உலகத்தமிழ்/நாசக் கருவிலே மானுடம்

விக்கிமூலம் இலிருந்து

10. நாசக் கருவிலே மானுடம்

டுத்த நாள்-அதாவது ஜூலை 14ஆம் நாள்; பிரஞ்சு மக்களுக்குத் தேசியத் திருநாள்; வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நன்னாள்; புரட்சிப் பெருநாள். 1789 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாளன்று வாழ்வு கெட்டு, வறுமை மிஞ்சி, வேறு வழி யேதுமின்றிப் பிரஞ்சு மக்கள் கிளர்ந்து எழுந்து சென்று பாஸ்டீல் என்னும் மையச் சிறையைத் தாக்கி உடைத்துத் தகர்த்துத் திறந்த நாள். புரட்சியின் தொடக்க நாள். மன்னராட்சியைக் கவிழ்த்துவிட்டு மக்களாட்சியை அமைத்த பிரஞ்சுப் புரட்சியின் தொடக்க நாள். மக்களாட்சி அமைந்த பிறகு வரலாற்றுச் சிறப்புடைய இந்நாளை ஆண்டாண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். அன்று எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை. பணிமனைகளுக்கும் அதுவே. கடைகளுக்கும் விடுமுறை பெரும்பாலும் உணவுச்சாலைகளுக்கும் அப்படியே. எல்லா உணவுச் சாலைகளையும் மூடுவதில்லை. எல்லா நகரங்களிலும் உணவுச் சாலையையே நம்பி வாழ்வோர் ஏராளம். உணவுச்சாலைகள் அத்தனையும் மூடிக் கிடந்தால் ஏராளமானவர்கள் பட்டினிதானே! பல்லாயிரக்கணக்கானவர்களைப் பட்டினி போட்டா திருவிழா கொண்டாடுவது! பட்டினி வாட்டம் ஏற்படாதபடி தெருவுக்குத் தெரு, சில உணவுச் சாலைகளை மட்டும் திறந்துவைக்க, உரிமையாளர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றார்கள். அடியோடு ஓட்டல் மூடு விழா அன்று இல்லை.

அன்று போக்கு வரத்து நிலை எப்படி? நாட்டுத் திருவிழா என்று சொல்லி, எல்லோரையும் நடராசர்கள் ஆக்கி விடவில்லை. ‘மெட்ரோ’ (பாதாள இரயில்), பேருந்து வண்டிகள், வாடகைக் கார்கள் ஆகியவை ஞாயிறு விடுமுறையின் போது எவ்வளவு ஒடுமோ அவ்வளவு ஒடுகின்றன. இது நமக்குப் பாடம். மன்னிக்க வேண்டும். படிப்பதாக இருந்தால் அல்லவா?

கட்டிக்காக்க முளைப்பது ஆட்சி, அந்த ஆட்சி கால ஒட்டத்தில் பிறவி மன்னர் ஆட்சியாக இறுகிவிடுகிறது. மக்களை விட்டு எட்டிப் போய்விடுகிறது. சுற்றியிருப்போரின் சுழற்சியே ஆட்சியாகி விடுகிறது. இது முற்றினால் கட்டும் இல்லை; காவலும் இல்லை என்னும் நிலை வளரும்; வறுமையும் பசியும் வாட்டமும் கொதிப்பும் தொடரும். இவை, சிற்சில சமயங்களில் புரட்சியாக வெடிக்கும். பெரும் புரட்சியாகி ஆட்சி முறையையே மாற்றும். அப்படிப்பட்ட புரட்சியே பிரஞ்சுப்புரட்சி.

‘உரிமை, ஒருநிலை, உடன்பிறப்புணர்ச்சி’ என்னும் அரசியல் மறைமொழி இன்று பலரும் அறிந்தது அன்று. அது பிரஞ்சு மக்களின் விடுதலைப் பாணியாக ஒலித்தது.

உரிமை வேட்கை உந்த, பாரிசு மக்கள் திரண்டெழுந்து பாஸ்டீல் சிறையை நோக்கி நடந்தார்கள். அவர்களது போர்ப் பரணி வானைப் பிளந்தது. அம் மக்கள் எழுப்பிய புழுதிப்புயல் வானை முடிற்று.

அரண்மனையிலிருந்த பதினாறாம் லூயி மன்னர் மேல் மாடியிலிருந்து இதைக் கண்டார். இராணி ‘அன்டாய்னெட்’ உடன் இருந்தார். மக்கள் பெருங்கூட்டமாகி இப்படிக் கத்திக் கொண்டு திரிவதற்குக் காரணத்தை அறிய விரும்பினார். ரொட்டி இல்லேயென்று கிளர்ச்சி செய்ததாகக் கேள்விப்பட்டார்.

அரண்மனை வாழ்வு மட்டுமே அறிந்தவர் அல்லரா? நாட்டின் அவலமறியாதவர் அல்லரா? ஆயினும், நல்லவர் அல்லரா? நல்லவர் கருணைபுள்ளம் பேசிற்று. இதோ கேளுங்கள்:

“ஐயோ பாவம் ரொட்டியில்லாவிட்டால் ‘கேக்’ சாப்பிடுவது தானே! இதற்கேன் இப்படிக் கத்த வேண்டும்’ என்று பரிதாபத்தோடு ஆலோசனை கூறினர், அதன் விலையறியாத இராணி.

