உலகநீதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

கடவுள் வாழ்த்து[தொகு]

உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
பாடல் 01
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் [ஓதாமல் = படிக்காமல், பாடங் கற்காமல்]
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் [பொல்லாங்கு = கெட்டது, கெட்டசொல்]
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் [மாதா = தாய்]
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் [செய்வாரோடு இணங்க]
போகாத இடந்தனிலே போக வேண்டாம் [போகாத = போகத்தகாத, போகக்கூடாத]
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் [வாகு = பாகு, புஜம், மேற்கை, கைவலிமை; ஆரும் = நிறைந்த; வாகாரும் = வலிமைநிறைந்த]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 02
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் [நல்லவர்களின் தொடர்பு இல்லாதவரோடு]
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளுங் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளிபங்கன் [மஞ்சு = மைந்து, வலிமை; ஆரும் = நிறையும்; மஞ்சாரும் குறவர் = வலிமையான குறவர்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [மயிலேறும் பெருமாள் = மயிலேறும் கடவுள், முருகன்]
பாடல் 03
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் [தனம் = செல்வம்; புதை = மறை, ஒளித்துவை]
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம் [அல்லல் = துன்பம்]
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம் [சினந்திருந்தார் = கோபக்காரர்]
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 04
குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 05
வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாட்டு 06
வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
பாடல் 07
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 08
சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 09
மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச்? சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானே
பாடல் 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே


உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=உலகநீதி&oldid=948165" இருந்து மீள்விக்கப்பட்டது