உலகத்தமிழ்/யாரை நம்புவது?

விக்கிமூலம் இலிருந்து

13. யாரை நம்புவது?

தமிழர் மூத்தகுடி தமிழ் முத்தமொழி. முதுமைக்கு அயர்வு எளிது. எனவே, நாம் கருவூலங்களைக் காக்காமல் கைவிட்டுவிட்டோம். வரலாற்றை வகையாக எழுதி வைக்கத் தவறி விட்டோம். அண்மைக் காலத்தில் நம் நாகரிகமும் கலையும் மொழியும் உலக அறிஞர்களின் கருத்துக்களைக் கவர்ந்தன. அதன் விளைவுகளில் ஒன்று அனைத்துலகத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மன்றம். இது சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

பல்வேறு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் ஒன்று கூடி ஆலோசிக்க, ஏற்பாடு செய்ய நினைத்தது மன்றம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. எங்கே நடத்துவது? மலேசி யாவின் தலைநகரான கோலாலம்பூரில் முதல் கருத்தரங்கு. அங்குத் தமிழர் மிகப் பலர்; எனவே கருத்தரங்கு மாநாடாக வளர்ந்துவிட்டது.

புலவர் சிலர், ‘உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிவதற்குப் பதில்’ பெருமக்கள் நூற்றுக் கணக்கில் கூடும் மாநாடாகிவிட்டது. அடுத்துச் சென்னையில் கூடியது கருத்தரங்கு. சென்னே தமிழ் நாட்டின் தலைநகர மல்லவா? காதுங்காதும் வைத்ததுபோல் கருத்தரங்கு நடத்த முடியுமா? அக் கருத்தரங்கு, உலகம் புகழும் மாநாடாக, பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்திருந்து கேட்கும் மாநாடாக உருப்பெற்றது. உலகப் புகழ்பெற்ற இதன் சிறப்பினை நான் கூறத் தேவையில்லை

மூன்றாவது கருத்தரங்கு பாரிசில் கூடியது, பாரிசில் உள்ள தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாமல்லவா? இங்கேயாவது, ‘புலவர்களுக்குள்ளே கருக்தரங்காக்கி விடலாம்’ என்று நினைத்தார்கள் போலும். நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. இங்கும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட அதிகம் பேர் கூடிவிட்டோம். உள் நாட்டுத் துணையேதுமின்றித் துணிந்து நடத்தி விட்டார்கள் மாநாட்டை.

தமிழ் இலக்கியமும் கலையும் விரிந்தன. எவ்வளவோ அழியவிட்ட பிறகும் விரிந்து கிடக்கின்றன. எனவே நான்கு நாள் கருத்தரங்கில் தமிழ்த்துறையின் அடியும் முடியும் காட்ட முடியுமா? காட்டும் வித்தையைக் கையாள முயலாவிட்டால் சும்மாவிடுவோமா? முடியாததை முடித்துவைக்க முயன்றனர் மாநாட்டு அமைப்பாளர்.

சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், தொல் பொருள் ஆராய்ச்சி, கல்வெட்டுகள், தமிழ்நாட்டின் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழும் சமஸ்கிருதமும் ஆகிய தலைப்புகளிலே கட்டுரைகள் அனுப்பும்படி கோரியிருந்தனர்.

கருத்தரங்கோ நான்கு நாள். தொடக்க நிகழ்ச்சி அரை நாள்; நிறைவு நிகழ்ச்சி அரைநாள். பாக்கி மூன்று நாள்களுக்குள் இத்தனை தலைப்புப்பற்றியும் கருந்தரங்கு கள். இந் நிலையில், சிலர் தத்தம் கருத்துகளைக் கூற மட்டுமே முடியும்? அலசிப் பார்க்கவே நேரமில்லை; முடிவெடுக்க நேரமேது? நேரமிருப்பினும் அத்தனை பொருள்பற்றியும் முடிந்த முடிவு கூற முடியுமா?

பெரிய வலையாக வீசி, எல்லோரையும் நிறைவு படுத்துகிற முறையில் தலைப்புகளைப் போட்டிருந்தார்கள் மாநாட்டு அமைப்பாளர்கள். அப்படியும் விட்டோமா?

கம்பனைப் பற்றிய கருத்துரையில்லையே என்று கசிந்து உருகினார் கம்பதாசனொருவர். “அது எங்கள் குறையன்று; கட்டுரை வராதகுறை!” என்ற மாநாட்டவர் உரைக்க, சிலர் அதை அரசின் குறையாகத் திருப்ப முயன்ற முயற்சி, பரிதாபத்திற்குரியதாக இருந்தது. தமிழ்த் தொண்டு புரிய முன்வருவோர், எத்தனை திடீர்ச் சுழல்களைச் சமாளிக்க வேண்டியவர்களாக உள்ளனர் என்பது விளங்கிற்று.

சோவியத் ஆராய்ச்சியாளரின் கருத்தை சுவலபில் மறுத்தபோது;

‘வல்லரசுகள் இரண்டு நம்மை வலுச்சண்டைக்கு இழுத்துவிடுகின்றனவோ?’ என்று அருகிலிருந்த அறிஞர் ஒருவர் என் காதோடு உரைத்தார். முன் வரிசையில், உட்கார்ந்திருந்ததால் பதில் கூறக் கூசினேன். அரசியல் கண்ணோட்டத்தை அலட்சியப்படுத்தலாமா? பின்னர் வெளியே அவரிடம் கூறிய என் பதில், உங்களுக்குமே.

அவர்கள் நோக்கம் எப்படியும் இருக்கட்டும். நாம் விழிப்பாக இருக்கவேண்டும். நாம் முன்னேற வேண்டும்; நெடுந்தூரம் முன்னேற வேண்டும்; விரைவாக முன்னேற வேண்டும். துறைக்கு ஒரு நூல் என்று வெளியிடுவதோடு அக நிறைவு கொள்ளாமல் துறைக்கு நூறு நூல் என்று வெளியிட்டுக் குவிக்கவேண்டும். அவற்றை வாங்கிப் படிக்குமாறு, மக்களுக்குச் சாவி கொடுக்க வேண்டும். இத்தனை ஆக்க வேலைகள் நம் முன்னே நிற்கின்றன. இவற்றை அப்படியே விட்டு விடலாமா? இதிலே முழு மூச்சாக முனைய வேண்டியவர்களை யெல்லாம் பழைய சண்டைக்கு-எதிலிருந்து எது வந்தது? எதிலிருந்து எது, எவ்வளவு, கடன்வாங்கிற்று?” என்கிற சண்டைக்கு-இழுத்து விடலாமா? இழுத்து விட்டால் தமிழின் எதிர்காலம் என்ன ஆவது எல்லோருமே வலுச் சண்டையில் சிக்கிக்கொண்டால் எப்படி? நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்..

தமிழர் தம் காலில் நிற்கவேண்டும். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ய யாரையோ நம்பியிருத்தல் நல்லதன்று. தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உடைய தமிழர் பலர், பல முறைகளிலும் ஈடுபட்டுக்கற்றுத் தேர்ந்து, தமிழ்த் தாத்தாவைப் போல் நம்மிலும் நாலு மேதைகள் சிந்துவெளி நாகரிகத்தையும் எழுத்தையும் ஆராயும் வாய்ப்பும் சூழ்நிலையும் பெற்றிருந்தால், அமெரிக்கப் பேராசிரியரை நம்பிப் பிழைப்பதா, சோவியத் சார்பாளரை நம்பி வாழ்வதா என்ற அவலநிலை வராதே! இப்படி அலைமோதுகிறது என் எண்ணம்.