உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு/அவர் சிந்திய இரத்தம்
அவர் சிந்திய
இரத்தம்
- மகாராஜாக்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.
- மடாதிபதிகள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்,
மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் தெரியும் என்று கூறிக் கொண்டவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்,
ஆரூடம் கணித்து, இனி இன்னின்னபடி ஆகும் என்று கூறும் ஆற்றல் எமக்குண்டு என்று கூறுபவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.
யோகம் தெரியும், ஆண்டவனைக்காட்ட எம்மால் முடியும், அகிலமெல்லாம் அடக்கிடும் வித்தை தெரியும் என்று பேசினவர்கள் இருந்தனர்--இன்றும் இருக்கின்றனர்.
அவர்கள் இருந்தனர், என்பது மட்டுமல்ல, நிலைமை.--
மகாராஜாக்களுக்கு வரி செலுத்திக்கொண்டு பயபக்தி விசுவாசம் காட்டிக்கொண்டு, மக்கள் இருந்தனர்.
அந்த மகாராஜாக்கள், தேவகட்டளையால் பூர்வபுண்ணிய வசத்தால், சிங்காதனம் ஏறும் பாக்கியம் பெற்றார்கள் என்று மக்கள் எண்ணினர்.
மத குருமார்களின் தங்கப் பல்லக்குக்கு காணிக்கை செலுத்தினர். திரு அருளால் அவர்கள் திவ்விய புருஷர்களானார்கள். ஆகவே அத்தகையவர்களின் 'தெரிசனமே' பாபத்தைப் போக்கும் என்று மக்கள் எண்ணினர் அந்த மத குருமார்கள் மனம் வைத்தால், எதுவும் நடைபெறும் என்று மனமார நம்பினர்.
மாயவித்தை தெரிந்தவர்களால், துஷ்ட தேவதைகளைக் கட்டுப்படுத்த முடியும், அவர்கள் கூப்பிட்ட உடனே குட்டிச்சாத்தான் ஓடிவருவான்; நெருப்பு தண்ணீராகும், நீர் நெருப்பாகும். ஆளை மிருகமாக்குவான், மிருகத்தை ஆளாக்குவான் என்றெல்லாம் நம்பிளர் அவர்களிடம் பயப்பட்டனர் -- அவர்களின் மிரட்டலைக் கண்டு அடிபணியவும் சம்மதித்தனர்.
யோகிகளால் புவனத்தை அடக்கமுடியும், தேவ இரகசியத்தை அறிய முடியும், அவர்களிடம் அபாரமான ஆற்றல் உண்டு. அவர்கள் நினைத்தால் அதுபோலவே நடைபெறும் என்று எண்ணினர் யோகிகளையும் பொதுவாகவே சாது சன்யாசிகளையும், மக்களை ஈடேற்றும் மகத்தான சக்தி வாய்ந்தவர்கள் என்றே கருதித் தொழலாயினர்; அவர்களின் அருளைப்பெற ஆவல் கொண்டனர்.
அப்படிப்பட்டவர்களெல்லாம், ஆங்கில ஆட்சி இங்கே ஏற்பட்டதைத் தடுக்கவில்லை -- ஏற்பட்டபிறகு தத்தமது ஆற்றலை உபயோகித்து. அதை எதிர்த்து ஒழிக்கவில்லை ஏன் அதைச் செய்யவில்லை என்று மக்கள் கேட்டதுமில்லை.
