உலகத்தமிழ்/விண்ணிலே தமிழ்
1. விண்ணிலே தமிழ்
எவெரெஸ்டைப் பிடித்தேன்; கனவிலல்ல; உண்மையாகவே! சிரிக்காதீர்கள். பம்பாயில் எவரெஸ்டைப் பிடித்தேன். நான் பிடித்தது, இமாலயச் சிகரத்தையன்று எவெரெஸ்ட் ஒட்டலையும் அன்று; ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான விமானம் ஒன்றின் பெயர் தான் எவெரெஸ்ட். அதைப் பிடித்துப் பாரிசிற்குப் புறப்பட்டேன்-மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளத்தான்.
அவ்வானவூர்தி குறிப்பிட்ட நேரத்தில் பம்பாயை விட்டுப் புறப்பட்டது. நம்மாலும் குறித்த நேரப்படி செயலாற்ற முடியுமென்பதை அது காட்டிற்று. திருப்தி யோடும் மகிழ்ச்சியோடும் வானிலே பறந்தேன்.
வானவூர்திக்குள் நுழைந்ததும், "வாங்க, இலண்டன் வருகிறீர்களா?" என்று தமிழிலே வரவேற்றார் விமானத் தொண்டர் ஒருவர். "இப்போது பிராங்போர்ட் வரை; அங்கிருந்து ஜினிவா; பின்னர் பாரிசு; அப்புறம் இலண்டன் வழியாகச் சென்னை" என்று பதில் கூறினேன். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டினார்.
மண்ணிலும் விண்ணிலும் தேன் தமிழ் ஒலிக்கக் கேட்ட மகிழ்ச்சியோடு இடத்தில் அமர்ந்தேன். இவரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் புதுப்புதுப் பணிகளிலே - இக்காலப் பணிகளிலே - நுழைந்து, பண்ணுடைத் தமிழைப் பாரெல்லாம் ஒலிக்கும் நாள் எந்நாளோ? அந் நாள் விரைவதாக!’ என்ற உளத்தால் வழுத்தினேன்.
பறந்துகொண்டிருக்கையில் அந்தத் தமிழ் இளைஞர் என்னிடம் வந்து புன்முறுவலோடு நின்றார். "தங்களைக் கல்வி இயக்குநராகவே அறிவேன். புரசை புனித பால் உயர்நிலைப்பள்ளியில நான் படித்தபோதே தங்களைத் தெரியும். தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று அன்போடு கேட்டார். இயக்குநரை நினைக்கிறவர்களும் உள்ளார்களே என்று உணர்ந்து மகிழ்ந்தேன். அந்த இளைஞர் பெயர் திருமலை. புரசைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொண்டேன்.
ஊர்தி வானத்தை எட்டியதும், பழச்சாறு வழங்கப்பட்டது. அதைச் சுவைத்துக் குடித்து முடித்ததும், காலைச் சிற்றுண்டி பரிமாறத் தொடங்கினர். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. முதலில் பலவகைப் பழக் கலவை; அடுத்து 'சிரயல்ஸ்'- அதாவது, பாலில் ஊற வைத்து உண்ணும் சோளப்பொரி, பிறகு பூரியும் கொண்டைக்கடலைக் கறியும்; உப்புமா, காய்கறி; கட்லட் இன்னும் முடியவில்லை. ஒரு தட்டுத் தயிர்; பர்பி; பாலடை; பழம்; காப்பி அல்லது தேநீர். இத்தனையும் சேர்ந்ததே சிற்றுண்டி பெயருக்கும் பொருளுக்கும் பொருத்தமுண்டா!
சிற்றுண்டி முடியும் சமயம்.
இப்போது அகமதாபாத்திற்கு மேலே பறக்கிறோம். இருபத்தைந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம். தில்லியில் பளிச்சென்று வெளிச்சமாயிருக்கிறது என்று விமானமோட்டி அறிவித்தார்.
சிற்றுண்டி களைப்புத் தீருமுன் தில்லியை அடைந்து விட்டோம். குறித்த நேரத்தில் சேர்ந்துவிட்டோம். அங்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கல். தில்லியில் இந்தியப் பேரரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் டாக்டர் கரன்சிங் அவர்கள் விமானமேறி ஞர்கள். கன்னியாகுமரியும் காசுமீரமும் இணைந்து செல்வதாக இருந்தது இந்நிகழ்ச்சி. பிறகு அங்கிருந்து விமானம் டெஹ்ரானுக்குப் புறப்பட்டது.
