உலகத்தமிழ்/ஜினிவாவில் முதல் நாள்
4. ஜினிவாவில் முதல் நாள்
“நீங்கள் ஜினிவா செல்ல வேண்டியவர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஏறுசீட்டு அப்படிக் காட்டுகிறது. அப்படியானால் உடனே புறப்படுங்கள். ஜினிவா பயணிகளுக்குக் குரல்கொடுப்பது காதில் விழவில்லையா?” என்ற பக்கத்தில் வீற்றிருந்த ஆங்கிலேயர் நினைவுபடுத்தினார். நொடிப் பொழுதில் கருத்துலகத்திலிருந்து விடுபட்டு எழுந்தேன்.
பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கு சுவிஸ் விமானத்தில் பயணமானேன். அது குறித்த நேரத்தில் புறப்பட்டது. தெற்கு நோக்கிப் பறந்தது; விமானத்தில் உட்காரும் இடத்துக்கு மேலே பரண் போன்ற இடம் உண்டு. நம் விமானங்களில் திறந்த பரண்களே காணலாம். எனவே அவற்றில் கைப்பையைக் கூட வைக்கக் கூடாது என்பது விதி; சுவிஸ் விமானத்தில் பரணுக்கு வலைப் பின்னல் இருந்தது. எனவே பயணிகள் சிறு பைகளையும் சிறு பெட்டிகளையும் காலுக்கடியில் வைத்துக் கொண்டு தொல்லைப்படவில்லை; வலைப் பரணில் வைத்து விடுகிறார்கள்.
ஒரே ‘ஒடுவழி’யில் ஒன்றன் பின் ஒன்றாக என் விமானமும், அதற்குமுன் மற்றொரு விமானமும் செல்லக் கண்டேன். முன்னையது மேலேறியதும் நான் சென்ற விமானமும் மேலே கிளம்பிப் பறந்தது.
நாளோ, மப்புமந்தாரமற்ற நாள். எனவே நெடுந்தூரம் தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் கடந்து சென்ற பகுதியும் பெரிதும் மலைப்பகுதியே. விமானத் திற்கு இரு பக்கமும் மலைத் தொடர். பனிமலைத் தொடரும் கண்டோம். அதற்குப் பெயர் ஆல்ப்ஸ் மலைத் தொடர். மலையுச்சியிலும், பள்ளத் தாக்குகளிலும் ஊர்கள் தென்பட்டன. அப்பகுதியில் மலைக் காட்சி ரம்மியமானது. எங்கும் பசுமைத் தோற்றம். உயர்ந்த மரக் காடுகள் இருபக்கங்களிலும் அழகிய மலைக் காட்சிகளைக் கண்டுகொண்டே இருக்கையில் ஜினிவாவை நாங்கள் நெருங்கிவிட்டோம். அதற்கான அறிவிப்பு வந்தது. அவர்கள் ஆணைப்படி இருக்கைக் கச்சையைக் கட்டிக்கொண்டோம். புகை பிடித்துக் கொண் டிருந்தவர்கள் சிகரெட்டை அணைத்து விட்டார்கள்.
கீழே நீர் மயம். அது ஜினிவா ஏரி. அதன் நீளம் 96 கிலோ மீட்டர்கள். அதன் தென் கரையில் ஜினிவா நகரம் உள்ளது. கரையோரம் முழுதும் சிற்றுார்கள். நகரங்கள். ஏரியில் ஏராளமான படகுகள் மின்னின. இதுவும் பார்க்கத்தக்க காட்சி.
பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்குப் போய்ச் சேர ஐம்பத்தைந்து நிமிடங்களே பிடித்தன. இதற்கிடையில் சிற்றுண்டி-பலமான உண்டியே பரிமாறினார்கள். ஆனால் எனக்குப் பயனில்லை. ஏன்? மரக்கறிச் சிற்றுண்டி இல்லை. அதற்கான தகவல் வரவில்லையென்று தங்களுக்கு வந்த குறிப்பினைப் பார்த்து விட்டுக் கையை விரித்துவிட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பியும் பிஸ்கோத்தும் கைகொடுத்தன.