அவர்கள் இருந்தனர் -- மக்கள் வணங்கி வந்தனர். ஆங்கிலேயனும் வந்தான்; மக்கள் அவர்களிடம் அஞ்சிக் கிடந்தனரேயொழிய, "ஐயன்மீர்! உமக்குள்ள ஆற்றலிலே ஆயிரத்திலோர் பாகமேனும் செலவிட்டால். இந்த ஆங்கிலேயன் மிரண்டோடுவானே, அதைச் செய்யலாகாதா என்று கேட்கவில்லை அவர்களின் ஆற்றலோ, அல்லது "கால தேச வர்த்தமானத்திலோ" ஆங்கிலேயன், எப்போதுதான் போய்த் தொலைவான் என்பதைக் கூறும்படி ஆற்றல் மிக்க ஆரூடக்காரனையும், மக்கள் கேட்டதில்லை. அவர்களும் மீனாவுக்கும் முத்துவுக்கும் பொருத்தம் பார்ப்பது, மேஷ ரிஷபக் கணக்குக் கூறுவது என்று கூறிக்கொண்டிருந்தார்களேயொழிய, கிரிப்ஸ் திட்டம், புதிய சட்டம் என்ற இவைப் பற்றி ஏதும் கணக்கெடுத்துக் கூறினதில்லை.
அவர்களெல்லாம் அன்னிய ஆட்சியைத் தடுக்க முடியாமலும், போக்கியாக வேண்டுமே என்று எண்ணாமலும் இருந்தனர் என்றாலும், மக்கள், அவர்களிடம் வழக்கப்படி, மரியாதை காட்டியும், காணிக்கை செலுத்தியும்; பயபக்தி விசுவாசத்தோடும் இருந்துவந்தனர்,
இவர்களின் கண் முன்னாவே, வெள்ளைக்காரர்கள் உலவினர் -- இவர்கள் அக்காட்சியைக் கண்டு நமது ஆற்றல் பயனற்றுப் போயிற்றே என்று வெட்கித் தலை குனியவுமில்லை -- தங்களிடம், மக்கள் எவ்வளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதை அன்னியனுக்குக் காட்டி, உனக்கு ஒருவகையிலே செல்வாக்கு, எங்களுக்கு மற்றோர் வகையிலே என்று கூறிக் கொள்ளும் முறையிலேயே நடந்துகொண்டனர். மக்களோ நம்மை ஆண்டு ரட்சிக்க, பலபேர் உள்ளனர்; அவர்களிலே ஆங்கிலேயனும் ஒருவன்போலும் என்று எண்ணிவிட முடிந்ததேயொழிய, இவ்வளவு ஆற்றல் படைத்த இவர்கள், ஏன் இன்னோர் அதிகாரியை அனுமதித்தனர் என்று சிந்தித்து, உண்மையில் இவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற முடிவு செய்யவில்லை. சிந்திக்க இடந்தரவில்லை, பழக்கம். எனவே, அன்னிய ஆட்சி ஏற்பட்டதைத் தடுக்கமுடியாத சக்திகள் அள்னிய ஆட்சியின்போதும் மக்களை மட்டும், எப்போதும்போலவே, ஆதிக்கம் செலுத்திவந்தன.
"உங்கள் நாட்டு மன்னன் யார் என்று வெளியூரான் கேட்க, எங்கள் நாட்டு மன்னனா ! மன்னர் என்று சொல்லு, இருவர் உளர்" என்று உள்ளூரான் கூற, "இருவரா! எவ்விதம் அம்முறை ஏற்பட்டது? யார் அவ்விருவர்?” என்று வெளியூரான் கேட்க, "எமது மன்னர் இருவர், ஒருவர் கர்நாடகம், மற்றவர் குண்டுவீசி, -- குண்டுவீசி, -- கர்நாடகத்தைத் தோற்கடித்தார் இப்போது இருவரும் எம்மை ஆள்கிறார்கள்" என்று உள்ளூரான் பதில் சொன்னால், எப்படி இருக்கும்! நமது நாட்டு மக்களை, யாரும் அவ்விதமாகக் கேள்வி கேட்கவில்லை. கேட்டிருந்தால், இப்படித்தான் ஏதேனும் ஓர் வேதனை கலந்த வேடிக்கை நிரம்பிய பதிலளித்திருக்கவேண்டி வரும். ஏனெனில், இந்தியாவிலே 506-க்கு மேற்பட்ட ராஜாக்கள், அதைவிட அதிகத் தொகையிலே மதத்தின் பெயர் கூறி மக்களை ஆள்பவர்கள், யோகிகள், ஜாலம் ஜாதகம் தெரிந்தவர்கள், இப்படிப்பட்ட வேறு பலர் இவ்வளவு பேர் இருந்தும் இங்கிலீஷ்காரனும் வாழ்ந்தான்-- "பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவொன்று" என்று கருதி மக்கள் அவனையும் ஏற்றுக்கொண்டனர். அவனுக்கும் அடங்கி நடக்கலாயினர். புதியவனை அந்தப் பழைய சக்திகள் தடுக்கவுமில்லையே. அத்தகைய ஆற்றலைக் காணோமே, அவ்விதமிருக்க, நான் ஏன் அந்தப் பழைய சக்திகளை இனியும் போற்றவேண்டும், நம்ப வேண்டும் என்று எண்ணத் தொடங்கினவர்களின் தொகை. மிகமிகச் சொற்பம். மற்றவர்களோ, வெள்ளையராட்சி ஏற்படுவதற்கு முன்பு எப்படிப் பேசி வந்தனரோ பயபக்தியுடன் அதே முறையிலேதான் அந்தப் பழைய சக்திகளைப்பற்றிப் பேசிவந்தனர்.
