உலகத்தமிழ்/ஓரடி உயர்ந்தோம்

விக்கிமூலம் இலிருந்து

 14 ஓரடி உயர்ந்தோம்

தேநீர் அருந்திய பின்னர், மீண்டும் கூடினோம். தமிழ்நாட்டில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய கட்டுரையை திரு.நாகசாமி படித்தார்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ் நாட்டுத் தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலபொருள் துறை புதுச்சேரியிலுள்ள இந்தியக் கழகம் ஆகியவை நடத்திய ஆய்வுகளைச் சுட்டிக்காட்டினார். அவை, அவ்வப்போது, ஆங்காங்கே, கண்ட உண்மைகள் அனைத்தையும் சொல்ல நேரமேது? எனவே சிற்சில தகவல்களைச் சுட்டினார்.

புகழ்பெற்ற பாண்டியர் துறைமுகம் கொற்கை. நூறாண்டுகளுக்கு முன், டாக்டர் கால்ட்வெல் கொற்கையில்யி நடத்திய ஆராய்ச்சியை நினைவிற்குக் கொண்டு வந்தார்.

டாக்டர் கால்ட்வெல்லின் ஆராய்ச்சி முடிவுகளேத் தமிழில் நூலாக்கி வெளியிட்டால் என்ன என்று தோன்றிற்று. காதல், அரசியல் ஆகியவற்றிற்கு அப்பால் எதைப் படிக்கப் போகிறோம் என்று குறுக்குச்சால் ஒட்டிற்று சிந்தனை. நாம் படிக்காவிட்டாலும், வெளி நாட்டாராவது படித்து தொடர்ந்து ஆராய்ந்து, உலகறியச் செய்தார்களே என்றது அதே மூளை.

தமிழ் நாட்டின் தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் கொற்கையில் ஆய்வு நடத்திற்றாம். கி.மு முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தேதி குறிக்கக்கூடிய எழுத்துகள் குறித்த மண்பாண்டங்கள் கிடைத்தனவாம். புதையுண்ட முத்துச் சிப்பிகள் நிரம்மக் கிடைத்தனவாம். சங்கு வளையல்கள் வடிவாகாத பல நிலைகளிலே ஏராளமாய்க் கிடைத்தன. கொற்கையின் தொன்மைக்குக் குறிப்புகள் சில கிடைத்தன. ஆயினும் மேலும் ஆழ்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று எடுத்துரைத்தார். கொற்கையில் கிடைத்த கரிப்பொருள்களை ஆராய்ந்த டாட்டா ஆராய்ச்சி நிலையம் அதன் காலம் கி. மு. 785 ஆம் ஆண்டு என்ற முடிவிற்கு வந்துள்ளது. அதாவது அதன் வயது 2755 ஆண்டுகள். கொற்கை 2755 ஆம் ஆண்டிற்கு முன் சிறந்துவிளங்கிய துறைமுகம். இது தமிழ்ப் பற்றாளர் உரையன்று, விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவு என்று கேட்டபோது ஒரடி உயர்ந்து விட்டோம்.

புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு அத் துறை ஈடுபாடு மட்டும் போதாது; அந் நாட்டு மொழி இலக்கியத்தில் தோய்வு தேவை. அதாவது தமிழ் நாட்டில் ஆய்வு நடத்துபவருக்குத் தமிழ் இலக்கிய மூழ்கலும் தேவை எனபதை திரு. நாகசாமி விளக்கினார்.

மாமல்லபுரச் சிற்பங்களும், காஞ்சிக் கைலாசநாதர் கோயில் முதலியனவும் ஆகம முறைப்படி கட்டப் பட்டுள்ளதைக் தொட்டுக் காட்டினர். ஆகமங்களை அறியாதவர் அச் சிற்பங்களையும் கட்டடங்களையும் ஆயும் போது முழு உண்மையையும் உணராது இடர்பபடுவார் என்பதை விளக்கினார்

காவிரிப்பூம்பட்டின ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே அகழ்ந்து எடுக்கப்பட்ட கப்பல் துறை, நீர்த்தேக்கம், புத்த விகாரம் ஆகியவற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதே புத்த விகாரத்தைப் பற்றி, ‘அபிதம்மாவதாரா,’ ‘புத்த வம்சக் கதை’ ஆகிய பிராகிருத நூல்களில் குறித்திருப்பதை எடுத்துக் காட்டினார். பிராகிருத ஆராய்ச்சியாளர், அந்நூல்கள், கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று. முடிவு செய்துள்ளனர். அதாவது, காவிரிப்பூம்ப்ட்டின: புத்த விகாரம் 1600 ஆண்டுகளுக்கு முந்திய பிராகிருத நூலில் குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தொன்மையானது புகார் நகரம். இன்னும் எவ்வளவு தொன்மையானது? தொடர்ந்து ஆராய்ந்தால் தெரியும்.

தொன்மை வாய்ந்த நாகரிகத்தை, மொழியை, இலக்கியத்தை, கலைகளை, சிற்பங்களை ஆராய்வோர்க்கு ஒரு துறைப் புலமை போதாது; பல துறைத் தொடர்பு தேவை. ஒரு மொழிப் புலமை போதாது; பல மொழிப் புலமை தேவை. பல்வேறு துறையில் உயர்ந் தவர்களோடு தொடர்பு கொண்டு, உண்மைச் சிதரல் களை இணைத்து, மெய்யுருவம் கொடுக்கும் நோக்கும் போக்கும் தேவை.

