உலகம் பிறந்த கதை/கல் சொல்லும் கதை
13. கல் சொல்லும் கதை
இந்த உலகத்தில்தான் எத்தனை விதமான உயிர் இனங்கள்! ஒன்றா? இரண்டா? ஆயிரம்! ஆயிரம்! பல்லாயிரம்! இவை எல்லாம் எப்படித் தோன்றின? இப்போது நாம் பார்க்கிறபடியேதான் தோன்றினவா?
இல்லை. இவை ஒரே நாளில் தோன்றியன அல்ல. யுகம் யுகமாக - கோடிக் கணக்கான ஆண்டுகளாகக் கால தேவன் காட்டிய கைத்திறன். பார்த்துப் பார்த்து நகாசு செய்து, மெருகிட்டுக் காட்டும் விந்தை\!
பூமியிலே உயிர் இனங்கள் தோன்றி யதும் வளர்ந்ததும் விந்தையான கதை!
வியப்பூட்டும் கதை! இக்கதையை உயிரினங்கள் தாங்களே எழுதி வைத்திருக்கின்றன.
ஆம். தாங்களே எழுதி வைத்திருக்கின்றன.
உயிரினங்களின் சுயசரிதம் என்ற இப்புத்தகம் ஐந்து பாகங்கள் கொண்டது. ஐந்தில், முதல் இரண்டு பாகங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மிகப் பழைய புத்தகம் பாருங்கள். பக்கங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மீதியுள்ள மூன்று பாகங்கள் மிகத் தெளிவாயுள்ளன.
இந்த மூன்று பாகங்களிலும் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்தால் என்ன சொல்லத் தோன்றுகிறது!
"ஆகா! என்ன விந்தை! என்ன விந்தை!" என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு சுவையான கதை! அதிசயமான கதை! படிக்கப் படிக்கப் பிரமிப்பூட்டும் கதை! உயிர் இனங்கள் தாங்களே எழுதி வைத்துள்ள சுயசரிதை. இயற்கை அன்னை நமக்கு அளித்தது. மனித சமுதாயம் பயன் பெற வேண்டிக் கொடுத்த ஒன்று.
இதை எங்கே காணலாம்? 'பாஸில்' ஆராய்ச்சியிலே காணலாம்.
'பாஸில்' என்றால் என்ன? சென்ற காலப் பொருள் என்று அர்த்தம் தோண்டி எடுக்கப்பட்டது என்று பொருள். தோண்டி எடுக்கப்பட்டவை எல்லாமே பாஸில் ஆகுமா? ஆகா.
புவி இயல் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியின் பொருட்டுத் தோண்டியவையே பாஸில் எனப்படும்.
பாஸில் என்பது ஆங்கிலச் சொல். தமிழில் பூ பதனம் எனலாம். பூ பதனம் என்றால் என்ன பொருள்? பூமியிலே பத்திரம் செய்யப்பட்டது என்று பொருள்.
இங்கிலாந்திலே அறிஞர் ஒருவர் இருந்தார். புவி இயல் அறிஞர். அவர் பெயர் வில்லியம் ஸ்மித் என்பது. அவர் என்ன செய்தார்? வேல்ஸ் பிரதேசத்துக் குன்றுகளைத் தோண்டி ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது என்ன கிடைத்தன? கடல் வாழ் உயிர்களின் உருவங்களும், ஓடுகளும், எலும்புகளும் அவருக்குக் கிடைத்தன.
வில்லியம் ஸ்மித் பெரிதும் ஆச்சரியம் கொண்டார். மலையிலே எப்படிக் கடல் வாழ் உயிரினம் வந்தது? என்று சிந்தித்தார்.
ஒரு காலத்தில் அப்பகுதி கடல் அடியில் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
கடல் அடியிலே கிடந்த நிலப்பரப்பு எப்படி மேலே வந்தது? இந்த பூமியானது, தோன்றிய காலம் முதல் இதுவரை ஒரே மாதிரி இல்லை. பூமியின் பல பகுதிகள் நீரிலே அமிழ்ந்து கிடந்தன. பூகம்பங்கள் ஏற்படும் காலத்திலே இவை மேலே எழும்பின என்று கண்டோம்.
அப்படி எழும்பிய மலைகளுக்குச் 'செடிமெண்டரி ராக்ஸ்' என்று பெயர். 'செடிமெண்ட்' என்றால் வண்டல் என்று பொருள்.
‘செடிமெண்டரி ராக்ஸ்' என்றால் “வண்டல் படிந்த குன்றுகள்' என்று பொருள்.
வண்டல் எப்படிப் படிந்தது? எங்கிருந்து படிந்தது? அது எப்படிப் பாறை ஆயிற்று?
மலைகளிலே தோன்றும் ஆறுகள் பாறைகளை உருட்டிச் செல்கின்றன. பூமியையும் அகழ்ந்து செல்கின்றன. கொண்டு போய் கடலில் கொட்டுகின்றன. இவ்வாறு நாள்தோறும் நடக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இப்படி நடந்தால்... கடல் அடியிலே வண்டல் படிகிறது. மேலும் மேலும் அடுக்கு அடுக்காகப் படிகிறது. படிந்து படிந்து இறுகி, இறுகி, இறுகி அவை பாறை ஆகின்றன. இந்தச் சேற்றிலே சிக்கிக் கொள்ளும் உயிர் இனங்கள் அப்படியே 'சமாதி' ஆகின்றன.
யுகம், யுகமாக- கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்விதம் நடைபெற்றால் என்னாகும்? ஏராளமான உயிர் இனங்கள் சமாதியாகும் அல்லவா!
புதைபட்டுப் புதைபட்டு அவை அப்படியே மண்ணோடு இறுகி விடும். அவற்றின் உருவச் சுவடும் அப்படியே பாறையில் அமையும்.
மழைக்காலத்திலே நாம் சேற்றிலே நடக்கிறோம். நமது கால் சேறிலே பதிகிறது. கால்நடைகள் நடக்கின்றன. அவற்றின் கால்களும் பதிகின்றன. பிறகு வெயில் காய்கிறது. மனித அடிச் சுவடும், மாடுகள் அடிச் சுவடும் அப்படி அப்படியே இறுகிக் காய்ந்து காட்சி தரவில்லையா! அந்த மாதிரி.
நில நடுக்கம் ஏற்படும் காலத்திலே கடலுக்கு அடியிலே உள்ள வண்டல் பாறைகள் மேலே எழும்புகின்றன. இத்தகைய பாறைகளை ஆராயும்போது பலவித உயிர் இனங்களின் 'சுவடுகள்' பாஸில்கள் கிடைக்கின்றன.
சென்ற 150 ஆண்டுகளாகப் புவி இயல் அறிஞர்கள் ஏராளமான பாஸில்களைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அந்த பாஸில்களை எல்லாம் ஒருங்கு சேர்த்துத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்பு அருமையான கதை சொல்கிறது. அதுவே உயிர் இனங்கள் வளர்ந்த கதை.
இந்தக் கதைப் புத்தகத்துக்கு 'புக் ஆப் செடிமெண்ட்ஸ்' என்று பெயர். வண்டல் குன்றுகள் கூறும் வரலாறு' என்று பொருள். இதுவே உயிர் இனங்களின் சுயசரிதம். கல் சொல்லும் கதை.