"அவருக்கு அம்பாள் பிரசன்னம்"
"அவர் ஊமையைப் பேசச் செய்தார்"
"அவர் அனுமத் உபாகி"
"இவருக்கு அடயோகம் தெரியும்"
"இந்த ராஜாவுக்கு 76 மனைவிமார்" "இவர் கரு தரிக்கும்போதே ஆணா பெண்ணா என்று அறிந்து கூறினவர்”.
"இவர் காட்டேரியை ஏவி விட்டு விடுவதில் கைதேர்ந்தவர்".
"இவர் மண் அள்ளிக்கொடுத்தால் பொன் ஆகும்".
"இவர் நமது கடைப்பக்கம் வந்துபோனால் போதும். இலட்சுமி தாண்டமாடுவாள் நம்மிடம்" என்ற இதுபோன்ற புகழுரைகள், நம்பிக்கையுரைகள் நடந்தவண்ணந்தான் இருந்தன. நாட்டை அன்னியரிடம் இழந்திருக்கின்றோம், இவர்கள் இவ்வளவு அற்புத புருஷர்கள் என்றும் நம்புகிறோம். இந்த இரண்டும் எப்படிப் பொருந்தும் என்று எண்ணவுமில்லை. 'பழைய சக்திகளின்' பெருமை, ஆடாமல் அசையாமல் இருந்துகொண்டிருந்தது.
இவ்வளவு 'அற்புதவான்கள்', 'ஆற்றலுள்ளவர்கள்', 'மகாராஜாக்கள்' போன்றவர்கள், யாரும் மனதாலும் எண்ணாத மகத்தான காரியத்தை, ஒருவர் சாதித்தார்.
உத்தமர் காந்தியாரின் ஒப்பற்ற சக்தியை உள்ளபடி உணருவதற்கு, இந்தச் சூழ்நிலையை நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனித சக்திக்கு மேற்பட்ட மகா சக்திவாய்ந்தவர்கள் என்று மக்கள் பல காலமாக, தலைமுறை தலைமுறையாக, பழக்கமாக, யாராரை, அதாவது மகாராஜாக்களை, மத அதிபர்களை, யோகிகளை, சித்து விளையாடுபவர்களை, மற்றும் இது போன்றவர்களைப் பாராட்டியும் வணங்கியும் காணிக்கை செலுத்தியும் வந்தார்களோ, அவர்கள் யாரும், நாட்டுக்கு விடுதலையும், மக்களுக்கு நற்குணமும் ஏற்பட வேண்டுமென்பதற்காக, உத்தமர் காந்தியார்போல் உழைத்து வெற்றிகண்டது போலக் கண்டதில்லை. அவர் பிறந்தபோது, வானத்திலே ஓர் ஒளி தோன்றிற்று--வாழ்த்துவதற்குத் தேவர்கள் கூடினர்; தீர்க்கதரிசி தோன்றுகிறர் என்று இயற்கை முறை மாறித் தெரிவித்து-பட்டமரம் தளிர்த்தது--செத்தவன் பிழைத்திட்டான் வெட்டாமல் ஆறு தோன்றிற்று என்று எந்த அற்புத நிகழ்ச்சியும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை. அவர், எல்லோரையும் போலவே பிறந்தார் -- போர்பந்தர் சமஸ்தானத்திலே அவர் பிறந்த அன்று, வேறு எவ்வளவோ குழந்தைகள் பிறந்தன.