சிற்பக்கலை ஆய்வு தட்டுப்படும்போது, ஆகம அறிவு, விளக்கந்தரும். தமிழ் ஆராய்வு திகைப்பை ஊட்டும்போது, பிராகிருத நூலறிவு வழிகாட்டுகிறது. மொழியறிவும் திட்டவட்டமாகக் காட்டக் கூடாததை புதிய விஞ்ஞான ஆய்வு முறைகளும் கருவிகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

எல்லோரும் எல்லாத் துறைகளிலும் விற்பன்னர் ஆதல் அரிது; பலமொழி மேதையாவதும் அரிது. அதற்காக, ஒன்றே போதும் என்பது ஆராய்ச்சிக்கு ஆகாது. செல்லும் வாயெல்லாம் சென்று, அவ்வத் துறை வல்லுநர்களையும் பயன்படுத்திக் கொண்டு ஆராய்ந்தால், அறிதற்கு அரிய நம் தொன்மையை ஒரளவாவது உலகறியச் செய்யலாம். பெறற்கரிய பெருமை, நமக்குள்ளே மட்டுமன்றி, உலக அறிஞர்களிடமும் பெறலாம். காஞ்சியிலும், பாலாறு கடலோடு கலக்கும் இடமாகிய வாசவசமுத்திரம், வயலூர் ஆகிய ஊர்களிலும் கண்ட புதைபொருள்களைப் பற்றிச் சொல்லப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், காஞ்சியில் ஆராய்ச்சி நடப்பதை, நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

சென்னைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர்த் திருச்சி மாவட்டத்தில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றியும் திரு நாகசாமி குறிப்பிட்டார். திருச்சியில்,திருக்காம்புலியூர், ஆலக்கரை, உறையூர் ஆகிய மூன்று இடங்களில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல் பொருள்துறை ஆராய்ச்சி செய்தது. நூற்றுக் கணக்கான தொல் பொருள்களை அகழ்ந்தெடுத்தது. அவற்றின் காலம் கி. மு. முதல் நூற்ரறாண்டு முதல் கி. பி முதல் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. அவற்றை வகைப்படுத்தி மதிப்பிட்டு, அறிக்கை வந்தது. இதைப்பற்றி வெகு சில செய்திகளே கூறினார். ஏன்? பேராசிரியர் மகாலிங்கத்தின் மேல் பொறாமையா? அச்சிடப்படாத அறிக்கை அது. எனவே, பல குறிப்புகள் கொடுக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தின் பணிகள் பல. அவற்றிலே சிறந்தது அறிவின் எல்லைகளை நகர்த்திக் கொண்டே போவது. அதாவது புதிய உண்மைகளை அறிந்தால்- புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தால் போதுமா? குடத்தில் இட்ட விளக்காக வைக்கலாமா? ஆகாது. வெளியிடவேண்டும்; நூல்களாக வெளியிட வேண்டும் உலகறியச் செய்ய வேண்டும்.

பயிருக்குப் பருவம் துணை நல் விளைச்சலுக்கு மண் வளம் தேவை; இல்லையேல் ஏற்ற உரமாவது வேண்டும்.

நூல்களே வாங்குவோர், படிப்போர், நூல் வெளியீட்டிற்குத் தூண்டுகோல் . இத்துரண்டுகோல், நம்மிடம் உண்டா? சென்ற காலப் படம் என்ன? நூலை வாங்குதல் தாட்சணியத்திற்காக இதுவே, நம் பட்டறிவு.

முதல் இழந்தாலும் பரவாயில்லை; இத்தலை முறையிலாவது, ஏடுகளை ஆற்றுக்கும் செல்லுக்கும் இரையாக்காமல் அச்சாக்கி அடுக்கி விடலாமென்றால், பரிந்துரை வரும் புற்றீசல் போல். எதற்காக எவ்வெப்போதோ சிறப்பு மலர்களுக்கு எழுதிய சிற்றுரைத் தொகுப்புகளை யெல்லாம் நூலாக்கி வெளியிட.

சும்மா இருப்பதுவே இத்தகைய தொல்லைகளிலிருந்து தப்பும் வழி. எனவே இதுவரை திருக்கம் புலியூர் கண்டுபிடிப்புகள் புதை பொருள்களாகவே நின்று விட்டன. ஆனால் எல்லாக் காலமும் உலகியல் தெரிந்தவர்கள் காலமாக இருக்குமா? இப்போது திருக்காம்புலியூர் ஆராய்ச்சி நூலாக வெளிவருகிறது. இக் கட்டுரை வெளியாகும் போது, அந்நூலும் கிடைக்கும். என்ன அசட்டுத் துணிவு!

எங்கோ இழுத்து வந்து விட்டேனே! வாருங்கள், பாரிசு மாநாட்டிற்கே செல்வோம்.

‘அகல அகல ஆழ்ந்து பார்த்தால், தமிழ் தொன்மையானது; தமிழ்க்குடிகள் மூத்தவர் மட்டுமல்லர்; நாகரிகத்தின் உச்சியை எட்டிப் பிடித்தவர் என்று விளங்குகிறது’ என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆதி ரோமாபுரி ஆதித்தமிழனோடு தொடர்பு கொண்டிருந்தது, பண்டைக் கிரேக்கம் நம் முன்னோ ருடன் கலந்து வாழ்ந்தது. இக்காலம் இளந்தமிழராவது அந்நாகரிக வரலாறுகளில் மூழ்கி, நம் சிறப்பினையும் தொடர்பினையும் ஒளிவிடச் செய்யும் முத்துக்களை எடுத்துவர மாட்டார்களாவென்று எங்கள் நெஞ்சம் ஏங்கிற்று.

மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் இல்லை. இதனால் தமிழர் பலருக்குக் காப்பு. அவர்களுக்குத் தமிழ் ஒலிக்காதா என்ற ஏக்கம்.