உலகத்தமிழ்/வீழ்த்தும் எழுத்து ஜெர்மானியர்
பிராங்க்போர்ட் என்றதும் பலருக்கு இக்காலத்தில் துணைக்கருவிகள் பல நினைவிற்கு வரும். விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்காக வரி விதிக்காத கடைகள் உண்டு. மது வகைகளேப் பலர் வாங்கிக் கொண்டு போவர். புகைப்படக் கருவிகள், படங்காட்டும் கருவிகள், நாடாப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றை நம்மவர் வாங்க முயல்வர். இவை எதிலும் எனக்கு அக்கறை இல்லை. எனவே, நான் கடைகளில் காலத்தைச் செலவழிக்கவில்லை. குழுமியுள்ள மக்களைக் கவனித்தேன்.
பிராங்க்போர்ட் பெரிய விமானச் சந்திப்பு! குறிப்பிட்ட ஒரு நிமிடத்தில் பல ஊர்களுக்கு விமானங்கள் புறப்படுவதைக் கண்டேன். அன்று சரியாக நான்கு மணிக்கு முன்று ஊர்களுக்கு வானவூர்தி புறப்பட்டது. ஊர்தி புறப்பாட்டு அறிவிப்புக்காக மக்கள் துடிப்போடு காத்திருப்பதே ஒரு காட்சி. அங்கு எல்லா நாட்டு மக்களையும் சில மணி நேரத்தில் கண்டுவிடலாம். சமுதாய இயல் ஆய்வாளர்களுக்கு பிராங்க்போர்ட் விமானப் பயணிகள் தங்குமிடம் சிறந்த ஆய்வுக்கூடம். எத்தனே வகையான ஆண்கள் எத்தனே வகைத் தோற்றங்களில் பெண்கள்!
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது தலை முடியை ஒழுங்காக வெட்டிக்கொள்ளாத மாணவர்களின் முடியைப் பற்றி, 'சோதாப் பையன் சிங்கக் குட்டிக் கிராப்' என்று குறிப்பிடுவது உண்டு. பிராங்க்போர்ட்டில் அத்தகைய கிராப் தலைகள் பலவற்றைக் கண்டேன். ஆண்கள் தலைமுடிமட்டுமன்று காடாக வளர்ந்திருப்பது, பெண்கள் தலையும் புதாகாடு-பெருங்காடு எனத் தோன்றும். இது அங்கு வளர்ந்துவரும் நாகரிகம். மக்கள் காட்டுக்காலத் தோற்றத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள் போலும்!
தோற்றமிருக்கட்டும். பழக்கவழக்கத்தைக் கவனிப்போம். அவர்களைப் பார்க்கிறபோது, ‘ஆயிரம் ஆயிரம் ஒளிகொள் வழியில் இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்’ என்ற பாரதிதாசனின பாடல் நினைவிற்கு வந்தது. சுறுசுறுப்பு, அநேகமாக மேனாட்டு மக்களின் மூச்சாகவே மாறிவிட்டது. மெல்ல, ஆடி அசைந்து நடத்தல் உல்லாசப் போதில் மட்டுமே. மற்ற நேரங்களில் ஒட்டமும் நடையுமாகவே பார்க்கமுடியும் கறுசுறுப்பும் உழைப்புமே ஜெர்மானிய மக்களை முன்னுக்குக் கொண்டு வந்தன.
ஜெர்மானியை நினைக்குமபோது என் வயதினருக்கு உலகப் போர் இரண்டும் நினைவிற்கு வரும். ஜெர்மானியப் பேரரசை விரிவுபடுத்தி அதன் ஆளுகைக்குள் பல நாடுகளையும் கொண்டுவர முயன்றதன் விளைவு முதல் உலகப் போர். அது கி.பி. 1914 முதல் 1918 வரை கடந்தது. அது விற்போரன்று; ஈட்டிப் போரன்று; வாட்போரன்று; பெருஞ் சேதம் விளைவித்த போர். முடிவு என்ன? ஜெர்மனி தோற்றது . இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய காடுகளின் நேசக் குழு வென்றது. போரில் வென்றவன் வாழ்க்கையில் வென்றவனல்லன் போரில் தோற்றவன் நாட்டில் தோற்றவனல்லன்.