அவர் பிறந்த குலமும், குடும்பமும், குவலயம் அறிந்தது என்றோ, அருள் பெற்றது என்றோ, ஆலய அதிகாரம் படைத்தது என்றோ, அரசாள்வோரின் அந்தரங்க ஆதரவைப் பெற்றதென்றே கூறுவதற்கில்லை. ஏழைக்குடும்பம் அல்ல---ஆனால் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர் சாதாரணத் தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருந்தபோது, தங்கத்தாலான தொட்டிலிலே படுத்திருக்க, தாதிமார் தாலாட்டும் பாடிக்கொண்டிருக்கும் நிலையில் சீமான் வீட்டுச் செல்லக் குழந்தைகள் எவ்வளவோ இருந்தன இந்தியாவில் ஐநூற்றுக்கு மேற்பட்ட சமஸ்தானங்கள், ஆயிரக்கணக்கில் ஜெமீன்கள், ஜாகீர்கள். காட்டு ராஜாக்கள், மேட்டுக்குடியினர், வணிக வேந்தர்கள். ஏராளமல்லவா -- அவர்களின் வீடுகளிலெல்லாம், பிறந்த குழந்தைகள்போல, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிறக்கும் போதே, பிறரால் பெருமைப்படுத்தப்பட்டுத் தீரவேண்டிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவராசு இல்லை.
கல்வித்துறையிலே அவர் பெற்ற வெற்றியும் கீர்த்தியும் கூட, வேறு எவ்வளவோ பேர் பெற்ற விதமானதுதான் - சிலருக்குத் கிடைத்ததைவிடக் குறைவும் கூட, பாரிஸ்டர் படிப்பில் தேறினார் - அவருடன் தேறினவர்கள் அநேகர் -- அதற்குப் பிறகு, பாரிஸ்டர் ஆனவர்களின் தொகை ஏராளம்.
சிறு வயதிலேயே அவருக்கு அருள் கிடைத்தது. அம்மையப்பன் அவர்முன் தோன்றி, அகில உலகும் புகழும் நிலையை நீ பெறப்போகிறாய்--- ஆகவே நீ, கிழக்குமுகமாகப் பார்த்தபடி பத்மாசனத்திலே அமர்ந்து. பத்து ஆண்டுகள் நம்மை நோக்கித் தவம் கிடக்கவேண்டும் என்று அருள, அம் மொழிப் படியே அழகான ஆற்றோரத்திலே ஓர் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, மோகன்தாஸ் தவம் செய்தார் -- அதன் பலனாக அவர்முன் மும்மூர்த்திகள் தோன்றினர் -- என்று வழக்கமாகப் பெரியோர்களைப்பற்றிக் கூறப்படும் புராணமும் இவருடன் இல்லை.
ஆருடம் கூறுபவர்கள்கூட அவர் அகில உலகப் புகழ் பெற்றபிறகு, அவருடைய 'ஜாதகம்' அப்படிப்பட்டது என்று கூறினரேயொழிய, அன்னையின் மடியிலே குழந்தை தவழ்ந்தபோது, ஆசானிடம் பாடம் கேட்டபோது, ஆங்கில நாட்டிலே படித்தபோது, ஆப்பிரிக்காவிலே உரிமைப்போர் துவக்கிய போதுங்கூட, அவர், அகில உலகும் அதிசயிக்கத்தக்கவராக விளங்குவார் என்று முன்கூட்டி ஆருடம் கூறவில்லை.
