உலகம் பிறந்த கதை/கால கோபுரம்

விக்கிமூலம் இலிருந்து
14. கால கோபுரம்

ஏதாவது ஒரு நிகழ்ச்சியைச் சொல்லும் போது, அது நிகழ்ந்த காலத்தையும் குறிப்பிடவேண்டும். அப்போது தான் அதற்குத் தக்க ஆதாரம் ஏற்படும். சரித்திரம் எழுதுகிறவர்களும் அப்படித்தான். இன்ன சமயத்திலே இன்ன சம்பவம் நிகழ்ந்தது என்று திட்ட வட்டமாகச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் அதற்குத் தக்க ஆதாரம் ஏற்படும்.

உயிர் இனங்கள் பூமியில் தோன்றி வளர்ந்த கதையை நமக்குச் சொல்ல வந்த அறிஞர்களும் இதே முறையைத் தான் பின்பற்றி யிருக்கிறார்கள்.

சுமார் இரு நூறு கோடி ஆண்டுகள் முன்பு தான் பூமியில் உயிர் தோன்றியது. இந்த இரு நூறு கோடி ஆண்டுகளையும் ஐந்து யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். பூமி தோன்றிய நாள் முதல் இது வரை எவ்வளவோ மாறுதல்களை அடைந்துள்ளது என்று கூறினோம். அந்த மாறுதல் ஏற்படும் போது, ஒரு பெரிய புரட்சி - பிரளயம்- தோன்றும். அதன் பிறகு மாறுதலும் தோன்றும். இவ்விதப் புரட்சி, ஐந்து முறை ஏற்பட்டிருப்பதாகப் புவி இயல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஒரு புரட்சிக்கும், இன்னொரு புரட் சிக்கும் இடையே உள்ள காலத்தை ஒரு யுகம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதற்கு 'ஜியாலாஜிகல் ஸ்கேல்' என்று பெயர், 'கால கோபுரம்' என்றும் சொல்லலாம். அந்த ஐந்து யுகங்களும் அவற்றின் பொருளும் வருமாறு:-

இங்கிலீஷ் பெயர் தமிழ்ப் பெயர்
5.சைனோ சாயக் ஈரா சமீப ஜீவ யுகம்.
4.மெஸோ சாயக் ஈரா மத்திய ஜீவ யுகம்
3. பலியோ சாயக் ஈரா பழைய ஜீவ யுகம்
2. புரடரே சாயக் ஈரா ஆரம்ப ஜீவ யுகம்.
1. ஆர்க்கியோ சாயக் ஈரா புராதன ஜீவ யுகம்
வண்டல்கள் தட்டு தட்டாக ஒன்றன் மேல் ஒன்றாகப் படியும். மிகப் பழைய

 அடுக்கு, அடியில் இருக்கும். அதை விடக் கொஞ்சம் புதியது அதன் மேலே இருக்கும். இப்படியாக மேலே போகப் போகப் புதியதும் அடியில் போகப் போகப் பழையதும் இருக்கும். எனவே, மிகப் புராதனமான யுகம் அடியில் தொடங்கப்படுகிறது. ஐந்தாவது யுகம் மேலே இருக்கிறது.

இந்த ஐந்து யுகங்களும் உயிர் இன வரலாற்றினை நமக்குத் தெரிவிக்கின்றன. இதனால் தான் உயிர் இனங்களின் வரலாறு ஐந்து பாகங்கள் கொண்டது என்று முன்னே சொன்னோம்.

ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு யுகம் பற்றிச் சொல்லும். முதல் இரண்டு பாகங்கள் தெளிவாக இல்லை. முதல் இரண்டு யுகங்களில் உயிர் இனங்கள் இருந்தன. ஆனால் அவை பற்றிய விபரங்கள் தெளிவாக இல்லை. பாக்கியுள்ள மூன்று யுகங்களின் வரலாறு தெளிவாக உள்ளது. இந்த மூன்று யுகங்களே பதினாறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தெளிவாக உள்ள மூன்று பாகங்களும் ஐம்பது கோடி வருஷ வரலாற்றினை நமக்கு அறிவிக்கின்றன. தெளிவாக இல்லாத இரண்டு பாகங்களோ நூற்றைம்பது கோடி வருஷ வரலாறு கொண்டவை.