ஜெர்மனியின் தோல்வி, அந்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க உதவிற்று மக்கள் ஆட்சியின்பேரால் இனவெறி எழுந்தது; வளர்ந்தது. இட்லர் என்பார்;
தலைமை தாங்கித் தூண்டி வளர்த்த இனவெறி; ஆளப் பிறந்தவர்கள் ஜெர்மானியர்களே என்ற அகந்தை; போர்க்கருவிகளின் குவியல், யூத வேட்டை ஆகியவை இரண்டாவது உலகப் போரில் கொண்டு சேர்த்தன. உலகம் முழுவதையும் கட்டியாளத் திட்டமிட்டுப் போர் முரசு கொட்டினார் இட்லர். கி. பி. 1939 முதல் 1945 வரை முன்பைவிடக் கடுமையான, கொடுமையான, கோரமான பெரும்போர் உலகைக் கௌவிக்கொண்டது. இங்கிலாந்து, இரஷ்யா ஆகிய நேச நாடுகளின் அஞ்சாமை, தியாகம்; அமெரிக்க போன்ற நாடுகளின் துணை, அணுக்குண்டு கண்டுபிடிப்பு ஆகியவை ஜெர்மனிக்கும் அதன் துணைவர்களான இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் தோல்வியைத் தந்தன. இப்போரில் அழிந்த நகரங்கள் பலப்பல; பாழான பகுதிகள் எத்தனை எத்தனையோ!
தோல்வியின் விளைவாக, ஜெர்மனி இரு கூறுகள் ஆயிற்று. மேற்குப் பகுதி நேசகாடுகளின்-அதாவது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கத்தில் வந்தது. கிழக்குப் பகுதி இரஷ்யாவின் ஆதிக்கத்தில் வந்தது. பிரிந்த ஜெர்மனி, பிரிந்த ஜெர்மனியாகவே இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளாகியும் வெவ்வேறு அரசுகளாகவும், பொருளாதார அமைப்புகளுடையதாகவும் உள்ளது ஜெர்மனி.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அடுத்தடுத்துக் குண்டுமாரிக்கு ஆளானது. நகரங்களில் பெரும் பலானவை சாம்பலான பிறகே ஜெர்மனி அடி பணிந்தது. வளத்தோடும் வலிவோடும், செல்வத்தோடும் மாட மாளிகைகளோடும், பெருந் தொழிற் கூடங்களோடும் போரைத் தொடங்கிய ஜெர்மனி வள மிழந்து, வலிவிழந்து, பொருள் இழந்து, வீடிழந்து, தொழிற கூடமிழந்து சுடுகாடாகிக் கிடந்தது. இருபத் தைந்து ஆண்டுகளுக்குமுன் அந்நிலை.
வீரன் வீழ்வதுண்டு; அழுவதில்லை; அயர்ந்து கிடப் பதுமில்லை. தகாத தலைமைக்கு ஆட்பட்டு, தகாத செயலில் இறங்கி, தகாத வழியே சென்று முரிந்து வீழ்ந் தார்கள் ஜெர்மானிய மக்கள், தகாத வழி சென்றாலும் ஆண்மையாளர் அல்லவா ஜெர்மானியர்!. எனவே, தோல்வியை எண்ணி ஏங்கி ஏங்கி குறை சொல்லிக் காலத்தை விணாக்கவில்லை. மாறாக, எழுந்தார்கள்; நிமிர்ந்தார்கள்; உழைத்தார்கள், ! உள்ளன்போடு உழைத்தார்கள்; உண்மையாக உழைத்தார்கள்; உறுதியாக உழைத்தார்கள்; கூடுதலாக உழைத்தார்கள்; குறிக்கோள் தெளிவோடு உழைத்தார்கள்.
ஆம்! “அமைதியாக வாழ்வோம். ஆனால் யாரையும் அண்டி வாழோம், வளமாக வாழ்வோம். ஆனால் வாங்கி வாங்கி வாழோம். தாங்களே தனக்குதவி எனவே நம் நாட்டை நாமே கடின உழைப்பால் உயர்ந்துவோம்,” என்று தெளிந்து, அக்குறிக்கோளை அடைய அனைவரும் பாடுபட்டனர். நாடு என்ன கொடுத்தது என்று கோபிக்கவில்ல. தோல்வியடைந்தாலும், நாட்டுக்கு "நாம் கொடுப்போம்" என்று கூடுதல் தொழில் செய்தனர் புதிய ஜெர்மானியர். வாங்கும் சம்பளத்திற்கு குறிப்பிட்டக் காலம் முழுவதும் நொடியும் வீணாக்காது பாடுபட்டனர். முழுக் கவனத்தோடு தொழில் புரிந்தனர். ஊதியத்திற்கான வேலையோடு நின்று விடாமல் நாட்டுத் தொண்டாக நாள் தோறும் ஊதியம் இல்லாப் பணியினை ஒரு மணி நேரம் செய்தானர். எனவே தொடர்ந்து சில ஆண்டுகள் இப்படிச் செய்ததால் தொழில்கள் வளர்ந்தன, வீடு
கள் உயர்ந்தன, பொருள்கள் நிறைந்தன, செல்வம் பெரு கிற்று; பொருளாதாரம் வளர்ச்சியுற்றது. இக்தியாவைப் போன்ற பெரும் நாடுகளுக்குக்கூட நிதியுதவி செய்யும் அளவிற்குப் பதினைந்து ஆண்டுகளில் உயர்த்துவிட்டது மேற்கு ஜெர்மனி. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! இது தமிழ் மொழி; ஆனால் ஜெர்மானியர் வாழ்வின் முச்சு நமக்கும் அது முச்சாகும் நாள் எந்நாளோ! நாமும் அவரவர் பணியினை வஞ்சனையின்றி ஆர்வத்தோடும் நாணயத்தோடும், நொடியும் விணாக்காது ஆற்றும் நாள் எந்நாளோ!