ஜினிவா நகரம், ஏரியின் கரையில் அமைந்துள்ள அழகிய நகரம்; பெருநகரமன்று, அதன் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குக் காரில் செல்லுவதானால் பதினைந்து நிமிடங்களுக்குமேல் தேவை இல்லை.
நான் சென்றபோது நல்ல கோடைக் காலம். ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்துள்ளவர்களை எங்கும் கண்டேன். எப்பக்கம் நோக்கினும் உணவுச் சாலைகள்; சிற்றுண்டிக் கடைகள்; ஐஸ்கிரீம் விற்பனைக்கான பெட்டிக் கடைகள்.
ஜினிவா விமான நிலையத்தில் ‘தானேற்றி’ எக்ஸ்கலேட்டரில் செல்ல வேண்டியதாயிற்று. அது எனக்குப் பிடிப்பதில்லை. வேறு வழி? பல்லைக் கடித்துக் கொண்டு. சமாளித்து விட்டேன். சுங்கச் சாவடியில் நேரமாக வில்லை; நொடியில் என்னை அனுப்பிவிட்டனர். மேனாடுகளில் பெட்டி தூக்க ஆள் கிடைப்பது அரிது. தள்ளு வண்டியில் பெட்டியை ஏற்றி நானே தள்ளத் தொடங்கினேன். பத்தடி தள்ளியதும் நண்பர் திரு. சிதம்பர நாதன் இந்த நோஞ்சானிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டார். இவரைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன்.
திரு. சிதம்பரநாதன் தம் காரில் என்னை ஒட்டலுக்கு அழைத்துச் சென்றார் பெட்டியை அறையில் வைத்துவிட்டு ஜினிவாவைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.
ஜினிவா ஏரியின் தென் கோடியில், பொங்குபுனல் உண்டு. இது இயற்கையானதன்று; செயற்கையானது. இயந்திர உதவியால் நீர் பொங்கி, உயர்ந்து விழ்கிறது. எவ்வளவு உயரம் பொங்கி எழுகிறது? சுமார் 160 மீட்டர் உயரத்திற்குப் பொங்குகிறதாம்.
கோடைக் காலம் முழுவதும், ஜினிவா ஏரியில் படகுகள் நிறைந்திருக்கும். ஜினிவா நகரில் பல படகுத் துறைகள் இரு கரைகளிலும் உள்ள ஊருக்கு ஊர் படகுத் துறைகள். பெரிய ஊர்களில் ஒன்றுக்கு மேற் பட்ட படகுத் துறைகள உள்ளன. விசைப் படகுகள் வந்து தங்கி ஆட்களை இறக்கவும் ஏறறவுமான துறைகள ஏரியில் உள்ளன.
பயணப் படகுகள் மட்டுமல்ல, ஏரியில் காண்பது. ஏராளமான உல்லாசப் படகுகளும் உள்ளன.
அதோ துடுப்புப் படகு அது ஒரு வகை. இதோ மிதி படகு இது ஒரு வகை. முந்தியதைச் செலுத்தப் பயிற்சி தேவை. பிந்தியதற்கு அவ்வளவு பயிற்சி தேவை இல்லை. பிந்தியது ஆபத்துக் குறைவானது. அதில் இரு பெடல்கள் உள்ளன. இருவர் உட்கார்ந்து கொண்டு, ஆளுக்கொரு பெடலை மிதித்தால் படகு ஒடும். விரும்பிய படி திருப்பச் சுக்கான் உண்டு. பல துடுப்புப் படகுகளும் மிதிபடகுகளும் மிதக்கின்றன. பாய்ப் படகுகளும் செல்லுகின்றன. பாய்ப் படகுகளைச் செலுத்தத் திறமையும் பயிற்சியும் அதிகம் வேண்டும். இத்தனை வகைப் படகுகளும் வாடகைக்குக் கிடைக்கும். உடம்பு நோகாமல் படகுப் பயணம் செய்ய விரும்புவோர்க்கும் வசதி உண்டு. விசைப் படகுகள் ஏராளம்.