“இருபத்தொன்பதாயிரம் அடியில் எண்ணுாற்று அறுபது கிலோ வேகத்தில் பறக்கிறோம். 2,660 கிலோ தூரத்திலுள்ள டெஹ்ரானுக்குப் போய்ச் சேர மூன்று மணி இருபது நிமிடம் ஆகலாம். விமானம் பாகிஸ்தானிலுள்ள முல்டான், ஆப்கானிஸ்தானத்திலுள்ள காந்தாரம் ஆகிய நகரங்களின் மேல் பறந்து சென்று டெஹ்ரானைச் சேரும்,” என்று விமானயோட்டி அறிவித்தார்.
முல்டான் என்றதும் முதலில் தமிழ் பாட்டில் பல நகரங்களில் வந்து வட்டித் தொழில் நடத்தும் மூல்தானியர் நினைவிற்கு வந்தனர். வருவாய்க்கேற்பச் செலவைக் கட்டுப்படுத்தத் தெரியாது தவிக்கும் தமிழரை நினைந்து ஏங்கினேன்.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வள்ளுவர் கூறிய அறிவு விதை இன்னும் எத்தனை காலத்திற்கு முளைக்காதிருக்குமோ என்று வருந்தினேன். கவலைக் காரிருளில் மின்னல் பளிச்சிட்டது.
குருநானக் மூல்டான் நகருக்குச் சென்ற நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. அவர் சென்றபோது மூல்டானில் சமயத் தலைவர்கள் பலர் இருந்தனர். குருநானக்கின் வருகை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே சீடர்கள் லம் கோப்பை நிரம்பப் பாலை அவருக்கு அனுப்பி
வைத்தனராம். மூல்டானில் ஏற்கனவே அமுதம் நிறைந்துள்ளது. மேற்கொண்டு அமுதத்தைக் கொள்ள இடமில்லை” என்று அதன்முலம் உணர்த்தினராம். குருநானக் வெகுளவில்லை; மணமுள்ள சிறிய மென்மலர் ஒன்றை அப்பாலின்மேல் இட்டு, பால் சிந்தாமல் திருப்பி அனுப்பினராம்.
தொடர்பு?
மனித வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு - அமுதம் - தமிழில் நிறைந்திருக்கிறது. மற்றவர்கள் போட்டியைப் பற்றியே கருத்தையெல்லாம் அழியவிடுவதற்குப் பதில் அவ்வமுதத்தை உண்டு, தெளிவும் தெம்பும் பெற்று ஆக்கப் பணிகளில் ஈடுபடுவோம் என்று உறுதி கொண்டேன்.
அக்கருத்தோட்டத்தைக் கலைக்க வந்தாள் கன்னி.
“என்ன குடிக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே நின்றாள் விமானப் பணிமங்கை. “ஒன்றும் வேண்டா” என்று தலையாட்டினேன். “ஒன்றுமே வேண்டாவா? சேம்பெய்ன், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின், பீர்-” இவற்றுள் ஏதாவது கொஞ்சம் கொடுக்கட்டுமா? என்றாள். மீண்டும். எதுவும் வேண்டாவென்று நான் கூறியது அவளுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை. "ஆரஞ்சுச் சாறாவது குடியுங்கள்" என்று கொண்டு வந்து வைத்து விட்டாள். சிறிது நேரத்தில் சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. இப்போது அது சிற்றுண்டியே.
சிற்றுண்டி பரிமாறிய பின், தட்டு முட்டுச் சாமான்களை எடுத்து வைத்துவிட்டு, அம்மங்கை பயணிகளோடு உரையாடினாள்; என்னிடமும் உரையாடினாள். “எங்கே போகிறீர்கள்? எத்தனே நாள் இருப்பீர்கள்?” என்பதிலே உரையாடல் தொடங்கிற்று. “என்ன அலுவல்?” என்ற கேள்விக்குப் போயிற்று. நான் யாரென்று அறிந்ததும், “பம்பாய் மாநிலத்தில் கல்வி இயக்குநராக இருந்த மூல் என்பவரைத் தெரியுமா? அவரது சொந்தக்காரி நான். மூல் குடும்பங்கள் சிலவே” என்று கேள்வியும் அறிவிப்பும் சேர்ந்து வந்தன. அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநராக இருந்தவர். “அவரைப் பார்த்தறியேன், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றதும் மகிழ்ந்தாள். இப் பணிமங்கையோ பம்பாய் பல்கலைக் கழகப் பட்டதாரி; முதுகலை இலக்கியப் (எம். ஏ.) பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருக்கையில் இப் பணிக்கு வந்து விட்டாளாம். இலக்கிய ஆர்வம் இன்னும் நீடிக்கிறதாம். சிற்சிலபோது, திங்கள் இதழ்களுக்குக் கட்டுரை எழுதித் திருப்தி அடைவதாகத் கூறினாள். தமிழ் நாட்டில் கல்வி விரைந்து பரவியுள்ளதாகப் பாராட்டினாள். தமிழ் நாட்டு மாணவர்கள் அமைதியாக இருப்பவர்கள் என்றும் புகழ்ந்தாள். மாண்டிசாரி பள்ளிகளில் அவளுக்கு ஆசையாம். அவை பல ஏற்பட வேண்டும் என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.