இவைகள் ஏதுமின்றி, நம்மில் ஓருவராகவே இருந்தார். ஆனால் இன்று நாமும், உலகிலுள்ள நல்லறிவாளர்கள் அனைவரும், உத்தமர், உலகைத் திருத்த உழைத்தவர் என்று உள்ளம் உருகி உரைத்திடத் தக்க உயர்நிலை அடைந்ததுடன், உலக வரலாற்றிலே. உன்னதமான இடம்மட்டுமல்ல நிரந்தரமான இடத்தையும் பெற்றுவிட்டார்,
முன்பு கூறியபடியே, அவருடைய பிறப்பு, வளர்ப்பு ஆகியவற்றிலே அற்புத சக்திகள் உடன் இருந்திருக்குமானால். அவருடைய இன்றைய உயிர்நிலை குறித்து அதிசயப்படத் தேவையில்லை!--அவர் அவ்விதமான சக்திகளோடு பிறந்தார் என்று கூறத் தோன்றுமேதவிர, அதிசயிக்கத் தோன்றாது. ஆண்டவனின் சக்தி அதனால் விளங்கிடும் அளவுக்கு அவர்பற்றி இராது. ஆனால் உண்மையான பெருமை. உண்மையான சிறப்பு, அவர் அவ்விதமாக அதிசயப் பிறவியல்ல நம்போன்றவர் ஆனால், நாம் கண்டு அதிசயிக்கத்தக்கபடியான உயர்நிலை பெற்றார் என்பதிலேதான் இருக்கிறது. தேன் இனிப்பாகத்தான் இருந்து தீரும். வாதம் தேவையில்லை அதை விளக்க; சிபார்சு தேவையில்லை அதைப் பருக தேன் எவ்வளவு இனிப்பாக இருக்கிறது தெரியுமா என்று கூறினால், கேட்பவர்கள் சிரித்துவிட்டு, இது என்ன பேச்சப்பா--தேன் இனிக்காமல் வேறெப்படி இருக்கும் என்று கூறுவர் அதுபோலவே தேவபுருஷர்கன், அற்புதம் புரிவோர் என்று முத்திரை பொறிக்கப்பட்டு, கதைகள் சேர்க்கப்பட்டு, உலகிலே உலவுவோர் உலகினரின் வணக்கத்துக்கு உரியவராவது சகஜம். ஆனால், மோகன்தாஸின் சிறுபிராய முதல், இதுபோல ஏதும் அதிசயம் நிகழாமலிருந்தும், அவர் இன்று அடைந்திருக்கும் உயர்நிலை, நமக்கு நாம் இதுவரை மறந்துபோன அதிசய புருஷர்களை எல்லாம்கூட நம் கவனத்துக்கும் கொண்டு வருகிறது என்றால், அந்த உத்தமருடைய உண்மையான பெருமை, இந்தச் சூட்சமத்திலேதான் இருக்கிறது. இதனைத்தான் உலக அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கலமின்றிக் கடலைக் கடப்பது எப்படி அற்புதச் சக்தி என்று கருதவேண்டுமோ, அதுபோலவே, அற்புதப் பிறவி என்ற நிலை இன்றி எல்லோரையும் போலவே பிறந்து, எல்லோருக்கும் மேம்பட்டவராக, மகாத்மாவாக, மாநிலத்தவரால் கொண்டாடப்படுவது என்றால், அதுதான் உண்மையிலேயே உயர்வு.
