருக்கு-எழுத்தறிவு ஊட்ட வேண்டுமென்பது அந்தத் திட்டம். எத்தனை ஆண்டுகளில் ஒரு கோடிப் பேருக்கு எழுதப் படிககச் சொல்லிக் கொடுப்பது? ஐந்தாண்டில் சொல்லிக் கொடுப்பதாகக் குறிக்கோள்.

அப்படியானால் ஆண்டிற்கு இருபது இலட்சம் மக்களுக்கு எழுத்தறிவு வரவேண்டும். இதற்கு முதியோர் நிலையங்கள் எத்தனை தேவை? நாற்பதாயிரம் முதியோர் கல்வி நிலையங்கள் தேவை. முதியோர் கல்வி பெற ஆறு மாதங்களே தேவை. ஒவ்வொரு முதியோர் நிலையமும் ஆண்டிற்கு இரு குழுக்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். குழு ஒன்றில் சராசரி இருபத்தைந்து பேர் இருக்கலாம்.

சுருங்கக் கூறின், 40,000 முதியோர் கல்வி நிலையங்களைத் தொடங்கி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பிரிவு முதியோரைச் சேர்த்துக் கொடுத்தால், வயது வந்தோர் அனைவரும் ஐந்தாண்டில் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வார்கள். இதற்கு எவ்வளவு செலவு? எட்டு, ஒன்பது கோடி ரூபாய்கள்; ஒர் ஆண்டுக்கு அன்று: ஐந்தாண்டுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்களுக்குச் சம்மானம்; விளக்குச் செலவு; நூல்கள், எழுது பொருள் வாங்கச் செலவு: கண்காணிப்புச் செலவு; அத்தனையும் சேர்ந்த மொத்தச் செலவு எட்டு, ஒன்பது கோடிகளே.

இதைக் கூறியதும் நாதனுக்குப் புதுத் தெம்பு. முதலில் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினால் என்ன என்று நாதன் கேட்டார்.

சிறிதாகவோ பெரிதாகவோ தொடங்கிச் சோதனை செய்தல் நல்லது. இதுவே கற்றவர் மற்றவர்க்கு ஆற்றும் நன்றிக்கடன் என்று முடிவு செய்தோம். அதற் காகச் சிறு திட்டமொன்றைத் தீட்டி, ஒழுங்குபடுத்திக் கொண்டோம்.

உ. ப. சே. பொது அவைக் கூட்டத்திற்கான திட்டக் குறிப்பையும், முதியோர் கல்வி முன்னோடித் திட்டத்தையும் விரைந்து தட்டெழுத்தாக்கித் தந்தனர் அலுவலர்.

ஜினிவாவில் ஆக வேண்டியது முடிந்தது. பகல் உணவிற்குப்பின் திட்டமிட்டபடி, பிற்பகல், 2-30 மணிக்கு ஜினிவாவிலிருந்து பாரிசிற்குப் பயணமானேன். விமான நிலையத்திற்கு நாதனும் அவரது மனைவியும் வந்திருந்து வழியனுப்பினார்கள்.

ஏர் இந்தியாவின் பிரதிநிதியொருவர், ஜினிவா விமான நிலையத்தில் என்னோடிருந்து, பயணச் சடங்குகளை எளிதாக முடித்து வைத்தார். அவர் சுவிஸ் நாட்டவர். அவரது மனைவியும் அலுவல் பார்த்துச் சம்பாதிப்பதாகக் கூறினார்.

தம் நாட்டில் வருமான வரிப்பளு அதிகமென்று குறைப்பட்டுக் கொண்டார் அவர். எவ்வளவு சுமை என்றேன். இருவரது வருவாயில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வரி வங்கிக் கொள்வதாகக் குறைப்பட்டார். நானும் என்னைப் போன்ற சம்பளக்காரர்களும் இங்கே விழிபிதுங்க வரி கொடுப்பதைக் கூறி, அவரை ஆறுதல் படுத்த நினைத்தேன். வினாடியில் தெளிவு மின்னிற்று. ‘தோழனோடும் ஏழைமை பேசேல்’ என்னும் பழமொழி நினைவிற்கு வந்து வாயை அடைத்தது. (குறையில்லாப் பெரியவனாகவே பாரிசிற்குப் புறப்பட்டேன்.)