பல நிமிடங்கள் ஓடின. காந்தாரத்திகுத் தெற்கே பறப்பதாக விமானமோட்டி கூறவும் சாளரததின் வழியே பார்த்தோம். பல நூறு கிலோ தூரம் பொட்டல் காடாகக் காட்சியளித்த மலைப்பகுதிகளைக் கண்டுவந்த எங்களுக்கு, காந்தாரம் பசுமையாகக் காட்சி தந்தது. இதிகாச காந்தாரி நொடிப்பொழுது நினைவில் வந்து மறைந்தாள். மீண்டும் பச்சை தோன்றா நிலப் பரப்பு. டெஹ்ரான் வரும்மட்டும் அப்படியே. டெஹ்ரானைச் சுற்றியும் பாலைக் காட்சியே. பெட்ரோல் வளத்தால் வளர்ந்துள்ள நாகரிக நகரம் அது. வானத்திலிருந்து பார்க்கையில் புதிதாகவும் ஒழுங்காகவும் கட்டப்பட்ட நகரமாகத் தோன்றிற்று விமான நிலையத்தைச் சுற்றிச் சோலை
களைக் கண்டோம். இச்சிறு பாலையில் சோலையமைக்க பெரும்பாடு பட்டுமல்லாது, புது விஞ்ஞான அறிவும் பயன்பட்டிருக்கும். இயற்கைப் பசுமையே காணாத அப் பகுதியில், விஞ்ஞான அறிவின் துணைகொண்டு, பெரும் பணமும் உழைப்பும் செலவழித்து வளர்க்கும் பசுமை தழைத்துப் பரவுவதாக!
டெஹ்ரான் வந்தடைவதற்குமுன், மீண்டும் தண்ணி ஊற்றினார்கள். எந்தத் 'தண்ணி' யும் வேண்டாவென்று மறுத்த என்னை, மேனாட்டுப்பாட்டிகள் இருவர் பரிதாபத்தோடு பார்த்தது தெரிந்தது. பரிதாபப்படட்டும்! நானா குறைந்து விடப்போகிறேன்?
'தண்ணி' போட்டதும் பகல் உணவு பரிமாறினர்கள் அப்பப்பா எத்தனை வகைச் சாப்பாடு! மிளகுத் தண்ணி சூப்பு, சைவப் புலவு, காய்கறிக் குருமா; நான்கு வகைக் காய்கறிப் பதார்த்தம், பூரி; உருளைக்கிழங்கும் பட்டாணியும் கலந்து சமைத்த கறி, தயிர்க் காராபூந்தி: ஐஸ்கிரீம்; பழங்கள், காப்பி அல்லது தேநீர்; பிஸ்கோத்தும் பாலாடையும்; இடைஇடையே 'மது' எவ்வளவு தடுத்தும் கேளாமல், ஒவ்வொரு வகையும்-மது நீங்கலாக-எனக்கும் பரிமாறினர்கள். மாமிச உணவினர்க்கு இதற்கு மேலும்.
சாப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த என் மாணவப் பருவத்தில்கூட இவ்வளவும் சாப்பிட்டிருக்க முடியாது, வயிறு ஒட்டிப்போன இப்போதோ, தொட்டுத்தொட்டுக் கொறித்து விட்டு வைத்து விட்டேன். ஐயோ ஒன்றும் உண்ணவில்லையே. நன்றாக இல்லையோ என்று வருந்தினர் பரிமாறுவோர். இவ்வளவு உணவுப் பொருள்கள் வீணாகிறதே என்று ஏங்கினேன் நான்.