உலகத்தமிழ்/போசிரியர்களின் பணி

விக்கிமூலம் இலிருந்து

9. பேராசிரியர்களின் பணி

ஜினிவாவை விட்டுப் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், ஏர்பிரான்ஸ் விமானம் 3-30 மணிக்குப் பாரிசை அடைந்தது. இறங்கித் தரை மேல் நின்றது; கதவு திறக்கப்பட்டது . ஏணி பொருத்தப்பட்டது. ஆயினும் யாரும் இறங்காதபடி வாசற்படியில் நிறுத்தப்பட்டோம் ஏன்? விமானத்திலிருந்து அழைத்துக் கொண்டு போக வேண்டிய பேருந்து வண்டி வந்து சேரவில்லை. ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பின் வந்து சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கி பேருந்து வண்டியில் வெளியே சென்றோம்.

ஜினிவாவில் விமானக் கம்பெனியார்கள் பெட்டியை எடை போட்டு எடுத்துக் கொண்டார்கள். அப்போது நம் ஊர்களில் கொடுப்பது போல அட்டைச் சீட்டு கொடுக்கவில்லை. தவறிவிட்டார்களோ என்று சீட்டைக் கேட்டேன்.

‘சீட்டு இல்லை. பாரிசு விமான நிலையத்தில் சீட்டேதும் காட்டத் தேவையில்லே. அவரவர் மூட்டையை அவரவர் சும்மா எடுத்துக் கொள்ள வேண்டியதே’ என்று பதில் வந்தது.

அப்படியே பாரிசில் என் பெட்டியைக் கண்டதும் யாரிடமும் எந்தச் சீட்டும் கொடுக்காமல் அதை எடுத்துக் கொண்டேன்.

விமான நிலையத்தில் இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த திரு அய்யர், சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் காசி ஆகிய இருவரும் என்னைக் கண்டு, பாரிசிற்கு அழைத்துச் சென்றனர்.

பாரிசில் ‘லத்தின் பகுதி’ என்றழைக்கப்படும் பகுதியில், நெடுஞ்சாலையொன்றில் அமைந்திருக்கும் ஒட்டல் ஆப்சர்வேடாரில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தனர் தூதரகத்தார்.

அங்குப் பெட்டியைப் போட்டுவிட்டு மாநாடு நடக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினேன். மாநாட்டு இடமாகிய பிரான்ஸ் கல்லூரி, நான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரம். பேராசிரியர் காசி என்னை அங்கு அழைத்துக் கொண்டு போனர். புதிய ஊரில் இடம் அடையாளம் கண்டு கொள்ளத் தகுந்தவழி நடந்து செல்வதே. நெடுந்துாரம் இல்லை யாகையால் நடந்தே சென்றோம்.

தொன்மை வாய்ந்த அக் கல்லூரியில் நுழைந்து தமிழ் மாநாட்டு அலுவலகத்திற்குச் சென்றோம்.

“வாருங்கள்; வாருங்கள். எப்போது வந்தீர்கள்?” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். யாருடைய குரல் அது?

பேராசிரியர் தனிநாயகமே அப்படி வரவேற்றார், முன்பெல்லாம் அவரைக் கத்தோலிக்கப் பாதிரியாரின் அங்கியில் கண்டவன் நான். அன்று மற்றவர்களைப் போலச் சாதாரண உடையில் இருந்தார். நொடிப் பொழுது திகைத்துச் சமாளித்துக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகளில் கிருத்துவப் பாதிரிகளுக்கு இப்போது தனி அங்கி கிடையாதென்று பின்னர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளார் கூறத் தெரிந்து கொண்டேன்.