இராமகிருஷ்ண அவதாரங்களோ, ஆழ்வாராதி நாயன் மார்களோ, சித்தர்கள் ஜீவன் முக்தர்களோ தாங்கள் மக்கள் உருவிலே இருக்கும்போதே, மக்களின் சுபாவத்தை மீறிய சக்திகளைப் பெற்றிருந்தனர் என்று கதைகள் உள்ளன. பூதகியைக் கொன்றார், தாடகியைக் கொன்றார், காளிங்கமடுவில் குதித்தார், கடலுக்கு அணையிட்டார் என்பன போன்ற கதைகள் மூலம், அவர்கள் கடவுள் என்ற கருத்து பரப்பப்பட்டது--எனவே அவர்கள் புகழ்பெற்று விளங்கியதிலே, நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் இந்த உத்தமர்-மானிட குலம்-அந்தக் குலத்துக்கு எந்தவிதமான ஆற்றல் உண்டோ, அதேவிதம் பெற்றார்--இருந்தும், மானிட குலத்துக்கு வழிகாட்டி என்றும், உலகப் பெரியார் என்றும், எல்லா நாட்டிலேயும் போற்றப்படும் நிலையைப் பெற்றார் அவர் பெருமை இதிலேதான் இருக்கிறது -- அவருடைய மறைவால் உள்ளம் உருகும் நிலை ஏற்பட்டதன் முக்கிய காரணம் இதுதான்.
இராமகிருஷ்ணர்கள் என்ற புராண புருஷர்கள் போலல்லாமல், நமது காலத்தவர், மானிட குலத்தவர், மற்றவர் போலவே இயல்பான சக்திகளையே உடன்கொண்டு பிறந்தவர், எனினும், இன்று அவர், மற்றவர் சாதிக்காத காரியத்தைச் சாதித்திருக்கிறார். எனவேதான் நமது உள்ளத்திலே அவருக்கு உயர்ந்த இடம் கிடைத்திருக்கிறது.
மக்கள் மனதிலே இடம் பெற்றார் என்பது மட்டுமல்ல, இந்த அளவு உயர்வுபெறுவதற்காக அவர் நாட்டின் நடவடிக்கைகளைக் கவனிக்க மறுத்து, மக்களின் சுக துக்கங்களைப் பற்றிய நடவடிக்கைகளிலிருந்து விலகி, யோகம், யாகம் செய்துகொண்டே இருந்து விடவில்லை. காதகனின் கைத்துப்பாக்கிக்குப் பலியாகும் கடைசி நிமிஷம் வரையில், மக்களோடு மக்களுக்கான காரியத்தை, தந்நலமற்ற முறையிலே, மகத்தான வெற்றியுடன் செய்து வந்திருக்கிறார் இதனைக் கவனிக்கும்போது, அற்புதம் செய்தவர்கள் என்போரிடம் ஏற்பட முடியாத பற்றும் பரிவும், மதிப்பும் இவரிடம் ஏற்படுகிறது. அழகிய ரோஜாவுக்கு, அற்புதமான வர்ணம் தீட்டிப்பார்க்க வேண்டுமல்லவா! நம்மைச் சொக்கவைக்கும் மயிலின் தோகைக்கு, பட்டாடை போர்த்த தேவையில்லை யல்லவா! முல்லைக்கு மணமும், தேனுக்கு இனிப்பும், நாம் கூட்டத் தேவையில்லையல்லவா! அதுபோலவேதான், எந்த உத்தமரின் மறைவு கேட்டு உலகம் உருகி அழுகிறதோ, அவருடைய உயர்வுக்கு அவருடைய குணமும் செயலும், அவர்பெற்ற வெற்றிகளும், அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், போதுமான காரணங்கள் --அவருடைய பெருமையை விளக்க நாம் ஏதும் புராணப்பூச்சு போடத் தேவையில்லை. அவர் குருடனுக்குப் பார்வை வரச்செய்தார் முடவனை எழுந்து நடக்கச்செய்தார். ஊமையைப் பேசவைத்தார். மாயாஜாலங்களைச் செய்தார், கந்துக மதக்கரியை வசமாய் நடத்திடும் சித்து விளையாடினார் என்று மகான்களைப்பற்றி மக்களிடையே