பிராங்க்போர்ட் விமான நிலையத்தில் பயணிகள் கூடத்தில் அமர்ந்து, அந்நாட்டின் அழிவையும் மீண்டும் புத்துயிர் பெற்று, வளமும் வலிவும் பெற்றுப் பெருமை யோடு வாழ்வதையும் எண்ணி, அதைப்போல் நாமும் உயர்வது எந்நாள் என்று ஏங்கியது என் மனம் அது இமைப்பொழுதில் தெற்கே நெடுந் தூரத்திற்கு தாவி விட்டது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்குக்கப்பால் சென்று இறங்கியது. அதோ ஆப்பிரிக்காவில், பெல்ஜியன் காங்கோவில் லாமபரீன் என்னும் ஊரில் ஐம்பதாண்டுக்காலம் மருத்துவ நிலையத்தை நடத்திய சான்றோர் ஆல்பர்ட் சுவைட்சர். என்ன கம்பிரமான தோற்றம்! ஐம்பத்தைந்து ஆனடுகளுக்கு முன் அவர் மருத்துவத் தொண்டைத் தொடங்கிய மாட்டுத் தொழுவம் மின்னி மறைந்தது.
மாட்டுத் தொழுவத்து மருத்துவமனை இன்று கட்டட வசதியுடைய மருத்துவமனை. தொள்ளாயிரம் பேர் இருந்து நலம் பெறும் பெருமனை! இன்னும் முன்னேற்றமடைய வேண்டியிருக்கும் அப்பகுதிக்கு யாரும் சென்று பணீபுரிய முன்வராத மோசமான பகுதிக்கு, போய்த் தொண்டுபுரிய முடிவு செய்தார் ஆல்பர்ட் சுவைட்சர். பிழைக்க வழியின்றிப் போனாரா? பிஜிக்கும் நெட்டாலுக் கும் மோரிசுக்கும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் போக வேண்டிய நிலையை நம்மவருக்கு ஏற்படுத்தினோமே, அதைப் போன்ற நெருக்கடியால் காங்கோவிற்குக் குடி யேறினரா சுவைட்சர்? இல்லை, இல்லை.
தத்துவப் பேராசிரியர் பணியில் வீற்றிருந்த டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் தம் இருபத்தேழாம் வயதில் கவனிப்பாரற்று நோய் நொடியில் மடிந்து கொண்டிருந்த காங்கோ மக்களுக்கு மருத்துவஞ் செய்து தொண்டுபுரிய விருப்பங்கொண்டார். ஜெர்மானிய நாட்டின் மருத்துவப் படிப்போ நீண்டபடிப்பு; ஏழாண்டுப் படிப்பு. ஏற்கெனவே தத்துவத்தில் பேரறிஞர். டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராக விளங்கிய சுவைட்சர், இருபத்தேழு வய திற்குமேல் புதிய நீண்ட மருத்துவப் படிப்பில் முனைந் தார்; தவறாமல் தேறினார் முப்பத்து நான்காவது வயதில் காங்கோவிற்குச் சென்றார்.
அன்றைய காங்கோவில் பெரிதும் காட்டுக் கால நிலை. மாட்டுத் தொழுவமே அவருக்குக் கிடைத்தது. அதில் மருத்துவமனையைத் தொடங்கினர். உயிர்களைப் போற்றல் அவரது சமயம்; அவரது நெறி, அவரது வாழ்க்கை. இலட்சக்கணக்கான நோயாளிகளைக் குணப் படுத்திய இப் பேரறிஞர் சுவைட்சருக்கு, ‘மக்கட் சேவைக்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது. அது அவருக்குப் பெருமையன்று, மக்கள் இனத்தின் நன்றி யுணர்ச்சிக்கு அடையாளம்.
