உலகத்தமிழ்/உல்லாசப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

6 உல்லாசப் பயணம்

சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சுவிஸ் மக்கள். வங்கிக் கணக்கு வைக்காத மக்களே இல்லை எனலாம். காசு பணமாக வீடுகளில் பூட்டி வைப்பதோ, வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதோ, அவர்கள் வழக்கமன்று. மாறாகச் சில்லறைச் செலவுகளுக்கான பணம் மட்டுமே ரொக்கமாகக் கையில் இருக்கும். மற்றப் பணத்தை வங்கியிலேயே வைத்திருப்பார்கள் தேவையான போதே வாங்கிக்கொள்வார்கள். கடைச் சாமான்களுக்கும், ஓட்டல் சாப்பாடுகளுக்கும், ‘செக்’ கொடுப்பது சாதாரண நிகழ்ச்சி. ஏதோ பணக்காரர்கள் மட்டுமே இப்படிச் செய்கிறார்களா? இல்லை; எல்லோருமே இப்படித் தான்.

முதல்தேதி வாங்கிய முந்நூறு ரூபாய்களைக் கையில் வைத்துக்கொண்டு, மூன்றாவது வாரம் வரை செலவு செய்துவிட்டு, நான்காவது வாரத்திற்கு நான்கு பக்கமும் பார்க்கும் நம் நிலை நினைவிற்கு வந்தது. வாழத் தெரிந்தவர்களைப் போல, நாமும் மாதச் சம்பளத்தை வங்கிக் கணக்கில் வரவுசெய்யச் சொல்லிவிட்டு, அவ்வப் போதைக்கு வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்வது முறைக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு கேள்வி பிறந்தது.

“நன்றாயிருக்கும் குறைந்த பட்சம் நான்காம் வாரத்தின் நான்கு நாள் செலவு வரையிலாவது அந்த முர்நூறு ருபாய் ஊதியம் நீளும்,” என்பது பதில். இதில் அற்புதம் ஒன்றுமில்லை.

‘எவ்வளவு ஊதாரியானாலும், கையில் ரொக்கம் வைத்துக்கொண்டு செலவு செய்யும்போது வரும் தாராளம், வங்கியிலே இருந்து வாங்கிச் செலவு செய்யும் போது வருவதில்லை’ என்பது விளக்கம்.

மதுரை டி. வி. எஸ். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் அனுபவம் எங்கள் பேச்சை வளர்த்தது. என்ன செய்தார்கள் அவர்கள்? எலலோரையும் போல, அவர்களும் மாதச் சம்பளத்தைக் கையிலே பெற்றுக்கொண்டிருந்தார்கள். வீட்டிலே பூட்டி வைத்துக்கொண்டு செலவு செய்துவந்தார்கள். எல்லோரையும் போல அவர்களுக்கும் போதாமை, மாதந்தோறும்.

ஈராண்டிற்கு முன் புதிய சோதனை செய்து பார்த்தார்கள் டி. வி. எஸ். பள்ளி ஆசிரியர்கள். மாதச் சம்பளத்தை வங்கியின் மூலம் செலுத்தும்படி கோரினார்கள்.நிர்வாகமும் ஒப்புக்கொண்டது சம்பளப் பட்டு வாடா இப்படியே நடந்தது. பல மாதங்களுக்குப் பின் கணக்குப் பார்த்தார்கள். எல்லோர் கணக்கிலும் இல்லாவிட்டாலும், பலர் கணக்கில், மாத சம்பளம் எஞ்சியிருக்கக் கண்டார்கள். ‘கையிலே சம்பளம் பெற்றிருந்தால் வெற்றாட்களாகவே தொடர்ந்திருப்போம். வங்கி வரவுச் சம்பளம் தங்கிச் சேருது’ என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

இதைச் சொல்லி மகிழ்ந்தேன். நல்ல தெம்பிலே உள்ள மல்யுத்த வீரர்; அவரது உடம்பிலே ஓடுகிறது உயிர்த் துடிப்புள்ள குருதி, இரண்டொரு நொடி சிறிது இரத்தத்தை ஓரிடத்தில் நிறுத்தினால் என்ன ஆகும்? அவர் மயங்கி விழ்வார் இரத்தம் இருந்தால் போதாது. ஒடினால்தான் உயிர் வாழ்க்கை. அதேபோல் பணம் இருந்தால் போதாது. ஒடி, உதவினால்தான் பொருளாதார உயிர் மாறாகக் கோடிகோடி வீடுகளில் பூட்டிப்பூட்டி வைத்தால், நாட்டின் பொருளாதாரம் மயங்கிக் கிடக்கும். எனக்குத் தெரிந்தால் போதுமா?

சுவிஸ் நாடு வங்கிகளுக்குப் பெயர் போனது என்பதைச் சிதம்பரநாதன் நினைவுபடுத்தினர்.