கதைகள் உலவுவதுண்டு, அவர்களில், யாரேனும் ஏதேனும் ஓர் அதிசயச் செயல் செய்திருப்பினும், அவர்களின் பெருமையையும் ஆண்டவன் அவர்களிடம் காட்டிய அன்பையும் விளக்கமட்டுமே அவை உதவும். யாரோ ஒருவருக்கு. யாரோ ஒரு மகான் கண் பார்வை வரச் செய்தார். குருடு யாருக்கும் ஏற்படாதபடிச் செய்துவிடவில்லை. மறைந்த உத்தமர், இப்படிப்பட்ட சித்துக்கள் விளையாடவில்லை சித்து விளையாடினவர்கள் செய்ததாகக் கூறப்பட்ட அற்புதங்கள், இவருடைய மகத்தான வெற்றிகளின் முன்பு, சிறு துரும்பு. ஒருவருக்குக் கண் பார்வை உண்டாக்கச் செய்த மகான்கள் இருக்கட்டும் ஒருபுறம் இது நமது நாடு. ஆங்கிலருக்கு வேட்டைக்காடு ஆகிவிட்டது -- நாம் பலகோடி, அவர்கள் சில இலட்சம் நாம் அடிமைகள், அவர்கள் ஆட்டிப் படைப்பவர்கள் என்ற நிலை தெரியாதிருந்த குருடர்களாக நம் நாட்டவர் கோடிக்கணக்கிலே இருந்தனர்; மறைந்த உத்தமர், அவர்களின் கண்களைத் திறந்தார்; என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் அடைத்துப்போயிருந்த மக்களைப் பேசவைத்தார் - உரிமைப்பற்றி - உறுதியுடன் எப்படிப் பெறுவது என்று தெரியாமல், முடவன் நிலையில் இருந்தவர்களை கச்சைகட்டி நின்று, கடும் போரிட வைத்தார். பலகோடி மக்களுக்குப் பார்வை. பேச்சு, செயல், திறமை இவ்வளவையும் உண்டாக்கினார் இந்த உத்தமர். அற்புத நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கூறப்படும் அருளுடையார்கள் இருந்த போதுதான், ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்தினான். அந்த அடிமைத் தளைகளை உடைத்தெரிந்தவரை, அவர்களோடு சேர்த்துப் பேசுவது, அவருக்குக் கௌரவம் என்று எண்ணுபவர்கள், உத்தமரின் உயரிய பண்புகளைச் சரியாக உணராதவர்கள் என்றே பொருள்படும். அவருடைய வெற்றி கள். மகத்தானவை-அவைகளைவிட மகத்தானது. அவர் உண்டாக்கிவைத்துவிட்டுப் போயிருக்கும் மாண்புகள். அன்னிய ஆட்சியை விலக்கவோ, அதற்கான விடுதலைப்போர் துவக்கும் உணர்ச்சியையும் உறுதியையும் மக்கள்பெறச் செய்யவோ முடியாதவர்களை எல்லாம், "அற்புதம் தெரிந்தவர்கள், அருள்பெற்றவர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர்--மக்களும் அதை ஏற்று அவர் அடிதொழுதனர். அதேபோது, அவர்கள் யாரும் சாதிக்காததைச் சாதித்தனர். 1922ம் ஆண்டு பிப்ரவரி 16ந்தேதிய "யங்இந்தியா" பத்திரிகையில் "என்னிடமிருப்பதா நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஒரே குணம், சத்தியமும் அஹிம்சையும்தான். மனிதருக்கு மேற் பட்ட சக்தி எதுவும் எளக்கு இல்லை; திடசித்தமில்லாத மற்றவர்களுக்கு, கெடுதலை நாடிவிடக்கூடிய எந்தச் சதை உண்டோ, அதே சதையாலானவனே நானும்" என்று எழுதினர்--இருபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு.