“அரிசி எங்கே கிடைக்கவில்லை? பங்கீட்டுக் கடையில் குறித்த விலைக்குக் கிடைக்காவிட்டால் என்ன? மூலைக்கு மூலை கூடையிலே அரிசி, கூடுதல் விலைக்குக் கிடைக்கிறதே?” இப்படி எங்கோ கேட்டது நினைவிற்கு வந்தால், அது என் குற்றமன்று; உங்கள் நினைவாற்றலின் குற்றம்.

பாரிசிற்குச் செல்வோம். வாருங்கள். ஜூலை 14 ஆம் நாள் காலை, பேராசிரியர் காசி நான் தங்கியிருக்த ஒட்டலுக்கு வந்தார். இருவருமாக வாடகைக் காரில் பேரணி நடக்கும் சாம்பலிசி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

குடியரசு நாளில் சென்னையில் அணிவகுப்பு நடப்பதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் பாரிசில் அவர்களது தேசியத் திருநாளன்று நடந்தது. பார்வையாளர்களுக்குத் தரத்திற்கு ஏற்றபடி, இடம் ஒதுக்கியிருந்தார்கள். அமர்ந்து காண வாய்ப்புப் பெற்றோர் உண்டு. நின்று காணச் சீட்டுப் பெற்றவர்கள் நாங்கள். இது அங்கே சென்ற பிறகே தெரிந்தது. அணிவகுப்பிற்கு முன் கோபித்துக்கொண்டு திரும்பி வந்துவிடவோ வழியில்லை. எனவே தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளாகிய நாங்கள், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நின்று கொண்டிருந்தோம்.

மாணவனாக நிற்கும் தண்டனை அனுபவித்ததில்லை. அதற்கு ஈடு பாரிசில், இந்த அணிவகுப்பில் கூடியிருந்த மக்களின் இடியிலிருந்து மறைத்திருவாளர்கள் ஞானப் பிரகாசம், இராசமாணிக்கம், காசி ஆகியோர் கூடி வளைத்துக் கொண்டு என்னைக் காத்தனர்.

அணிவகுப்புப் பெருநடை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப் படை, டாங்கிப் படை, ஏவுகணைப் படை, பல்வேறு நாசக் கருவிப் படை, மருத்துவப் படை என நீண்ட அணிவகுப்பினைக் கண்டோம். பல்வகைப் போர் விமானங்கள் வானில் பறந்து சென்று நாட்டின் வலிமையை முழங்கின.

கவண் எறிவதிலே தொடங்கி ஏவுகணை வரை நாசக் கருவிலேயே வளர்ந்துள்ள மானுடத்தைக் கண்டு வருந்தி வாடினேன். நுட்பத் தொழிலாளர் பல இலட்சம் பேர்களையும், மலைமலையாக மூலப் பொருள் களையும், கோடிகோடிப் பணத்தையும் பாழாக்கி, பட்டாளத்தையும் போர்க் கருவிகளையும் குவிக்கும் மானுடம், அதை விடுத்துத் தங்கள் தங்கள் பகுதி வாழ் மக்கள் அனைவருக்குமாகிலும் மனித வாழ்வு.நல்வாழ்வு அளிக்கப் பட்டிருக்கலாமே என்று ஏங்கிற்று என் பேதை உள்ளம். அறிவியல், நுட்பத் தொழில் இயல் ஆகியவற்றின் துணைகொண்டு, எங்கோ வெகுதுாரத்தில் உள்ள நிலாவையும் எட்டிப் பிடித்துவிட்டதே மானுடம்! விரைந்து சென்று, விரிந்த உலகங்களைக் காணக் கற்ற மனித சமுதாயம், அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அன்பு நீரில் கழுவி அமைதிப்பண்டம் செய்யலாமே! இப்படியும் பாய்ந்தது என் மனக் குரங்கு.

அவ்வேளை பார்த்துப் பேரணியும் முடிந்தது. நாங்கள் திரும்பினோம். அணிவகுப்பு நடந்த இடத்திற்கு அருகில், பெரிய மாதா கோயில் உள்ளது. ‘மகதலேன் மாதா கோயில்’ என்று பெயர். கம்பீரமாக எழுந்து விளங்கும் அது பழமையானது. பல படிகள் ஏறி உள்ளே சென்று பார்த்தோம். வேடிக்கை பார்ப்போர் கூட்டம் பெரிது. இதற்கிடையில் தொழுவோர் சிலர். சந்தை இரைச்சலிலே மக்கள் கூடி வழிபட வேண்டியுள்ளதை இது நினைவூட்டியது.

பகல் உணவை அருகில் இருந்த உணவுச்சாலையில் முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு ‘மெட்ரோ’வில் திரும்பினேன்.

பிற்பகல் மாநாட்டுத் தகவல்களைப் படித்து அறிந்து கொண்டேன். மாலைப் பொழுதை அருகிலிருந்த ‘லக்ஸம்பர்க்’ பூங்காவில் தனியே கழித்துவிட்டு ‘தானே பரிமாறிக்கொள்ளும்’ உணவு விடுதிக்குச் சென்றேன். பிரஞ்சு மொழி தெரியாததோடு, காய்கறி உணவினனாகவும் இருந்தது தொல்லையாக இருந்தது. அரை வயிறு உண்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.

திரு ம பொ. சி. அவர்கள் இரவு வந்து சேர்ந்தார். நான் தங்கியிருந்த ஒட்டலிலே தங்கினர். ஒருவருக்கொருவர் துணை. அங்காவது கெருக்கமாகப் பழக வாய்ப்புக் கிடைத்தது.