ஐம்பது கோடி ஆண்டு வரலாற்றினை இப்போது கவனிப்போம். இந்த ஐம்பது கோடி ஆண்டுகளும் மூன்று யுகங்கள் கொண்டவை. அம்மூன்றும், பழைய ஜீவ யுகம், மத்திய ஜீவயுகம், சமீப ஜீவயுகம் என்பவை. ஒவ்வொரு யுகமும் பல சகாப் தங்கள் கொண்டவை.

பழைய ஜீவ யுகத்தை எடுத்துக் கொள்வோம். இது ஏழு சகாப்தங்கள் கொண்டது. அந்த ஏழு சகாப்தங்களாவன:

1. கேம்ப்ரிய சகாப்தம்
2. அர்த்தோவிசிய சகாப்தம்
3. சிலூரிய சகாப்தம்
4. திவோனிய சகாப்தம்
5. மிசிசிப்பி சகாப்தம்
6. பென்சில் வேனிய சகாப்தம்
7. பெரிமிய சகாப்தம்

பெயர்களைக் கண்டு அஞ்ச வேண் டாம். சிறிது ஊன்றிக் கவனியுங்கள். எளியனவாகப் புலப்படும்.

இங்கிலாந்திலே ஒரு பகுதியிருக்கிறது, வேல்ஸ் என்று பெயர். ரோம சாம்ராஜ்யத்தின் கீழே ஒருகாலத்தில் இப்பகுதி இருந்தது. அப்போது அதற்குக் 'கேம்ப்ரியா' என்று பெயர். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அதே மாதிரி கால அளவில் உள்ள வரிசைகளுக்கு எல்லாம் கேம்ப்ரிய சகாப்த வரிசை என்று பெயர் கொடுத்தார்கள்.

இங்கிலாந்திலே மற்றொரு பகுதி உள்ளது. அதற்குப் பெயர் என்ன தெரியுமா? ‘திவான்ஷைர்' என்பது. இந்தப் பகுதியிலே சில பாஸில்கள் கிடைத்தன.

இந்த மாதிரி வரிசைக்குத் திவோனிய சகாப்த வரிசை என்று பெயர் கொடுத்தார்கள்.

அமெரிக்காவிலே உள்ளது மிசிசிப்பி. அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அவற்றைப் போன்ற வரிசைகளுக்கு மிசி சிப்பி சகாப்தம் என்று பெயர் கொடுத்தார்கள்.

பென்சில்வேனியே என்பதும் அமெரிக் காவில் உள்ள மற்றோரிடம். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அந்த மாதிரி அடுக்கு வரிசைகளுக்குப் 'பென்சில் வேனிய சகாப்த வரிசை' என்று பெயர் கொடுத்தார்கள்.

'பெர்மியா' என்பது ரஷியாவிலே உள்ள ஓரிடம். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அந்த மாதிரி அடுக்கு வரிசைகளுக்குப் பெர்மிய சகாப்த வரிசை என்று பெயர்.

இனி, மத்திய ஜீவயுகத்தைக் கவனிப்போம். இதிலே மூன்று சகாப்தங்களே. ‘திரையாசிக் சகாப்தம்', 'ஜூராசிக் சகாப்தம்', 'கிரிடேசியஸ் சகாப்தம்' என அம் மூன்றும் அழைக்கப்படுகின்றன.

திரியோதசி என்றால் நமக்குப் பொருள் தெரியும். திரிமூர்த்தி என்றாலும் நாம் அறிவோம். அதே மாதிரி 'திரையாசிக்' என்றால் முப்பிரிவு என்று பொருள்.

‘திரையாசிக் ஏஜ்' என்றால் 'முப்பிரிவு சகாப்தம்' என்று பொருள். அதாவது இந்த சகாப்தத்திலே இருந்த உயிர்களின் உடல் முப்பிரிவுகளாக இருந்தனவாம். எனவே, 'திரையாசிக்' என்று பெயர் கொடுத்தார்கள்.

பிரான்சுக்கும் சுவுட்ஜர்லந்துக்கும் இடையே ஒரு மலைத்தொடர் இருக்கிறது. அதற்கு ஜூரா மலைத்தொடர் என்று பெயர். அங்கே சில பாஸில்கள் கிடைத்தன. அம்மாதிரி பாஸில்களுக்கு ஜூராசிக் சகாப்த வரிசை என்று பெயர்.

லத்தீன் மொழியிலே கிரீடர்' என்றால் சாக்கட்டி என்று பொருள். கிரிடேசியஸ் ஈரா என்றால் சாக்கட்டி சகாப்தம் என்று பொருள்.