பரிசுப் பணத்தை மருத்துவ சாலைக்குச் செலவிட்டார். அடிக்கடி ஐரோப்பாவிற்குச் சென்று காங்கோ மக்களின் தேவைகளை விளக்கிச் சொற்பொழிவு ஆற்றி நிதி திரட்டினர். அது மட்டுமா? அவர் மேலை நாட்டு இசையில் வல்லுநர்; அதிலும் பேரறிஞர் பட்டம் பெற்றவர். எனவே இசைக் கச்சேரிகள் பல நடத்தியும் பணம் திரட்டினர். இவையெல்லாம் என் மனக்கண் முன் விரைந்தன.
அன்றொரு நாள், அமெரிக்கச் சிறுவன்-பன்னிரண்டு வயதுப் பையன்-முன்னின்று தொடங்கிய ’லாம்பரின் நிதி’ யை இத்தாலிய நாட்டு விமானத்தில் சென்று அப் பெரியவரிடம் ஒப்படைத்த செய்தியும் படமும் நினை விற்கு வந்தன.
"தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வதற்காவும் தொந்தரவு கொடுப்பதற்காகவும் மன்னியுங்கள்' என்ற பீடிகையோடு, பல இலட்சம் ரூபாய்களை டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரிடம் பணிவோடு அச்சிறுவன் வழங்கிய படம் நம் சென்னைச் செய்தித் தாளிலும் வெளியானது. பெருந்தொகையைக் கொடுக்கும் சிறுவனுக்கும் பணிவாகக் கொடுக்கக் கற்றுக் கொடுத்துள்ள மேனாட்டுப் பண்பினை எண்ணி எண்ணிப் பூரிப்பதுண்டு நான். மாறாக, முறையற்ற வேண்டுகோளோடு போகும் போதும் விறாப்போடு செல்லும் போக்கினேயும் கண்டு கண்டு, பணியுமாம் என்றும் பெருமை’ என்னும் திருக் குறள் ஏட்டுச் சுரைககாய்தானோ என்று ஏங்குவதும் உண்டு. இத்தனை எண்ணங்களும் நல்ல பருவத்துக் குற்றால அருவியெனப் பொழிந்தன.
அவ் வித்தகர் டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரின் நுண்மாண் நுழைபுலம் நெஞ்சை பள்ளிற்று. தத்து வத்தில் பேரறிஞர், மேனாட்டு இசைக் கலையில் பேரறிஞர், மருத்துவத்தில் பேரறிஞரான பிறகும் காலை முதல் நள்ளிரவு வரை காட்டுப் பழக்கமுடைய நோயாளிகள் பலரோடு போராட வேண்டியதாக இருந்தும், ஓயாது படித்தார்; எழுதினார். கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான படிப்புப் பெற்றிருந்த அவர் இந்தியத் தத்துவங்களைப் பற்றியும் விரிவாகப் படித்து அறிந்தார்; திருக்குறளையும் அவர் கற்றார். கசடறக் கற்றார், ஏற்கெனவே அவ்வழி நின்றவர்; எனவே, திருக்குறளின் சிறப்பினை உணர்ந்தார். ஒப்பு நோக்கித் திருக்குறளிலும் சிறந்த நூலொன்றைத் தாம் அறிந்ததில்லை எனத் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார். அவர் கற்றதால், அவர் போற்றியதால், அவர் எடை போட்டுக் காட்டியதால், மேனாட்டு மக்களிடையே நம் திருக்குறளின் பெருமை பரவிற்று நாம் யாரும் பரப்ப முடியாத அளவுக்குத் திருக்குறள் அறிமுகமாயிற்று.
பேரறிஞர் சாதனையாளராக இருத்தல் அரிது. வல்லவர் நல்லவராக இருத்தல் அதனிலும் அரிது. பேரறிஞர் சாதனை மேருவாக, நல்லவராக, தூற்றலுக்கும் தொல்லைகளுக்கும் அஞ்சாது நெடுங்காலம் தொண்டாற் றல் அத்தி பூத்தாற்போலாம். ஆனால் பேரறிஞர் காட்டுக்குள்ளே மக்களுக்காகத் தொடர்ந்து ஐம்ப தாண்டுக் காலம் தொண்டாற்றி மறைந்தார். அந்தச் சாதனை மேருவை, சான்றோரை, ஈந்த ஜெர்மனியை வணங்கிற்று என் நெஞ்சம். என் தமிழ்த் திருநாட்டிலும் ஒர் ஆல்பர்ட் சுவைட்சர் தோன்ற அருள்வாய் என்று முணுமுணுத்தது வாய்.