அந்நாட்டில் வங்கிக் கணக்கு பரம இரகசியம். அதை யாருக்கும் ஒருபோதும் வெளியிடக்கூடாது என்பது அந் நாட்டுச் சட்டம். எனவே, சுவிஸ் மக்கள் மட்டுமல்லாது, பிற நாட்டவர்கள்-இலட்சக்கணக்கானவர்கள்-தங்கள் பணத்தைக் கறுப்பானாலும் வெள்ளையானாலும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத் திருக்கிறார்கள். இதுவும் அந் நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெருந்துணை செய்கிறது.

இதையெல்லாம் பேசிக்கொண்டே நடந்தோம். இயற்கை வெளிச்சம் மறையவில்லை. மணியென்னவென்று கைக் கடிகாரத்தைப் பார்த்தோம். ஒன்பது காட்டிற்று. ‘இரவு ஒன்பது மணிக்கும் பகல் வெளிச்சமா!’ என்று வியந்து கொண்டே கார் ஏறித் திரும்பினோம்.

நான் ஜினிவாவிற்குப் போய்ச் சேர்ந்தது வெள்ளிக் கிழமை மாலை.

சனி, ஞாயிற்றுக் கிழமை-இரு நாள்களும் விடுமுறை மேனாட்டார் விடுமுறை நாள்களை வீட்டில் கழிப்பது அரிது. அந்நாள்களில் அலுவலகங்களில் காக்கை குருவியைக்கூடக் காண முடியாது. வார விடுமுறையின்போது, வெளியூருக்கு மகிழ்ச்சி யுலா, பிக்னிக் செல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது. இப் பழக்கம் மேனாடுகளில் வாழும் நம்மவர்களையும் விடவில்லை.

எனவே, அடுத்த நாள் வெளியூருக்குக் காரில் சென்றுவரத் திட்டமிட்டார் சிதம்பராாதன். சனிக் கிழமை மாலை தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு மதியழகன் ஜினிவா வருவதாக ஏற்பாடு. எனவே அவரை விமான நிலையத்தில் வரவேற்கவும் விரும்பினார். அதற்குத் தோதாக, ஜீனிவாவிற்கு நாற்பத்தைந்து கிலோ தூரத்திலுள்ள ‘அன்னசி’ என்ற இடத்திற்குப் போக முடிவு செய்தோம்.

மறுநாள் காலையிலே சிதம்பரநாதன் காரில் அவர், அவரது மனைவி, அவரது மகன் குமார், நான் ஆகிய நால்வரும் புறப்பட்டோம். கார் சிட்டெனப் பறந்தது.

சென்னையில் நாற்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் வெளியூர் நீண்ட பயணத்தில் ஐம்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் காரை வேகமாக ஒடவிடுவதில8ல. அவ்வளவு குறைந்த ஓட்டத்திலும் என் கண் சாலையின் மேலேயே இருக்கும்; அடிக்கடி ‘பார்த்து, பார்த்து’, என்று காரோட்டியை நச்சரிப்பேன்.

ஜினிவா-அன்னசி சாலையில், தொண்ணுறு, நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஒட்டினார் சிதம்பரநாதன். அதை நான் பொருட்படுத்தவில்லை. அங்கே திடீரெனத் துணிச்சல் வந்துவிட்டதா? அப்படியொன்று மில்லை. ஆபத்து இருந்தால் அல்லவா துணிச்சல் தேவைப்பட?

நடுத் தெருவில் நின்று பழைய கதை பேசுவோர் கிடையாது. அங்கெல்லாம் வண்டி வழி வண்டிக்கே; நடக்கும் ‘மன்னருக்கு’ நடை பாதையே. ‘பிரேக்கை’ சோதிக்கும் எருமை தெருவிலே வராது. பயமறியாத இளங்கன்றும் சாலையிலே ஓடாது. ஆட்டுக் குட்டி துள்ளியோட இடம் வேறு. எங்கிருந்தோ சட்டென்று தாவித் தொடரும் நாயும் நடுத்தெருவில் தலை காட்டாது. கட்சி மாறிகள் போல் ஒடும் காரோட்டிகள் இலர். வாகனச்சாலை வாகனங்களுக்கே அதிலும் விரைவு வழி விரைவு வண்டிகளுக்கே மெள்ள ஒட்டுவோர்க்கத் தனி வழி. இந்நெறிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே எவ்வளவு விரைந்து சென்றாலும் மெத்தென இருக்க முடிந்தது. சுவிஸ் நாட்டு நெடுஞ்சாலைகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ; ஒரே திசையில் மூன்று கார்கள் செல்லும்படி சாலைகள் அகன்றுள்ளன. வழி நெடுகிலும் கோடிட்டுத் தடம் பிரித்துள்ளனர். ஒரு தடத்திலிருந்து மறு தடத்திற்குச் சட்டென்று மாறினால் தீங்கு: சனி, ஞாயிறுகளில் பெருந் தீங்கு.. ஒவ்வொரு தடத்திலும் சங்கிலித தொடர்போல வரும் வண்டியோடு மோத நேரிடும். ஆகவே முன்கூட்டியே, பின் விளக்கையும் கைகாட்டியையும் போதிய தூரம் போட்டுக் காட்டிய பிறகே, தடம் மாறலாம்.