பேராசிரியர் தனிநாயகம் உள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். கண்ட காட்சி என்ன? பேராசிரியர் சுப்பிரமணியம், டாக்டர் பிலியோசா, திரு. நாகசாமி ஆகிய மூவரும் தனித்தனியே வரிசையாக நின்று கொண்டு மெய் மறந்து மடமடவென்று பணி புரிந்து கொண்டிருந்தார்கள். எதிரே அடுக்கி வைக்ககப் பட்டுள்ள தாள்களில் ஒவ்வொன்றை எடுத்து இந்தியர் இருவரும் கொடுக்க, பிரெஞ்சு நண்பர் பிலியோசா அவற்றை உறையில் இட்டுக் கொண்டிருந்தார். சிவ பூசையில் கரடி புகுந்தாற்போல் புகுந்துவிட்டேன். தெரியாத்தனமே. முதலில் பிலியோசாவிற்கு அறிமுகஞ் செய்யப்பட்டேன். அவர் கைகுலுக்கி விட்டு வேலையில் மூழ்கிவிட்டார். மற்றவர் இருவரும் அப்படியே.

‘ஆகா! இவர்கள் தமிழ்ப்பற்று எத்துணை! எத்துணை’ என்று பெருமிதம் கொண்டேன். பல்லாயிர கிலோமீட்டர் கடந்து வந்து, கவர்ச்சிகரமான பாரிசின் காட்சிகளையும் கலைகளையும் கூடச் சிந்தியாமல், பேராசிரியப் பெருமக்களெல்லாம், எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த சாதாரண மக்கள் செய்யவேண்டிய ‘மடிப்பாளர்’ பணியைச் செய்து கொண்டிருக்கிறார்களே! இவர்களது தமிழ்த் தொண்டிற்கு யாரும் கை கொடுப்பார் இல்லையே என்று ஏங்கினேன்.

‘உங்கள் பணியில் நானும் சிறிது நேரம் பங்கு கொள்ளலாமோ’ என்று கேட்டுப் பார்த்தேன். ‘பரவாயில்லை. நாங்களே முடித்து விடுகிறோம்’ என்ற பதில் வந்தது. அதோடு விட்டு விட்டேன்.

மாநாட்டுப் பணியில் பங்கு கொண்டு உதவ முன் வந்தும் மாநாட்டாளர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை யென்று சொன்னார்களே? அது எவ்வளவு உண்மையோ! எதிரில் மாநாட்டுப் பிரதிநிதிகள் சிலர் அமர்ந்திருந்தனர். இலங்கைப் பிரதிநிதிகள் இருவர், நம் டாக்டர் மு. வ. ஆகியோர் இருந்தனர். அவர்களோடு அளவளாவினேன். சில நிமிடங்களில் -

‘உங்களுக்குச் சிவப்பு வண்ணப் பை இருக்கலாமா அல்லது நீல வண்ணப் பையே வேண்டுமா?’ என்று கேட்டார் அங்கிருந்த மற்றொருவர்.

‘சிவப்பைக் கண்டு மிரள்கிறவன் அல்லன் நான். எந்த வண்ணத்திலும் இருக்கலாம், எனக்குக் கொடுப்பது’ என்றேன்.

சிவப்புப் பை கிடைத்தது. அதில் மாநாட்டுக் கட்டுரைகளும், கால அட்டவணையும் சில தகவல்களும் இருந்தன. அடுத்த நாள் பாரிசில் நடக்கவிருந்த தேசியத் திருநாள் அணி வகுப்பைப் பார்க்க நுழைவுச் சீட்டும் இருந்தது.

வேலை செய்கிறவர்களைக் கெடுக்கக் கூடாதல்லவா? எனவே நெடுநேரம் அங்கே தாமதிக்காமல் திரும்பி விட்டோம்.

அங்கிருந்து பேராசிரியர் காசியின் வீட்டிற்குச் சென்றோம். அது பாரிசின் வெளிப்புறத்தில் உள்ளது. பாதாள இரயிலில் செல்லுவதற்கே அரை மணிக்கு மேல் பிடித்தது.

அவரது இல்லத்தில் இந்திய உணவு கிடைத்தது அதை முடித்துக்கொண்டு ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது. ஒட்டல்வரை காசி என்னுடன் வந்தார். ஆகவே சமாளித்தேன்.