உலகத்தமிழ்/மாநாட்டு உரைகள்
15. மாநாட்டு உரைகள்
பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழும் பிற கலாசாரங்களும்’ என்பது பற்றி அரிய கட்டுரையொன்றைப் படித்தார். தமிழர்களும் தாய் மொழியும், இந்திய மொழிகளோடும் கீழை நாடுகளோடும் கொண்டிருந்த தொடர்புகளை உறவுகளை, கோடிகாட்டினார். பக்தி இயக்கம் தமிழகத்திலே பிறந்து, இந்தியாவின் பிற பகுதிக்குப் பரவிற்று என்று விளக்கினார். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவர்களின் முதல் தேவாரப்பாடல்கள் தாய்லாந்தில் மந்திரங்களாகப் பாடப்படுவதாகக் கூறினார். சையாமில் திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதைக் கூறினார். ஆதியில், அவர்களிடம் தமிழ்ப் பண்பைப் பரப்பியதை நினைவு படுத்தினார். பேராசிரியரது தமிழ்மொழி வரலாறு என்னும் நூலில் இவற்றை விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம்.
பேராசிரியர் மு.வ. சங்ககால இலக்கியம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை கொடுத்தார். எவை எவை துாது சென்றன, எப்படித் தூது சொல்லின என்பதைச் சுருக்கிக் கூறினார். அகத்துறை பற்றியது அது.அருமையாக இருந்தது என்றார்கள். நெஞ்சோடு கிளத்தலைப் பற்றியும் தூது விடுதலைப் பற்றியும் எனக்குப் பற்று ஏற்படவில்லை. காரணம் வாழ்க்கை கசப்பிலே வளர்ந்து விட்டதால் போலும்.
பிற நாடுகளில் குடியேறிய தமிழர்கள் எப்படி நம் சமயப் பழக்கங்களே எடுத்துச் சென்றார்களோ, அப்படியே நம் சாதிப்பிரிவுகளையும் எடுத்துச் சென்றார்கள். சில நாடுகளில் குடியேறிய நூறு ஆண்டுகளிலேயே அவர்கள் தமிழை மறந்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் நம்முன் நிறுத்திச சிந்திக்க வைத்தார் பேராசிரியர் தனிநாயகம்.
மாநாட்டுக் கட்டுரைகள் சங்க காலத்தோடும் பிற நாடுகளோடும் நின்றுவிடவில்லை. இக் கால இலக்கியம் பற்றியும் சிலர் படித்தார்கள்.
புதுச்சேரியின் முதல் அமைச்சராக உள்ள மாண்பு மிகு பருக் மரைக்காயர் அவர்கள், ‘புதுவையில் தமிழ் வளர்ச்சி’ என்பது பற்றிக் கட்டுரை படித்தார்.
பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் தரத்திற்கு எவ்வகையிலும் குறைவு காண முடியாத அளவிற்குத் திறஞ்சான்ற மொழிப் புலமையால் தமிழைப் புதுவை வளர்த்து வந்ததைச் சுட்டிக் காட்டினார். அத்தகைய தமிழ்ப் புலவர்களின் பட்டியலைத் தந்தார்.
வீரமாமுனிவரின் படைப்புகளாகிய தமிழ் இலக்கியங்களும், சதுரகராதி போன்ற நூல்களும் புதுவையில் தான் அச்சேறி வெளிவந்தன என்பதைக் கூறிப் பெருமிதங்கொண்டார். பிரஞ்சு-தமிழ் அகராதி தந்த பாதிரிமார்களின் தொண்டைக் குறிப்பிட்டுப் போற்றினார்.
இயற்கையிலே மேன்மை பெற்ற தமிழ், புதுவைப் பெரு நிலத்தில் புத்துணர்வு பாய்ச்சும் நாட்டுரிமை பெற விழிப்பூட்டும்—-விடிவெள்ளியாக விளங்கலாயிற்று. இதை எடுத்துக்காட்டிப் பாரதியாருக்கு அடைக்கலம் தந்து, அவரது நாட்டுணர்வுக் கனலை, அவியாது காத்து, அதனால் உரிமையுணர்வூட்டும் தமிழைப் புதுவை வளர்த்தது’ எனப் பெருமை கொண்டார்.
படித்த புலவர்களிடையே தவழ்ந்து வந்த தமிழ் நடையைப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவில் எழுச்சி தரும் எளிய தமிழ் நடையாக மாற்றியது பாரதியாரின் தனிச் சிறப்பாகும். திரு. மரைக்காயரின் கூற்றை யாரே மறுப்பார்? புலிக்குச் சிங்கம் பிறந்தது போல் பாரதிக்குப பிறகு பாரதிதாசன் விளங்கினார்’ என்றார்.