ஜினிவாவில் இருந்த நாங்கள் அன்னசிக்கு விரைந்தோம். வெளியூர் மக்கள் ஜினிவாவை நோக்கிப் பறந் தனர். மொத்தத்தில் சாலையெல்லாம் கார் மயம்; நினைக் கும் முன் பறக்கும் கார்மயம். அன்னசியை அடைந்தோம். இடந்தேடிக் காரை நிறுத்தினோம். மேனாட்டு நகரங்களில் கார் வாங்குவது எளிது. அதை நிறுத்த இடம் பிடிப்பது அரிது. குடியிருக்கும் பல குடும்பங்களுக்கும் கார் இருக்கும். அத்தனை கார்களையும் தெருவிலே கூட, வீட்டின் முன்பே நிறுத்த முடியாது. அக்கம் பக்கத்திலும் அலைந்தே இடம் காண வேண்டும்.

அன்னசி அழகிய ஊர். அது பிரான்ஸ் நாட்டில் உள்ளது. அங்கு ஏரியொன்று உண்டு ஜினிவா ஏரியளவு பெரியதன்று. ஆயினும் வசீகரமானது; பயணிகளை ஈர்ப்பது. அந்த ஏரியில் படகில் சுற்றிவரக் கருதினோம்

காரைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டோம் புறப்படு வதற்கு முன்னே தாகசாந்தி செய்து கொண்டோம். வகைவகையான பழச்சாறுகளை டப்பாக்களில் நிரப்பி, சீல் வைத்து, கடைக்குக் கடை விற்கிறார்கள். எந்த நேரம் எந்த விட்டிற்குப் போனாலும் , டப்பாச் சாறுகளைப் பெறலாம்.

ஜினிவாவிலிருந்து ஆரஞ்சுச் சாறும் அன்னாசிச் சாறும் கொண்டுவந்திருந்தோம். அன்னாசிச் சாறு அருந்தி விட்டு நாங்கள் அருகில் இருந்த ஏரிக்குச் சென்றோம். படகுத் துறையொன்றுக்குச் சென்று மிதி படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம. திருமதி சிதம்பரநாதனும் செல்வன் குமாரும் முன்னே அமர்ந்து படகை மிதித்து ஒட்டினர். நானும் நண்பரும் பின்னே இருந்து திட்டமிட்டோம். அன்னசிக்கு வரும் வழியெலலாம் பேசிக்கொண்டு வந்தும் திட்டம் தீட்டுதல் முடிய வில்லே. அதைத் தொடர்ந்தோம். படகில் அப்படி யென்ன திட்டம் அது? நல்ல திட்டமே, சதித் திட்டமன்று, ஆக்கத் திட்டமே; அழிவுத் திட்டமன்று.

மேலே வெயில்; ஆயினும் இளங்காற்று சில்லென வீசி மகிழ்வித்தது. படகுப் பயணத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம்; மக்கள் வெயில் காயும் துறையை ஒதுக்கி விட்டு, பிற துறைகளைக் கண்டு மகிழ்ந்தோம். பொடிச் சிறுவரும் சிறுமியரும் ஏரியில் முழ்கி நீந்தி விளையாடக் கண்டோம். கீழே பாத்தோம். ஆழக் குறைவு மட்டுமன்று; மணற் பாங்கான நிலம் துணைபுரிவது தெரிந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் கரையோரத்திலுள்ள தொண்டிக் கடற்கரைப் பகுதியில் நெடுந்துாரத்திற்குக் கடல் ஆழமற்றிருப்பதாகக் கேள்வி. அங்கே மாணவ மாணவியர் நீராடி மகிழ வாய்ப்புகள் செய்ய வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன் நினைத்தது உண்டு. சோவியத் ஒன்றியத்திலுள்ள ஆர்டெக் மாணவர் பாசறையைக் கண்ட போது அரும்பி மலர்ந்த நினைப்பு அது உதிர்ந்த இதழான அது மீண்டும் மனம் விசியது. நல்லவர் எவராவது செய்து முடிக்கட்டுமே!

விளையாடிய அலுப்புத் தீரக் கரையோரப் புல்வெளியில் உட்கார்ந்து, சாண்டவிச்சும், கொக்கோகோலாவும் சாப்பிடும் இளைஞர்களையும் கண்டோம். காகித உறைகளையும் மூடிகளையும் ஆங்காங்கே, அப்படியப்படியே போட்டுவிடுவதில்லை. குழந்தைகள் கூட, தாங்கள் உண்டு முடித்ததும் உறைகளையும் பிறவற்றையும் ஒழுங்காகத் திரட்டி எடுத்துக்கொண்டு போய், பக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். வாயைக் கொப்பளிக்கிறேன் என்று எச்சில் தானம் செய்வோர் யாரும் என் கண்ணில் தென்படவில்லை.