இப்போதும், மக்களின் பாராட்டுதலைப்பெற்றுப் பூரிக்கும் 'பழைய சக்திகளிடம்' கேட்டுப்பாருங்கள்! இப்போதும், தமது வீரதீரத்தையும், அருள்பெற்று ஆற்றலுடையோராக இருப்பதையும் கூறுவர். அவர்கள் கூறட்டும் மக்கள் இனியும் அவர்களின் உரையை ஏற்கலாமா--அந்தப் பழைய சக்திகளைப் பாராட்டவும், அவைகளுக்கு வணக்கம் செய்யவும் முற்படுவது சரியாகுமா? முற்றும் துறந்த முனிவரின் சொந்த ஆஸ்தி இவைதான், என்று 'தினசரி' யில் ஒரு படம் வெளி வந்தது, காந்தியாரின் சொத்துக்களைக் காட்ட அந்தப் படத்தைக் கண்ட எவருக்கும் கண்ணீர் கசியாமலிராது! என்ன சொத்து? நூல்சரம்; சிறு கரண்டி, தெர்மாஸ்பிளாஸ்க், ஒரு பவுண்டன் பேனா, ஒரு ஜதை காலணி இவை. அருள் பெற்றவர்கள், யோகமறிந்தவர்கள், மக்களின் மோட்சலோக வழிகாட்டிகள் என்றெல்லாம் விருதுபெற்று துறவு நிலையும் கொண்டிருப்பதாகக் கூறுபவர்கள் இன்றும் பலர் உள்ளனரே அவர்களின் சொத்துக்களை சற்று உங்கள் மனக்கண்முள் கொண்டுவந்து பாருங்கள்--எவ்வளவு ஆடை ஆபரணம் -- தங்கத்தால் வட்டில் தட்டு முதலியன மட்டுமா, பாதக்குறடே தங்கத்தால்! இவர்களையும், முற்றும் துறந்தவர்கள், முனிவர்கள், மக்களின் அன்புக்குமட்டுமல்ல, ஆராதனைக்கும் பாத்திரராகக்கூடியவர்கள் என்று, இனியும் கொள்ள எப்படி மக்களின் மனம் சம்மதிக்கும்? சாதாரண காய்ச்சலுக்கு. ஒரு வைத்தியர் கொடுத்த மருந்து பயனற்றுப்போய், வேறொரு வைத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்து, ஜூரம் நீங்கிவிட்டால் என்ன சொல்கிறோம்? முன்னவரின் முறை சரியில்லை, மருந்து பயனில்லை என்று கூறிவிடுகிறோமே. இதோ ஒரு நாட்டின் நலிவை, மக்களின் நிலையை மாற்ற நமக்குத் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தவர்களால் முடியாமற் போனபிறகு, அவர்களைப்போல. 'நான் அற்புதம் புரியவன்'. என்று கூறிக்கொள்ளாமல், பணிபுரிந்து, வெற்றிகண்டு, கடைசியில் நாட்டிலே வகுப்பு மாச்சரியம் ஒழித்து, புதுவாழ்வு ஏற்படவேண்டும் என்பதற்காக உயிரையே கொடுத்தாரே ஓர் உத்தமர், அவரைப் போற்றும் அதே வாயினால், எப்படி அந்தப் பழைய சக்திகளின் பிரதிநிதிகளைப் புகழ்வது? பழைய சக்திகளின் பிரதிநிதிகளும், இனியும், தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது அழகல்ல, அறமுமாகாது என்பதை அறிந்து, அவர்களின் போக போக்கிய நிலையையும், அதைக் காப்பாற்ற அவர்கள் கையாளும் முறைகளையும் விட்டொழித்து, உத்தமர் உரைத்த உயரிய கொள்கைகளை ஊருக்கு உரைக்கும் உயர் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். அவர்களுக்குத் தமது சுகானுபவத்தை இழக்க மனம் வராது போகுமானால், மக்கள் இனித் தாங்கள் விழிப்புப்பெற்றுவிட்டதால், முற்றுந்துறந்தவர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை உத்தமர் காந்தியாரின் வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொண்டுவிட்டதால் இனி மக்களை மயக்க, பழைய சக்திகள் கூறும் உறைகளை நம்பப்போவதில்லை. அந்த உறைகளின்படி அமைந்துள்ள முறைகளைக் கொள்ளப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி, அன்பு நெறியை, அனைவரும் ஒரு குலம் என்ற அறநெறியைக் கைக்கொள்வோம், வேறு வழி வேண்டாம் என்று கூறி, புது வாழ்வு துவக்கவேண்டும். அந்தப் புது வாழ்வு பிறக்கவே, அவர் இரத்தம் சிந்தினார்.