அவற்றை அமர்த்திக் கொண்டு ஏரியில் நெடுந்துரமோ, சிறிது தூரமோ சுற்றி வரலாம்.
மிதி படகைப் பத்து பன்னிரண்டு வயது சிறுவர் சிறுமியர் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். பெரியோர் துணைகூட இல்லாமல் ஏரியில் சுற்றிவிட்டு வருகின்றனர்; தம் முயற்சியிலும், அஞ்சாமையிலும் தாமே செயல் புரிவதிலும் மேனாட்டுச் சிறுவர் சிறுமியர் இளமையிலேயே பழகுவதைக் கண்டோம். போற்ற வேண்டிய பழக்கந்தானே இது.
ஏரியில் நீந்தி விளையாடுவோரும் பலர். நாம் குற்றால அருவியில் மூழ்கி மகிழ அவாவுவது போல், மேனாட்டு மக்கள் கடல்களிலும் ஏரிகளிலும் நீந்தி விளையாடப் பேராவல் கொள்கின்றார்கள். அதற்காகக் கோடைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். கோடையில் தங்களுக்கு உரிய விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பம் குடும்பமாகக் கடற்கரை ஊர்களுக்கும், ஏரிக்கரை ஊர்களுக்கும் சுற்றுலாச் செல் வார்கள். ஜினிவா நகரின் மக்கள் தொகையைவிடப் பயணிகள் தொகை அதிகம். இடுப்புக் கச்சையும் மார்புக் கச்சையும் மட்டும் அணிந்து கடற்கரை, ஏரிக்கரை ஓரங்களில், திறந்த வெளியில் படுத்துக் கொண்டு, வெய்யில் காய்வதில் மேனாட்டு மக்களுக்குப் பித்து.
ஜினிவா, பல உலக அவைகளுக்குத் தலைமைநிலையம். முன்பு உலக நாடுகளின் கழகம் (League of Nations) இங்கிருந்து பணியாற்றியது. இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் (யூ. என். ஒ.வின்) பிராந்திய அலுவலகங்கள் இங்கிருந்து பணி புரிகின்றன. உலகச் சுகாதார சபை யின் தலைமையிடமும் இதுவே. ஐ. எல். ஒ , அதாவது அனைத்துலகத் தொழிலாளர் நிலையத்தின் தலைமை இடம் ஜினிவா.
உலக அவைகள் சிலவற்றின் தலைமை இடமாக இருக்கும் ஜினிவா, சுவிட்சர்லாந்தின் தலைநகர் அன்று. அந்நாட்டின் தலைநகர் பெர்ன்.
சுவிட்சர்லாந்தை நினைத்ததும், கடிகாரம் மனக்கண் முன் தோன்றும். நெடுங்காலமாகக் கடிகார உற்பத்திக்குப் பெயர் பெற்றது இந்த நாடு. பெருந் தொழிற் கூடங்களில் மட்டுமன்று கடிகார உற்பத்தி, கடிகாரங் களுக்கான சிறுசிறு பகுதிகளையெல்லாம், வீட்டுத் தொழிலாகச் செய்கிறார்களாம். அவரவர் வீட்டிலிருந்த படியே துல்லியமான கருவிகளைக் கொண்டு நுட்பமான பகுதிகளைச் செய்து, தொழிற்சாலைக்குக் கொடுக்கின் றனர். தொழிற்சாலைகளில் அவற்றை உரிய வண்ணம் பொருத்திச் சரிபார்த்து, ஒட வைத்துச் சோதித்த பிறகு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சுவிட்சர்லாந்து, நவீன மருந்துகள் உற்பத்திக்கும் முக்கியமானது.