‘தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பாரதி தாசன் பாடல்கள் கால்கோள் விழாக்கள் எடுத்தன. தமிழர்களிடையே புரட்சி மனப்பான்மை துளிர்க்கலா யிற்று என்பதையும் நினைவூட்டினார்.
‘தமிழர்களிடம் மறைந்து கிடந்த மொழியுணர்வைத் தட்டியெழுப்பப் பாரதிதாசன் பாடலகள் பேராற்றல் உடையவனவாக விளங்கின’ என்று அவர் கூறிய போது எம் தலைகள் ஒப்பின. பாரதிதாசனின், ’அழகின் சிரிப்பு’ உலகப் பொது இலக்கியமாக விளங்கும் புதுமைச் சிறப்பினது. பாரதிதாசனின் அரிய பல படைப்புகள் உலகமொழிகளில் உலாவரும் நாளைக் காண விரும்பினார்.
‘வளரும் தமிழகத்தில் பாவேந்தரின் அடிச்சுவடு பற்றி மறுமலர்ச்சித் தமிழகம் விளக்கமுறும் என்பதில் ஐயமில்லை.’
இவ்வாறு கட்டுரைத்தார் மாண்புமிகு மரைக் காயர்.
பேராசிரியர் ஆஷர் இக்கால இலக்கியத்தை மதிப்பிட்டார்.
இக்கால இலக்கியத்தில் பாடல்களைக் குறிப்பிட்டார். ‘இராமலிங்க அடிகளார், பாரதியார், பாரதிதாசன், கவி மணி ஆகியோரது பாடல்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதைக் காண முயல வேண்டும்’ என்று கூறினார், நாமக்கல் கவிஞர், பெரியசாமித் தூரன், புலவர் குழந்தை, அழ. வள்ளியப்பா ஆகியோர் என் கண்முன் தோன்றினர். மற்றவர்கள் முன்னே நிற்காதது என் குறை..
இக்கால இலக்கியம் பெரிதும் உரைநடை என்று குறிப்பிட்டார் ஆஷர். தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றிக் கருத்தாக ஆய்வதற்கு இடமுண்டு என்றார். நாளிதழ்களும் பிற இதழ்களும் பேச்சு நடைப்பக்கம் போவதை நினைவுபடுத்தினார். இதற்கு நேர்ர்மாறாக, நூலாசிரியருள் சிலர் கடுநடையைப் பின்பற்றுகிறார்கள் என்பது ஆஷர் கருத்து. நடைகளிலே இருவேறு போக்கு உள்ளன. பொருளிலும் பல ஓட்டங்கள் உள்ளன.
எங்குமே, இன்றைய இலக்கியத்தில் புதினம் நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் புதினத்தின் தொடக்கம். ராஜம் அய்யரின், கமலாம்பாள் சரித்திரமும், மாதவையரின் நூல்களும் அவ் வழியே வந்தவை என்றார். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் நாவல்கள் பல வந்தன என்றார். ரங்க ராஜூ, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பண்டிதர் அருணகிரிநாதர் ஆகியோர் எங்கள் நினைவிற்கு வந்தனர். கல்கி அவர்களின் வரலாற்றுப் புதினங்களும், டாக்டர் மு.வ வின் நூல்களும் கவனிக்கத்தக்கன என்றார். மு.வ. வின் நூல்கள் பண்டைத் தமிழ்ப் பாடல்களில் காணும் ஒழுக்க இலட்சியங்களை விளக்குவன என்றார்.
சிறுகதைகளின் காலம் குறுகியது என்று கூறி, ‘பரமார்த்த குருகதை’ முதலியவற்றை நினைவு கூர்ந்தார். புதுமைப் பித்தனின் எழுத்துகளை விரிவாகக் கவனிக்க வேண்டுமென்றார்.
தமிழில் புதினங்கள், சிறுகதைகள் வளர்ந்த அளவு நாடகங்கள் பெருகவில்லை என்பது ஆஷர் கருத்து. ஆயினும் தமிழில் பல உரைநடை நாடகங்களும், பாட்டு நாடகங்களும் உள்ளன என்று ஒப்புக்கொண்டார். சினிமாக் கதைப் பெருக்கத்தையும் மறக்கக் கூடாது என்றார். மேடைத் தமிழ் எழுத்துத் தமிழ் வளர்ச்சிக்குத் துணையாவதையும் குறிப்பிட்டார்.
தான், தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்தின் தன்மைகளைக் காட்டியதால் பிற இடங்களில் தமிழ் இலக்கியம் உருவாகவில்லையென்று பொருளல்ல. இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் இலக்கியம் வளர்கிறது. தமிழ் இலக்கியத்தில் மேனாட்டுக் காற்று சிற்சில சமயம் வீசினாலும் சிறந்த தமிழ் நூல்களில் மொத்தத்தில் தமிழ் மணமே கமழ்கிறது’ என்று ஆஷர் முடித்தார்.