உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/இயற்கையின் ரசவாதம்

விக்கிமூலம் இலிருந்து

6. இயற்கையின் ரசவாதம்

ரச வாதம் என்கிற வித்தை நமது நாட்டுக்குப் புதியது அன்று. நீண்ட காலம் முன்பே நமது சித்தர்கள் இதுபற்றிக் கூறியிருக்கிறார்கள், யோகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் நமது நாட்டிலே எவ்வளவோ பேர், செம்பைப் பொன்னாக்க முயல்வது உண்டு.

'இது சாத்தியமா? செம்பு பொன்னாகுமா?' என்று ஐயம் கொள்ளலாம். ஓர் உலோகத்தை மற்றோர் உலோகம் ஆக்குதல் இயலாது என்று வாதிடலாம்.

ஆனால் இயற்கையில் என்ன நடக்கிறது?

ரச வாதமே நடக்கிறது. ஓர் உலோகம் மற்றொன்றாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது.

அது எப்படி? எங்கே? கவனிப்போம்.

ரேடியம் என்பது ஓர் உலோகம். இது, தங்கத்தை விட விலை உயர்ந்தது. ரேடியத்தின் 'அடாமிக் நம்பர்' 88, அதாவது, ரேடியத்தின் பரம அணுவிலே 88 புரொதான்களும் 88. எலக்ட்ரான்களும் இருக்கின்றன என்று பொருள்.

இந்த ரேடியம் என்ற உலோகம் ரடானாக மாறுகிறது. மாறுதல் எப்படி?

சில பரமாணுவின் தன்மை என்ன என்றால், எப்போதும் ஒரே மாதிரி இருப்பது அன்று. பரமாணுவிலே புரொதான் இருக்கிறதே! அது, குறிப்பிட்ட காலம் வரைதான் சும்மா இருக்கும். அதன் பிறகு புரொதான் பொறிகள் ஓடும். ஒளிக்கதிர்களைப் பீய்ச்சி அடிக்கும்.

அத்தகைய பரம அணுக்களுக்கு என்ன பெயர்? 'ரேடியோ ஆக்டிவ் அணுக்கள்' என்று பெயர்.

ஒரு கிராம் எடை உள்ள ரேடியத்திலே இத்தகைய பரம அணுக்கள் எத்தனை இருக்கின்றன தெரியுமா?

முப்பத்து ஏழாயிரம் கோடி என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

கண் இமைப் பொழுதிலே இவை பீறிட்டு ரடானாக மாறுகின்றன. இம் மாறுதல் இயற் கையில் நடந்து கொண்டே இருக்கிறது.

உலகத்திலே பிறந்த எல்லாரும் வள்ளல்களாகத் திகழ்வது இல்லை.

முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் என்று ஒருவனைத்தான் புகழ்கிறோம். மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் என்று ஒருவனைத்தான் போற்றுகிறோம். 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று ஒருவனைத் தான் வாழ்த்துகிறோம்.

உலகத்தின் நலன் கருதிப் பாடுபடுவோர் சிலரே. ஆனால் இந்த உலகிலே லோபிகளும் இருக்கிறார்கள். கஞ்ச மகாப் பிரபுக்கள் இருக்கிறார்கள். கெஞ்சினாலும், கூத்தாடினாலும் கொடாக்கண்டர் உளர். இவர்கள் தங்கள் பொருளைக் கொள்ளையரிடம் இழத்தலும் காண்கிறோம்.

வள்ளல் பரம்பரையில் சேர்ந்தது ரேடியம். எவரும் கேளாமலே தன்னிடம் உள்ளவற்றைப் பீறிட்டு அடிக்கும்.

தோரியம் என்பது ஓர் உலோகம். அதிலே ரேடியோ ஆக்டிவ் அணுக்கள் ஏராளம். ஆனால் அந்த அணுக்களைப் பீறிடச் செய்தல் எளிதன்று.

உலோபிகளைக் கொள்ளைக் கூட்டத்தினர் வளைத்து நெருக்கும்போது இரும்புப் பெட்டிச் சாவியை வீசி எறிகிறார்கள் அல்லவா! அம்மாதிரி, நெருக்கினால்தான், தோரியம் தனது அணு சக்தியைப் பீறிட்டு அடிக்கும்.