உலகத்தமிழ்/சுவிட்சர்லாந்தின் சிறப்பு
5. சுவிட்சர்லாந்தின் சிறப்பு
சுவிட்சர்லாந்து ஒரு மொழி நாடன்று; நான்கு மொழி நாடு. ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ரோமான்சு ஆகிய நான்கும் ஆட்சி மொழிகள். ஒவ்வொரு கான்டனில் (பிராந்தியத்தில்) ஒவ்வொரு மொழி செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. நாட்டாட்சியில் நான்கிற்கும் இடம். இவற்றிற்கு எழுத்து ஒன்றே.
சுவிட்சர்லாந்தில் பிராந்திய அரசிற்கே அதிக அதிகாரம் நாட்டாட்சிக்கு வரையறுக்கப்பட்ட குறைந்த அதிகாரமே.
சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரியாக நடக்காத போது, திரும்ப அழைத்துக் கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. இத்தனை வாக்காளர்கள், திருப்பி அழைக்கும்-அதாவது பதவி நீக்கக் கோரிக்கையில்-கையெழுத்திட்டால் சட்டமன்ற உறுப்பினர் தம் பதவிக் காலம் முடிவதற்குமுன் விலகி விட வேண்டும் இது அரசியல் சட்டம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனம் போன போக்கிலே நடந்துகொள்ளாதபடி இது தடுக்கிறது. எனவே, அங்கே சட்ட மன்ற உறுப்பினர் கூடுவிட்டுக் கூடு பாய முடியாது; தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட முடியாது. திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளருக்கு இருப்பது மக்களாட்சிக்குத் துணை! தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தடம் புரண்டு உருளாதபடி கட்டை போடுகிறது.
சுவிட்சர்லாந்து அழகிய நாடு; மலைவளமும் வன வளமும் செறிந்த நாடு; பயிர் வகைகளும் தொழில் வகைகளும் செழித்த நாடு. மக்கள் வளமும் பெற்ற நாடு. சுவிஸ் மக்கள் உடல் நலம் உடையவர்கள். குழந்தைகள் அத்தனையும் கொழுகொழுவென்று இருக்கின்றன. உடல் நலத்தோடு சுறுசுறுப்பும் மிகுதி. இரண்டும் எதற்குப் பயன்படுகின்றன? நல்வாழ்விற்குப் பயன்படுகின்றன. நீண்ட நெடுங்காலமாக, ஒன்றி வாழும் வழியிலே வளர்ந்தவர்கள் சுவிஸ் மக்கள். அவர்களது மனவளமும் பெரிது. பல நூற்றாண்டுகளாகப் பல மொழி மக்களும் இணைந்து ஒன்றி, ஒரே நாட்டவராக வாழ்கிறார்கள். இதைத் திரு. சிதம்பரநாதனிடம் கூறி மகிழ்ந்தேன்.
“ஆம். நாட்டில் வாழும் நான்கு மொழிகளுக்கும் ஒரே உரிமை கொடுத்திருப்பதால் மொழிப் பகை இல்லை. அரசியல் அதிகாரம் மைய அரசிலே குவியாமல் பிராந்திய ஆட்சிகளுக்கும் பரவி இருப்பதால் அரசியல் போட்டிப் புயல்கள் மைய அரசினை ஆட்டிப் படைப்ப தில்லை.
அது மட்டுமா? சின்னஞ் சிறு நாடாயிருப்பினும் பன்னூறு ஆண்டுகளாகத் தன் காலில் நின்று வளம் பெற்ற நாடு சுவிட்சர்லாந்து. அத்தனைக் காலமாக நடுநிலைமை நாடாக இயங்கி வரும் நாடு இது.
பிரான்ஸ் ஒரு பக்கமும், ஜெர்மனி எதிர்ப் பக்கமும் நின்று நடத்திய ஐரோப்பியப் போர்களின் போதும் நடுநிலைமை வகித்த நாடு. பின்னர், உலகப் போர்களின் போதும், எப்பக்கமும் சேராமல் தனித்து, நடு நிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது. இந் நாட்டிலுள்ள பிரஞ்சு மொழியினரால் பிரான்ஸின் பக்கம் நாட்டைச் சேர்க்க முடியவில்லை. அதேபோல் ஜெர்மானிய மொழியினரால் ஜெர்மனியின் பக்கம் நாட்டை இணைக்க முடியவில்லை. ஜெர்மனியும் இத்தாலியும் இணைந்து போராடியது தெரியும். அப்போதும் சுவிஸ்-ஜெர்மன் மொழியினரும், சுவிஸ்-இத்தாலிய மொழியினரும் கூட்டுச் சேர்ந்து, ஜெர்மனியக் கூட்டின் பக்கம் சுவிட்சர்லாந்தை இழுத்துக் கொண்டு போக முடியவில்லை என்று வரலாற்றை (சுருக்கப் படத்தை) நினைவு படுத்திக் கொண்டோம்.
மெய்தான்; இந்நாடு, கூட்டுச் சேராக் கொள்கையை முழங்கவில்லை. அதை மூச்சாக்கிக் கொண்டது. நெடுங் காலமாக அவ்வழியே இயங்குகிறது. எப்படி இயங்கு கிறது. இது?
சுவிஸ் மக்கள் மொழி அடிப்படையை வைத்துத் தங்களைப் பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலி யர்கள் என்று பிரித்துக் கொள்ளவில்லை; பேசும் மொழி எதுவாயினும் வாழும் நாட்டுக் குடிகளாகி விட்டனர். சட்டப்படி மட்டுமன்று, சிந்தனைப்படியும். எனவே, சுவிஸ் மக்களது பற்று சுவிட்சர்லாந்துக்கே தங்கள் மொழி பேசும் ஆதிநாடு என்று சொல்லிக் கொண்டு சுவிஸ் மக்கள் யாரும் பிரான்சிடமோ ஜெர்மனியிடமோ காதல் கொள்வதில்லை. பிற நாட்டிடம் பற்றுப் பதியமாகவில்லை. போர் நெருக்கடியின் போதும் கட்சி சேராதிருக்கிறார்கள். எனவே, அவரவர் வாழும் பகுதிகளில் அவரவர் மொழிக்கு உரிமையும் வாழ்வும் கிடைக்கின்றன. அதே நேரம் தங்களையும் தங்கள் நாட்டையும் தேவையில்லாத சண்டைகளில் சிக்க வைக்காமல், சீரழியச் செய்யாமல் காக்க முடிகிறது என்பதை உணர்ந்தேன். இது நமக்கும் பாடமானால் வாழக் கற்றுக்கொளவோம். குறிப்பாகத் தமிழர்கள் உணர்ச்சி வயப்படாமல் இப்பாடத்தைக் கசடறக் கற்றல் நல்லது; அதற்குத் தக நிற்றல் பின்னும் நல்லது அந்நிலை உருவானால் நம் அருமைத் தமிழ்மொழி, ஒரு நாட்டின் ஒரு மொழியாக நின்றுவிடாது. பல நாட்டின் உயிர் மொழியாக-ஆட்சி மொழியாக ஒளிரும்.
இப்படிச் சிந்தனைச் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கையில், ‘வருந்துகிறோம்’ என்ற இரு குரல் கேட்டு நானும் நண்பரும் திடுக்கிட்டு நின்றோம். நொடியில் நிமிர்ந்து நோக்கினோம்; கண்டோம். என்ன கண்டோம்?
காளையும் பாவையும் கைகோத்து நிற்பதைக் கண்டோம். ஜினிவா ஏரிக்கரை ஓரமாகக் கைகோத்து, கதைகள் பல சொல்லி, மகிழ்ந்து, மெல்ல உலாவி வந்த காதலர்களைக் கண்டோம். காதல் உலகிலே மிதந்து வந்த அவர்கள், நாங்கள் எதிர்ப்படுவதை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எங்களை நெருங்கிய போதே-எங்களோடு மோதுவதற்கு நொடி முன்னரே-மற்றவர் இருப்பதை உணர்ந்தனர். நடைபாதை யாருக்கு உரிமை என்று வழக்காடாமல், அதிலே நேரத்தையும் உணர்ச்சியையும் பாழாக்காமல், தங்கள் பண்பாட்டு வழியில் விரைந்து, ‘வருந்துகிறோம்’ என்று இருவரும் கூற, எங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது.
‘வருந்துகிறோம்’ என்று தலை தாழ்த்திவிட்டு நாங்களும் நடந்தோம். அவர்களும் அதையே செய்தார்கள்.
எங்கள் பேச்சு, சுவிஸ் மக்களது அன்றாட வாழ்க் கையைப் பற்றிச் சுழன்றது.
அம் மக்கள் தத்தம் வேலையையே கவனிப்பவர்கள். ‘அண்டை வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்காதிருப்பதற்கே குட்டைக் கழுத்தைக்’ கொடுத்ததாக நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நம்மை இடித்துரைக் கிறார் நெட்டைத் கழுத்தைக் கொடுத்தாற்கூடப் பக்கத்தில் எட்டிப் பார்க்காத பக்குவம் படைத்த மக்கள், அம்மக்கள். பிறர் விவகாரங்களில் தலையிடுவது அவர்கள் மரபன்று. எனவே, குடும்பத்திற்குக் குடும்பம் சண்டையிடுவது அரிது; அரிதிலும் அரிது.